வீடு

d

 

என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை.

 

ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் நூல்கள். உலக இலக்கியம். ஆனால் சின்னஞ்சிறு கிராமத்தில் மாடுகளுக்குப் புல் பறித்தும் கோழி வளர்த்தும் வீட்டைவிட்டு வெளியே செல்லாமலேயே வாழ்ந்தார்கள். சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாழ்நாள் முழுக்க வாசித்தார்கள். வெளியே என்ன இலக்கிய அலை என்றே தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு தனி உலகம் இருந்தது அவர்களுக்கு. அதில் ஒரு முக்கியமான பெயர் மார்கரெட்.இ.சாங்ஸ்டர். அமெரிக்கப் பெண்கவிஞர்.

*

”பிள்ளைகள் வீடு திரும்பிவிட்டனவா?”

மார்கரெட் சாங்ஸ்டர்

ஒவ்வொருநாளும்
சூரிய ஒளி
மேற்குவான் சரிவில் அணையும்போது,
நண்டுசிண்டுகள் எல்லாம்
விளையாடிக் களைத்து
சற்றே வியர்வை சொட்ட
திரும்பிச்செல்லும்போது,
சாய்வுநாற்காலியில் தூங்கும்
என் கணவரைவிட்டு
ஓசைப்படாமல் நழுவி
வாசலுக்குவந்து
புத்தம் புதிதான அந்த முகங்களையே
பார்த்து நிற்பேன்

 

இந்த இனிய பழைய வீட்டில்
நாங்கள் தான் இருக்கிறோம்.
ஒரு காலத்தில் இதுமுழுக்க
வாழ்க்கை நிறைந்திருந்தது
கலீரிடும்  சிறுமிச் சிரிப்புகள்
எதிரொலிக்கும் சிறுவர்பூசல்கள்…
நாங்கள் இருவரும்
சேர்ந்து இரவுக்காகக் காத்திருப்போம்.
நிழல்கள் நெருங்கும்போது
தளர்ந்த குரலில் அவர் கேட்பதுண்டு
”இரவாகிவிட்டதே
பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாயிற்றா?”

 

”ஆமாம் என் அன்பே”
என்று மென்மையாகச் சொல்வேன்.
”அவர்களெல்லாம் வீட்டுக்கு வந்து
நெடுநேரமாகிறது”
என்னுடைய நடுங்கும் குரலில்
மென்மையாகவும் மெதுவாகவும்
ஏதாவது பாடுவேன்.
கிழவர் தூக்கம் கனத்து
தன் தலையை கைகளில் சரிப்பதுவரை.
பின் நான் ஒன்றிரண்டு என
எண்ணிக்கொள்ள ஆரம்பிப்பேன்.
மற்ற பூமியில் இருக்கும்
என் வீட்டை நினைத்துக்கொள்வேன்.

 

அந்தவீட்டில் அவர்களுக்கு
ஒரு சிறுதுயரம்கூட
கண்ணீரால் பார்வையை திரையிடாது.
வேனிலிலும் குளிரிலும்
வருடம் முழுக்க
கடவுளின் புன்னகை அவர்களுடனிருக்கும்.
என் கரங்கள் காலியாகத்தான் இருக்கின்றன
ஆனால் அவை
ஆதுரத்துடன் மடித்து அணைத்துக்கொண்டிருக்கின்றன.
உள்ளே என்  தாய்மை மனம்
ஏங்கிக்கொண்டிருக்கிறது 

சிலசமயம் மாலைக்கருக்கலில்
நான் சற்றே கண்களை மூடினால்போதும்
என் பிள்ளைகள் எல்லாமே
பிலுபிலுவென என்னைச்சூழ்ந்துகொள்ளும்
விண்ணிலிருந்து வரும் ஒரு பிரமை!
என் முலைக்கண்ணை எட்டும் வழியை மறந்து
தடவி அலையும் பிஞ்சுக் கைவிரல்கள்.
அழகியக் குட்டித்தேவதைகள்.
ஆசிபெற்ற அந்த உலகுக்குச்
சென்றுவிட்ட என் தங்கச்செல்லங்கள்…

 

ஒரு சிறு மேகநிழல்கூட கவியாமல்
அவர்களின் சுடரும் நெற்றிகளைக் காண்கிறேனே.
சுதந்திரத்துக்காக நான் கையளித்த
என் பையன்களை!
சபதம் முடித்த அவர்களின்
சிவந்த வாட்களை!
தொலைதூரத் தெற்கில்
ஒரு செறிந்த காட்டில்
விழுந்தார்கள்
என் வீரமான துடிப்பான
இரட்டைப்பிள்ளைகள்.
கடவுளுக்கு நன்றி
அவர்கள் ஏந்திப் போராடிய அந்தக்கொடி
பறக்கிறது அவர்களின் கல்லறைமீது.

 

ஒரு நெடுமூச்சில்
அந்தக் காட்சி ஒளிச்சிறகால்
கலைக்கப்படுகிறது.
மீண்டும் நாங்களிருவரும் மட்டும் இருக்கிறோம்.
இரவெல்லாம் தன்னந்தனிமையில் விழித்திருக்கிறோம்
அவரது மனம் பிறழ்ந்துவிட்டது என்கிறார்கள்.
நான் அதைக் கேட்டு புன்னகைதான் செய்வேன்
அவர் தன் பிள்ளைகளுடன்
அந்த தெளிந்த அமைதியான காலங்களில்
அல்லவா வாழ்கிறார்?

 

வேனிற்கால மாலைநேரம்
மேற்கிலே தேய்ந்து மறையும்போது
சின்னப் பயல்க்குட்டிகள்
சொட்டச் சொட்ட ஆடிக்களைத்து
வீடு திரும்பும்போது
மூலையிலிருந்து என் கணவர் கேட்கிறார்
”சொல் அன்பே,
பிள்ளைகளெல்லாம் வீடுதிரும்பிவிட்டனரா?”
என் கண்களை மேலே தூக்கி
நான் சொல்வேன்,
”ஆம் அன்பே
அவர்களெல்லாரும் இருக்கிறார்கள்
தங்கள் வீட்டில்”

 

 

Margaret_Elizabeth_Sangster_001

என் அம்மா இறந்த அந்நாட்களில் கண்ணீருடன் அல்லாது என்னால் படிக்க முடியாத ஒரு கவிதையாக இருந்தது இது.  எத்தனை எளிமையான கவிதை. ஆழ்ந்த உள்ளர்த்தங்கள் ஏதுமில்லை. நேரடியானது, சர்வ சாதாரணமானது. ஆனால் இருபத்தைந்து வருடங்களாக இதை நான் கடந்து செல்ல முடியவில்லை. ஒருவேளை என் வாழ்நாள் முழுக்க முடியாது.

ஆழ்ந்த மதக்குறியீடு ஒன்றால் வலுவாக ஆக்கப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. ‘வீடு’ .ஆசியளிக்கப்பட்ட, இன்பமன்றி வேறெதுவும் இல்லாத, ‘அவ்வுலக’ வீடு. ஆமாம், நேர்ச்சொற்களில் அந்த அம்மாவின் மனசாந்தியைப்பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கிறது இக்கவிதை. ஆனால் உண்மையில் இம்மண்ணிலேயே அந்த பொன்னொளிர் இல்லம் அவர்களுக்கு இருந்ததே. பூசலிடும் பையன்களும் சிரிக்கும் பெண்களும் நுரைக்க நுரைக்க நிறைந்திருந்த சொற்கம்!

அந்தக்கொடி! ஆம், கவிதை அதை வாழ்த்துகிறது. நன்றி சொல்கிறது. ஆனால் அந்த அன்னை இழந்தவற்றுக்கு எந்தக்கொடி ஈடாகும்? எந்தக்கொடிக்கு அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் சக்தி உள்ளது?

இப்போது எல்லாரும் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடம் முன்பு மார்கரெட் முக்கியமானவராக இருந்திருக்கலாம். திருவிதாங்கூர் பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது பாதிரிமார்களால் பொதுவாகக் கற்பிக்கப்பட்டிருக்கலாம். இங்கே ஆங்கிலக் கல்வி என்பது பெரும்பாலும் லண்டன்மிஷன் பாதிரிமார்களால் அளிக்கப்பட்டது. ஆழமான மத உணர்வுகொண்ட மார்கரெட் இ சாங்ஸ்டர் அன்றைய ஆங்கிலிகன் பாதிரிமார்களால் மிக விரும்பப் பட்டிருக்கலாம்

1838ல் அமெரிக்காவில் நியூயார்க்கில்  நியூ ரோச்செல்லில் பிறந்தவர் மார்கரெட் இ சாங்ஸ்டர். அவரது குடும்பம் ஆழ்மான மதநம்பிக்கை உடையது. பெரிய கல்வி ஏதும் அவருக்கு இல்லை. கற்றதெல்லாம் வீட்டிலேதான், மதக்கல்வி. வீடுதான் மார்கரெட்டின் உலகம். கடைசிவரை.

இளம்வயதிலேயே எழுத ஆரம்பித்து தன் 17 வயதிலேயே சிறுவர் இலக்கியம் ஒன்றை படைத்து பரிசுபெற்றிருக்கிறார். 1858ல் ஜார்ஜ் சாங்ஸ்டரை மார்கரெட் மணந்தார்.கிட்டத்தட்ட 15 வருடக்காலம் மணவாழ்க்கையில் மார்கரெட் இ சாங்ஸ்டர் ஒன்றும் எழுதவில்லை. 1871ல் சாங்ஸ்டர் இறந்தபின்னர்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

கணப்பும் வீடும்[ “Hearth and Home” ] என்ற இதழின் சிறுவர் பக்கங்களின் ஆசிரியராக இருந்த மார்கரெட் சிறுவர்களுக்காகத்தான் நிறைய எழுதியிருக்கிறார். கிறித்தவச் சமயப்பணிகளில் பெரும் ஈடுபாடு அவருக்கு இருந்தது. ‘கிறிஸ்டியன் அட் வர்க்’ போன்ற இதழ்களின் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். 1912ல் நியூ ஜெர்ஸி தெற்கு ஆரஞ்ச் பகுதியில் காலமானார்.

மார்கரெட் இ சாங்ஸ்டரின் பழைய கவிதைத்தொகுதி ஒன்று என் அம்மாவின் நூலகத்தில் இருந்தது. அதில் என்.ஆர்.நாயர் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது. பழைய புத்தகக் கடையில் வாங்கிய பிரதி. அனேகமாக ஏதோ மாணவனுடையது. அதில் இருந்து சில கவிதைகளை நான் பதினைந்து வருடம் முன்பு மொழியாக்கம்செய்தேன். இந்தக்கவிதையை 1985 இல் நம்வாழ்வு என்ற இதழிலும் பின்னர் ‘சொல்புதிது’ இதழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன்.

மார்க்கரெட் இ சாங்ஸ்டர் ஆழமான வாழ்க்கைத் தரிசனத்தையோ தத்துவ விசாரத்தையோ முன்வைத்த இலக்கியப்படைப்பாளி அல்ல. ஆனல் அவர் ஒரு அன்னை. அன்னையின் கைகளால் எழுதப்பட்ட  இலக்கியத்துக்கு அதற்கே உரிய கனிவும் பிரியமும் இருக்கும். அந்தத் தன்மை உடைய எளிமையான இந்த எழுத்து என் அம்மாவின் நினைவுடன் கலந்து எனக்குள் இருக்கிறது. அம்மாவுக்கும் மார்கரெட்டுக்கும் பொதுவாக நிறைய இருக்கிறது என்பதை மார்கரெட்டின் பதினைந்து வருடக்கால மௌனம் உணர்த்துகிறது

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 பிப் 9

https://tspace.library.utoronto.ca/html/1807/4350/poem2838.html
http://www.geocities.com/Heartland/Grove/6932/msangsterbio.html

முந்தைய கட்டுரைசுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி
அடுத்த கட்டுரைரதிசுகஸாரே…