ஒளி- கடிதங்கள்-3

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

தாங்கள் எழுதி நண்பர்கள் Zoom இல் இயக்கி நடித்த ஒளி நாடகம் கண்டு உளம் மகிழ்ந்தேன். அதன் வீச்சை உள்வாங்கிக்கொள்ள இரண்டு முறை பார்த்தேன். எதிர்காலத்திற்கான ஒரு புதிய நிகழ்த்துக்கலை வடிவத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள்.

மிக மிகத் தீவிரமான ஒரு விஷயத்தை, ஆழமான வசனங்களை, உரிய பாத்திரப் படைப்புகளை கொண்டு, மிகச் செம்மையாக வடித்திருக்கிறீர்கள். நடித்த ஐந்து நண்பர்களுமே மிகச் சிறப்பாக தங்கள் பாத்திரத்தை உணர்ந்து உரிய முகபாவங்களோடும், ஏற்ற இறக்கத்துடன் கூடிய வசன உச்சரிப்புகளோடும் அந்த பதினேழு நிமிடங்கள் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஐந்து கதாபாத்திரங்களையும் உங்களின் வெவ்வேறு வடிவங்களாகவே நான் கண்டேன். நீங்கள் நிச்சயமாக ஒரு அனேகன் தான். உங்களின் மிக முக்கியமான வேறுபட்ட குணநலன்களின்  ஆளுமை உருவாக்கமாகவே அவர்கள் வெளிப்பட்டுள்ளனர்.

தனியனான தத்துவஞானி தன்னை சிலுவையில் ஏற்றி எழுத்தாளனின் மீது ஏறிக் கொள்கிறான். இது உங்களுக்குள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்ற இந்த இரண்டு ஆளுமைகளுக்கு இடையேயான முரண் இயக்கத்தை எனக்கு தெளிவாக காட்டியது. அந்தத் ஒளி பெற்ற தத்துவ ஞானி உள்ளொளியின் வடிவில் எழுத்தாளனுக்குள் வாழ்வது நிறைவை அளித்தது. ஒரு ஞானியின் இருப்பின் நோக்கம் என்பது அவன் தத்துவ தரிசனங்கள் உபதேசங்களாக உலகம் முழுமைக்கும் பயனாவது தானே! எந்த ஞானியும் ஏதோ ஒரு வடிவில், எவருடைய எழுத்திலோ, சொல்லிலோ, இசையிலோ, நடனத்திலோ அல்லது குறைந்தபட்சம் செயல் வடிவிலோ நித்தியமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.

தானே விரும்பி குகையில் தனியாக இருப்பது, கட்டாயத்தின் பெயரில் சிறையில் தனிமைப் படுத்தப்படுவது என இரண்டைக் கொண்டு மிகப்பெரிய ஒரு தரிசனத்தை தொட்டுக் காட்டி இருக்கிறீர்கள். இந்த சிந்தனையை விரித்து பல உன்னதப் புரிதல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அறிவியக்கம், மதங்களின் நோக்கம், கடவுளின் தேவையும் உருவாக்கமும் கட்டுடைப்பும், உண்மைச் சுதந்திரம், இன்றைய வாழ்வின் இன்றியமையாத் தேவை என்ன, உண்மையில் ஒளி என்பது என்ன, உண்மையில் நம்மைச் சிறைப்படுத்துவது எது, ஒழுக்க விதிகளின் அவசியம் மற்றும் எல்லைகள், அரசுகளின் அத்துமீறல்கள் மற்றும் அசிங்கமான செயல் முறைகள், வாழ்க்கைக்கான பொருள் என்ன, சட்டென மாறிவிட்ட உலகச் சூழலில் ஒரு தனிமனிதன் செய்ய வேண்டியது என்ன, இந்தக் கடின சூழலில் எவ்விதமான கூட்டு உழைப்பு சாத்தியம் என பல தளங்களில் இந்த நாடகத்தை எல்லையற்று விரித்துக் கொண்டே செல்லலாம்.

தனித்து இருண்ட மனங்களின் திக்குத் தெரியாத காட்டில் யானைத் தடம் பதித்து புதியபாதை அமைத்திருக்கிறீர்கள். புதிய உலகுக்கான விடியல் வரும் என நம்புவோம். உங்களால் முடிந்த முதல் ஒளி காட்டி இருக்கிறீர்கள்.

நல்வாழ்த்துக்கள்!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஜெ,

இன்று தங்களுடைய ஒளி நாடகம் பார்த்தேன்.’ஒளி நாடகம்’ இன்றைய சூழலிற்கு தேவைப்படும் கருத்துகளைச் சுருக்கமாக கூறியிருந்தது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒலிக்கும் குரல்களினையும் சமூகம் நம்மிடம் எவ்வாறு எல்லையை கட்டமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் கதாபாத்திரங்கள் பதிவு செய்தன.

தனி மனிதனாக விடுதலை வேண்டுபவன் கூட குற்றவாளியாக பாவிக்கப்படுகிறான்.போராட்டத்தினால் விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்தும் தனி மனிதன் முன் வந்தாலும் அவனை கேலி கிண்டல்கள் ஆக்கிரமிக்கும் சூழலில் அவனின் நம்பிக்கை துணையாக இருந்து என்றும் அவனை வழி நடத்தும் என்பதை புரிந்துக்கொண்டேன்.

அங்கிருந்த ஒவ்வொருவரின் உரையாடலும் நடப்பு நிகழ்வை பிரதிபலித்தது.ஒருவரின் தனித்தன்மையும் மாற்றத்தை ஏற்படுத்தும்.மாற்றத்தை தன்னிடம் தேடுபவன் மாற்றத்தை அடைகிறான்.மிக நேர்த்தியாக சொல்ல வேண்டிய விஷயங்களை குறும்படம் விளக்கியது.இது போன்ற இன்னும் நிறைய ஆக்கங்களை தாங்கள் தர வேண்டும்

தேவமதி

அன்புள்ள ஜெ

ஒளி ஒரு புதிய முயற்சி. எந்த பிரயத்தனமும் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தார்கள் நால்வரும். கதைநாயகனாகிய நரேனின் தீவிரம், எழுத்தாளரின் நையாண்டி, நடனமணியின் அலட்சியமான தோள்குலுக்கல், இசைக்கலைஞனின் விரக்தியான தனிமை, மலையேறுபவனின் துடிப்பும் தேடலும் எல்லாமே நடிகர்களால் சிறப்பாக நடிக்கப்பட்டிருந்தன. சில நிமிடங்களுக்குப்பின் நடிப்பு என்றே தோன்றவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் தனித்தனியாக இருக்கிறார்கள் என்பதும் சுவரைப்பார்த்து நடிக்கிறார்கள் என்பதும்கூட மறந்துவிட்டது.

ராஜ்

ஒளி- கடிதங்கள்-2

ஒளி- கடிதங்கள்

முந்தைய கட்டுரை மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி
அடுத்த கட்டுரைமதார்- கடிதங்கள்