‘மாமலர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 13ஆவது நாவல் ‘மாமலர்’. ‘மாமலர்’ என்பது, ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலர். இது, கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். இது, பீமன் அதன் அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர்வடிவம்.

‘மாமலர்’ என்ற சொல், சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

“கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்” (குறுந்தொகை, பாடல் எண் – 51)

நெய்தல் நிலங்களில் வளரும் முட்கள் நிறைந்த கழிமுள்ளிச் செடியில் பூத்த கரிய நிறமுடைய முண்டக மலர். இங்கு ‘மா’ என்பது, ‘கருமை’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாவலில் பீமன் அடைவது, தடித்த, தூய வெண்ணிற இதழ்களைக்கொண்ட, காம்பில் பால் வடியும் மலர். இங்கு ‘மா’ என்பது, ‘பெரிய’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் சிலவற்றுள் ‘மாமலர்’ என்ற சொல்லை வெவ்வேறு பொருண்மைகளில் பயன்படுத்தியுள்ளார்.

சான்று – 1

முதுயாதவர் சத்யபாமாவை உவமைப்படுத்திக் கூறும்போது, அவளை யாதவகுலம்பூத்த மாமலர் என்கிறார்.

“அமர்ந்திருந்த முதுயாதவர் எழுந்து கைகளைக் கூப்பியபடி, நாங்கள் சென்று அவன் காலடியில் விழுந்து மன்றாடுகிறோம் அன்னையே. யாதவகுலம்பூத்த மாமலர் நீ. உனக்கன்றி எவருக்குள்ளவன் அவன்?” என்றார்.(இந்திர நீலம்-12, பகுதி-3-வான்தோய் வாயில்-1)

சான்று – 2

மெய்மையைத் தேடி அலையும் தருமர் இறுதியில் பெருமலைகள் சூழ்ந்த இடத்திற்குச் செல்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் உளமயக்கினை விரித்துக்கூறும்போது, மலைமுகடுகளே மலர் இதழ்களாகி, தருமரின் மனத்தைச் சூழ்ந்துகொள்வதாகக்  காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.

“தருமன் மூச்சுவாங்க இடையில் கைவைத்து நின்றபோது அவரை மலைமடிப்புகள் முழுமையாகவே சூழ்ந்திருந்தன. தொலைதூரத்தில் மலையடுக்கின் வெளியிதழ்கள் நீலநிறமாகத் தெரிந்தன. அருகே ஆழ்ந்த மஞ்சள்நிறம் கொண்டு அலைவடிவாகச் சூழ்ந்திருந்தன. மாமலர். அவ்விதழ்கள் மிக மென்மையானவை. உள்ளே தேனருந்த வந்த வண்டை மெல்லப் பொதித்துச் சூழ்ந்துகொள்பவை. அவ்வாறு எண்ணியதுமே தொலைவிலிருந்த மலைகள் மிக மெல்ல மேலெழுந்து வருவதாகவும் சற்று நேரத்திலேயே தலைக்குமேல் கூம்பிக்கொள்ளப் போவதாகவும் உளமயக்கு எழுந்தது.(சொல்வளர்காடு–59, பத்தாம் காடு, கந்தமாதனம்–1)

சான்று – 2

தெய்வத்தின் கையில் இருக்கும் அருள்வடிவாக மாமலர் இருப்பதாகக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

“சுருங்கி விரியும் காலப்பெருக்குக்குள் காலமென்று தன்னை நிகழ்த்தும் ஒன்று அழியாதிருக்கலாம். பொருள் கொண்டு பொருள் அளித்து பிறந்து இறக்கும் சொல்லுக்குள் சொல்லென்று வாழும் தெய்வம் என்றுமிருக்கலாம். ஒரு கையில் மின்னல். மறு கையில் மாமலர். இரு கைகளில் இசையாழ். ஏடும் ஆணியும். விழிமணிமாலை எனும் காலப்பெருக்கு.”  (கிராதம் – 16 (அத்-22) )

என்னைப் பொருத்தவரை ‘மாமலர்’ என்பது, பெருங்காதலின் தூயமலர். இது கனவில் நுகரத்தக்க பெருமணம்கொண்ட களவுமலர். இது கன்னியர் நினைவில் சுழன்று களவாகி, கற்பாகி ஓடும் இல்வாழ்க்கையின் அகமலர். இது காதல் பெருக்கெடுக்கும் பெருநினைவின் கரையெல்லாம் மணக்கும் மாமலர்.

‘கிராதம்’ நாவலுக்கும் இந்த ‘மாமலர்’ நாவலுக்கும் நேரெதிரான ஒரு வேறுபாடு உள்ளது. ‘கிராதம்’ நாவல், நேரடிப் புதிர்களையும் அதற்கு உரிய அறிவார்ந்த, வெளிப்படையான விடைகளையும் கொண்டது.

சான்று –  அர்சுணனின் நாற்திசை வெற்றிகள் அனைத்துமே அவனுக்குத் தேர்வுபோல வைக்கப்பட்ட நேரடிப் புதிர்களைத் தன் அறிவுத்திறத்தால் விடுவித்தமையால் விளைந்தவையே.

‘மாமலர்’ நாவல், முக்காலத்தால் கட்டுண்ட, அவிழ்க்க இயலாத புதிர்களும் விடைகளும் நிரம்பியது. பீமன் அவற்றை அறிய முயற்சிசெய்து, தவித்து, நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மட்டுமே மெய்மையை அறிந்து, திரும்பிவருகிறான்.

‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையில் இந்த நாவல் ‘நீலம்’ நாவலைப் போலவே தனித்து விளங்குகிறது. ‘நீலம்’ நாவல் மொழியிலும் கதைப்பின்னலிலும் தனித்துவம் வாய்ந்தது. அதுபோலவே, இந்த ‘மாமலர்’ நாவலும் இரண்டு விதங்களில் தனித்துவம் வாய்ந்தது என்பேன்.

ஒன்று – இந்த நாவல் முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக்கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது.

இரண்டு – இந்த நாவலில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீள்கின்றன. தனிஊசலின் அலைவுபோலப் பின்னுக்கும் முன்னுக்கும் ஆடி ஆடி இறுதியில், நடுவில் நிலைகொள்கிறது.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் இடம்பெற்றிருக்கும் ‘பிள்ளைப்பெரும்பித்து’ என்ற ஊழின் படைக்கலம், இந்த நாவலிலும் வலுவாக இடம்பெற்றுள்ளது. புரூரவஸ் – ஆயுஸ், ஆயுஸ் – நகுஷன், சுக்ரர் – தேவயானி, விருஷபவன் – சர்மிஷ்டை, யயாதி – புரு என இந்த வரிசை நீள்கிறது.

தர்மரைப் போலவும் அர்சுணனைப் போலவும் பீமனும் தனக்கான மெய்மையைத் தேடிச் செல்கிறான். ஆனால், காலத்தின் வழியாகப் பயணித்து, திரௌபதியின் பிற நான்கு உருவங்களையும் (ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை) கனவில் கண்டும் நேரில் சிற்ப வடிவில் கண்டும் மீள்கிறான்.

அதனால்தான் என்னவோ இந்தப் பிறவியில் திரௌபதி ஐந்து முகமாகக் காணப்படுகிறாள் போலும். அதனால்தான் அவளுக்கு ஐந்து கணவன்மார்களோ! இந்தப் பிறப்பில் ஐந்துமுகம் கொண்ட குத்துவிளக்காகத் திரௌபதி விளங்குகிறாள். அவளின் பெருங்காதற்சுடர்முகத்தின் நிழல் பீமன் மீதே விழுந்து, படிகிறது. அதனால்தான் அவள், ‘கல்யாண சௌந்திகம்’ மலரைப் பற்றிப் பீமனிடம் மட்டும் பேசுகிறாள். அதைக் கொண்டுவருவதற்காகவே பீமன் காலங்களின் ஊடாகப் பயணிக்கிறான். மனைவியின் அகத்தை மலர்த்தும் கணவனாகத் திரௌபதிக்குப் பீமனே திகழ்கிறான்.

இந்த நாவலில் காலங்களைக் கலைத்தாடுபவராக ஸ்ரீராமபக்த அனுமன் வருகிறார். அவர் தன்னுருவை மறைத்து, காலத்தின் ஏடுகளைப் புரட்டவல்ல குள்ளர் முண்டன் ‘குஸ்மிதன்’ என்ற நபராக உருமாறி வருகிறார். பீமனின் அகத்தேடலுக்கு உறுதுணையாகிறார். அர்சுணனுக்கு இந்திரன் எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து உதவுவதுபோலப் பீமனுக்கு அனுமன் எப்போதும் தோன்றாத் துணையாகவே இருந்து உதவுகிறார். தன்னுடைய படைக்கலமான கதாயுதத்தைப் பீமனின் கையில் கொடுத்துச் செல்கிறார்.

பீமன் பிறந்த போது மந்திக்குரங்கு வந்து பாலூட்டியது. பீமனுக்குத் தோழமைகளாகவும் சேவகர்களாகவும் குரங்கு இனமே அமைந்தது. பீமன் பெரும்பாலும் வாழ்வது குரங்குகள் குடியிருக்கும் காடுகளும் குன்றுகளும்தான். பீமன் பெரும்பாலும் பேசும் மொழியும் விலங்குகளின் (குரங்கினத்தின்) மொழிதான். பீமன் தன்னைக் காட்டாளனாகவும் விலங்கினத்தானாகவும்தான் பெரிதும் உணர்கிறார். பீமன் பெருங்கானகன். அவன் குரங்கினத்தின் பெருந்தலைவன். இவற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நாவலின் இறுதி அத்யாயத்தில் வரும் ஓர் உரையாடல் அமைந்துள்ளது.

பீமன் புன்னகைத்தான். நாம் இங்குக் கொய்து உண்டிருக்கிறோம், மூத்தவரே! ஆகவே, விதைத்துச்செல்லும் கடன்கொண்டிருக்கிறோம்என்றான் சகதேவன். ஆம்என்றபடி பீமன் எழுந்தான். உங்கள் குலத்தார்தான் உண்ணப் போகிறார்கள்என்று நகுலன் சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். அப்பால் சில குரங்குகள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன.”  

‘கல்யாண சௌந்திகம்’ தான் இந்த நாவலின் மையம். அதைப் பற்றிய முழுவிபரமும் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டுவிடுகிறது.

கல்யாண சௌகந்திகம் என்றொரு மலரைப் பற்றிச் சூதர்கள் பாடுவதுண்டு. கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். மூன்றாம் விண்ணில் கந்தர்வர்களின் உலகின் கன்னிமூலையில் அம்மலர் பூத்த மரம் நின்றிருக்கிறது. அதன் மலர்களில் ஒன்று பின்னிரவுப் பொழுதில் கந்தர்வர் மண்ணிலிறங்கும் போது அரிதாகத் தானும் நழுவி மண்ணில் உதிர்கிறது. அதைச் சிலர் எரிவிண்மீன் எனக் காணக்கூடும். எரிவிண்மீன் சிவந்த நிறம்கொண்டது. கல்யாண சௌகந்திகம் வெண்ணிறமானது……… அந்த நறுமணம் அது விழும் இடத்தில் இருக்கும் கன்னியரின் கனவுக்குள் எழும். அவர்களை அது காதலில் அகம் ஒளிரச்செய்யும். விழித்த பின் பிச்சிகளாக்கும். சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வெறுக்க வைக்கும். உடலுருகி விழிகுழிந்து வாய்உலர்ந்து நோய்கொள்வார்கள். அறியாத ஒன்றை மட்டுமே எண்ணி எண்ணித் தவமிருப்பார்கள். கல்யாண சௌகந்திகத்தின் மணம்பெற்ற பெண் மானுட ஆண்களை விரும்புவதில்லை. அவள் உடலுருகி அழகிழந்துகொண்டே இருப்பாள். ஆனால், பின்னிரவின் ஒளியில் பேரழகியாவாள். அப்போது அவ்வழி செல்லும் கந்தர்வர்கள் அவளை ஒரு மலரென மணம்பெற்று அருகணைகிறார்கள். அழகனாகிய கந்தர்வன் ஒருவன் வந்து அவள் கைப்பற்றி அழைத்துச் செல்வான்என்றான் பீமன்.

முழுத் தகவலையும் வைத்துக்கொண்டும் அதை அடையமுடியாமல் தவிக்கிறான் பீமன். ‘ ‘குதிரைக்கொம்புபோல’, ‘ஆகாயத்தாமரைபோல’ இல்லாத ஒரு மலருக்காகத்தான் இந்தத் தேடலோ?’ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

நோக்கக் குலையும் அனிச்சமலர் போலவே இந்தக் ‘கல்யாண சௌந்திகம்’ மலர், நினைக்குந்தோறும் தன் மணத்தைச் சிதைத்துக்கொள்கிறது. அதனாலாலேயே இது கைப்பற்ற முடியாத மலராகவும் கனவில் அல்லது நினைவில் மட்டுமே நுகரக் கூடிய மலராகவும் இருக்கிறது.

இந்தப் பூமியில் மானுடர் செய்வதற்கு என எது உண்டு என்பது பற்றி எழுத்தாளர் விளக்குகிறார். அதைத் துர்வாச மாமுனிவரின் கூற்றாக வெளிப்படுத்தியுள்ளார்.

துர்வாச முனிவர்,

“நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப் பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே! நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்குப் பிறிதொன்றுமில்லை”

என்றார்.

ஆம்! பிரிதொன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதே கருத்தைப் புரூவரஸின் அன்னை தலைமை அமைச்சரிடமும் கூறுகிறார்.

 “நீர்வழிப்படும் புணைபோலச் செல்லும் இப்பெருக்கில் நாம் செய்வதற்கென்று ஏதுமில்லை.

இது, இந்த நாவலின் கதையோட்டத்திற்கு ஏற்ப மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்ட உவமை.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்

—————————————————–

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

——————————————————–.” (புறநானூறு, பாடல் எண்-192)

பொருண்மொழிக்காஞ்சித் திணையில் அமைந்த இந்தப் பாடலில் புலவர் கணியன் பூங்குன்றனார், நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து, ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார்.

‘ஊழ்’ பற்றிய பெருங்குறிப்பு இந்தப் பாடலில் உள்ளது. ‘ஊழ்’ என்பது, ஆற்றுநீரோட்டம் போன்று வலியது. அந்த நீரோட்டத்தோடு, மிக எளிதாக உயிர் மிதந்து செல்கிறது. “ ‘முறை’ என்பது, ஆற்று நீரின் ஓட்டம். ‘முயற்சி’ என்பது, உயிர்ப்படகைச் செலுத்தும் துடுப்பு.” (மேற்கோள் – இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள், அருணோதயம், சென்னை, 2003.)

ஊழுக்கு முன் நாம் செய்ய ஏதும் இல்லை; அதற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுப்பதைத் தவிர.

பிறிதொரு இடத்திலும் இதே கருத்து அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. புரூரவஸைக் கைது செய்து, நாட்டைவிட்டு இழுத்துச் செல்லும்போது, திண்ணையில் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த முதியவர் நீள்மூச்செறிந்து,

உருத்துவந்தூட்டும் ஊழ்வினை. பிறிதொன்றும் சொல்வதற்கில்லை

என்கிறார்.

சிலப்பதிகாரத்தில் கோவலனின் வீழ்ச்சிக்கு இதே சொல்லைத்தான் இளங்கோவடிகள்  கூறியிருக்கிறார் என்பதை இங்கு நாம் நினைவுகூரலாம்.

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் (உருத்து – சினந்து) (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், பாயிரம்)

அரசன் நகுஷனிடம் பத்மன்,

ஊழென்பது உடலிலேயே பொறிக்கப்பட்டுள்ளது என்றொரு முதுசொல் உள்ளது. நீங்கள் எவரென்பது உங்கள் தசைகளில், விழிகளில், நாவில், எண்ணங்களில் பிறப்பதற்கு முன்னரே எழுந்துவிட்டது. பிறிதொன்றை நீங்கள் ஆற்ற முடியாது. சிட்டுக்குருவியின் சிறகுகள் துள்ளுவதும் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் சாமரமாவதும் பயிற்சியால் அல்ல

என்கிறான்.

எத்தனை விதங்களில் ‘ஊழ்’ பற்றிக் கூறினாலும் மானுட மனம் அதை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறது. இதுவும் கூட ஓர் ‘ஊழ்’தானோ?

இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரமான ‘சஞ்சீவினி’யை அறிந்து கொள்வதற்காகச் சுக்ரரிடம் வரும் சகன் மூன்று முறை இறந்து பிறக்கிறான். அவனின் இறப்பை மூன்று விதங்களில் கூறியுள்ளார் எழுத்தாளர். அவன் மூன்றாம் முறை இறக்கும்போது அவனை உயிர்ப்பிக்க கிருதர் ஒரு வழியினைக் கூறுகிறார்.

தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களைப் பயிற்றுவிக்க முடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டபின், அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து, அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததைச் சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்குக் கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்என்றார். தேவயானி திகைப்படைந்து எழுந்து, கிருதரின் கைகளைப் பற்றிக்கொண்டு, ஆம், அதைச் செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே! அது ஒன்றே வழிஎன்றாள்.

ஆனால், இந்த முடிவால் ஏற்படும் இரண்டு பின்விளைவுகளைப் பற்றிச் சுக்ரரும் கிருதரும் தேவயானியும் சிந்திக்கவே இல்லை. சுக்ரரின் வயிற்றில் கருவாகச் சகன் உருவாவதால் அவன் தேவயானிக்கு உடன்பிறந்த தம்பியாவான் என்பதையும் சகன் ‘சஞ்சீவினி’யை மந்திரத்தை அறிந்துகொள்வதால், தேவர்-அசுரர் போரில் தேவர்களே வெற்றிகொள்வார்கள் என்பதையும் மறந்துவிடுகின்றனர்.   இதுவும் கூட ‘ஊழ்’தான்போலும். இந்த முடிவுக்குப் பதிலாகச் சுக்ரரிடமிருந்து தேவயானியோ அல்லது கிருதரோ ‘சஞ்சீவினி’யை மந்திரத்தை அறிந்து கொண்டிருந்தால், இரண்டாவது பின்விளைவு மட்டுமாவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

இந்த ‘வெண்முரசு’ மாபெரும் காவியத்தில் மாபெரும் வல்லமை பெற்றவர்கள் மட்டுமே சுடர்கிறார்கள். அவர்களுக்கு அணுக்கத் துணையாக இருப்பவர்கள் பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல அவர்களுடன் சேர்ந்து சிற்றொளியைப் பெறுகிறார்கள். எழுத்தாளர் இந்த காவியத்தில் விளிம்புநிலை மக்களைப் பற்றியும் பேசியிருகிறார். வலியோர் பற்றி மட்டுமே பேசும் பெருங்காவியத்தில் எளியோர் பக்கமும் தன்னுடைய எழுத்தொளியைத் திருப்பியிருக்கிறார். அவ்வொளியின் வழியாக, அவர்களின் உலகும் அவர்கள் அடையும் துயர்களும் நம் கண்களுக்குக் காட்சியாகியுள்ளன.

அரண்மனைகளில் பணியாற்றும் சேடியர் உலகம் குறித்து எழுத்தாளர் அளித்துள்ள நுண்தகவல்கள் நமக்கு அச்சமூட்டுகின்றன. சேடியரிலும் பல வகைகள். சான்றுகளாக, அணுக்கச் சேடி, அணிச்சேடி

அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் அன்னை ‘சிவை’யை இங்கு நினைவுகூர்தல் நன்று. ‘முதற்கனல்’ நாவலில் சிவையின் அறிமுகத்தோடு சேடியர் வாழ்வினை ஒரு தீற்றலாகக் காட்டியிருப்பார் எழுத்தாளர்.

சூதர் குலத்தில் பிறந்து, காவியம் கற்ற காரணத்தால் சூத அரசியாக ஆணையிடப்பட்டு, காலப்பெருக்கில் புறக்கணிக்கப்பட்டு, தன்னைக்கடந்து செல்லும் வகையறியாது உளமழியும் சிவை.” (நன்றி – சுபஸ்ரீ https://www.jeyamohan.in/135321/ )

ஆனால், சேடியர் வாழ்வு குறித்த மதிப்பீடுகளை இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். இளவரசி சர்மிஷ்டையிடம் அவளின் சேடி,

“சேடி என்பவள், தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரென்பது, தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது, பிறிதொருவரின் நிழலென வாழ்வது…. பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே. சேடிக்கு அதுவும் இல்லை….. சேடியின் வயிற்றில் பிறக்கும் மைந்தருக்குத் தந்தை என எவரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை… அவர்கள் ‘அடுமனைச் சூதர்கள்’ என்றே அறியப்படுவார்கள்….சேடியின் மகளாகப் பிறந்தேன். எனக்குத் தந்தையின் அடையாளம் இல்லை. எனவே, இயல்பாக ஒரு கணவன் அமையப்போவதும் இல்லை. குலமகளுக்குரிய மங்கலமும் மதிப்பும் எனக்கு இப்பிறவியில் இல்லை என்றாள். ‘சேடியர் வாழ்க்கை’ என்பது, முகமற்றவர்களின் குரல்கள்தானோ?  என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

‘தகவலை முன்னறிவித்துவிட்டு, பின்னர் விரிவாகக் கூறும்’ புதுமையான கதைவிரிக்கும் உத்தியினை எழுத்தாளர் இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். கல்யாண சௌந்திகத்தைப் பீமன் தேடிச் செல்வதற்கு முன்பே அந்த மலரைப் பற்றி நமக்குக் குறிப்புணர்த்திய எழுத்தாளர், ‘யயாதி’யின் வாழ்க்கையைப் பற்றி விரித்துக் கூறுவதற்கு முன்பாகவே யயாதியைப் பற்றிச் சுருக்கக் குறிப்பினை நமக்கு அளித்துவிடுகிறார்.

பீமன் தாண்டகர் வைத்திருக்கும் ‘அனந்தம்’ என்ற யானத்தைப் பார்த்து, யயாதியைப் பற்றி அறிந்துகொள்கிறான். அவனுக்குத் தாண்டகர் யயாதி பற்றிச் சிறுகுறிப்புத் தருகிறார்.

நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது.  அவன் சினம் ஆயாதியாகியது.  வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. பாண்டவனே, அவன் கொண்ட  காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்க்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது…. ஒருமடங்கு விழைவும் இருமடங்கு வஞ்சமும் மும்மடங்கு சினமும் நான்மடங்கு துயரும் ஐந்து மடங்கு தனிமையும் கொண்டிருந்தான் நகுஷன். அவன் நூறுமடங்கு கொண்டிருந்த காமமே யயாதி…. யயாதி பிற ஐவரையும் வென்று குருநாட்டின் முடிசூடினான்… தன் பொன்றாப் பெருவிழைவாலேயே சக்ரவர்த்தியென்றானான். ஐவகை நிலங்களையும் வென்றான். முடிமன்னர் கொண்டுவந்து காலடியில் சேர்த்த பெருஞ்செல்வத்தால் கருவூலத்தை நிறைத்தான். அள்ளிக்கொடுத்து அதை ஒழித்து புகழ்நிறைத்தான். வேள்விகள் செய்து விண்ணமர்ந்த இந்திரனுக்கு நிகரென்றானான்.

எளிய மானுட மனம் ஒரு பிழைக்கு மற்றொரு எதிர்ப்பிழையை நிகராக்கிக்கொள்ளும் மனவிழைவு கொண்டது. யயாதி தான் செய்த பிழைக்குத் தேவயானி முன்பு செய்த ஒரு பிழையை நிகராக்கிக்கொள்கிறான். அது பற்றி யயாதி தன் அமைச்சரும் அணுக்கருமான பார்க்கவனிடம்,

அது என்னை உண்மையில் எளிதாக்கியது. ‘தேவயானி என்னிடம் மறைத்த ஒன்றுண்டு’ என்பது, நான் அவளிடமிருந்து மறைப்பதைப் பிழையில்லாததாக ஆக்கியது. நான் அதைச் சொல்லிச்சொல்லிப் பெருக்கிக்கொண்டேன். அதனூடாக தேவயானியிடமிருந்து விலகினேன். அவ்விலக்கம் சர்மிஷ்டையிடம் அணுக்கத்தை வளர்த்தது”

என்கிறார். அரசனானாலும்கூட இந்த எளிய மானுட மனவியல்பிலிருந்து தப்ப முடியாதுதான் போலும்!

அரசன் நகுஷன் தனக்குள் பேசிக்கொள்வதாக ஒரு தொடர் இடம்பெற்றுள்ளது.

“எண்ணங்களைச் சொற்களாக்குவது எத்தனை நல்லது! அது புகையை நீராக்குவது. நீரை உறையவைக்க வேண்டுமென்றால், எழுதவேண்டும்”.

ஆம்! எழுத்தாளரின் அதிகற்பனைதான் இங்கு நம் முன் வெண்முரசாக உறைந்திருக்கிறது என்பேன். எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் நம்காலத்திய காவியப்பெருந்தந்தை என உறுதியாக என்னால் கூறவியலும்.

பார்க்கவன் உக்ரசேனனிடம்,

“மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே

என்று கூறுவது என் மனத்தை உலுக்கிவிட்டது.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களை எழுதியமையே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அடைந்த, எய்திய உச்சம். அதை முழுவதுமாகப் படிப்பதேகூட வாசகராக நாம் அடையும், எய்தும் உச்சம் என்பேன்.

முனைவர் . சரவணன், மதுரை

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: குமரிமைந்தன்
அடுத்த கட்டுரைமதார் கடிதங்கள்-3