[தேவிபாரதியின் நீர்வழிப்படூம் நாவல்]
அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்திய சமூகத்தினைப் புரிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் இதில் இருக்கும் சாதியும் வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலானதா அல்லது தொழிலின் அடிப்படையிலானதா என்பது தெளிவாகத் தெரிவதில்லை.இரண்டிற்குமான தரவுகள் கிடைப்பதால் உண்மையை அறிவது குறித்து மிகுந்த குழப்பத்தோடே அணுக வேண்டியுள்ளது.தங்களுக்குச் சாதகமான தரவுகளைமட்டும் எடுத்துக்கொண்டு பாதகமாகத் தெரியும் தரவுகளை மறைத்து அல்லது திரித்து தன் அரசியலை நிலைநாட்டும்போக்கே இங்கு பொதுவாக நிலவுகிறது.பொதுவெளியில் பேசப்படும் அரசியல் தரவுகளே இப்படியிருக்கையில் யதார்த்தவாத நாவலாக இப்போது வெளிவந்திருக்கும் தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நாவலின் தரவுகள் இந்தியச் சமூகத்தில் இருக்கும் வர்ணசாதிப் பேதத்தின் குழப்பமான தரவுகளை இன்னும் சிக்கலாக மாற்றும் வகையிலேயே அமைந்திருக்கிருக்கின்றன.
நான் வாழும் கொங்குப்பகுதியைச் சேர்ந்தவரான தேவிபாரதி இங்கு முன்னர் கட்டாயமாகவும்,இப்போது அழியும் நிலையிலும் இருக்கும் குடிநாவிதர்களின் வாழ்க்கையைக் குறித்து எழுதியுள்ள நாவல்தான் நீர்வழிப்படூஉம். காரு என்றழைக்கப்படக்கூடிய ஆறுமுகம் எனும் குடிநாவிதனின் நினைவுகள் அவருடைய இறப்புக்குப் பின் அவரது மருமகனான கதைசொல்லியின் பார்வையில் நிகழ்கால நிகழ்வுகளோடு பின்னிச் சொல்லப்படுவதே நாவலின் வடிவம்.
அ.நாவலின் சூழல்
குடி நாவிதர்கள் என்பவர் கொங்குப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் உள்ள மக்களுக்கான தேவைகளில் பங்கெடுக்க உருவாக்கப்பட்ட தொழிற்குழு.இன்று நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டு சிகை அழகு நிலையம் நடத்துபவர்களாக அறியப்பட்டாலும் அது குடிநாவிதர்களின் பணியில் சிறுபகுதி மட்டுமே.அவர்கள் இருக்கும் ஊரில் இருக்கும் அனைத்து குடியானவர்களின் வீடுகளில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு, அவ்வீட்டுடன் தொடர்புடைய வெளியூர் நபரகளுக்கு தகவல் கொடுப்பது தொடங்கி, அந்நிகழ்வுகளுக்கான சடங்குகளை நிகழ்த்துவதை வழிப்படுத்தி முடிப்பது வரையிலான பணிகள் சடங்குகளுக்கான அவர்களின் பங்கு.கருவுற்ற பெண்களுக்கான மருந்து தயாரித்தலில் தொடங்கி படுத்த படுக்கையாய் கிடக்கும் நபர்களுக்கான பணிவிடைகளைச் செய்வது வரையிலான மருத்துவப் பணி அவர்களுடைய வேலை.இவைகளுடன் இன்று அத்தொழிற்குழு செய்து கொண்டிருக்கும் பணியும் இத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்வதே குடிநாவிதர்களின் பணி.கிட்டத்தட்ட ஊரின் எந்த நிகழ்ச்சிகளும் அவர்கள் இல்லாமல் நிகழ்வதற்கான வாய்ப்பே இல்லை.
இன்று பெரும்பாலும் சிகை அழகு நிலையங்களை நடத்தி வரும் நாவிதர்களின் ஆரம்பகாலத் தொழில் இரண சிகிச்சை எனும் அறுவை மருத்துவம் என்றே மனுநீதி குறிப்பிடுகிறது.அதன் காரணமாகத் தங்களை மருத்துவர் என்று இப்போது பெயரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.பிராமணனுக்கு வைசிய பெண்ணிடம் பிறந்த குழந்தையே அம்பஷ்டன்.அம்பஷ்டனையே தமிழில் அம்பட்டன் என்ற சொல்லால் குறித்தனர்.அவர்களே இவர்கள்.மனுநீதியின் உயர்வர்ணத்தின் ஆணுக்கு அடுத்த வர்ணத்தின் பெண்ணின் வழியாக அநுலோமம் எனறவகையில் குழந்தை பிறந்தால் அவன் தந்தைக்கு நிகரானவனாகவும் தாயின் வர்ணத்தினை விட உயர்வானவனாகவும் கருதப்பட வேண்டும்.இது விதியில் இருக்கிறது.ஆனால் நடைமுறையில் இங்கு இருப்பது வேறு.
பிராமணர்களுக்குரிய பணிகளான தொன்மையான சடங்குகளை நடத்த துணைபுரிவதையும், தூது செல்லுதலையும் நிகழ்த்தினாலும் ,பிராமணர்களின் மரியாதையில் நூறில் ஒருபங்குகூட இவர்கள் அடைவது இல்லை.நவீன மருத்துவம் வரும் முன்னர் மருத்துவம் செய்திருந்தாலும் மரியாதை என எதையும் பெற்றதில்லை.இவர்களின் பெண்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பிரசவத்திற்கு முன்னர் கர்பிணிகளுக்கு குழந்தைகளின் வளர்ச்சிக்கான மருந்து கொடுப்பது முதல் பிரசவம் பார்ப்பது வரை செய்து வந்தனர் .இத்தகைய சமூகம் தீண்டத்தகாததாக நடத்தப்படவில்லையே தவிர எண்ணிக்கை காரணமாக சார்ந்து வாழவேண்டிய தேவையின் காரணமாக சற்று கீழாகவே நடத்தப்பட்டனர்.
இவர்களுக்கான இந்த சமூகநிலையில் குடிநாவிதன் நிலை இன்னும் சற்று மோசமானதென்றே குறிப்பிட வேண்டும்.நிலப்பிரபுத்துவ சமூகத்தின் வழக்கப்படி ஆண்டுக்கு ஒருமுறை அவ்வூரில் கிடைக்கும் வேளாண்மையில் தனக்கான பங்காக கிடைக்கும் தானியங்களை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் தன்குடும்பத்தின் பசிக்கு போதுமானதாக அளந்து பயன்படுத்த வேண்டும்.அதைத் தவிர நிகழ்ச்சிக்கு செல்லும் போது கிடைக்கும் சிறுதொகையில் குடும்பத்தினை நடத்தியாக வேண்டும்.இன்றும் குடிநாவிதன் முறை வழக்கொழிந்து போகவில்லை.தன் கடைசிக்கட்டத்தில் இருக்கிறது.பெருந்துறை அருகில் உள்ள வாய்ப்பாடியில் குடிநாவிதனுக்கு ஆண்டுக்கு கொடுக்கும் தானியம் கிடைக்கும்.நாற்பது குடும்பம் இருக்கும் அந்த கிராமத்தில் கிடைக்கும் தானியம் வீட்டிற்கு 1வல்லம் எனப்படும் இன்றைய அளவில் 3.5கிலோ கிடைத்தாலும் கண்டிப்பாக நாலு பேர் கொண்ட வீட்டிற்கே ஆறுமாதம் தாங்காது. சாதரணமாக கிராமங்களிலேயே முடிதிருத்தும் நிலையத்திற்கே சென்றால் 100ரூபாய் பெறும் முடி திருத்தவதை வீட்டிற்கு வந்து செய்ய அங்கு கொடுப்பது 10 ரூபாய் என்றால் அவர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும்.அத்தகைய குடிநாவிதனின் வாழ்வினைப் பற்றிய நினைவுகளும் அவர் குடும்பத்தின் மொத்த வாழ்வுமே நாவலின் சூழல்
ஆ.நாவலின் கரு
வழக்கமாக மாதம் ஒருமுறை பார்க்கச் செல்லும் காரு மாமனை அவனுடைய வீட்டில் கவனிக்க யாருமில்லாத நிலையில் பிணமாக கதைசொல்லி பார்க்கிறான்.எப்படி அங்குவந்தோம் எனத்தொடங்கி மாமனின் பழைய நினைவுகளோடு அவனுடைய உறவுகளின் முந்தைய நினைவுகளும் இறப்பினை அறிந்து வரும் உறவுகளின் நிகழ்கால நிகழ்வுகளுமாக கதை விரிந்து செல்கிறது.கதை சொல்லியின் முன்னோர்களின் வாழ்வு தொடங்கி நிகழ்கால வாழ்வு வரை தொடரும் அனைத்து உறவுகளின் உணர்வுகளும் உறவுச்சிக்கல்களும் கதை சொல்லியின் பார்வையில் நமக்கு கடத்தப்படுகின்றன.
நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது உறவின் சாபத்தாலோ அல்லது ஊழ் உறுத்து வந்ததாலோ காருவின் மனைவி செட்டியோடு தன் குழந்தைகளோடு ஓடிவிடுகிறாள்.அதை முதலில் ஏற்றுக் கொள்ளத் தயாராகி பின் படிப்படியாக மனநிலை பிறழும் நிலைக்குச் செனறு பலவித துயர்களை அடைந்து உறவுகளால் அவ்வப்போது சில நன்மைகளைப் பெற்றாலும் யாருமில்லாத அநாதையைப் போல இறக்கிறார் காரு.பிரிந்து கிடந்த மொத்த உறவுகளும் அந்த இறப்பின் பொருட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றன.ஊரும் உறவுகளும் கூடி பெரும் சம்சாரிகளுக்கே உரிய அனைத்து மரியாதையோடு காருவின் இறுதிச் சடங்குகளை முடிக்கின்றன.அனைத்துச் சடங்குகளும் முடிந்தபின்னர் காருவின் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் ஒருவழியாக நிறைவேறுவதை நாவல் சுட்டி தன் இறுதியை எட்டுகிறது.
புறச்சூழலின் காரணமாக தன்னுடைய அடிப்படைக் கட்டமைப்பை ஒட்டுமொத்த சமூகமும் மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மனிதர்களுக்கு நிகழக்கூடியதைச் சொல்லும் படைப்பாக இந்நூலை எடுத்துக் கொள்ளலாம்.பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகமாக இன்றிருக்கும் நிலைக்கு மாற ஆரம்பித்த சென்ற காலகட்டத்தின் கதை இந்நாவல்.
இ.நாவலின் வாழ்வியல் தருணங்கள்
எப்படைப்பாக இருந்தாலும் அதில் வாழ்வின் தருணங்கள் சொல்லப்பட்டு இருப்பது எவ்வாறு அமைகின்றன என்பதை வைத்தே அப்படைப்பினைத் தீர்மானிக்க இயலும்.அவ்வாறு இதில் அமையும் தருணங்கள் பல இருந்தாலும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
1.தன்னுடைய மனைவி மாற்றானுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டாள் என்பதை அறிந்தவுடன் தொடக்கத்தில் மிக இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் வீடு வரும் காருவின் நடத்தை வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் தன் மனைவி சென்று விட்டாள் என்பதை அறிந்து திடுக்கிடும் இடம் உண்மையின் தரிசனம்.அங்கு ஆரம்பிக்கிறது காருவின் வலிப்பு நோய்க்கான ஆரம்பம். தன் குழந்தைகளைத்தேடி அலைந்து கிடைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினை அடையும் போது வலிய அந்நோய் வநது தன்னை அழித்துக்கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குமா என்று வாழ்வையும் மரணத்தையும் ஒரு சேர எதிர்பார்க்கும் மனநிலையை வெளிப்படுத்தும் மொழி கவித்துவத் தருணம்.
2.அக்கவித்துவம் போன்ற இன்னொரு தருணம் பழனிக் கோவிலில் முருகனைக் காரு அனைவரும் உடனிருக்க தனியாகத் தரிசிக்கும் மாயைக் காட்சி.பழனியாண்டவனைத் தவிரப் பார்க்கும் புறக்காட்சிகள் அனைத்தும் காருவின் சிந்தையிலிருந்தே மறைந்து முருகனும் தானுமாக காரு நிற்குமிடம் அற்புதம்.
3.மனநிலை பிறழ்ந்த நிலையில் வானொலியில் நேரலையில் கேட்ட பாடல் பேட்டரி தீர்ந்ததால் பாதியில் நின்றதற்கு வானொலி வைத்திருப்பவரிடம் சண்டையிட்டு பேட்டரி வாங்கிவர உடனடியாக நகரத்திற்குச் சென்று அங்கு இரவாகி விட்டதால் உடனே கிடைக்காத சூழலில் இரவு அங்கேயே தங்கி அடுத்தநாள்காலை கடைதிறந்தவுடன் வாங்கி வந்து வானொலி உரிமையாளரான உறவினரிடம் பேட்டரியைக் கொடுத்து மீண்டும் அதே பாடலைப் போடு எனும் இடம் மனித மனம் செயல்படும் விதம் குறித்தான பார்வையில் மெல்லிய புன்முறுவலைக் கொணர்வது.
4.வாழ்வதற்கான பிடிப்பினை என்றும் நேர்மறை மனம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை , முழுத்தீமையும் அருளக்கூடும் என்பதற்கான உண்மையைச் சொல்லும் பாத்திரம் சௌந்தரம்மா.தனக்கு வந்திருக்கும் நோய்க்கான காரணமாக காருவை எண்ணி சாபம் கொடுத்து அந்தச் சாபம் பலிப்பதைக் காணவே வாழவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு பெரும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் வாழ்ந்து தான் சொன்னது சரிதான் என நீருபிக்க முயலும் தன்மை மனித மனத்தின் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தைச் சுட்டும் இடம்.செட்டிக்கும் காருவின் மனைவிக்கும் இருக்கும் தொடர்பு எங்கு செல்லும் என்பதை உணர்ந்து தன்நோயை தானே வெல்ல தீயதையே துணையாகக் கொண்டு அக்கதாபாத்திரம் ஆடும் நாடகம் தன் உயிரைக் காக்க ஒவ்வொரு தனி உயிரும் ஆடும் வாழ்வின் மாளாத ஆடல்.
5.கதைசொல்லி மற்றும் அவனுடைய சகோதரி இருவரும் சாயப்பட்டறையில் வேலை செய்யும் போது படும் துயரும் அங்கு வேலை செய்யபவர்கள் சாவதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுக்கும் நைட்ரேட்டினை கடும் கட்டுப்பாட்டினை மீறியும் சேகரித்து வைத்துக் கொள்ளும் இடமும் அத்தகையதே.வாழவேண்டும் என்ற ஆவலில் தான் மிகக் கடுமையான உடலுழைப்பினைச் செய்து கொண்டு வாழ்கின்றனர் இருவரும். ஆனாலும் சூழல் மாறினால் தேவைப்படும் என்றோ அல்லது மரணத்தின் மீதான மாளாத கவர்ச்சியினாலோ தங்கை சேகரித்து வைத்தததை கதை சொல்லி வேறொன்றினைத் தேடும் போது கிடைக்கும் நைட்ரேட்டினைப் பார்த்து உணரும் இடத்தினையும் அவ்வாறே கொள்ளலாம்.
6.தற்செயல் என்பதை எப்போதும் ஏளனமாகப் பார்க்கும் போக்கு நிலவிவரும் இக்காலத்தில் மனச் சிதறலின் ஆரம்பகட்டத்தில் இருக்கும்காரு மாமாவினை இரயில்தடத்தில் கதைசொல்லி சந்திக்கும் இடம் தற்செயலாக இருந்தாலும் அந்தத் தருணம் காலத்தின் சொல்லிலடங்கா சாத்தியத்தினை உணரும் இடமாகவே விரிகிறது.
ஈ.நாவலின் நிறையும் குறையும்
இத்தகைய நிகர்வாழ்வு அனுபவங்கள் இன்னும் இருந்தாலும் இவைகளுடன் நிறுத்திக் கொண்டு இந்நூலின் நிறை குறைகளைக் கூறலாமென்று எண்ணுகிறேன்.நிகர்வாழ்பவனுபவங்கள் இந்நூலின் நிறை என்று எடுத்துக் கொண்டாலும் அவற்றினைப் பற்றிய முழுமையான சித்திரம் கொங்கின் கிராமவாழ்வில் இல்லாதவருக்கு புரியும் வகையில் அமையாமல் சுருக்கப்பட்ட பிரதியினைப் போல இருப்பது இந்நூலின் போதாமை எனக் கொள்ளலாம். எந்நூலையும் விரித்துக் கொள்ளக்கூடிய திறனில்லாத வாசகனும் கொங்கின் வாழ்வினைப் பற்றிய அறிமுகம் இல்லாத வாசகனும் இந்நூலை முழுவதுமாக வாழ்பனுபவமாக அடைய முடியுமா என்பது சந்தேகம்தான்.
எடுத்துக்காட்டாக கொங்கு நாவிதர் வேட்டுவ நாவிதர் இரண்டும் நாவிதர் சமூகத்தினைச் சேர்ந்ததே.இதில் கொங்கு நாவிதர் கிடைக்காமல் வேட்டுவ நாவிதர் வைத்திருக்கும் ஊரைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை சிலகாலம் முன்பு வரை கொங்கின் இரண்டு பகை இனக்குழுக்களாகக் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு இருந்த வெள்ளாளர் வேட்டுவர் என்ற இரு குழுக்களுக்கிடையேயான பகையே காரணம்.இன்று கொங்கிற்குள் வந்த பார்க்கும் யாருக்கும் இவ்விரண்டு குழுக்களும் முன்னர் பகையோடு இருந்ததற்கான அடையாளங்களை எளிதாகக் காண முடியாது.பழங்கதைகளை அறிய முயற்சிக்கும் நபர்களைத்தவிர மற்றவர்களுக்கு இரண்டும் ஒன்றுக்கொன்று தேவைப்பட்டால் உதவும் குழுப் போலவே தெரியும்.அப்படி புறச்சூழல் நிலவும் இன்றைய காலத்தில் எழுதப்படும் நாவல் முன்னர் இருந்த சூழலை எதேனும் ஒரு வகை அனுபவமாகச் சுட்ட வேண்டும்.அதை இந்நூல் செய்வதில்லை.இந்தியச் சமூகத்தின் பல்வேறு குழுக்களின் நடத்தையில் காலத்தால் ஏற்படும் இந்த மாறுதல்கள் நான் முன்னரே கூறியதுபோல் இந்திய சமூகங்களைப் புரிந்து கொள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்துபவை.ஒரே தொழிற்குழுதான் என்றாலும் இரண்டுக்கும் இருக்கும் முரண்களும் ஒருவரையொருவர் முன்னர் நடத்தியவிதமும் பொதுவெளியில் இன்றிருக்கும் பொதுப்புத்திக் கருத்துக்களை உடைத்தெறிபவை.
உ. இருத்தலிலியல் நாவலா?.
மேலே நான் குறிப்பிட்ட சில தருணங்கள் போன்ற இருத்தலியலின் சிலகூறுகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தாலும், இதை இருத்தலியல் படைப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. இருத்தலியலின் முதல் கூறாக வைக்கப்படும் தனிமனித, உறவு, சமூக இருண்மைகள் இக்கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டால் அதை மறுக்கும் வண்ணம் கதைசொல்லியின் மூதாதைப் புலவனின் பாடலும் ஊரின் மக்கள் மத்தியில் அதற்கான மதிப்பும் ஊர் காருவிற்காகச் செய்யும் மரியாதைகளும் காருவின் குடும்பம் மீளும்போது காருவின் உறவுகளும் ஊரும் அவர்களை எதிர்கொள்ளும் விதமும் இப்படைப்பினை முற்றிலும் சாராம்சவாதத்தினை நோக்கிச் செலுத்தும் படைப்பாகவே மாற்றுகிறது
அது மட்டுமல்லாமல் எழுபதுகளில் நடந்த சமூக மாற்றத்தின் காரணமாக நடந்த பெரும் அலையில் சிக்கித் தவித்ததை இந்நூல் கூறுவதனால் வரலாற்றின் துயரினைக் கூறுவதாக அமைந்தாலும் காரு நம்பிய அனைத்தும் அவனைக் கைவிட்டதாக எண்ணி மனிதனைக் கைவிட்ட தத்துவம் என்பதாக எடுத்துக் கொண்டு அணுகினாலும் காருவின் மரணத்திற்குப் பின்னான ஊரின் ஒத்துழைப்பும் உறவுகளின் ஒன்றிணைப்பும் வாழும் காலத்தில் காரு எண்ணியது அனைத்தையும் அவன் மரணம் நிறைவேற்றி வைத்துவிடுவதால் வாழ்வின் சாராம்சவாதத்தினைக் காட்டும் படைப்பாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்
ஊ.மையப்படிமம்
அடுத்து இந்நாவலின் மையப்படிமத்தினைப் பொறுத்தவரை புறநானூற்றின் புகழ்பெற்ற பாடலின் உவமையை தன் மையப் படிமமாகக் கொண்டு அமைந்திருப்பதும் அதற்குரிய தலைப்பாக அதன் வரியே அமைந்து இருப்பதும் சிறப்பு.இது தற்செயலாக அல்லது திட்டமிட்டதாக எவ்வாறு அமைந்து இருந்தாலும் அது சிறப்பே.எங்கோ இடிஇடித்து பெருங்கற்களில் மோதி விழுகின்ற நீர் ஒன்று சேர்ந்து பேராறாக வரும்போது அதில் சிக்கி அல்லலுறும் படகைப் போல காருவின் வாழ்வும் அமைகிறது என்பது சரியான மையப்படிமம்.அன்று உலகெங்கும் நடந்த மாற்றங்களினால் இந்தியாவிலும் பெரும் அலைகள் எழுந்தது.அந்த அலைகளில் சிக்கிய படகாக காரு மற்றும் கதைசொல்லியின குடும்பங்கள் அல்லலுறுகின்றன.அந்த அல்லலில் அவை பெற்றதென்ன என்பது இந்த மையப்படிமத்துடன் முழுமையாக ஒத்துப்போகின்றது.அவ்வகையில் இது சிறந்த படைப்பே.
எ.நாவலின் வடிவம்
நாவலின் வடிவமாக கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் பின்னிப் பிணைந்து சென்று கொண்டே இருக்கும் கதைசொல்லியின் நினைவுகளே அமைந்திருக்கின்றன.மனித மனத்தின் தொடர்சியில்லாத் தன்மையினைப் போல கதைசொல்லியின் சிந்தனையும் அமையும் வண்ணம் வெளிப்பட்டிருப்பதால் நாவலின் வடிவம் சரியான கட்டமைப்புடன் அமைந்திருப்பது உறுதியாகிறது.
ஏ.ஏன் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்
சென்ற காலத்தில் கொங்கில் நடந்த இன்று அழிந்து கொண்டிருக்கும் தொழிற்குழுவினைப் பற்றிய வரலாற்று ஆவணமாகவும் காலத்தால் சமூகங்களில் நடக்கும் மாற்றங்களால் இடர்படப்போவது யார் என்பதனைச் சுட்டும் நுண்மையாலும் மானிடம் எச்சுழலிலிருந்தும் மீளும் எனும் மானிடத்தின் மீதான நம்பிக்கையாலும் இப்படைப்பு கண்டிப்பாகப் படிக்க வேண்டிய படைப்பாகிறது.அதேசமயம் இது சுருக்கமான படைப்பாக இருப்பதால் விரித்துப் பார்க்கும் எண்ணத்தோடே இதை அணுக வேண்டிய தேவையும் இருக்கிறது.இதைச் சொல்லக்காரணம் இப்படைப்பு எந்தச் சூழலோ அத்தகைய கிராமத்தில்தான் இன்றும் என்வாழ்வு.சாயப்பட்டறையும் நான் வேலைக்குச் சென்ற இடமே.அதனால் என்னால் இதை சுருக்கமாகக் கூறும்போதும் விரித்துப் பார்க்க முடிந்தது.அது இல்லாதவர்கள் விரித்துக் கொள்ளக்கூடிய பார்வையோடே இதனை அணுகவேண்டியது அவசியம்.
ஐ.படைப்பாளியுடனான உரையாடல்
இந்நூலைக் குறித்து தேவிபாரதி அவரகளைத் தொடர்பு கொண்டு இந்நூலினைப் பற்றிய எனது எண்ணங்களைத் தெரிவுபடுத்தியதற்கு இந்நூலின் தலைப்பினைத் திட்டமிட்டே வைத்ததாகவும் இதனுடைய வடிவமும் அத்தகையதே என்றும் கூறினார். விரித்துக் கூறவேண்டிய தருணங்களைச் சுருக்கிக்கூறியது ஏன் என்ற கேள்விக்கு இன்றைய வாசகன் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான் விதையைப் போல தருணங்களை உருவாக்கி வாசனிடம் அளிப்பதாகவும் அவ்விதை முளைத்து மரமாகி கனியை தருவது வரையிலான பணியை செய்யுமளவு இன்றைய வாசகனின் தமிழிலக்கிய அறிமுகம் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார். வாசகன் மேலும் தமிழ் இலக்கிய உலகின் மேலும் இவ்வளவு நம்பிக்கை கொண்ட படைப்பாளியை அறிமுகப்படுத்திக் கொண்டதில் வாசகனாக எனக்கும் மகிழ்ச்சியே.
இறுதியாக இந்நூலை எழுதிய தேவிபாரதிக்கு என் வாழ்த்துக்கள்.கொங்கின் சமூகவாழ்வின் ஆவணமாக மாறக்கூடிய இந்நூலை எழுதியதற்கு இப்பகுதியில் வாழ்பவன் என்ற முறையிலும் அவருடைய வாசகன் என்ற முறையிலும் அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் கூறியதை வைத்து ஏற்கனவே இந்நூலைப் பற்றித் தளத்தில் வெளியிட்ட தகவலுக்கு உங்களுக்கு என் நன்றி.
இப்படிக்கு
அந்தியூர் மணி.
திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி