‘நீர்க்கோலம்’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 14ஆவது நாவல் ‘நீர்க்கோலம்’. நீரால் வரையப்பட்ட கோலம் அல்லது நீரில் வரையப்பட்ட கோலம் என இரண்டு விதங்களில் இந்தத் தலைப்புக்குப் பொருள்கொள்ளலாம். எல்லாச் சிக்கல்களும் நீர்க்கோலத்தைப் போலவே கணநேரத் தோற்றம்தான்; நிலைத்து நிற்காது; எதுவும் கடந்துபோகும் என்பதனைக் குறிப்புணர்த்தும் வகையில் இந்த நாவலுக்குரிய தலைப்பு அமைந்திருக்கிறது.

என்னைப் பொருத்தவரை இந்த ‘நீர்க்கோலம்’ என்பது, கண்ணீர்க்கோலமும் செந்நீர்க்கோலமும்தான். இந்த நாவலில் பெண்களின் அக, புறக் கண்ணீத் துளிகளுக்கு இணையாகவே ஆண்களின் அகக் கண்ணீரும் புறச் செந்நீரும் இடம்பெற்றிருக்கின்றன. நாவலைப் படித்து முடித்ததும் என் நினைவில் ததும்பிய திருக்குறள் இதுதான்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை(திருக்குறள், குறட்பா எண் : 555) 

பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையை முழுமையாக விவரிக்கும் இந்த நாவலின் இடைவெட்டாக, நிஷத இனக்குழு மக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது.

இனக்குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரரசுகளாக எழ முயலும் தன்மையை இந்த நாவல் முழுக்கவே காணமுடிகிறது. குலக்குடிகளின் வரலாறும் பூசலும் இந்த நாவலில் நிலத்தடி வேராக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, முயங்கியுள்ளன.

தர்மரைப் போலவே மன்னர் நளனின் வாழ்க்கையும் அமைந்துவிட்டதை இந்த நாவலில் இணைப் பிரதியாகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிச் சென்றுள்ளார். திரௌபதியைப் போலவே தமயந்தியின் வாழ்வும் இருந்ததை உணரமுடிகிறது.

வெறுமனே பாண்டவர்களைப் பற்றி மட்டும் பேசாமல், நளன்-தமயந்தியின் வழியாக இந்த வாழ்வில் மானுடர்கள் தங்களின் விழைவுகளால் அடையும் நன்மையையும் தீமையையும் பற்றிய பெருஞ்சித்திரத்தை எழுத்தில் வரைந்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.

பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கையில் மாற்றுருகொண்டு வாழவேண்டியுள்ளது. ‘மாற்றுரு’ என்பது, ‘உடலையும் உடல்மொழியையும் மாற்றிக்கொள்வது மட்டுமல்ல; உள்ளத்தையும் மாற்றிக்கொண்டு நாம் பிறிதொரு நபராக, முற்றிலும் மாறி வாழ்வதே!’ என்ற கருத்தை இந்த நாவலில் காணமுடிகிறது.

தமனர் உரு, மாற்றுரு பற்றிக் கூறும்போது,

“உருவென்பது, ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது

என்று தெரிவித்துள்ளார்.

பாண்டவர்கள் இந்தக் கருத்தை அடியொற்றி, தம்மை முற்றிலும் மாற்றிக்கொள்கிறார்கள். புதிய நிலம், புதிய ஆளுமை, புதிய வாழ்க்கை என அவர்கள் தங்களை அகத்திலும் புறத்திலும் மறுபுனைவுசெய்து கொள்கிறார்கள்.

அரண்மனைச் சேடியாகவும் மாயங்கள் பல அறிந்தவளாகவும் சைரந்திரி என்ற பெயரில் திரௌபதியும் சூதாட்டத்தில் வல்லவராகவும் நூல் பலகற்றவராகவும் அறிவார்ந்த சொல்லாளுமை மிக்கவராகவும் குங்கன் என்ற பெயரில் தர்மரும் அடுமனையாளராகவும் மற்போர்வீரராகவும் வலவன் என்ற பெயரில் பீமனும் நாட்டியக் கலையும் போர்க்கலையும் அறிந்த திருநங்கையாகப் பிருகந்நளை என்ற பெயரில் அர்சுணனும் குதிரைகளைப் பழக்கும் நுட்பங்கள் அறிந்த திறமைமிக்க சூதராகக் கிராந்திகன் என்ற பெயரில் நகுலனும் சமணப்படிவராக அரிஷ்டநேமி என்ற பெயரில் சகதேவனும் மாற்றுரு கொள்கின்றனர். ஓர் ஆண்டுவரை கலைத்துக்கொள்ள முடியாத மாபெரும் அக, புற ஒப்பனையாகவே அவர்களுக்கு இந்த மாற்றுருக்கள் அமைந்துவிடுகின்றன.

பெரும் ஆளுமைகொண்ட பெண்களின் விழைவுகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாவே இருக்கின்றன. அவர்களின் ஒட்டுமொத்த விழைவுகளின் உச்சம், ‘பாரதவர்ஷத்தின் மேல் இடக்காலை வைக்கவேண்டும்’ என்பதாகவே இருக்கிறது. தேவயாணி, தமயந்தி, சத்தியவதி, குந்திதேவி, திரௌபதி, மாலினிதேவி வரிசையில் இனி உத்தரையும் வந்து இணைந்துவிடக் கூடும்.

அனைத்து ஆண்களின், பெண்களின் கனவுகளைப் பற்றிக் கூறவிழையும் எழுத்தாளர் கதைமாந்தரின் கூற்றாக, ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் பின்வரும் ஒற்றைப் பத்தியில் சொல்லிவிடுகிறார்.

கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே, எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது, ‘கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை’ என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை”.

நளன் – புஷ்கரன் சூதாட்ட நிகழ்வுகள் பாண்டவர் – கௌரவர் சூதாட்ட நிகழ்வினை நமக்கு நினைவூட்டிச் செல்கின்றன. விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் ‘சூதாட்டம்’ குறித்து,

 “தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான் என அவன் அறிவதே இல்லை. புவியின் இருள்நிழல் ஊடாட்டங்களனைத்தையும் பரப்பிக் காட்டும் வல்லமை கொண்டிருப்பதனால் ஒருவன் வாழ்நாள் முழுமையையும் இக்களத்தை நோக்கிக் குனிந்தே கழித்துவிடமுடியும். அரசே, சூதில் மறந்து மீண்டெழுந்தவர் அரிதிலும் அரிது. ஏனென்றால், ‘சூது’ வெளியே நிகழ்வது மட்டும் அல்ல. விரிக்கப்பட்டிருக்கும் இக்களம் ஆடுபவனின் அகம். அகத்தை இப்படி ஏதேனும் புறப்பொருளில் ஏற்றிக்கொள்ளாமல் நம்மால் பார்க்க முடியாது. அந்தணரின் வேள்விச்சாலையும் நிமித்திகர்களின் பன்னிருகளமும் வணிகர்களின் துலாக்கோலும் உழவர்களின் வயலும் உள்ளமே என்றறிக! நாற்களமென இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலியை மடித்துச் சுருட்டிவைத்து இதோ பரவியிருப்பது உங்கள் இருவரின் உள்ளம். இக்காய்களை நகர்த்தி நகர்த்தி நீங்கள் கண்டுபிடிப்பது உங்களையேதான்.”

என்கிறார்.

கரியோன் நளனிடம் கூறுவதையும் இதனோடு இணைத்து நோக்கலாம்.

“எல்லாச் சூதாட்டங்களும் பிறிதொரு பெருஞ்சூதாட்டத்திற்குள் நிகழ்கின்றன. ஒன்றின் நெறியை அது அமைந்திருக்கும் பிறிதின் நெறி கட்டுப்படுத்துகிறது. சூதிற்குள் சூதிற்குள் சூதென்று செல்லும் ஆயிரம் பல்லாயிரம் அடுக்குகள். நீங்கள் ஆடியது ஒன்றில். அதன் உச்சமெனப் பிறிதொன்றில்.”

இந்தப் போக்கினைத்தான் பாண்டவர் – கௌரவர் சூதாட்டத்திலும் நம்மால் காணமுடிந்தது. சகுனி கணிகரோடும் மாற்றுருக்கொண்ட தர்மர் குங்கனாக விராட மன்னருடனும் ஆடும் களியாடலாக ஆடும் சூதாட்டமும் இதைப் போன்றதே என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

சகுனி தனித்து தனக்குத் தானே ஆடும் சூதாட்டமும் இதற்கு நிகரானதுதான். சூதாட்டத்தில் நமக்கு மறுதரப்பாக ஊழை அமரவைத்து, அதனோடு ஆடி ஆடி நம்மை நாமே கண்டடைவதே சூதின் பெரும்பின்விளைவு.

இந்த நாவலில் ருத்ரன் கூறும் ஒரு தொடரை நான் ஒட்டுமொத்த உலகுக்குமே சொல்லப்பட்டதாகவே கருதுகிறேன்.

“முறைமீறி முடிசூடுபவர்கள் ஒருபோதும் அறத்தில் நின்றதில்லை. முதற்பிழை தொடர்பிழையேதான்.”

இந்தத் தொடரோடு விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் கூறுவதனையும் இணைத்து நோக்கலாம்.

“மீண்டும் மீண்டும் இந்நிலத்தில் உடன்பிறந்தார் நிலத்திற்கெனப் பூசலிட்டிருக்கிறார்கள். பின்னர் விண்ணேகி அங்கே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டிருக்கிறார்கள். ஆயினும் குருதிப் பூசல் அடங்கவில்லை

பாரதவர்ஷத்தில் தோன்றிய எண்ணற்ற இனக்குழுக்களுக்கும் சிறிய அரசுகளுக்கும் பேரரசுகளுக்கும் குறிப்பாகக் கௌரவர்களுக்கும் இது பொருத்தமுடையதுதான்! ஆனால், இந்த நாவலில் குருதிப் பூசல் புஷ்கரன், கீசகன், பீமத்துவஜன் ஆகியோரை உள்ளடக்கியே நிகழ்கிறது. இவர்களையே கலித் தெய்வம் தன் ஊர்தியாகத் தேர்ந்தெடுக்கிறது என்றும்கூடக் கருதலாம்.

விராட நாட்டின் பேரமைச்சர் ஆபர் விராட நாட்டு இளவரசன் உத்தரன் கௌரவர்களோடு போர்புரிந்தமை குறித்த ஒற்றுச் செய்தியைத் தொகுத்துக் கூறும்போது, ‘பொருபுலி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

ஏழு செய்திகள் வந்துள்ளன. எப்படி போர் நிகழ்ந்ததென்றே விரிவாக எழுதியிருக்கிறான் ஓர் ஒற்றன். அனலைத் துணைகொண்டு வென்றிருக்கிறார்கள். நம் இளவரசர் களத்தில் ‘பொருபுலி’ என நின்றிருக்கிறார்…”

‘பொருபுலி’ என்ற இந்தச் சொல்லாட்சி, இந்த இடத்தில் மிகச் சிறந்த உவமைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘பரணி’ இலக்கியத்தில், தன்னிகரற்ற இலக்கியமாகக் கருதப்படும் ‘கலிங்கத்துப் பரணி’யில்,

 “பொருபுலி புலியொடு சிலைத்தபோல்

       பொருபட ரொடுபடர் சிலைக்கவே

 அரியினொ டரியினம் அடர்ப்பபோல்

     அரசரும் அரசரும் அடர்க்கவே.

(ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணி, பாடல் எண் – 408)

என்ற அடிகள் இடம்பெற்றுள்ளன.

‘எதிரெதிரே நின்று போர் புரிந்தனர்’ என்ற செய்தியைப் ‘பொருபுலி புலியோடு சிலைத்தபோல’ என்ற உவமையால் கூறியிருக்கிறார். உத்தரன் துரியோதனிடமும் கர்ணனிடமும் துச்சாதனனிடமும் எதிர்நின்று அம்பை எய்து, வெற்றி பெறுகிறான். எழுத்தாளர் ‘பொருபுலி’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருப்பது, வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இந்த நாவலில், பல இடங்களில் உளவியலை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் சான்றுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

சான்று – 1

பீமன் வலவனாக மாற்றுருவில் இருக்கும்போது, கீசகனால் அழைத்துவரப்பட்ட ஜீமுதனிடம் மற்போரிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுநாள் வரை களிப்போராக வலவனிடம் மற்போரிட விரும்பிய கீசகன் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானே மனத்தளவில் வலவனாக மாறி ஜீமுதனிடமும் பின்பு ஜீமுதனாக மாறி வலவனிடமும் போரிடுகிறான். இந்த நிலை மாறி மாறி அவனுள் எழத் தொடங்கியது.

“கீசகன் முதலில் வலவனாக நின்று ஜீமுதனிடம் போரிட்டுக் கொண்டிருந்தான். எப்போதென்று அறியாமல் ஜீமுதனாக மாறியிருந்தான். இருவரும் உருண்டு, புரள்கையில் ஒருகணம் அவனாகவும் மறுகணம் இவனாகவும் உருமாறி ஒன்றில் சென்று நிலைத்தான்”.

சான்று – 2

தருமர் குங்கனாக மாற்றுருவில் இருக்கும்போது, சகுனியைப் போலவே தோற்றமளிக்கிறார். காரணம், பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் யார் எந்த மாற்றுருவை ஏற்றால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிக் கூடிப்பேசுகின்றனர். தருமர் மேற்கொள்ள வேண்டிய மாற்றுரு குறித்துத் தரௌபதி கூறுகிறாள்.

சொல்கிறேன், நான் சொல்வதில் நால்வரில் எவருக்கு மாற்றுக்கருத்து இருந்தாலும் இதை பிழையென்றே கொள்வோம்என்றாள். பதைப்புடன் மணலை அள்ளியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார் தருமன். சகுனிஎன்றாள் திரௌபதி. நாற்களத் திறவோன். தீயுரை அளிப்போன். அரசனின் ஆழத்திலுறையும் ஆணவத்தையும் கீழ்மையையும் கருக்களாக்கி ஆடுவோன்என்றாள். “இல்லைஎன்றபடி தருமன் பாய்ந்தெழுந்தார். இது வஞ்சம். என் மேல் உமிழப்படும் நஞ்சு இது.ஆனால் அவர் தம்பியர் நால்வரும் அமைதியாக இருந்தனர். சொல்இதுவா உண்மை?” என்று தருமன் கூவினார். ஐவரும் சொல்லில்லாமல் நோக்கி அமர்ந்திருக்க, “இல்லை! இல்லை!என்றார். பின்னர் தளர்ந்து மணலில் விழுந்து தெய்வங்களேஎன்றார்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் தருமர் சகுனியைப் போலவே மாற்றுருவை ஏற்கிறார். அவர் உள்ளத்தாலும் சகுனியாகவே தன்னை மாற்றிக்கொள்கிறார். அந்த உளமாற்றம் அவரின் உடலிலும் வெளிப்படத் தொடங்குகிறது. இதனை உற்றுநோக்கியவர் விராட நாட்டு மன்னர்தான். அவர் இது பற்றிக் குங்கனாக மாற்றுருவில் தருமரிடம்,

 “எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு, குங்கரே. இப்போது நீங்கள் அசைந்து ஒலியெழுப்புகையில் உறுதிப்பட்டது. உங்கள் அசைவுகளை மட்டும் கண்டால் நீங்கள் புண்பட்டு உடற்குறை கொண்ட ஒருவர் எனத் தோன்றும்என்றார். குங்கன் என்ன?” என்றான் வியப்புடன். ஆம், உங்கள் இடக்காலில் புண் எழுந்து முடமானதுபோல. அதை நீங்கள் மாளா வலியுடன் அசைத்து வைப்பதாகவே தோன்றும்என்றார். குங்கன் புன்னகைத்து நாம் அதை அறியவோ பகுக்கவோ இயலாதுஎன்றான்.

சகுனியின் காலில் ஓநாய் கடித்ததால் புண் ஏற்பட்டு,  அவர் காலம் முழுக்கத் தன் காலைத் தாங்கி தாங்கி எடுத்துவைத்து, வலியோடு நடக்கிறார். சகுனியைப் போலவே மனத்தளவில் மாறிவிட்ட தர்மருக்கு இதே வலியும் நிலையும் மனத்தளவில் மட்டும் ஏற்பட்டுவிடுகின்றன. அவை, புறத்தில் ஓர் அசைவாக மட்டுமே பிறருக்குத் தெரிகின்றன. ‘உள்ளம் தான் முதலில். அது எப்படியோ அப்படியே உடலும் மாறும்’ என்ற கருத்து இங்குப் பொருத்தமுடையதாக உள்ளது.

‘கானாடல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள பகுதியும் அதனைத் தொடர்ந்து வரும் சில பகுதிகளும் உளமயக்கக் கனவுகளால் மாந்தர்கள் கொள்ளும் அக எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளன. ‘தம் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்தவரைக் கனவில் சந்தித்தல், விரும்பியேற்றல்’ என்ற நிலையில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆழ்மன வெளிப்பாடுகளைக் கனவுத் தன்மையாக எழுத்தில் கொண்டுவரும் எழுத்தாளரின் சொற்தேர்ச்சி வியப்பளிப்பதாக உள்ளது.

இந்த நாவலில், நாகமும் நாகவிஷமும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நாவல்மாந்தர்களின் உளமாற்றத்தின் போதும் உளமயக்கத்தின் போதும் உருமாற்றத்தின் போதும் (தமயந்தி முதுமையுருவைப் பெறுதல்) நாவலின் திருப்புமுனையான காட்சித் தருணங்களிலும் (கரவுக்காட்டுக் காட்சிகள்) நாகங்கள் வருகின்றன. எழுத்தாளர் இந்த நாவலில் நாகங்களைக் குறியீடாகவே பயன்படுத்தியுள்ளார். ‘நாகம்’ என்பது, தோன்றாத் துணையாகவும் தீமையை அழிக்கும் பேரறத்தின் சினமாகவும் குறிப்புணர்த்தப் பட்டுள்ளது.

‘நடனக்கலை’, ‘சமையற்கலை’, ‘குதிரை, யானையைப் பழக்குதல் கலை’, ‘இசைக்கலை’, ‘நிமித்த நூற்கலை’ போன்றவற்றில் உள்ள  செய்திகள் இந்த நாவலில் எழுத்தாளரின் பார்வையிலும் கதைமாந்தர்களின் பார்வையிலும் நீண்ட விவரணைகளோடு இடம்பெற்றுள்ளன.

சான்றாக, அர்சுணன் திருநங்கையாக உருமாறி, பிருகந்நளை என்ற பெயரில் உத்தரைக்கு நடன ஆசிரியராக வருகிறார். நடனக்கலையைக் கற்பிக்கும் காட்சிகளில் பெரும்பாலும் ‘நடனக்கலை’ பற்றிய நீண்ட விளக்கங்களை எழுத்தாளர் கொடுத்திருக்கிறார்.

நளனைப் பற்றிக் கூறும்போது, சமையற்கலையும் புரவிப்பழக்குதல் கலையும் பற்றிய நீண்ட விளக்கம் இடம்பெறுதல் இயல்புதான். காரணம், நளன் சமையற்கலையிலும் புரவிப்பழக்கும் கலையிலும் கைத்தேர்ந்தவர். இந்த நாவலில் அரிஷ்டநேமி என்ற பெயரில் மாற்றுருக்கொண்ட சகதேவன் நிமித்தநூல் கற்றவராகவும் அருகப்படிவராகவும் இடம்பெற்றுள்ளார். அதனால், அவர் சார்ந்த கதைப்பகுதியில் நிமித்தநூல் பற்றிய விரிவாக செய்திகள் இடம்பெற  வேண்டியுள்ளது.

கதைக்களம், கதைமாந்தரை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தகவல்கள் மிக விரிவாகக் கூறப்படுவதால், இவை நாவலின் கதையோட்டத்தைச் சிதைக்கின்றனவா? என்றும் வாசகருக்குத் தோன்றும். அதற்கு விடைகாண வேண்டுமானால், நாம் இந்தப் பகுதியைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரங்கேற்றுக்காதையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கோவலன் கலைரசிகன் என்பதாலும் மாதவி ‘தலைக்கோல்’ எய்திய நாட்டிய மங்கை என்பதாலும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘ஆடல்கலை’ பற்றிய விரிவான தகவல்களை அரங்கேற்றுக்காதையில் கொடுத்திருக்கிறார்.

ஆடற்கலையின் இயல்பையும் இசைக்கலையின் இயல்பையும் ஆடலரங்கேற்ற மேடையின் அமைப்பையும் அவற்றின் இலக்கணத்தையும் மாதவி பதினோருவகை ஆடலையும் அவிநயம் முதலான செய்திகளையும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். நாட்டியத்திற்கு வேண்டிய ஆடலாசிரியன், இசையாசிரியன், நாட்டியக்கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் ஆகியோரின் தகுதிகள் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“நடனத்தை முறையாகக் கற்று, அரங்கேற்றுவதற்கு ஒரு நடனப்பெண் பெற்றிருக்க வேண்டிய அனைத்து இலக்கணங்களையும் ஆட்டுவிக்கவல்ல ஆடல் ஆசிரியன் தகுதிகளையும் நடனத்திற்கு உறுதுணையாக அமையும் இசையாளர்களின் இலக்கணங்களையும் மிக நுட்பமாகக் கூறுகிறது” (ஆய்த எழுத்து, ஜூன் 2015, ப. 103) என்கிறார் து. பத்மபிரியா,

அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் அளிக்கும் செய்திகள் அனைத்தும் எந்த வகையிலும் சிலப்பதிகாரக் காப்பியக் கதையைச் சிதைக்கவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும். பெருங்காப்பியத்தில் கதையோடும் கதைமாந்தரோடும் தொடர்புடையன பற்றிய தகவல்களை விரிவாகக் கொடுப்பது காப்பிய ஆசிரியரின் இயல்புதான்.

அந்த நோக்கில் நாம் ‘நீர்க்கோலம்’ நாவலை அணுகினால், எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘நடனக்கலை’, ‘சமையற்கலை’, ‘குதிரையைப் பழக்குதல் கலை’ போன்றன பற்றிய தகவல்களை விரிவாக நாவலில் அளித்துள்ளமை ‘பெருநாவல்களுக்கே உரிய இயல்பு’தான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

இனி, ‘வெண்முரசு’ தொடர் நாவல்களைப் போன்ற ஆகப்பெரிய, ஆகச்சிறந்த நாவல்களை எழுதவுள்ள எழுத்தாளர்கள், இதுபோன்ற மிகுந்த உழைப்பை எழுத்தாளர்களிடம் கோரும் உத்திகளைப் படைப்பில் புகுத்தினால், அவர்களின் மீதும் அவர்களின் படைப்புகளின் மீதும் வாசகர்களின் கவனம் கூடுதலாகக் குவியும்.

முனைவர் . சரவணன், மதுரை

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரை’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021
அடுத்த கட்டுரைவெள்ளிநிலம்- கடிதம்