‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 17 ஆவது நாவல் ‘இமைக்கணம்’. ‘இமைக்கணம்’ என்பது, காலத்தின் மீச்சிறுதுளி. ஆனால், முன்னும் பின்னும் அற்ற தனித்த காலத்தின் மீச்சிறுதுளி என்பதே அதன் தனித்துவம். ‘இமைக்கணம்’ நாவல் இயற்றுதலுக்கும் எய்துதலுக்குமான இடைவெளியை வரையறுக்க முயன்றுள்ளது. உயிர்களின் நோக்கம் என்ன? அவற்றின் எல்கை யாது? என்ற அடிப்படை வினாக்களுக்கு மெய்மை நோக்கில் விடைகளை அளித்துள்ளது.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் குருஷேத்ரப் போர் தொடங்கியபோதே நான் ‘கீதை’யைப் பற்றி நினைத்து அஞ்சினேன். போர் நடைபெறுவதற்குச் சற்று முந்தைய கணத்தில் இளைய யாதவர் அர்சுணனுக்குக் கீதையை விரிவாகக் கூறுவாரே, அதை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதத் தொடங்கினால், அதுவே ஒரு நாவலளவுக்கு நீளுமே என்று அச்சப்பட்டேன்.

அதுமட்டுமல்ல, நாவலின் கதையோட்டத்துக்கு அது எந்தெந்த வகையிலெல்லாம் வாசிப்புத் தடையாக இருக்கும் என்பது குறித்தும் சிந்தித்தேன். நல்லவேளையாக எழுத்தாளர் அவ்வாறு செய்யவில்லை. தனக்கேயுரிய புனைவு நேர்த்தியால் அந்தக் கீதையை, அதன் சாரத்தை ஒரு கனவுநிலையில் இந்த நாவலிலேயே மிகச் சுருக்கமாக வெளிப்படுத்திவிட்டார்.

இந்த ‘இமைக்கணம்’ நாவலில், இதுவரை ‘வெண்முரசு’ நாவல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து முதன்மைக் கதைமாந்தர்களின் உள்ளத்திலும் வாழ்நாள் முழுக்க அலைவுறும் வெளிப்படுத்தமுடியாத வினாக்களுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் எழுத்தாளர். அந்த வினாக்கள் அனைத்தும் முழுமெய்மையை நோக்கியதாகவே உள்ளன.

அந்த வினாக்களை எழுப்புவது மானுடராக இருந்தாலும் அவற்றுக்கு விடைகளை அறிப்பது இறைவன். மானுடரின் வினாக்களை யமன் தனக்குள் ஏற்றிக்கொண்டு, அவற்றைப் பற்றி விரிவாக இறைவனிடம் உரையாடி விடைகளைப் பெறுவதாக ஒரு நாடகீயமாகவே உருவாக்கியுள்ளார் எழுத்தாளர்.

தருக்க உரையாடல்கள் இறுதியாகத் தத்துவத்தில் நிலைபெறுகின்றன. அந்தத் தத்துவம் மானுடரின் உள்ளத்தை முழுமெய்மையை நோக்கி நகர்த்துகிறது. மானுடர் தன்னுடைய உலகவாழ்வில் தான் இயற்றுவதும் எய்துவதும் எவை என்பன குறித்து முழுதறிவுபெறுகிறார். அதுவே அவர்களுக்கான விடுதலையாக அமைகிறது. தன் வினாக்களிலிருந்து விடுபடுபவனே விடுதலை பெற முடியும். அந்த விடுதலைக்கான களமாகத்தான் இந்த ‘இமைக்கணம்’ நாவல் உள்ளது.

யமன் தனக்குள் பொங்கிய வினாக்களுக்கு விடைதேடி இளைய யாதவர்  வடிவில் இருக்கும் திருமாலிடம் செல்கிறார். அவர் தன்னுடைய வினாக்களை நேரடியாகக் கேட்காமல் தன்னைப்போலவே உலகில் அகவினாக்களால் பித்தேறி, நிம்மதியற்று அலையும் மானுடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் உருவில் கலந்து, அவர்களின் கனவுகளின் வழியாக இளைய யாதவரைச் சந்திக்கிறார்.

கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், கிருஷ்ண துவைபாயனன் (வியாசர்), யுதிஷ்டிரர் மற்றும் திரௌபதி ஆகிய மானுடர்களை யமன் யமன் தேர்ந்தெடுக்கிறார். திரௌபதியின் உருவினைத் தான் ஏற்கும்போது யமன் யமியாக மாறிக்கொள்கிறார்.

இந்த மானுடர்களின் அகவினாக்கள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வை உள்ளடக்கியதாகவே உருப்பெற்றுள்ளன. அதனால்தான், இளைய யாதவர் அவற்றுக்கு விடையளிக்கும்போது, அவர்களை அவர்களின் முற்காலத்துக்கும் பிற்காலத்துக்கும் காலத்தைக் கலைத்து அழைத்துச் செல்கிறார். இந்தக் காலக் கலைப்பு உத்தியை எழுத்தாளர் ‘மாமலர்’ என்ற நாவலில் ‘குள்ளர் முண்டன்’ (அனுமன்) என்ற கதைமாந்தர் வழியாக நிகழ்த்தியிருக்கிறார். இங்கு அதே பணியினை இளைய யாதவர் (திருமால்) செய்கிறார்.

ஒவ்வொரு முறையும் காலத்தைக் கலைக்கும்போதும் ஓர் உபகதையும் இந்த நாவலில் விரிகிறது. மானுடர்கள் ஒரு நிகழ்வு தனக்கு ஏற்றதாக, விருப்பமானதாக நிகழாவிட்டால் ‘அது இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டாமே’ என நினைப்பது இயல்புதான். அத்தகைய நிகழ்வுகள் அவர்கள் விரும்பும் விதமாக அது நிகழ்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைத்தான் இளைய யாதவர் இந்த நாவலில் விளக்கியுள்ளார்.

சான்றாகக் கர்ணனின் பிறப்பு பற்றிக் கூறப்படுதலைப் பற்றிப் பார்ப்போம். கர்ணன் உண்மையிலேயே முதற்பாண்டவராக உலகோரால் அறியப்பட்டிருந்தால், அவரும் அவரின் சகோதரர்களும் ‘பாண்டவர்கள் ஆறுபேர்’ என்ற பெயரிலேயே வாழ்ந்து, முதிர்ந்திருப்பர். ஆனாலும், கர்ணனின் அகத்தில் தங்கியிருக்கும் ‘வெறுமை’ நீங்காது என்பதை இளைய யாதவர் விளக்குகிறார். இதுபோலவே ஒவ்வொருவருக்கும் அவர்களின் முழுவாழ்வையும் மாற்றிக் காட்டி, அவற்றின் வழியாகவும் நீங்கள் உங்களின் அகவினாக்களைத் தவிர்த்திருக்க முடியாது என்றே குறிப்பிடுகிறார்.

இந்த நாவலில், திரௌபதி தன் கனவில் முன்பே சூரியப்பிரஸ்தத்தை உருவாக்கிவிட்டாள் என்றும் பின்னாளில் இந்திரப்பிரஸ்தமாக மாறிவிட்டது என்றும் ஒரு குறிப்பு வருகிறது. உண்மைதான்.

‘பாண்டவர்கள் ஆறுபேர்’ என்று நிகழ்ந்திருந்தால், திரௌபதி தன்னுடைய தன்னேர்ப்புமணத்தின்போது எந்தவிதமான போட்டியையும் வரையறுக்காமல் தானே முன்வந்து கர்ணனுக்கு மாலையிட்டிருப்பாள்.

காரணம், பிற ஐந்து பாண்டவர்களின் தனித்துவங்கள் அனைத்தும் ஒன்றுகூடிய முழுவடிவம் ‘கர்ணன்’ என்பதால்தான். கர்ணனை அவள் மணந்திருந்தால், தன்னுடைய கனவுநாடான  சூரியப்பிரஸ்தத்தை உருவாக்கியிருப்பாள். ஆனால், காலம் வேறு விதமாக நிகழ்ந்து விட்டமையால், அவள் அர்சுணனை மையப்படுத்தி இந்திரப்பிரஸ்தத்தை நிறுவுகிறாள்.

இந்த நாவலில் நிகழும் உரையாடல்கள் பல இறைவன்-ஆன்மா ஆகியவற்றுக்கு இடையில் நிகழ்வதாகவே கருத இடமுள்ளது. அந்த உரையாடல்கள் தருக்கமாகத் துவங்கி, தத்துத்தைக் கண்டடைந்து, முழுமெய்மையை நோக்கிச் சென்று, அகவிடுதலையை அளிக்கின்றன.

சிண்டி, சுதாமன் (குசேலன்) பற்றியும் பாண்டவர்களின் படை ஒருக்கம், குடிமக்களைப் போர்க்களத்தில் நிறுத்தும் பீமனின் முயற்சி குறித்தும் இந்த நாவலில் பேசப்பட்டுள்ளன.

இந்த நாவலில், ‘மரணம்’ குறித்தும் ‘அகவிடுதலை’ பற்றியும் பேசப்பட்டுள்ளது. இயற்றுதல் ‘மானுடக் கடமை’ என்றும் எய்துதலே ‘அகவிடுதலை’ என்றும் காலத்தின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்து, ஊழின் பெருவிசைக்கு எதிர்நிற்காமல் இருத்தலே ‘முழுவாழ்வு’ என்றும்  நாம் இந்த நாவலின் வழியாகப் பொருள்கொள்ள முடிகிறது. அதுமட்டமல்ல, இறைவனேயானாலும் மனிதராகப் பிறந்துவிட்டால் மரணம் உறுதி என்ற நிலையாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இராமனின் மரணம் பற்றிப் பேசும்போது இயல்பாகவே இளைய யாதவரும் இறப்பார் என்பதை வாசக மனம் ஏற்கத் தொடங்கிவிடுகிறது.

வழக்கமாகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் பிறர் பெரிதும் பயன்படுத்தாத, வழக்கொழிந்துவிட்ட பழந்தமிழ்ச் சொற்களைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவர். இந்த நாவலில் அத்தகைய ஒரு சொல்லைக் கையாண்டுள்ளார்.

யமன் கர்ணன் வடிவில் வந்து இளைய யாதவரிடம்,

யாதவரே, வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளும் கணமொன்றுக்காக என்னுள் நஞ்சு நீறிநீறிக் காத்திருந்தது

என்று கூறுகிறார். ‘நீறிநீறி’ என்ற அடுக்குத்தொடரில் உள்ள ‘நீறுதல்’ என்ற சொல் தொழிற்பெயர்.

நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) ‘நீறுதல்’ ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. ‘நீறுபூத்த நெருப்பு’ என்பது பழமொழி. ‘நீறுதல்’ என்னும் இச்சொல் ‘மனம் புழுங்குதல்’ என்னும் பொருளில் வரும். ‘புழுங்குதல்’ என்பது, ‘பொறாமைப்படுதல்’ என்பதாகும்.

கர்ணனின் மனம் புழுங்குகிறது. மனப்புழுக்கமே ஒரு வகையில் நஞ்சுதான். இங்குக் கர்ணனின் மனம் வஞ்சம் கொண்டு புழுங்குகிறது. அதுவும் நஞ்சாகிப் புழுங்குகிறது. ஒருவகையில் பார்த்தால், துரியோதனனைவிடவும் நச்சுமிகுந்தவனாகக் கர்ணனே எனக்குத் தெரிகிறான்.

இந்த ‘இமைக்கணம்’ நாவல், எக்காலத்துக்கும் பொதுவான, எக்காலத்திலும் அழியாத பேரறத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் பேரறமே அகவிடுதலைக்கான ராஜபாட்டை. அந்தப் பாதையின் முடிவில் முழுமெய்மையை நமக்காகக் காத்திருக்கும். அதை அடைவதே, அதை எய்துவதே மானுடவாழ்வின் பெருநோக்கு. அந்த வகையில், இந்த நாவல் ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல்களுக்கும் அச்சாணியாக அமைவுகொள்கிறது.

முனைவர் . சரவணன், மதுரை

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம், 5 அமெரிக்க நகரங்களில்…
அடுத்த கட்டுரைமதார் கடிதம்-4