அன்புள்ள ஜெ,
நகுலன் எழுதிய வரி என ஞாபகம். காட்டுமரங்களெல்லாம் வீட்டுப்பொருட்களாகி அனாதியான மௌனத்தில் உறைந்திருக்கின்றன. நெடுங்காலம் என் நினைவில் நின்ற கவிதை அது. அது ஒரு தரிசனம்போல என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது
மரத்தின் உயிர்ப்பு, அதன் பொலிவு, அதன் நிழல், அதன் கனிகள் எல்லாவற்றையும் அழித்து அதை வளரவோ மாறவோ பூக்கவோ காய்க்கவோ பெருகவோ சுதந்திரமில்லாத ஒரு நிலையான வடிவமாக மாற்றிவிடுகிறோம். அதன்பின்னரே நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது.
மரத்தை பார்த்ததுமே வடிவமற்றது என்று தோன்றுகிறது. நாற்காலியோ மேஜையோ ஆனதுமே அது வடிவம் என்று தோன்றுகிறது.
ஆனால் மதுரைக்கு வரும் வழியில் மலைகளை அதேபோல அறுத்து பலகைகளாகவும் சதுரங்களாகவும் ஆக்குவதைப் பார்த்தபோது தோன்றியது முடிந்தால் மனிதன் இந்தப் பூமியையே ஒரு கனசதுரமாக ஆக்கிவிடுவான் என்று
சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட இரு நகைச்சுவைகள் எனக்கு மீண்டும் அந்த உணர்வை அளித்தன. ஒன்று, பிக்காசோவின் கியூபிசம் பற்றிய கிண்டல். பிக்காஸோ ஏன் எல்லாவற்றையும் கியூபாக ஆக்கிப்பார்த்தார்? “ஓவியமாத்தான் இருக்கு!”
அதைப்புரிந்துகொள்ள இன்றுவரை மனிதன் உருவாக்கிய கலைவடிவங்களில் மிகப்புகழ்பெற்றது கியூபிசம்தான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய கட்டிடக்கலை, எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுப்பொருட்கள் எல்லாவற்றிலும் கியூபிசத்தின் செல்வாக்கு உண்டு. நாம் காணும் உலகமே கியூபிசத்தில் இருந்து வந்ததுதான்.
அது மனிதனின் கண்ணின் இயல்பு. மூளையின் இயல்பும்கூட அவனால் நேராகவே நடக்கமுடியும். ஆகவே சதுரங்கள்தான் அவனுக்கு சௌகரியம்.ஆகவே அவன் தன் வீட்டை தன் புழங்குபொருட்களை சதுரமாக்குகிறான். தக்காளியை சதுரமாக்குகிறான். உலகையே சதுரங்களாக ஆக்குகிறான்
மலைமேல் நின்று கீழே பார்த்தால் நாம் பார்ப்பது சதுரங்களைத்தான். சதுரங்கள்தான் மனித நாகரீகத்தின் அடையாளங்கள். மரங்களையும் நாம் அப்படி மாற்றிக்கொண்டிருக்கிறோம். பிகாஸோ அதை கலையில் நமக்கு காட்டினார். நாம் அதை பயன்படுத்திக்கொண்டோம்.
நான் ஒரு ஆவணப்படத்தில் பார்த்தேன். புலி, சிங்கம் எல்லாம் சதுர, செவ்வக வடிவமான கூண்டுகளுக்குள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக்கூண்டில் பார்த்தால் அவை வட்டமாகவோ நீள்வட்டமாகவோ நடமாடிய தடம் தெரியும். மூலைகளை அவை பயன்படுத்துவதே இல்லை. ஆனால் குரங்கு மூலைகளை பயன்படுத்தும். புலி வட்டவடிவ கூண்டுக்குள் வசதியாக இருக்கலாம். நாம் சதுரக்கூண்டிலேயே அடைப்போம்
இன்னொரு ஓவியம் ஒரு பச்சை மரத்தை வகுப்பில் கொண்டுசேர்க்கிறார் அப்பா. அவர் ஒரு ஃபர்னிச்சர். அங்கே எல்லா மாணவர்களும் ஃபர்னிச்சர்கள். ஆசிரியர் ஒரு கோடாலி. கல்வி
மதாரின் இந்தக் கவிதை அந்த அர்த்தங்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை கலைத்து அடுக்கிக்கொள்ள உதவியது
இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும்
மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும்
நான்காவது பக்கம் நிறைவுற்றபோது
மரம் உறுதி செய்தது
தான் ஒரு கதவென
இந்த வேலை
இந்த மினுமினுப்பு
பயன்பாடு
எதுவுமே கதவுக்கு நிறைவில்லை
எதிரே இருக்கும் மரத்தை
பார்த்தபடி இருப்பதைத் தவிர.
நான் கதவைத் திறந்து
மரத்தின் கீழ் விளையாடும்
சிறுவர்களைப் பார்த்தபடி இருப்பேன்
கதவு மரத்தையும்
நான் சிறுவர்களையும்
அப்படி பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்
காற்றடித்து
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
“மரம்தானே நீங்க?”
கதவு சொன்னது
“ஏ, குட்டிப் பயலே”
விளையாட்டுத்தனமும் தரிசனமும் கலந்த இந்தக் கவிதை மதாரை சரியாக அறிமுகம் செய்கிறது. ஒரு வளர்ந்த மனிதன் பச்சை மரத்தில் கதவையும் மேஜையையும் பார்ப்பான். சிறுவன் கதவில் மரத்தை பார்க்கிறான். இன்று இருக்கும் அந்த சதுரத்தில் இருந்து வடிவமற்று வளரும் உயிரை கண்டடைகிறான்.
அது அவன் தன்னுள் இருக்கும் சிறுவனின் உயிர்த்தன்மையை கண்டடைவதுதான். மதாரின் கவிதைகளின் சிறப்பம்சமே அந்த எளிமையான அழகான குழந்தைத்தனம்தான்.
ஸ்ரீனிவாஸ்