ஊழ்

கர்மா கபே:  “மெனு எல்லாம் இல்ல, உங்களுக்கு எது கொடுத்துவச்சிருக்கோ அது கிடைக்கும்”

நவீனத் தொழில்முறை ஆன்மிக குருவாக ஆவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று ஆணவத்தை வளர்ப்பது – தன் ஆணவத்தை. அதைவிட கூடுதலாக பக்தர்களின் ஆணவத்தை.

அக்காலத்தில் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் ஒரு மானுடதெய்வத்தைப் பார்க்கப் போயிருந்தார். ஆயிரம்பேர் நடுவே அவர் சபையில் அமர்ந்திருந்தார். மானுடதெய்வம் அழைத்தது. “திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருக்கும்…. எழுந்து என்னருகே வா”.

அவ்வளவுதான், அவர் மானுட தெய்வம் என்பதற்கு அதைவிட என்ன சான்று தேவை? இவர் எழுந்து அருகே சென்றார்.  கரகரவென்று கண்ணீர், மூக்குறிஞ்சல், கட்டித்தழுவல், கரைந்துருகல்…

”தேடித்தேடி கடைசியிலே நான் உச்சகட்ட ஞானத்தை அடைஞ்சிட்டேன்”

”சரி, அதோட லிங்க் அனுப்பு” 

”எனது ஞானம் அவருடைய தொடுகையால் முளைவிட்டது” அவ்வளவுதான். ஞானமெல்லாம் ஏற்கனவே இருக்கிறது. கொஞ்சம் தொட்டால்போதும். சும்மா கூடுதலாக ஏதாவது செய்து குழப்பவேண்டாம். கைய வச்சுக்கிட்டு சும்மா இரும் ஓய்.

பெரும்பாலான பக்தர்கள் தங்கள் குருநாதர்களைப் பற்றிச் சொல்லும்போது அவருடைய ஆன்மிக, மெய்ஞான, தவத்தகுதியை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள்.

“ஒரு திங்கக்கிழமை சார், ஆசிரமத்திலே செம கூட்டம். நான் சரி பாத்துட்டுப் போலாமேன்னு ஓரமா நின்னுட்டிருக்கேன். அவர் அப்டியே சுத்தி பார்க்கிறார். கண்ணு எப்டி இருக்கும்கிறீங்க? தீ மாதிரி. அந்தக் கண்ணு என் மேலே நிலைச்சுது. ஒரு செகண்டுதான். ஒரு சிரிப்பு. வான்னு கூப்பிட்டார். நான் அப்டியே கைகூப்பிக்கிட்டு பக்கத்திலே போனேன். உனக்காகக் காத்திட்டிருக்கேன், நீ எங்கேடா போனேன்னு சொன்னார்”

”மறுபிறப்பிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

”தெரியலை, முன்னாடி நான் நெப்போலியனா இருந்தப்ப நம்பிட்டிருந்தேன்”

பரவசபாவனை. கண்செருகல்.குரல் கம்முதல். ”எனக்கு அப்டியே நெஞ்சு உருகிப்போச்சு. சாமி எனக்கு ஞானம் வேணும்னு சொல்றேன். நீதாண்டா என் ஆளுன்னு சொன்னார். உனக்கில்லாத ஞானமா. டேய், மலைவிளிம்பிலே நின்னுட்டிருக்கேடா. அப்டியே பறந்திருன்னு சொன்னார். அப்டித்தான் அவருகூட சேந்திட்டேன்”

ஞானம் ஞானத்தை அடையாளம் கண்டுகொண்டுதானே ஆகவேண்டும்? ஞானத்தை ஞானம்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியும்? ஞானம் ஞானத்தில் கரைந்து ஞானமென்றே ஆனபிறகும் ஞானமே எஞ்சியிருக்கிறது.

இப்படி கண்டுகொள்ளவில்லை என்றால் கடுப்பு. “ஆளு பெரிய சாமிதான். ஆனா நெனைப்பு கொஞ்சம் ஜாஸ்தி. அதோட பணத்தாசையும் உண்டு. அப்டியே ஜாடையா சுத்திப் பாக்கிறது. பசையுள்ளவன பாத்தா பக்கத்திலே கூப்பிட்டுக்கிடறது. சாமானியங்க அவரு கண்ணிலே படுறதில்லீங்க”

“இத்துடன் இந்த வழி முடிவடைகிறது”

திறமையான சாமியார்கள் இதை அறிந்திருக்கிறார்கள். “உன்னில் இருக்கும் பொறியை எழுப்பு” என்கிறார்கள். “நீ சாமானியன் இல்லை, நீ வேறு” என்கிறார்கள். ”உனக்காக எல்லாமே காத்திருக்கின்றன” என்கிறார்கள். எவர் இல்லை என்று சொல்வார்கள்?

உண்மையில் அப்படி ஞானம் தேடிச் செல்பவர்கள் அனைவருமே சராசரிக்கு கொஞ்சம் மேலான ஈகோ கொண்டவர்கள்தான். அதாவது ‘நினைப்பு’ என்று நாம் சொல்வோமே அது. அவர்களுக்கு ஏற்கனவே தாங்கள் அசாதாரணப்பிறவிகள், மேலும் அசாதாரணமாக ஒன்று நிகழ காத்திருக்கிறோம் என்று தெரியும். ஓர் அற்புதத்துக்கு குறையாத ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது ஒரே அற்புதம்தான், புனித ஜான் ஏசுவை கண்டடைகிறார்!

”யோகசாதனையிலே வேகம் ஜாஸ்தியா இருந்ததனாலே மெய்ஞானத்தை கவனிக்காம தாண்டிப்போயிட்டேன்” 

ஆனால் அரசியலிலும் இதுதான். “உங்களை மாதிரி படிச்ச, சிந்திக்கத் தெரிஞ்ச, தைரியமான இளைஞர்கள்தான் தம்பி தட்டிக்கேக்கணும். உங்களை மாதிரி ஆளுங்கதான் மத்தவங்களுக்கு வழிகாட்டணும். புரலட்டேரியன்ஸோட பொறுப்பு அது தோழர்.லெனின் என்ன சொல்லியிருக்காருன்னா…” என்று சொல்லாமல் அழைத்தால் யாராவது கம்யூனிஸ்டாக ஆவார்களா என்ன?

புத்துலகம் படைக்கவேண்டும், அதுவும் நான் படைக்கவேண்டும், வேறுயாரும் படைத்துவிடவும் கூடாது- அதுதானே புரட்சி மனப்பான்மை? புரட்சியை நான் நினைக்கும் விதத்தில் அல்லாமல் நினைப்பவன்தான் முதல் எதிரி. அவனை கொல்லவேண்டும், ஆனால் போலீஸ் பிடித்து கேஸ் ஆகிவிடும். ஆகவே ஃபேஸ்புக்கில் திட்டுவோம், அதுதானே புரட்சியின் அடிப்படை?

மெய்ஞானம், மொறுமொறுப்பான பிட்ஸாவுடன்

ஆன்மிகர்களில் பலருக்கு தாங்கள் ஒருவகை பிறவித்தொடர்ச்சி கொண்டவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேவையான தேடல், தியானம் எல்லாம் முன்னரே செய்துவிட்டார்கள். எஞ்சிய மெய்ஞானமெய்துதல் மட்டும்தான் இந்தப் பிறவியில்.நேரமில்லை, சட்டுபுட்டென்று ஞானத்தை அடைந்துவிட்டால் கடவுளிடம் சிலபல பேச்சுவார்த்தைகளை தொடங்கவேண்டியதுதான்

என் சொந்தத்தில் ஒரு மாமா ஞானப்பதற்றம் கொண்டவர். கம்யூனிஸ்டாக இருந்தார். அதாவது மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி வழியாக நக்சலிசம் நோக்கிச் சென்று அதிதீவிர கம்யூனிஸ்டாக ஆனார். கம்யூனிஸ்டு ஓர் எல்லைக்குமேல் முற்றிவிட்டால் பூர்ஷுவாவை பிறகு பார்த்துக்கொள்ளலாம், மற்ற கம்யூனிஸ்டுகளை முதலில் வழிப்படுத்துவோம் என்னும் தீவிரம் உருவாகிறது.

”நான் எங்கிட்டதான் பேசிக்கிடறேன். வேற யாரும் அவ்ளவு கூர்ந்து கவனிக்கிறதில்லை”

தன்படை வெட்ட ஆரம்பிக்கும்போது கட்சியில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பெரிய கட்சிகளில் இருந்து சின்னச்சின்ன கட்சிகளுக்குச் செல்கிறார்கள். நழுவி நழுவி வேறுவேறு கலங்களில் விழுந்து, கிண்ணிகளில் விழுந்து, கிண்ணங்களில் விழுந்து, நாலைந்துபேர் மட்டுமுள்ள கட்சிச் சிமிழ்களிலுமாகி அங்கிருந்து வெளியேறி தனியாளாகிறார்கள்

தனிமனிதனில் எஞ்சும் கம்யூனிசம் மலச்சிக்கல் போல ஓர் உபாதை. அது  மேலும் முற்றி முறுகினால் தனித்தேசியம். தமிழ்த்தேசியம் வழியாக திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தில் முற்றி பார்ப்பனவெறுப்பு. அங்கிருந்து இரண்டு வழிகள். ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாதமும் நோன்புக்கஞ்சியும். இன்னொரு பாதை தொல்தமிழர் நெறி. நேராக அந்தப்பாதை  சைவசித்தாந்தத்துக்கு செல்கிறது.

பறவை ஆய்வாளரின் ஊழ்வினை

சைவம் முற்றினால்  சித்தர்மரபு. சித்தர் மரபு தீவிரமடைந்தால் சாகாக்கலை, கடைசியில் ரசவாதம். மூலநோய்க்கு மூவிலைத்தாமரை என கண்டுபிடிப்பதுபோன்ற பணிகளில் தாடி நரையோட அமர்கையில் ஓர் உபவீடுபேறு அமைகிறது. இது பல்லாயிரம் காலடிபட்ட அரசப்பெரும்பாதை.

மாமா கடைசிக்காலத்தில் அவருடைய ஆசிரம வாசலில் இளவெயிலில் அசையாமல் அமர்ந்திருப்பதைப் பார்ப்பேன். கடைவாய் மட்டும் இறுகி நெளிந்துகொண்டிருக்கும். தங்கையா நாடாரிடம் கேட்டேன். மாமாவுக்கு என்ன பிரச்சினை?

“பிள்ளை, அது ஜென்மதோசம்லா?”என்றார் தங்கையா நாடார். “அவரு போன சென்மத்திலே ஒணானாக்கும். அப்ப விட்டுப்போன வெயிலை இப்ப இருந்து காயுதாரு”

“அப்பாடா! சீனாவிலே ஒரு சுழல்காற்று உருவாகாம தடுத்தாச்சு”

அம்மாவிடம் கேட்டேன், மாமா முற்பிறவியில் ஓணானா? “இருக்கும், எத்தனை நெறம் மாத்தியாச்சு” என்று அவள் சொன்னாள்.

மாமா  கடைசியில் ஒரு வட்டமடித்து அவரைவிட வயதான ஒரு பெண்மணிக்குக் காதலராகி அவளுக்கு மூக்குப்பொடி வாங்க கடைக்கு வருவார். அவள் அவரைப்போலவே வேறொரு மார்க்கத்தில் நெடுந்தொலைவு சுற்றிவந்தவள். இரு புள்ளிகள் சந்தித்துக்கொண்டு ஒன்றையொன்று நிறைவுசெய்தன. அவள் தன் வீட்டுத் திண்ணையில் இளவெயிலில் அசையாமல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்.

முந்தைய கட்டுரைஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
அடுத்த கட்டுரைராதை