’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021
மதார்- தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
கவிஞர் மதாருக்கு விருது அறிவிக்கப்பட்ட பின் அவருடைய கவிதைகளை வாசித்தேன். ஏற்கனவே நீங்கள் பேசிய உரையை கேட்டிருந்தாலும் அப்போது அக்கவிதைகளை வாசிக்க தவறிவிட்டேன். அல்லது இக்கவிதைகள் அன்றைக்கு மின்நூலகா வரவில்லை என நினைக்கிறேன்.
நான் சமீபத்தில் தமிழில் வரும் கவிதைகளை வாசிக்கையில் நுண்சித்தரிப்பு என்பது தமிழ்க்கவிதைக்கு பெரிய தீங்கைச் செய்துவிட்டதோ என்ற எண்ணத்தை அடைந்திருக்கிறேன். ஏனென்றால் இப்போது எல்லாரிடமும் செல்போன் கேமரா வந்து ஃபோட்டோ மலிந்துவிட்டதைப் போல. ஒரு படத்தை ஏன் எடுக்கவேண்டும் என்றே எவரும் நினைப்பதில்லை. கேமரா இருக்கிறது, ஆகவே படம் எடுக்கிறார்கள். ஃப்ரேம் பார்ப்பதில்லை. காம்பினேஷன் பார்ப்பதில்லை. லைட்கூட பார்ப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான ஃபோட்டோக்கள். அவற்றுக்கு ஒரு பத்து நிமிட ஆயுள் கூட கிடையாது.
அதேமாதிரி வாழ்க்கையை ஒரு ஸ்னாப் ஷாட் ஆக எடுத்து அப்படியே வைத்துவிட்டு போகிறார்கள். ஒரு காட்சி. ஒரு வாழ்க்கைச்சந்தர்ப்பம். அதன் அர்த்தமென்ன என்று சிந்திப்பதில்லை. அதில் இருந்து ஒரு பயணம் நிகழ்வதில்லை. அந்த காட்சியில் இருந்து அர்த்தம் எடுக்கலாம். ஆனால் அது அபூர்வமானதாக இருக்கவேண்டும். ஏராளமான காட்சிகளை கவிதைகள் வைத்துக்கொண்டே இருந்தால் காலப்போக்கில் எதிலும் நம் கவனம் நிலைகொள்வதில்லை. ஆகவே அர்த்தங்கள் உருவாவதுமில்லை.
ஒருகாலத்தில் படிமங்களைக் கண்டு சலித்துப்போய்த்தான் நுண்சித்தரிப்புக் கவிதைகளை வாசித்தோம். இன்றைக்கு நுண்சித்தரிப்புக் கவிதைகள், பட்டியல் கவிதைகள், பிளெய்ன் பொயட்ரி எல்லாமே சலிப்பை அளிக்கின்றன. மதாரின் கவிதைகளில் வெறும் நுண்சித்தரிப்புக் கவிதைகள் இல்லை. படிமங்களாக ஆக்கும் முயற்சியும் இல்லை. ஒரு காட்சியில் இருந்து இன்னொரு தளத்திற்கு நகர்வு இருக்கிறது. ஒரு விரிவு இருக்கிறது
தாத்தாவின் கண்ணாடியை
இழுக்கும் பேரன்
பார்வையை ஆக்குகிறான்
தெளிவற்றதாக
மரணத்தருவாய் காட்சியாக
பேரனிடம் கண்ணாடியை
இழுக்கும் தாத்தா
ஒவ்வொரு முறையும்
திரும்புகிறார் வாழ்க்கைக்கு
பேரன் திரும்பவும்
இழுக்கிறான்
தாத்தா மறுபடியும்
இழுக்கிறார்
தாத்தா சிரிக்கிறார்
பேரன் இழுக்க ஒவ்வொரு தடவையும்
தாத்தா அனுமதிக்கிறார்
அணிந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
என்ற கவிதையை இரண்டு முறைக்குமேல் வாசித்தபோதுதான் கவிதை முழுமையாகவே என் உள்ளத்துக்குள் வந்தது. கண்ணாடிதான் வாழ்வு. அதைப்பிடுங்கியதும் மரணத்தின் மங்கல். பேரன் தனக்கு சாவை அளித்து அளித்து விளையாடுவது அவருக்கு ஒரு கட்டத்தில் பிடித்திருக்கிறது. அதுவரைக்கும் ஒரு கவிதை. ஆனால் தான் காணும் முதுமையின் வாழ்க்கையை பேரன் காண அவர் அனுமதிக்கவே இல்லை என்ற இடத்தில் கவிதை இன்னொரு தாவுதலை நிகழ்த்துகிறது.
வாழ்த்துக்கள் மதார்
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ,
கவிஞர் மதாருக்கு இவ்வாண்டு விருது அளிக்கப்படுவதை அறிந்தேன். ஆண்டுதோறும் அறிமுகமாகும் இளம் கவிஞர் நம் உள்ளத்தில் சிலகாலம் வீற்றிருக்கிறார். இது ஓர் ஆச்சரியம். நாம் அவருடைய கவிதைகளைச் சாதாரணமாக ஒரு இதழில் அல்லது இணையத்தில் வாசித்தால் பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் ஒரு விருது கிடைத்து அந்தக் கவிஞர் பற்றி ஒரு பேச்சு உருவாகி அவருடைய கவிதைகளை தொடர்ந்து படிக்கும்போது ஒரு பெரிய வாசிப்புநிலை கூடுகிறது. அக்கவிஞரின் உலகம் தெளிவாக பிடிகிடைக்கிறது. எல்லா வரிகளுமே மேலும் மேலும் அர்த்தங்களை அளிக்க ஆரம்பிக்கின்றன
துக்கம் ஒரு பரிசுப்பொருள்
நெடுநாள் என் மேசைமீது கிடக்கிறது
என்ற வரியை என் டைரியில் குறித்துவைத்தேன்
சுதாகர்
வெயில் பறந்தது தபாலில் பெற :