கொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்

அன்பு ஜெ,

கொற்றவை கலந்துரையாடல் நிகழ்வு

கொற்றவை நாவலைக் கலந்துரையாட கரு ஆறுமுகத்தமிழன் ஐயாவை விட ஒரு சிறந்த மனிதர் இருக்க முடியுமா என்று வியக்குமளவு இன்றைய கலந்துரையாடல் நிகழ்வு அமைந்தது. இனிமையான தமிழைப் பேசும் என் பள்ளி ஆசிரியர் ஒருவரின் உரையைக் கேட்பது போலவே இருந்தது. கொற்றவை உரை என்றவுடன் வெறுமே நாவலைப் பற்றி அல்லது நாவலில் தனக்குப் பிடித்தது போன்றவற்றைப் பற்றி இருக்குமோ என்று ஊகித்திருந்தேன். ஆனால் ஐயா அவர்கள் சிலம்பையும் கொற்றவையும் ஒப்பு நோக்கி ஒரு உரையைத் தரப்போவதாக அறிமுகம் செய்தபோதே ஆர்வமாகிவிட்டேன்.

இளமையில் அறிஞர் அண்ணா அவர்களின் “நாம் நமது கற்பனா சக்தி முன்பு கம்பரையும் இளங்கோவையும் நிறுத்தி பேசச் சொன்னால் கம்பன் இளங்கோவைப் பார்த்து, ’எனக்கு உயிர் ஊட்டிய உத்தமரே!, அணி அழகு தந்த ஆண் அழகரே! என்பார்” என்ற வரிகளின் வழியாகத்தான் சிலம்பு எத்துனை உயர்வானதென அறிந்திருந்தேன். அதன் பின் தேர்வுக்காக அதிலிருக்கும் “மதுரைக் காண்டமும்”, ஆர்வத்தால் பிற இரண்டு காண்டங்களையும் படித்திருக்கிறேன். அத்தகைய சிலம்பின் மறு ஆக்கமாக கொற்றவையை ஐயா அவர்கள் சொல்லி இரண்டின் வேறுபாடுகளை எடுத்துக் கூறியிருந்தார்.

சிலம்பின் மையம் மாறாமல் நீங்கள் கொற்றவை எழுதியிருப்பதாக நினைத்த அவரின் வாசிப்புப் பார்வை இப்பொழுது மாறியிருக்கிறது என்று கூறி அதன் காரணங்கள் வழியாக சிலம்பின் மையம் கொற்றவையின் மையமல்ல என்று நிறுவினார். அதன் வழியாகவே கொற்றவையில் நீங்கள் எதை மையமாக வைத்திருக்கிறீர்கள் என்றும் கூறினார். எத்துனை ஆழமான ஒப்பீடு என்று வியந்தேன். அதற்கு அவர் சொன்ன உவமை மிகப் பொருத்தமாயிருந்தது. “முன்பு அவர் சிலம்பின் மையத்தை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கூட்டை எழுப்பினார் என்று நினைத்தேன். இன்று தான் சிலம்பின் கூட்டை மட்டும் எடுத்துக் கொண்டு மையத்தை இட்டு நிறப்பி கொற்றவை எனும் நாவலைப் படைத்திருக்கிறார்” என்று அறிந்தேன் என்றார். அதை அவர் நிறுவும் தருணத்தை நோக்கி மேலும் முடுக்கித் தள்ளினார்.

முதலாவதாக, சிலம்பின் கண்ணகி முதலில் உலகறியாதவளாக, எளிய சூட்டிகைப் பெண்ணாகத்தான் இருக்கிறாள் ஆனால் கொற்றவைக் கண்ணகியோ திண்ணமாக, ஒவ்வொரு கணமும் அவளை அறிய வைப்பதற்கு நீலி உடனிருப்பதாகச் சொல்லியிருந்தார். இது எனக்கு சரியெனவே பட்டது. சிலம்பு படிக்கும் போது பல இடங்களில் கண்ணகியின் மேல் கோபம் தான் வந்தது. ”ஏதுமறியாதவர்களாக, அபலைகளாக, கட்டுப்பெட்டியாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பெண்களை எப்போதும் எனக்குப் பிடித்ததில்லை. “வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்” எனும்போதும், வேட்டுவ வரியில் சாலினி தெய்வம் ஏறப்பெற்று ஆடும்போது

“இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தெந்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

திருமா மணி”

என்று மொழிந்த வரிகளைக் கேட்ட கண்ணகி நாணி “பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி” என்றே கணவனின் முதுகுப் புறத்தில் மறையும் போது கோபம் தான் வரும் எனக்கு. அவள் சிலம்பில் கொற்றவையாக கோவலன் இறக்க வேண்டியுள்ளது. ஆனால் ‘கொற்றவை’ யில் அவள் தெய்வமாகவே மொழியப்பட்டு, நீலி வழிநெடுக உடனிருந்து கொற்றவையாக்கும் நிகழ்வில் ஜெ சிலம்பிலிருந்து விலகி அதை முன்னெடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறிய பார்வை வியக்கச் செய்தது. ”HIJACKED BY JE” என்ற வரி மிகப்பிடித்திருந்தது. மண்மகள் அறிந்திலள் என்று சிலம்பில் சொன்ன வரிகளுக்கு நீங்கள் சொன்ன மாற்று விவரனையைச் சொல்லி வியந்தார்.

சிலம்பின் மையமாக இளங்கோவடிகளால் சொல்லப்பட்டது மூன்று.

“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”

இந்த மூன்று மையக் கருத்துக்களில் முதல் கருத்தைத்தவிர பிற இரண்டையும் என் இளமையில் நான் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஊழைப்பற்றிய என்னுடைய புரிதல்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக இன்று மடை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐயா அவர்கள் சொல்லும்போது அவர் அது சங்க காலத்திலிருந்து “நீர் வழிப்படூஉம் பனைபோல ஆருயிர் முறைவழிப்படூஉம்” என்ற வரிகளை நோக்க ஊழைப்பற்றிய சிந்தனை இருந்து வந்திருப்பதைச் எடுத்தியம்பினார். மேலும் கொற்றவையில் ஊழ் என்பது மையத்திலிருந்து விலகி கண்ணகி தான் ஆற்ற வேண்டிய செயலை அறிந்தவளாக சித்தறிக்கப்படுவதாகச் சொன்னார்.

ஆனால் பத்தினி என்ற ஒன்றை மையப்படுத்துவதை நீங்கள் கொற்றவையில் விலக்கியிருக்கிறீர்கள். அதுவே இது புதுக்காப்பியமாகத் திகழ்வதற்கு வழி வகுக்கிறது என்றார். அதே போல இது போன்ற ஒரு கதையில் ஒரு ஆண் தன்னை எங்கே பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு கொற்றவை நாவல் ”அன்னையின் மடி தேடி ஓடி ஆடை கலைந்து உட்கார்ந்து கொள்ளும் புதல்வனாக அமையப்பெறுதல்” கூறுவதாக விளம்பியது அருமையான தருணம்.

மேலும் எவ்வாறெல்லாம் சிலம்பினின்று கொற்றவை வேறுபடுகிறது என்று கூறி “எப்படி வால்மீகி இராமாயணத்தை கம்பன் எழுதும்போது தனக்கானதாக கம்ப இராமாயணமாக எழுதினானோ அப்படித்தான் இளங்கோவின் சிலம்பை ஜெ மறு உருவாக்கி கொற்றவையாக செய்திருக்கிறார்” என்று நிறுவினார்.

ஐவகை நிலங்களிலும் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள் வழி கண்ணகியை இணக்கும் சரடை எடுத்தியம்பி கண்ணகியின் அறச் சீற்றத்தின் போது நூறு கண்ணகிகள் எழுந்து வருவது பற்றியும் இணைத்தபோது சிலம்பு எப்படி கொற்றவை ஆகிறது எனும் சித்திரத்தைக் கடத்திவிட்டார்.

தத்துவார்த்தத்தை அவர் எடுத்துச் சொன்ன விதமும் பிடித்திருந்தது. ”அறியமுடியாமையின் நிறம் நீலம்” என்று ஆரம்பித்து குமரியிலிருந்து குமரியில் முடிந்து ஒரு முடிவிலியை நோக்கிச் செல்லும் ஒன்றாக கொற்றவை அமையப்பெறுகிறது என்றார். புத்தர் சூனியத்தை வெறுமையால் தான் நிறைக்க முடியும் என்று கண்டறிந்ததை அவர் எடுத்துச் சொன்ன விதம் பிடித்திருந்தது.

ஐம்பூதங்களான(ஐம்பருக்கள்) நீர், காற்று, நிலம், தீ, வானம் ஆகியவற்றிலெள்ளாம் கொற்றவையை பொருத்தி ’வானும் கடலும் சந்திக்கும் இடமும் நீலம் தான்’; ’அறியமுடியாமையின் நிறம் நீலம்’; முடிவிலி என்ற ஒரு பார்வை மிகத் திறப்பாயிருந்தது.

மேலும் மேலும் பல திறப்புகள் அடங்கிய அவரின் உரை கண்டிப்பாக கேட்டு உய்த்துணர வேண்டியது. ஒரு நவீனச் சிலம்பாக கொற்றவை நாவலை நிறுவிய பெருமை ஐயாவையே சாரும்.

’எனக்கு சடக்குனு பேச வராது’; வந்துருவாய்ங்க, அங்கிட்டு போன்ற வட்டார மொழி பயன்படுத்தலும், ‘விதந்தோபல்கள், தண்ணீர் குடிக்க இடைவெளி எடுக்கும் போது “ஒரு மணித்துளிகள்” என்று சொன்ன போதும் என்னை அறியாமல் ஐயாவை நோக்கி புன்னகை செய்து கொண்டிருந்தேன். ஜெ, நீங்கள் தேனீ சிறுகதையில் சொன்னது போல “தேனு மாதிரில்லா இனித்தது. தேனுல்லா!” என்று சொல்லத்தோன்றுகிறது அவரின் மொழி. ஒரு பயனுள்ள, இனிய மாலையை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக நற்றுணைக் குழுவிற்கும், அதை சாத்தியமாக்கிய கரு ஆறுமுகத்தமிழன் ஐயாவிற்கும் நன்றிகள்.

அன்புடன்

இரம்யா

முந்தைய கட்டுரைசௌந்தரிய லகரியும் சங்கரரும்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 10