மதார்- கடிதங்கள்-2

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.  இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியவராக மதாரின் ‘வெயில் பறந்தது’ தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன்.  இத்தொகுதியின் கவிதைகளை நான் மிகவும் ஆர்வத்தோடு படித்தேன். எதார்த்தக் காட்சி இன்னொன்றாக மாறும் ரசாயனநுட்பம் அவருடைய மொழியில் இயல்பாக படிந்திருக்கிறது. ஒரு முதல் தொகுதி என்கிற வகையில் இத்தொகுதிக்கு இலக்கியப்பரப்பில் உறுதியான ஓர் இடமுண்டு. அத்தொகுதியை  விருதுக்குரிய தொகுதியாக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் தேர்வுக்குழுவினருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

அன்புள்ள ஜெ

அறிவிப்புக்குப் பிறகுதான் மதாரின் கவிதைத் தொகுதியை தரவிறக்கம் செய்து வாசித்தேன். அற்புதமான ஒரு கள்ளமின்மையை கொண்ட கவிதைகள். எனக்கு தமிழ் நவீனக் கவிதைகளின் மேல் ஓர் ஒவ்வாமை உண்டு. நான் ரசிக்கும் கவிஞர்கள் ஆங்கிலத்தில்தான். ஆனால் எவ்வளவு படித்தாலும் திரும்பத்திரும்ப எமிலி டிக்கன்ஸனை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் கவிதை என்பது ஒரு விடுதலை, ஒரு கொண்டாட்டம். கவிதையில் வலியும் துயரமும் தனிமையும் எல்லாம் பதிவாகியிருக்கின்றனதான். ஆனால் உலகக் கவிதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதிலிருக்கும் அடிப்படை உணர்வு என்பது விடுதலையின் கொண்டாட்டம்தான்

எதிலிருந்து விடுதலை என்று கேட்டால் இந்த உலகின் யதார்த்தமான, நடைமுறையான விஷயங்களிலிருந்து விடுதலை என்றுதான் சொல்வேன். அரசியல் கருத்தியல் எல்லாமே இந்த உலகைச் சேர்ந்தவைதான். மூளையில் வீக்கம் வரும்போது அல்லது மூளைநீர்கூடி அதில் அழுத்தம்கூடும்போது அதிலே ஒரு துளைபோட்டு விடுவோம். அதுபோல ஒன்றுதான் கவிதை. அது சங்கக் கவிதையானாலும் சரி சம்ஸ்கிருதக் கவிதையானாலும் சரி. பாதலேர் ஆனாலும் சரி எமிலி டிக்கன்ஸனானாலும் சரி.

தமிழ் நவீனக்கவிதைகளில் உள்ள ஒரு கூட்டுப்பாவனை எனக்கு மிகப்பெரிய சலிப்பு. அதில் தங்களை தாங்கமுடியாத வலியால் துடிதுடிப்பவர்களாக பாவனை செய்துகொள்கிறார்கள். என் நண்பரும் அதே எண்ணம்தான். பாதி தமிழ்க்கவிதைகள் ஆஸ்பத்திரி வார்டிலிருந்தும் மார்ச்சுவரி வாசலில் இருந்தும் எழுதப்படுகின்றன என்று சொல்வார். செயற்கைத் துக்கம். செயற்கை நெருக்கடி. அதை ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்.

ஆகவே எனக்கு தமிழில் சில கவிஞர்களையே உண்மையில் பிடித்திருக்கிறது. நீங்கள் சொல்லி வாசித்ததனால் இசையை மிகவும் பிடிக்கும். முகுந்த் நாகராஜன் பிடிக்கும். புதிய கவிஞர்களில் இவர்கள் இருவரும்தான். கவிதைக்கு தேவை ஒரு அடிப்படையான innocence. அது இல்லாவிட்டால்தான் மூளைவீங்கி மண்டையோடு வலியெடுக்கிறது

மதாரின் கவிதைகளை படிக்கையில் இந்த கள்ளமற்ற தன்மை, சிறுவனின் பார்வை அழகான அனுபவமாக ஆகிறது. கவிதைகளில் ஒரு தூய்மையான mundaneness உள்ளது. அது இன்று கவிதைக்கு மிக அவசியமான ஒன்று. பழைய கவிதை இந்த அன்றாடத்திலிருந்து விலக இரவு நிலவு தென்றல் ஆறு மலை கடல் என்றெல்லாம் சென்றது. அவை ரொமாண்டிக் ஆக மாறிவிட்டன. அன்றாடம் அப்படியேதான் உள்ளது. அன்றாடத்திலேயே ஓர் அரிய கணத்தைக் கண்டடைவதுதான் இன்று உயர்ந்த கவிதையாக இருக்கமுடியும்

நாம் செல்லும் சாலையிலேயெ ஓரமாக மலர்ந்திருக்கும் ஒரு சின்ன பூவை பார்ப்பதுபோல அது ஒரு அனுபவம். மலையே பூவாக மாறியிருப்பதை நாம் வேர்ட்ஸ்வெர்த்தில் பார்க்கிறோம். இங்கே ஒரு சின்னப்பூதான். பலசமயம் வெள்ளைநிறமான பூவாகக்கூட இருக்கும். ஆனால் அது ஒரு அழகான புன்னகை. ஒரு சின்னக்குழந்தையின் புன்னகை போன்றது. அதை மதாரின் கவிதைகளில் காணமுடிகிறது

சாரலுக்கு ஒதுங்கும் பெண்களை

மழை புகை சிகரெட்டை

பேருந்து நிலையக் கடைகளை

விரையும் வாகனங்களை

சாலையை

தரையை

சினிமா போஸ்டர்களை

அழைக்கு ஆட்டோக்காரர்களை

பரோட்டா வாசனையை

பிச்சி கனகாம்பரத்தை

நதிக்கு ஓடும் பைத்தியத்தை

சொந்த ஊருக்கு திரும்பியவன் பார்க்கிறான்

பைத்தியம் தெளிபவனின்

மண்டையில் நிகழும்

மாற்றங்களுக்கு

ஒப்பானது அது

இந்தக் கவிதையை இந்த தொலைதூர தேசத்தில் இருந்துகொண்டு பார்க்கிறேன். புகைவிலகுவதுபோல விடிவதுபோல ஒருவனில் எழுந்துவரும் ஓர் உலகம். அவனுடைய தன்னடையாளம் படிந்த ஓர் உலகம். பைத்தியம் தெளிபவன் தொட்டு தொட்டு ஒவ்வொரு பொருளாக உணர்கிறான், அந்த ஒவ்வொரு பொருளுடனும் தனக்குள்ள உறவை, நினைவை மீட்டுக்கொள்கிறான். அது ஒரு புதிய உலகை பரிசாகப்பெறுவதன் கொண்டாட்டம்தானே?

ஆர்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

மதாருக்கு குமரகுருபரன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் இளங்கவிஞர்களை இப்படி விருதுகள் வழியாகவே கேள்விப்படுகிறோம். நான் உங்கள் உரையால் ஈர்ப்படைந்து மதாரின் தொகுப்பை படித்தேன். சட்டென்று நினைவுக்கு வரும் வரி

வானத்தின் மேற்பூச்சு நீலம்

உள்பூச்சு கருமை

என்ற வரி. அன்றுமுதல் இன்றுவரை மனதிலேயே நின்றுகொண்டிருக்கும் வரி.

உள்ளடக்கம் கருமை என்று இல்லை. அதுவும் பூச்சுதான். அதற்கப்பால் வெளியோ ஒளியோ

பிரவீன்குமார்

வெயில் பறந்தது தபாலில் பெற :

அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :
7019426274
கிண்டிலில் படிக்க :
முந்தைய கட்டுரைநீலம்,ஒளி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனைவி!