ஒளி- கடிதங்கள்-2

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

அன்புள்ள ஜெ,

ஒளி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு நகைச்சுவை நாடகத்தையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே நாடகம் வேறுமாதிரி என்று புரிந்துவிட்டது. நாடகத்தின் ஹைலைட் என்பது ஒரு seer க்கும் அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்குமான வேறுபாடுதான். எழுத்தாளன் தன் வாசகர்களை நினைத்துக்கொண்டிருக்கிறான். எவராவது வாசிக்கிறார்களா என்று பார்க்கிறான். கசப்படைகிறான். ஆனால் ஞானிக்கு கசப்பே இல்லை. தான் சரி என நினப்பதற்காக உயிரை அளிக்க தயாராக இருக்கிறான்.

இந்த பூமியில் நூறாண்டுகளுக்குமேல் நீடித்திருப்பவை எல்லாம் மதங்கள் மட்டுமே என்ற வரி துணுக்குற வைத்தது. ஆனால் உண்மை. இலக்கியம் உட்பட எதுவுமே இருநூறாண்டுகளை தாண்டுவதில்லை. இருநூறாண்டு பழைய எந்த நூலை நாம் இயல்பாக வாசிக்கிறோம்? கம்ன்யுனிசமே நூறாண்டு தாண்டவில்லை.

சிந்திக்கவைக்கும் நாடகம்

எச்.ஜெயக்குமார்

அன்பு ஜெ,

மேடை நாடகங்கள் பார்த்திருக்கிறோம். தொலைக்காட்சி வந்தபிறகு அதில் வரும் தொடர் நாடகங்கள் பார்த்திருக்கிறோம். இணையம் வந்த பிறகு சிறு/குறு நாடகங்கள் வந்தேறியிருக்கின்றன. ஓ.டி.டி தளங்கள் வந்தபின் அதில் சாத்தியமாகும் நாடகங்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் புதியதாக வந்திறங்கிய ஜூம் ஆப்பில் ஒரு நாடகம் என்று நீங்கள் சொன்னபோது ஒர் சோதனை முயற்சி என்று மட்டுமே நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று நடந்த ”ஒளி” எனும் ஜூம் நாடகம் இந்த இணைய உலகத்தில் நீங்கள் செய்திருக்கும் பெரும் முன்னெடுப்பு. அதை மிகச் சிறப்பாக, நேர்த்தியாக செய்து முடித்திருந்தார் ”இயக்குனர் தனா” அவர்கள். ஐந்து நடிகர்களும் தனித்தனியாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.

முதலில் இந்த நாடகத்தை துவக்கியும் முடித்தும் வைத்த கதாப்பாத்திரமான பிரபாகர்(நரேன்). ”ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?” என்றிருந்து இந்த வாழ்க்கைக் பயணத்தில் தன் பெண்டு, தன் பிள்ளை, வீடு, சோறு என்றமைந்து வெந்ததைத் தின்று விட்டு விதிவந்தால் சாகும் மானுடக் கூட்டங்களுக்கு மத்தியில், மாற்றத்தை விரும்பும் அல்லது மாற்று வாழ்க்கையை வாழும் மிகச் சில மனிதர்களின் கதை இது. அப்படியான மனிதர்களால் மட்டுமே கால காலத்துக்கும் வரலாறு படைக்கப் படுகிறது. புத்தன், இயேசு, காந்தி, மார்க்ஸ் என மதம் சார்ந்த மனிதரையோ அல்லது ஒரு வாழ்க்கை முறை, கொள்கை சார்ந்த மனிதரையோ எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவருமே இப்படி தேமே என்று காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் மத்தியில் தான் மாற்றுக் கருத்தை விளம்பி, அதை விரும்பும் மக்களுக்கு அந்த விடுதலையை நல்க ஒரு தூண்டு கோளாகவும், ஊக்கியாகவும் அமைந்து மாண்டிருக்கின்றனர்.

அந்த ஒரு தலைவனை, முதல் ஆட்டுக்குட்டியை முதலாமனை சொல்லும் கதாப்பத்திரமே பிராபகர். பிராபகர் உதிர்த்த ஒவ்வொரு ஜெ –வின் வரிகளும் ஆழமானவை. அதை நடிப்பில் உணர்ச்சிகளோடு முழுமையாக வெளிப்படுத்திய பெருமை நரேனையே சாரும். அவர் அறையின் அந்த வெளிச்சங்கள் அந்த அறை, அவரின் வியர்வை, உடலினின்று எழுந்த துடிப்புகள், பரிதவிப்பு, எதையோ செய்ய வேண்டும் எனும் உணர்வு, செயல் என உந்தும் மனம், ஒத்தவர்களை ஒன்று திரட்ட எழுந்த சிரத்தை என நடிப்பை வழிய விட்டிருந்தார். அவர் அதை வெளிப்படுத்துவதற்கான நேர வெளியயும் இயக்குனர் கொடுத்திருந்தார். தனித்திருப்பவராக, மாற்று வழியில் வாழ்பவராக, நம்பிக்கைவாதியாக, அதனாலேயே முரட்டு முட்டாளாக அறியப்படும் ஒரு பாத்திரமாக அமைந்தொழுகுகிறார்.

”ஏன் பேசியே ஆக வேண்டுமா?” என்று எழுத்தாளர் கேட்கும் போது “பேச்சு ஒரு சரடு மாதிரி” என்று சொன்ன வரிகள் அருமையானவை. தவளை முட்டை கோளையோடு சேர்ந்து ஒரு பந்தாக இருப்பது போல நாமெல்லாம் ஒன்றிணைவோம் என்ற அற்புதமான உவமையைச் சொல்கிறார். அதை அவர் ஒரு முக்கியமான ஒரு கருத்துருவாக பிறருக்கு விவரித்து கடத்தும் விதம் அருமை. சுதந்திரத்தை, விடுதலையைக் கனவு கண்டவர்கள் தான் உள்ளே அறைகளுக்குள் முடக்கப் பட்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு மீண்டு உரைக்கிறார்.

அந்த ஐந்து நபர்களுக்குமான மையச் சரடைக் கண்டறிந்து கோர்க்கும் கதாப்பாத்திரமாகத் திகழ்கிறார். இன்னும் அங்கிருக்கும் அதே போன்ற 50 பேருக்குமான ஒற்றைக் குறிக்கோளை உருவாக்கும் மனிதராகிறார். அப்படி ஒன்று எது? என்று கேட்டுக் கொண்டு அதற்கான ஒரு அடையாளமாக, குறியீடாக ஒளியைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த சிறு அறையில் அடைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் யாவருக்கும் தெரிந்த ஒற்றை அடையாளத்தைக் காணிக்கிறார். அப்படியானால் இது ஒரு மத அமைப்பு போல தானே? என்று எழுத்தாளன் கேட்கும் போது “ஆமாம்” என்கிறான்.

யாவரையும் ஒரு புள்ளியில் சேர்த்து அமைந்தபின் ”எதை வாழ் நாளெல்லாம் முழுவதும் தேடினோமோ அதைச் சுருக்க வேண்டும். அதன் அர்த்தத்தாலேயே அடிக்கோடிட வேண்டும்” என்று அவன் சொன்ன போது என் மனமும் கூட எழுத்தாளனைப் போல “ஆப்த வாக்கியமா?” என்றது. ஆனால் அந்த அடிக்கோடு தன்னை அழித்தலாய் அமைந்தது கண்டு துடுக்குற்றேன்.

இயேசுவைப் பற்றிய ஒரு குறிப்பை கதையின் நாயகன் சொல்லியிருப்பார். அதையும் ஜெ –வின் வசன வரிகளைக் கொண்டும் இயேசுவை, அவரின் இறப்பை, அவரின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அப்போஸ்த்தலர்களை நினைத்துப் பார்த்தேன். ஆம் அவர் தேர்ந்தெடுத்ததும் கூட ஒளியின் பாதையைத்தான். அந்த மாற்று சிந்தனைக்கான வலுவான குறியீடுகளை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என்றே நினைத்தேன்.

அடுத்ததாக இரண்டாவது ஃபிரேமில் வந்த எழுத்தாளரான அரங்கா அவர்களின் நடிப்பு அபாரம். அனைத்தையும் முயன்று ஒரு நிறைவின்மையின் உச்சியில் தவித்து அடங்கிப் போய் இருந்தவர். சற்றே பிராபகர் அவரின் சிந்தனைகளைத் தட்டி எழுப்பியதும் தன் சந்தேகங்களையெல்லாம் பகடியாய்க் கேட்டறிந்து அதற்கு இசைபவராக இருக்கிறார். ஒரு கொள்கை, தத்துவார்த்தம் போன்ற விடயங்களைப் பற்றி பேசும்போது எப்போதும் அதை பகடி செய்ய, வாசகரின் உளக்கிடக்கையில் உள்ள கேள்விகளை எள்ளலோடு கேட்கும் ஒரு கதாப்பாத்திரத்தைப் படைத்திருப்பார். அந்த பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார் அரங்கா அவர்கள். அவர் உடல் மொழி அழுகை, எள்ளல், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளாஇயும் கச்சிதமாக வடித்திருந்தது.

மூன்றாவதாக சொல்ல வேண்டியது ரீனா எனும் சுசித்ரா அவர்களைப் பற்றியது தான். நாட்டியம் ஆடுபவள் ஆகையால் அதற்கே உரிய கால்களை மடக்கி நளினமாக உட்காருதலும், உதட்டோரச் சினுங்களும், தோளைக் சிலுப்புவதுமென உடல் மொழியையும், ஒரு மாற்று பரிமாணத்தை காண விளையும் புரட்சி பேசும் போது கொற்றவை போலும் கனீர் குரலில் அந்த பாத்திரத்தை சிறப்பாக ஆற்றிவிட்டார்.

இசையமைப்பாளர் ஒரு முரண்பட்டவரைப் போல அமைதியை விரும்புபவர் போல முதலில் அமைந்திருப்பவராயும், அடியாளத்தில் அவரின் மீறல் பற்றிய நினைவை பிரபாகர் கிளரிவிட்டதும் சிறு ஒளி வந்தவராய் அமையும் அந்த முகுந்தன் பாத்திரத்தை மிக அருமையாக செய்திருக்கிறார்.

நவீன் அவர்களின் நடிப்பு முதலில் இருந்தே ஒரு ஆர்வமிகு இளைஞனைப் போல இருந்தது. பிரபாகரை தன் மனசாட்சி போல நினைத்து வியந்து பல்லி போல் ஒட்டிக் கொண்டு வசனங்களைப் பேசிய விதம் அருமை.

இப்படி அருமையாக நடித்து பார்வையாளர்களுக்கு ஒளியையும், விடுதலையுணர்வையும் கடத்தி, வரலாற்று நெடுகவும் அண்டர்லைன் போட்ட அனைத்து முதலாமன்களையும் நினைவு கூறும் நாடகமாக அமைந்தது சிறப்பு.

இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

-இரம்யா.

அன்புள்ள ஜெ,

‘ஒளி’ நாடகம் அற்புதம். சமீபத்தில் இத்தனை intenseஆன எதையும் பார்த்ததில்லை. தங்களின் சிறுகதை ஒன்றைப் படித்த உணர்வு. காட்சி ஊடகத்தில் எப்போதும் கதை எனக்கு வெளியே தான் நடக்கும். இப்படி மனதில் கதை நிகழ்வது அரிது. ஒவ்வொரு வசனமும் மனதுக்குள் விரித்தபடியே இருந்தது; இருக்கிறது.

அன்புடன்

பன்னீர் செல்வம்.

ஒளி- கடிதங்கள்

இன்றிருத்தல்…

முந்தைய கட்டுரைவெள்ளிநிலம்- கடிதம்
அடுத்த கட்டுரைஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு