மழையும் நிலமும்

மழைப்பாடல்

மழையைப் பற்றி ஜெ குறிப்பிடும்போது அதை வள்ளுவனின் வரிகளில் “விசும்பின் துளி” என்று குறிப்பதையே மிகவும் விரும்புவார். ஆம்! அத்தகைய விசும்பின் துளி நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஓர் பறவையாக அஸ்தினாபுரி இந்த நாவலில் காணக்கிடக்கிறது. மழையின் போது எழும் தவளைகளின் சத்தமே அதன் பாடலாக இருக்க முடியும். தவளைகளைப் பற்றி சத்யவதி கூறும்போது, “கங்கைக்கரையின் கோடானுகோடி தவளைகளின் நாவில் வேதம் எழும்போது விண்ணோர் இரங்கியாகவேண்டும். தவளைக்குரல் எழும் நாட்டிடம் வருணனும் இந்திரனும் கனிவுடனிருக்கிறார்கள்” என்கிறாள். அத்தகைய தவளையின் பாடலை நோக்கி அஸ்தினாபுரி ஏங்கி நிற்கும் தருணமாக மழைப்பாடலின் துவக்கம் அமையப் பெறுகிறது

‘அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்’ என்றே நாவல் துவங்குகிறது. கிராதம் என்னும் பகடையாக பரசுராமன் பிறந்து, ஷத்ரியர்களின் அரச மோகத்தால் உயிரிழந்த மூதாதையர்களின் கண்ணீர்த்துளிகளுக்கு பலியாக, ஷத்திரிய குலங்களை அழித்தொழிக்கிறான். மூன்றாவது பகடையான துவாபரம் விண்ணவர்களான சூரியனுக்கும் இந்திரனுக்குமான போர்ச்சூழலை மூளவைத்து அதன் காரணகர்த்தவாக தான் இருப்பது கண்டு சிரித்துக் கொண்டிருக்கையிலேயே சக்கரங்களில் மோதித் தெரித்து மேருவில் முட்டி உடைகிறான். உடனே விண்ணவர்கள் “இனி நம் ஆடல் அந்த மண்ணில்” என்று சிரிப்பதாக சூதரின் வெறிகொண்ட பாடலுடன் மழைப்பாடல் நம்மை அத்தியாயத்திற்குள் அழைத்துச் செல்கிறது. துவாபார யுகத்தின் இறுதிக் கட்டத்தை நாவல் எடுத்தியம்புவதாக விண்ணின் தேவர்கள் யாவரும் மண்ணில் பிறந்து தங்களின் ஆடலை நிகழ்த்துவதற்கான களத்தை ஒருக்குவதாக இந்த நாவல் அமையப்பெறுகிறது

பகுதிகளின் வழியாக மழைப்பாடல்:

பதினேழு பகுதிகளைக் கொண்டிலங்கும் மழைப்பாடல் நாவல் ’வேழாம்பல் தவம்’ எனும் பகுதி கொண்டு தொடங்குகிறது. ’வேழாம்பல்’ என்ற சொல்லே உச்சரிபதற்கு இனிமையாக இருக்கிறது. வேழாம்பல் என்பது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் இருவாட்சி பறவையே தான். தொல் குடிகளான பழம் மக்களுக்கு இன்றளவிலும் அது குறியீடாக இருந்து வருகிறது. நாகர்கள் இதை உண்பதில்லை. அஸ்தினாபுரம் எனும் மிக உயரமான பாதுகாப்பான இடத்தில் கூட்டைக் கட்டி தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் ஒரு பெண் வேழாம்பலான சத்தியவதியின் தவம் இது. வேழாம்பலில் ஆண் தான் கூட்டைப் பாதுகாப்பதும், இரையைக் கொணர்வதுமான வேலையைச் செய்கிறது. அஸிதினாபுரி எனும் முதிராக் குழந்தைகளுக்கான பசியைப் போக்கும் இரையாக காந்தாரமும் மர்க்காவதியும் எழுகிறது.  அதைக் கொணர்ந்து கொடுக்கும் ஒரு ஆண் பறவையாக பீஷ்மர் திகழ்கிறார். அஸ்தினாபுரி எனும் குழந்தையின் தந்தையாக பீஷ்மர் இருந்து அந்த வேலையைச் செய்து அதை வளர்த்தெடுக்கிறார்.

கானல் வெள்ளி: ’கானல் நீர்’ தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு இரண்டாம் பகுதியில் ஆசிரியர் காணிப்பது கானல் வெள்ளியை. எங்கோ தொலைவில் இருக்கும் வெள்ளி ஒரு கானல் நீரைப் போலவே மின்னி மின்னி தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது. காட்சிபிழையெனவே நம் கண்களை நிறைக்கும் அழகைக் கொண்டவை அவை. திருதிராஷ்டிரனுக்கான அரியணை என்பதும் கூட அப்படியான ஒரு கட்சிப்பிழையாய் அமைந்துவிடுவதை பகுதி எடுத்தியம்புகிறது. ஹஸ்தியின் அரியணையில் அமரும் பெருந்தோள் வல்லமை கொண்டவனான திருதிராஷ்டிரன் அரியணைக் கனவு கொண்டிலங்குகிறான். தன் தோள்வலிமையின் மீதான முற்றாணவம் அழிந்தபின் பீஷ்மர் முன் முகம் குப்புற விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் அவனைத் தன் மகனாக ஏற்கிறார். அவனை அரியணை ஏற்றுவேன் எனும் சபதத்தையும் எடுக்கிறார்.

புயலின் தொட்டில்: எவ்வழி நோக்கினும் புயல் அழிவின் ஒரு சக்தியே. ஆனால் அது இயற்கையின் ஒரு இன்றியமையாத நிகழ்வும் கூட. பூமி தன்னை மழை தேவன் வருவதற்கு முன் தூய்மையாக்கிக் கொள்ளும் கருவியாகவும் புயல் அமைகிறது. மாபெரும் புயல்களின் பிறப்பிடமாக இந்த மண்ணில் இருப்பது பாலை நிலமே. சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் தாண்டி அமைந்த ஒரு பெரும்பாலை நிலப்பரப்பின் சித்திரத்தை ஆசிரியர் நம் கண்களுக்கு இங்கே கட்சிப்படுத்துகிறார். சந்திரகுல யாயாதியின் இரண்டாவது மைந்தன் துர்வசு தன் தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு துறந்தபோது அவன் கண்டடைந்து உருவாக்கிய பாலை அரசே காந்தாரம். புயலின் தொட்டிலான காந்தாரம் அஸ்தினாபுரியுடன் எவ்வாறு இணைகிறது என்பதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது. மனிதன் எத்தனையோ திட்டங்களைத் தீட்டி தன் எதிர்காலத்தைக் கனவு காண்கிறான். ஆனால் நிகழும் நிகழ்வுகள் அந்த திட்டத்தை முறியடித்து தெய்வத்தின் ஆடலுக்கான களத்தை ஒருங்கு செய்கிறது. அப்படித்தான் மகதத்தின் நட்பை விரும்பிய சகுனியின் திட்டம் ’அவமானம்’ எனும் கருவியால் முறியடிக்கப்பட்டு அஸ்தினாபுரியோடு இணைந்து வரலாற்றை உருவாக்க அவனை உந்தித் தள்ளுகிறது. அஸ்தினாபுரியின் ஒவ்வொரு பெரு நிகழ்விலும் செயல் தந்தையாக இருக்கும் பீஷ்மர் காந்தாரத்திற்குச் சென்று திருதிராஷ்டிரனுக்காகப் பெண் கேட்கிறார். அவரின் கண்கள் வழியே தான் நாம் பாலை நிலத்தையும் காந்தாரத்தையும் காண்கிறோம். இங்கு காணிகப்படும் ”இறந்தவர்களின் நகரம்” மற்றும் அதன் வர்ணனை நம்மை காலத்தைக் கடந்த வரலாற்றுக்குப் புலப்படாத ஒன்றை நோக்கி உந்தித் தள்ளுகிறது. காந்தாரி வசுமதியின் முதல் அறிமுகம் இங்கு தான் காணக்கிடக்கிறது. பேரழகியாகவும், அரசியல் வியூகம் தெரிந்த ஷத்ரியப் பெண்ணாகவுமே அவளை நமக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். “ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான்” என்று கூறி அவள் தன்னை திருதிராஷ்டிரனின் மனைவியாக, அஸ்தினாபுரியின் அரசியாக முடிசூட்டிக் கொள்வதற்கு ஒப்புக் கொடுக்கும் தருணம் சகுனியை மட்டுமல்ல நம்மையும் நெகிழத்தான் செய்து விடுகிறது. இங்ஙனம் இந்தப் பகுதியில் அஸ்தினாபுரத்திற்கான புயலின் தொட்டில் காந்தாரத்தில் ஒருக்கப்படும் விதத்தை ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.

பீலித்தாழம்: ”பீலித்தாழம்” என்ற வார்த்தையே புதுமையாக இருந்தது. அது ஒரு சடங்கின் குறியீடு. அதன் வர்ணனையிலேயே நம்மை அது சிலிர்க்கவைக்கிறது. மனிதர்கள் தங்களை குடும்பமாக குலமாக பிரித்துக் கொண்டு ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுந்து ஒரு இடத்தில் அமைந்தொழுகத் தொடங்கி தனக்கான சடங்குகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். சடங்குகள் நமக்கு நம் மூதாதையர்களை, நம் குல வரலாற்றை அவர்களின் நம்பிக்கைகளை நினைவுகூறச் செய்கின்றன. அங்ஙனம் இந்தப் பகுதி முழுவதுமாக லஷ்கர்கள் எனும் பழங்குடிகளின் சடங்குகளும் நம்பிக்கைகளும் என நிரம்பித் ததும்புகிறது. காந்தாரத்தின் ஆதி மூத்தவரிகளின் ஒப்புதலை திருதிராஷ்டிரன் எங்ஙனம் பெறுகிறான் என்பதையும், அவனுக்கும் காந்தாரி வசுமதிக்கும் நடைபெறும் திருமண நிகழ்வு மற்றும் அதையொட்டிய சடங்குகளும் விளக்கப்படுகிறது. சடங்குகளின் குறியீடாக, பூத்த பீலிப்பனையின் ஓலையில் சுருட்டப்படும் தாலி அமைகிறது. சடங்குகளின் முற்றில் காந்தாரி தன்னை காந்தாரம் என்ற கட்டிலிருந்து விடுவித்து அஸ்தினாபுரியைத் தழுவிக் கொள்ளும் உணர்வை அவளுக்கு அளிப்பதாக இந்தப்பகுதி அமைகிறது.

முதல்மழை: மழைப்பாடல் நாவலின் முதல்மழை நிகழும் பகுதியாக இது அமைந்தொழுகிறது. காந்தாரியின் நகர் நுழைவுக்கு முன் ருத்ராணிருத்ரை எனுமிடத்தில் பெய்த முதல் மழை பல வகைகளிலும் சிறப்பானது. அந்தப் பாலை நிலத்தில் ஏழு வருடங்களுக்கு முன் பெய்த மழை அன்று பூத்தது என்பதாலும், அது கூழங்கல் போன்ற கனத்தில் பெய்த குருதி மழை என்பதாலும், காந்தாரியின் நகர் நுழைவின் போது அது நிகழ்ந்ததாலும், அஸ்தினாபுரிக்கு மூன்று மாதமாகப் பிந்தியிருந்த மழை காந்தாரியின் வருகையின் போது பெய்திருந்தமையாலும், அவளின் லஷ்கர் பாலை நில வாசனையை அது கழுவிவிடுமென சத்யவதி சொன்னமையாலுமென இந்த முதல் மழை சிறப்பு பெற்றதாக அமைகிறது. மழையைப்பற்றி ஜெ சொல்லும்போது மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.” என்னும் சித்தரிப்பில் முதல் மழையை நமக்கு அணுக்கமாக்கிவிடுகிறார்.

தூரத்துச் சூரியன்: சூரிய தேவனின் ஆற்றல் நிரம்பிய விந்துவால் குந்தி போஜனுக்குப் பிறந்த கர்ணன் அஸ்தினாபுரியை விட்டும் யாதவ குலத்தை விட்டும் கால நிகழ்த்தகவில் விலகிச் சென்று சூதரான அதிரதனுக்கும், ராதைக்கும் மைந்தனாக அமையப்பெறும் விதத்தை இந்த தூரத்துச் சூரியன் எனும் பகுதி எடுத்தியம்புகிறது. யதுவின் வழித்தோன்றல்களாக உருவாகி விரியும் யாதவர்களின் குலவரலாறு விரிக்கப்படுகிறது. சூத்திரர்களான அவர்கள் காலப்போக்கில் பல்கிப் பெருகி நூற்றியெட்டு குலங்களாக விரிந்து ஷத்ரியர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள எத்தனிக்கும் ஒரு இடத்தில் நமக்கு ஆசிரியர் பிருதையை அறிமுகப்படுத்துகிறார். பாலாலும், நெய்யாலும், பொன் விளையும் யாதவ நிலத்தை அஸ்தினாபுரியுடன் இணைப்பதற்கான முதல் விதை இங்கு தான் நிகழ்கிறது. இந்த அரசியல் ஆட்டங்களின் மத்தியில் தன் சூரியனை யமுனையில் எங்கோ தொலைத்து விட்டு காலத்திற்கும் ஆறாத வடுவொன்றை சுமப்பவளாக இங்கே குந்தி அமைந்துவிடுகிறாள்.

பால்வழி: பால் போன்ற வெண்மை நிறமும், விசித்ரவீரியன், தேவாபி வரிசையில் அவர்களின் ஆடிப்பிம்பமாக உடற்குறையும் கொண்ட பாண்டுவின் முழுமையான அறிமுகம் இந்தப் பகுதியில் நமக்குக் கிடைக்கிறது. பிருதையை மணம் புரிந்து அஸ்தினாபுரி மற்றும் யாதவ அரசுகளின் அரியணைக் கனவை நிறைவேற்றும் கருவியாக பாண்டுவின் மர்க்காவதிப் பயணம் விரிக்கப்படுகிறது. விதுரன் பிருதையை சந்திக்கும் முதல் தருணமொன்று இந்தப்பகுதியில் நம் மனதை வருடிச் செல்கிறது.

மொழியாச்சொல்: யாதவ அரசியான குந்தி தன் உதிரத்திலிருந்து உதித்த முதல் மகவைப் பற்றி பாண்டுவிடம் சொல்ல எத்தனித்து மொழியாமல் விட்ட சொல்லை எடுத்தியம்புவதாக இந்தப் பகுதி அமைகிறது. தன்னேற்பு மணத்தில் வென்று பாண்டு குந்தியை மணக்கும் நிகழ்வு நிகழ்கிறது.

அனல்வெள்ளம்:

மண்மகளின் மீது விழுந்த சூரிய தேவனின் ஒளிவெள்ளத்தால் அவள் அனல்வெள்ளம் போல சலனமடைந்து மழை பொழிகிறது. அஸ்தினாபுரியின் இரு அரசியர்களின் வருகைக்குப் பின்னும், ஹஸ்தியின் அரியணைக்குகந்த மன்னனின் முடிசூட்டு விழாவுக்கு முன்னரும் நிகழும் மழை இந்தப்பகுதியில் நிகழ்கிறது. பெருமழையான அது நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் அஸ்தினாபுரியில் நிகழ்ந்த பெரு மழையை ஒத்து நகரையே சூரையாடுகிறது. பெய்த பெருமழையால் நகரும் அரண்மனையும் தன்னை புதுப்பித்து இனி நடைபெறும் நிகழ்வுக்காக மீண்டும் பிறந்தழுவது போன்ற சித்திரமாக அமைகிறது. இயற்கையன்னை பொழிவித்த பெருமழையைப் போலவே காந்தாரத்திலிருந்து பரிசில்களும் செல்வங்களும் அனல் வெள்ளம் போல நகரைச் சூழ்ந்து அதை ஸ்தம்பிக்கச் செய்கிறது. “பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும்”

என்ற ஜெ –வின் வரிகளைப் போலவே இங்கு அஸ்தினாபுரியின் அரண்மனைக்குள்ளும் பெண்களால் அனல் மூழ்கிறது. காந்தாரிகளுக்கும் இசையறிந்த பிரகதிக்கும் மூளும் அனல், குந்தி அரண்மனை நுழையும் போது அவள் ஷத்ரியர் குலம் அல்லாதவளாதலால் காந்தாரிகள் அவளை முறையாக வரவேற்பு செய்யாமல் செய்த முதல் அவமதிப்பின் நிமித்தம் மூளும் அனல், அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் தன் மைந்தர்களை அரியணை ஏற்றும் ஆசையில் மூழும் கனல், இவையனைத்தின் தாக்கத்தினால் துக்கமுறும் சத்யவதி மற்றும் விதுரனின் மனதில் எழும் அனல், இறுதியாக ஒரு சார்வாகனால் திருதிராஷ்டிரன் அரியணை அமர்வதற்கு எதிராக தீச்சொல் சொல்வதால் ஹஸ்தியின் அரியணையில் மூளும் அனல் என அஸ்தினாபுரி அரண்மனை அகத்திலும் அனல் வெள்ளம் நிரம்பி வழியும் பகுதியாக அமைகிறது.

முதற்களம்:

ஹஸ்தியின் அரியணை ஏறும் நிகழ்வே பின்னர் நிகழவிருக்கும் அனைத்துக்குமான முதற்களமாக மாறுவதை இந்தப்பகுதி எடுத்துரைக்கிறது. மனிதன் ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும் இயற்கை தன் திட்டத்தை தான் செயல்படுத்துகிறது. திருதிராஷ்டிரன் அரியணை ஏறும் நாளன்று நிகழ்ந்த அமங்கல நிகழ்வினால் குலமூத்தோர் அவனை ஏற்க மறுத்து பாண்டு அதில் அமர்கிறான். போர்ச்சூழல் மூளாமல் இந்த நிகழ்வை விதுரன் முடித்துக் காட்டுகிறான். திருதிராஷ்டிரனை அரியணை ஏற்றுவேன் என்று மொழிந்திருந்த பீஷ்மர் அதில் தோற்றுப்போகவே விசனமுடனிருந்த சகுனியை அவர் ஆற்றுப்படுத்துகிறார். அடுத்த பதினெட்டு ஆண்டுகள் திருதிராஷ்டிரனின் குருதியில் பிறக்கும் மகன் அரியணை ஏறும் வரை அவனை அஸ்தினாபுரியிலேயே இருக்கச் செய்து அது நிகழவும் உறுதியளிக்கிறார். அதன் பின் சகுனி காந்தாரிகளை ஆற்றுப்படுத்துவதும், தங்களுக்கான ஆட்டத்தையும் சேர்த்து தான் விளையாடுவதாகச் சொல்லும் குந்தியிடம், பாண்டுவும் அம்பாலிகையும் தங்களை முழுதளித்து ஒப்படைப்பதுமென களம் அனலாகி முதற்களமாக உருவெடுக்கிறது.

விதைநிலம்:

செழுமையான நிலத்தில் ஊன்றப்பட்ட உயிர்ப்புள்ள விதைகள் முளைத்துப் பூத்து காய்த்து கனியை நல்குகிறது. தன் அடுத்த தலைமுறையை நோக்கி அஸ்தினாபுரி எனும் விதைநிலம் காத்து நிற்கிறது. மாத்ரி கலப்பைக் கொடியுடன் அஸ்தினாபுரியின் பாண்டுவுக்கு ஷத்ரிய அரசியாவதும், விதுரனுக்கு உத்தரமதுராபுரியின் சுருதையை மணமுடிப்பதும், பாண்டு தன் அரசியருடன் வனம் புகுந்து கானக வாழ்வு சென்றடைவதுமென விதைகள் முளைத்தெழ நிலம் உழவு செய்யப்படுகிறது.

தனிப்புரவி:

வியாசருடன் மனம் இணைந்து மதி நிறைந்த விதுரனைப் பெற்ற சூதப் பெண்மணியான சிவையைப் பற்றிய சித்திரம் இந்தப் பகுதியில் காணக்கிடக்கிறது. முதல் நாவலில் எல்லா அரண்மனை சூதப் பெண்களைப் போலவே பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்த அவள் குழந்தை பெற்ற பின் தனித்து விடப்பட்டவளாய், ஒற்றைச் சாளரத்தையே இருப்பிடமாகக் கொண்டு தனிப் புரவியாய் திரிந்தலைபவளாக இருக்கிறாள். அவளை ஆற்றுப்படுத்தி அணைத்துக் கொள்பவளாக விதுரனின் துணைவி சுருதை அமைந்து அவனுக்கு இணக்கமாவதை இந்தப் பகுதி எடுத்தியம்புகிறது.

களிற்றுநிரை:

காந்தாரிகள் களிற்றுநிரை ஒன்றை அஸ்தினாபுரிக்கு தரவிருப்பதன் துவக்கம் இங்கு நிகழ்கிறது. காந்தாரியின் கருவில் உருவாகப்போகும் அத்தகைய பெரு வல்லமை கொண்ட உயிர் வருவதற்கான நிமித்தங்கள் காணிக்கப்படுகிறது.

கலி தெய்வத்தின் கோவிலிலிருந்து நரி நூறாகப் பெருகி ஊருக்குள் நுழைதல், திருதராஷ்டிரன் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு பிளிறுதல், முதுபெரும் களிறான உபாலனின் இறப்பு, அந்த யானையை அடக்கம் செய்யும் இடத்தில் கண்டடைந்த எடைமிக்க கதை, சகுனியுடன் ஒரு கரிய இருள் பகடை ஆடி அவனை வெல்லுதல், தன்னை முழுங்கிய மலைப்பாம்பை பிளந்துகொண்டு யானை வெளியே வரும் கனவையே காணும் காந்தரி என நிமித்தங்களால் நிறைகிறது இந்தப்பகுதி.

தென்றிசை மைந்தன்: அஸ்தினாபுரியில் காந்தாரியின் வழி பிறக்கப் போகும் குழந்தைக்கான நிமித்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, குந்தியின் வழி பிறக்கப் போகும் தென்றிசை மைந்தனும் அறமுதல்வனுமாகிய தருமனுக்கான நிமித்தக் குறிகள் இங்கு சொல்லப்படுகின்றன. நிமித்திகரின் வரிகளின் வழி இங்கு மண்ணில் நிகழவிருக்கும் சதுரங்க ஆட்டத்திற்கான காய்களாக பிறக்கவிருப்பவர்களைப் பற்றியும், அதை ஆட்டுவிப்பவனுமாகிய அவனின் பிறப்பையும், ஒரு யுகத்தின் முடிவையும் பற்றிய செய்தியை நமக்குக் கடத்துகிறார். துர்வாசரிடமிருந்து சக்தி வாய்ந்த மந்திரத்தை கொடையாகப் பெற்ற குந்தி அது கொண்டு தர்ம தேவனை தன் கருவில் ஏந்துகிறாள். அஸ்தினாபுரியின் முதல் வாரிசைப் பெற்றெடுக்கிறாள்

இருள்வேழம்:

மதங்க கர்ப்பத்தில் துரியோதனன் எனும் இருள் வேழத்தை காந்தாரி பெற்றெடுக்கும் நிகழ்வு விரிக்கப்படுகிறது. அவனுக்கான பெயர் சூட்டும் நிகழ்வில் பீஷ்மர் ‘சுயோதனன்’ என்ற பெயரை அவனுக்கு இட்டழைக்கிறார். அனசூயைக்கு நிகரான கற்பைக் கொண்டிலங்கும் காந்தாரியின் தவப்பலனை முது நாகினியின் அறிவுரைப்படி தன் மகனுக்கு அளிக்கத் தலைப்படுகிறாள். ஆனால் இடைக்குக் கீழேயான தொடையைப் பார்க்கத் தவறிவிட்டதை உணர்ந்து அவனைக் காக்க காந்தாரிகள் மகன்களைப் பெற்றெடுக்க ஆணையிடுகிறாள். இருள்வேழங்கள் பல பிறக்கப் போவதற்கான வித்தாக இந்தப்பகுதி அமைகிறது,

புதிய காடு: குருகுலத்தின் காலனாக, தன்குலத்துச் சோதரர்களைக் கொல்பவனாக குறைப் பிரசவத்தில் பிறந்த குந்தியின் இரண்டாவது மகனை குரங்குகள் கையிலெடுத்து முலையூட்டி மீட்கச் செய்கிறார் பலாஹாஸ்வர். அவரே அவனுக்கு பீமன் என்ற பெயரையும் சூட்டுகிறார். மண்ணிலுள்ள அத்தனை அன்னத்தையும் தின்றாலும் அடங்காத பெரும்பசி கொண்ட விருகோதரனாக வளர ஆசியளிக்கிறார். தருமனுக்கும் பாண்டுவுக்குமான இணக்கமான உறவொன்று இந்தப் பகுதியை நிறைக்கிறது. குந்தியும் பாண்டுவும் தங்கியிருந்த இடம் காட்டுத்தீயால் அழிதலுக்கு உட்பட அவர்கள் புதிய காடான புஷ்பவதியை நோக்கிச் செல்லும் பயணம் நிகழ்கிறது. அங்கு இந்திரனின் மைந்தனாக அர்சுனனைப் பெற்றெடுக்க குந்தி விழைகிறாள். அதன் பின் தன் வயிற்றின் கரு நிறைவை அடைந்துவிட்ட அவள் தாய்மைக்காக ஏங்கும் மாத்ரிக்கு அந்த மந்திரத்தை அளிக்கிறாள். அதன் மூலம் மாத்ரி நகுலனையும் சகாதேவன்னையும் பெற்றெடுக்கிறாள். யாவும் நிகழ்ந்து நிறைவுடன் வாழும் பாண்டு ஒரு நாள் தான் காட்டில் கண்ட சாதகப் பறவையின் கூட்டை மத்ரிக்கு காட்ட விரும்பி அழைத்துச் சென்று களியுருகிறான். அங்கிருந்த செண்பக வனத்தில் தன் காதல் அனைத்தையும் காட்ட விரும்பியவன் காமத்தால் அவளை புனர முற்பட்டு அதன் முழுமையை அடையாது இறக்கிறான்.

மழைவேதம்: பாண்டுவின் இறப்பிற்குப் பின்னர், முன்பு நிமித்திகர் சொன்ன வரிகளைப் புரிந்து கொண்டவளாய், பாண்டுவிற்கான விண்ணக வாயில்களை தானே திறந்து வைக்க முடியும் என்றுணர்ந்து சிதை புகுகிறாள் மாத்ரி. அஸ்தினாபுரியின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய சத்யவதி அங்கு தொடந்து நிகழும் தீய நிமித்தங்களினால் அலைக்கழிந்து எதிர் காலத்தையே அஞ்சுபவளாக ஆகியிருந்தாள். அவளின் இடத்தையும் இட்டு நிரப்பிக் கொண்டிருந்த விதுரன் வேலைகளில் மூழ்கியிருந்தான். சியாமையின் இறப்பிற்குப் பின்னர் அவனுக்கும் சுருதைக்கும் சுபோத்யன், சுசரிதன் எனும் இரு மகன்கள் பிறந்திருந்தனர். சகுனி தன் மருமகன்களுடன் ஆயுதப் பயிற்சியிலேயே மூழ்கியிருந்தார். பீஷ்மர் மீண்டும் வனம் புகுந்திருந்தார். இது போன்ற ஒரு தருணத்தில் தான் பாண்டுவின் இறப்பு செய்தி விதுரனை வந்தடைகிறது. திருதிராஷ்டிரன் பாண்டுவுக்காக அரற்றி அழுவதும், பகையெண்ணம் நீங்கி அம்பிகை அம்பாலிகையைத் தேடிச் சென்று கட்டித் தழுவுவதும், இருவரும் கானகம் புக முடிவெடுப்பதும், சத்யவதி அனைத்து பொறுப்புகளையும் துறந்து வனம் புகுவதும் சடசடவென மழை போல நிகழ்ந்து முடிகிறது. தன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அனல் கொண்டு காத்திருந்த அஸ்தினாபுரியின் மேல் மழை பெய்யத் தொடங்குகிறது. தவளைகளின் ஒலி கேட்கத் தொடங்குகிறது. ‘மழை! மழை! மழை! மழை! என முழங்கி துவாபரயுகம் சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்று கலியுகம் மண்ணில் இறங்கும் மழை வேதமாக நாவல் முடிவு கொள்கிறது.

மழைப்பாடலின் கதாநாயகர்கள்:

மழையின் போது எழுந்து வரும் முதல் தவளைச் சத்தத்திற்குப் பின்னர் பெருகி வரும் வெள்ளம் போல அதன் சத்தங்கள் நிறம்பித் ததும்பும். அதுபோலவே இந்த நாவல் வரிசையை முன் நகர்த்திச் செல்லும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவராக இந்த மண்ணில் தன் காலடியை எடுத்து வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதையே ஆசிரியர் கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது.என்று குறிப்பிடுகிறார்.

அங்ஙனம் இந்த நாவலில் புதிய காதைமாந்தர்களாக துரியோதனன் மற்றும் நூற்றுவர்களான கெளரவர்கள், தர்மன், பீமன், அர்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் எனும் பாண்டவர்களும், விதுரனின் மைந்தர்களான சுபோத்யன், சுசரிதன் என அடுத்த தலைமுறை அஸ்தினாபுரியின் மைந்தர்கள் பிறக்கின்றனர்.

முதற்கனலில் வியாசரிடம் அம்பிகை, அம்பாலிகை மற்றும் சிவைக்குப் மைந்தர்களாகப் பிறந்தவர்கள் முறையே திருதிராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரைச் சுற்றியே நாவல் சுழல்கிறது. அவர்கள் மூவரும் வளர்ந்து பதின் வயதை கடக்கும் விளிம்பில் நிற்கிறார்கள். முதற்கனலில் தோன்றி அஸ்தினாபுரியின் நலனுக்காகவே செயல் செய்யும் அதன் பெருந்தந்தையான பீஷ்மர் இங்கும் கதையை முன்னகர்த்தும் பெருஞ்செயல்களின் நாயகராகிறார். அரசுசூழ் பெருங்கனவு கொண்டவனும், சகோதரப்பாசம் மிக்கவனுமான சகுனியின் அறிமுகம் கிடைக்கிறது. யாதவ அரசின் பெருஞ்செயல்திட்டதின் ஒரு கூராக வசுதேவன் காட்சியளிக்கிறான். சிறிய பாத்திரமே ஆனாலும் இந்த நாவலில் நம் மனதில் நிற்பவர்களாக திருதிராஷ்டிரனின் விழியான சஞ்சயன், அவனின் இசை ஆசிரியரான தீர்க்கசியாமர், கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதன், மதுராபுரியின் கம்சன், திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதை எதிர்த்து முழங்கிய சார்வாகன், குந்திக்கு மந்திரங்களை போதித்த துர்வாசர், தன்னேற்பு மணத்தின் போது குந்தியின் முடிவே இறுதி என கம்சனை எதிர்த்து நின்றவனாகிய சல்லியன் ஆகியோர் அமைகின்றனர்.

மழைப்பாடலின் திருதிராஷ்டிரன்: பீஷ்மருக்கு நிகரான உடல்வாகு கொண்டவனாக, முரடனாக, பீஷ்மரிடம் ஹரிசேனன் அவனைப் பற்றி சொல்லும் விதமாக திருதிராஷ்டிரனைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. கண்கள் இல்லாதவனாயினும் வீரத்தில் சிறந்து விளங்கும் திருதிராஷ்டிரனை முதன் முதலில் பீஷ்மர் சந்திக்கும் இடம் மட்போரிலேயே. புற உலகைக் காண இயலாதவனாகிய திருதிராஷ்டிரனுக்கு ஒரு சிறு விடயமும் அவனை அவமதிப்பு செய்ததாகக் கருதும் குணம் இருப்பதில் ஆச்சரியமில்லை. தன்னை பீஷ்மர் வந்து சந்திக்காமல் விதுரனை முதலில் கண்டது தெரிந்து அவருடன் போர் செய்து தன்னை நிறுவும் எண்ணம் வருகிறது. இறுதியில் பீஷ்மர் அவனை வீழ்த்தி அவனுக்கான பாடத்தை கற்பிக்கிறார். அவன் அழுது துவண்டு அவர் கால்களில் சரணடைந்து அவரைத் தந்தையாக குருவாக ஏற்கிறான். பாண்டுவின் மேலும் விதுரனின் மேலும் அவன் வைத்திருக்கும் பாசம் அளப்பரியது. முதலிரவில் காந்தாரி அவனுக்கு விருப்பமானவர் யார் என்று வினவுகையில் தன் அன்னைக்கு அடுத்தபடியாக விதுரனைக் கொணர்ந்து நிறுத்துகிறான். தான் இறந்துவிட்டால் விதுரன் உயிரோடு இல்லாமல் இருப்பதே அவனுக்கு நலம் பயக்குமென நினைக்கும் அந்த இடம் மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைகிறது. தன் முதல்காதல் பித்தான காந்தாரியை தன் தோள்வலிமையை நிறுவி,  மணந்து, அவள் கைத்தலம் பற்றும் இடம் சிலிர்க்கச் செய்கிறது. இசையின் மீது தீராத நாட்டம் கொண்டவனாக, யாழை வாசிப்பவனாக, இசையிலே மூழ்குகையில் கந்தர்வனைப் போல்வனாக அவனுக்கே உரிய உலகத்தை இசையின் மூலம் சமைத்துக் கொள்பவனாக அமைகிறான். இசையினால் அவனுக்கு அணுக்கமானவர்களாக தீர்க்கசியாமர் மற்றும் பிரகதி அமைகின்றனர். ஒரு பாதி நாவல் வரை விதுரனே திருதிராஷ்டிரனின் கண்களாக அமைந்து அணுக்கமாக இருக்கிறான். ஆனால் பணிச்சுமை காரணமாக மதி நிறைந்த சஞ்சயன் எனும் சிறுவனை அவனின் கண்களாக நியமிக்கிறான் விதுரன். காலப்போக்கில் சஞ்சயனைத் தன் கண்களாக மாற்றிக் கொண்டு நெருக்கமாக்கிக் கொள்ளும் விதத்தை ஆசிரியர் நெகிழ்வுடன் படைத்திருக்கிறார். பாண்டுவின் இறப்பின் போது கதறி அழும் சகோதரனாக, தீய நிமித்தங்களை முன்னிட்டு அனைவரும் பயந்து வெறுப்பவனாகிய தன் மகன் துரியோதனை ஒரு போதும் கைவிடுவதில்லை என்று உரைப்பதும், பாண்டுவின் மகன்களின் பிறப்பை தன் மகன்களின் பிறப்பு போல் கொண்டாடுபவன் என ஓர் அன்பனாக நம் நெஞ்சில் நிலைத்துவிடுகிறான் திருதிராஷ்டிரன் எனும் பேருருவன்.

மழைப்பாடலின் பாண்டு: முதற்கனலில் பிறந்து, மழைப்பாடலில்  வளர்ந்தவனாகி, வாழ்ந்து இந்த சதுரங்க ஆட்டத்தின் மையக் கதாப்பாத்திரங்களான பாண்டவர்கள் பிறப்பதற்கு காரண கர்த்தாவாகி மறைந்து விடுகிறான். வெளிறி வெண்ணிறமாக பாளைக்குருத்து உடல் கொண்டவனாக, அன்னையின் விளையாட்டுப்பாவையாகவும், அந்தப்புரம் விட்டு வெளிவராதவனாகவும், அன்னையுடனும், சேடியருடனும் பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும், மரக்கிளைகளில் ஆடியும் பகலெல்லாம் விளையாடுபவனாகவும் பாண்டு முதலில் நமக்கு அறிமுகமாகிறான். அந்தப்புரமெங்கும் தான் காண முடியாத வெளிச்ச உலகை திரைகளில் வண்ணங்களால் நிறைக்கும் சித்திரனாக இருக்கிறான். உடற்குறை கொண்டவனாக ஆனால் பல கனவுகளில் மூழ்கித்திழப்பவனாக இருக்கிறான். ஆசிரியர் பாண்டுவைக் குறிக்கும்போது ஆடிப்பிம்பங்கள் காலந்தோறும் தனக்கான உடலைக் கண்டு அதனுள் ஏறிக் கொள்வது போல குரு வம்சத்தில் தேவாபி பின்னர் விசித்ர வீரியன், அதன் பின் பாண்டு” என சென்று கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆணமைக் குறைவு கொண்ட பாண்டுவின் காதலை நிறைவு செய்பவளாக ஷத்ரிய அரசியாக, சல்லியனின் தங்கை மாத்ரி வருகிறாள். அவர்கள் இருவருக்குமிடையேயான அந்தக் காதல் உடலைக் கடந்த ஒன்றாக அமைந்தொழுகுகிறது. அவளுடனான முதல் இரவில் காமம் சாத்தியப்படாத ஒன்றாக அமைந்து, அதுவே அவனுடைய உயிருக்கு ஆபத்தாய் முடிகிறது. அதன்பின் குந்தி மற்றும் மாத்ரியுடன் வனம் புகுந்து நிறைவாழ்வு வாழ்கிறான். அவனுடைய வர்புறுத்தலின் பேரில் தான் குந்தி துர்வாசர் தனக்கு நல்கிய மந்திரத்தைப் பயன்படுத்த விழைகிறாள். ’தர்மன், பீமன், அர்ஜுனன்’ ஆகியோரைப் பெற்றெடுப்பவளாக குந்தியும், ’நகுலனையும், சகாதேவனையும்’ பெற்றெடுப்பவளாக மாத்ரியும் உருவாவதற்கு காரணமாகிறான். தருமனை எந்நேரமும் தோளில் தூக்கி வைத்து அலைபவனாக, ஐவரிடமும் அன்பைப் பொழிந்து ஒரு தந்தையாக நிறைவு கொள்கிறான். தன் காமத்தை முழுமை செய்யவியலாது செண்பக வனத்தில் இறந்துபட்டு தன்னுடன் சிதையேறிய மாத்ரியுடன் மண் நீங்குகிறான். அவன் இறப்பினாலேயே சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுந்து தங்களை மழைப்பாடலில் நிறைவு செய்து கொள்கின்றனர்.

விதுரன் எனும் அறிஞன்: கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டது போல்வனும், காவியங்கள் வாசிக்கும் இலக்கியவாதியாகவும், முதல் சந்திப்பிலேயே “நீ ஒரு சிறந்த அறிஞன்” என்று பீஷ்மரால் சொல்லப் பெறுபவனும், திருதிராஷ்டிரனின் கண்களாக, அவன் அகம் உணரும்படி உரைக்கும் நல்ல அமைச்சனாகவும், அரசியல் மதியூகியாகவும் விதுரன் நமக்கு அறிமுகமாகிறான். பீஷ்மர் தன்னை வந்து சந்திக்கவில்லை என்று கோபம் கொண்டு அவரை பகைத்துக் கொள்ள நினைக்கும் திருதிராஷ்டிரனுக்கு அவருடன் ஓர் மற்போர் ஏற்பாடு செய்து வைத்து அவரின் திறத்தை அறியச் செய்கிறான். பாண்டுவுக்கு உரிமையான பாதி நிலத்தை வைத்து திருதிராஷ்டிரனின் அரியணை ஏறும் நிகழ்வை நிறுத்த எத்தனித்த அம்பாலிகையின் திட்டங்களை மதியூகத்தால் முறியடிக்கிறான். பின்னாளில் நிகழப்போகும் மிகப்பெறும் சச்சரவுக்கான முதல் வித்தாகவும் அவன் செயல் அமையும் என்பதில் ஐயமில்லை. திருதிராஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு மறுப்பு எழுந்தபோது பாண்டு அரியணை ஏறும் நிகழ்வை அவனின் மேலான சம்மதத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறான். விதுரனின் காதல் தருணங்களாக அவன் முதல் முறை குந்தியை சந்தித்த தருணமும், சுருதையுடன் அணுக்கமாகும் நிகழ்வுகளும் அமைகின்றன. பேரரசியான சத்யவதியின் கனவுகளையும் குறிக்கோள்களையும் ஏந்தியவனாக அவளிடமிருந்து அதற்கான ஞானத்தையும் பெற்றவனாகத் திகழ்கிறான். அவளின் திட்டங்களையெல்லாம் செய்ல்படுத்தும் நல் அமைச்சனாகவும், அஸ்தினாபுரியை நேரடியாக ஆளும் விதியைப் பெறவில்லையெனினும் அவனின் மதியூகத்தாலேயே ஆள்கிறான்.  மழைப்பாடலில் சத்தியவதியின் மூப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவற்றைப் போக்கும் அருமருந்தாக அவள் சார்பாக அனைத்தையுமே முடிவெடுக்கும் செயல்படுத்தும் நல் அமைச்சனாக அறிவுத் திறம் வாய்ந்தவனாக விதுரன் அமைகிறார். மழைப்பாடலின் ஒவ்வொரு முக்கியமான நகர்விலும் விதுரரின் முடிவுகள் இருக்கின்றன. இறுதியில் சத்யவதி வனம் புகும் நிகழ்வில் ஒரு பேரிழப்பு மன நிலை நிகழாதிருப்பதற்குக் காரணம் நாவலின் பாதியிலேயெ அவன் ஒரு ஆண் சத்யவதியாக அவளின் இடத்தை நிரப்புவதே காரணமாகிறது.

சகுனி எனும் மதியூகி: காந்தார அரசின் எதிர்காலத்தின் மேல் உயரிய கனவுகள் கொண்டு அதற்கான செயல்திட்டமும் கொண்டிருக்கும் மதியூகியாக சகுனி நமக்கு அறிமுகமாகிறான். மகதத்துடன் நட்பாக்கிக் கொள்ள விழைந்தவனை அவர்கள் அவமதித்த காரணத்திற்காகவே அஸ்தினாபுரத்துடன் இணையும் முடிவுக்கு இசைகிறான். தன் சகோதரி காந்தாரி அரியணை ஏறும் நிகழ்வுக்காக காந்தாரத்தின் செல்வங்களையெல்லாம் அனல் வெள்ளம் போல அஸ்தினாபுரிக்கு எடுத்து வந்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்கிறான். அவனுக்கும் காந்தாரிக்குமிடையேயான சகோதரப்பாசம் அளப்பரியது. ”என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள்.” என்று அம்பிகை சொல்லுமளவு திருதிராஷ்டிரனுக்கு பக்கபலமாக இருக்கிறான். பீஷ்மருக்கும் சகுனிக்குமிடையேயான தந்தை மகன் உறவு உருவாகும் விதத்தை ஆசிரியர் நெகிழ்வோடு காணித்திருக்கிறார். சத்யவதியை மதிப்பு குறைவாகப் பேசிய ஒரு தருணத்தில் பீஷ்மர் அவனை அறைந்துவிடுகிறார். அதன் பின் உடைந்து அழும் அவனை ஆரத்தழுவி  “அந்த வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும் மகனே. இங்கே நீ பதினெட்டு வருடம் காத்திரு. வெறும் பதினெட்டே வருடங்கள். உன் தமக்கையின் வயிற்றில்பிறந்த மைந்தன் முடிசூடியதும் நீ நாடு திரும்பலாம். இது என் வாக்கு” என்று கூறி ஆற்றுப்படுத்தும் தருணம் நெகிழ்வானது. துரியோதனன் மற்றும் பிற கெளரவர்கள் பிறந்த பின் அவர்களைப் பயிற்றுவிப்பதன்றி ஏதுமறியாமல் இருப்பவனாக மழைப்பாடலில் அமைந்து விடுகிறான்.

வசுதேவன்:  தான் இடையனாக இருக்கவியலாது என்று இளமையிலேயே முடிவெடுத்து யாதவப் பேரரசு ஒன்றை உருவாக்கும் எண்ணம் கொண்டவனாக வசுதேவன் நமக்கு அறிமுகமாகிறான். தன்னை ஷத்ரியர்களாக மாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் எழுந்து கொண்டிருக்கும் யாதவ அரசுகளில் ஒன்றான மதுராபுரியின் அமைச்சனாகிறான். மூடனான கம்சனுக்கு அரசியல் சூழ்தலை எடுத்தியம்பும் அறிஞனாக இடுத்துரைப்பாளனாக அமைகிறான். பகை கொண்ட போஜனின் மர்க்காவதி அரசுக்கும், மதுராபுரிக்குமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறான். பிருதையின் எண்ணங்களை செவிகூர்பவனாக, அவளின் செயல்திட்டங்களை நிறைவேற்றுபவனாக, அவளுக்கான உதவிகளைச் செய்யும் சிறந்த சகோதரனாக விளங்குகிறான்.

பீஷ்ம பிதாமகர்: முதற்கனலில் சத்யவதி எடுக்கும் அரசு சூழ் முடிவுகளையெல்லாம் நிகழ்த்திக் காட்டும் செயல்வீரரான பீஷ்மர் மழைப்பாடலிலும் அங்ஙனமே திகழ்கிறார். வியாசரை நினைவுபடுத்தும் விதுரனை வியப்பவராகவும், செவிகேட்பவராகவும் இருக்கிறார். திருதிராஷ்டிரனின் மூடத்தனமாக ஆற்றலின் நம்பிக்கையை மற்போரில் உடைத்தெறிகிறார். தன் முன் கலங்கி அழும் அவனை அணைத்து அஸ்தினாபுரியின் அரசனாக முடிசூட்டும் வாக்கை அளித்து அவனுக்குத் தந்தையாகிறார். சகுனியை அறைந்தும் அணைத்துமென மைந்தனாக்கிக் கொள்கிறார். திருதிராஷ்டிரனுக்காக காந்தாரத்திற்கு வசுமதியை பெண் கேட்டு செல்பவராகவும் அதை வெற்றிகரமாக முடித்துத் திரும்புபவராகவும் இருக்கிறார். திருதிராஷ்டிரனை அரியணையில் அமர்த்த அவர் சூலுரைத்தும், முடியாமற் போகவே அவனிலிருந்து பிறக்கும் மகனை அரியணை ஏற்க மீண்டும் சூலுரைக்கிறார். குந்தியை தன்னேற்பு மணம் செய்ய பாண்டு செல்லும் போது உடன் செல்கிறார். ”பிதாமகர் எடுக்கும் இரண்டாவது பெரும் பிழைமுடிவு இது. அன்று கங்கையை சிறை கொண்டு வந்தார். இப்போது யமுனையை சிறை கொண்டு செல்ல வந்திருக்கிறார்” என்று பகடியாய் பாண்டு சொல்லும் போதே அவர் நிகழ்த்தும் செயல்களின் முக்கியத்துவம் புரிகிறது. இறுதியில் பீஷ்மரே மனம் நொந்து ”இனிமேலும் இப்படி வீணனாக விதியின் முன் தருக்கி நிற்க என்னால் இயலாது. கங்கையின் திசை மாற்ற கங்கைமீன் முயல்வதுபோன்ற அறிவின்மை இது என எப்போதும் அறிவேன். ஆயினும் ஒவ்வொரு தருணத்திலும் என் மேல் பிறர் சுமத்தும் பொறுப்பை ஏற்று அதையே செய்யமுயல்கிறேன்.” எனும் போது மனத்தை கனக்கச் செய்கிறார். ”வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம்” என பீஷ்மர் அஸ்தினாபுரியைக் காண்கிறார். அதற்கு அல்லும் பகலும் உணவூட்டும் தந்தையாக அவர் திகழ்கிறார். “என் ஆணவம். நானே முடிவெடுக்கவேண்டும் என ஒருவர் சொல்லும்போதே நான் என்னை முடிவெடுப்பவனாக நிறுத்திக்கொள்கிறேன். நான் காப்பவன் என்றும் வழிகாட்டுபவன் என்றும் என்னை கருதிக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பெருவல்லமைகள் என்னை கூழாங்கல்லாகத் தூக்கிவிளையாடுகின்றன. அதன்பின்னரும் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி இந்த கீழ்வேடத்தை நான் அணியப்போவதில்லை.” என்று அலைக்கழிந்தவராகவே மழைப்பாடலில் தென்படுகிறார். கெளரவர்கள் மற்றும் பாண்டவர்களின் பிறப்பிற்குப் பின் மீண்டும் வனம் புகுந்து இந்த நாவலிலிருந்து மறைகிறார்.

மழைப்பாடலின் பெண்கள்:

பெண்களின் நெஞ்சில் மூண்ட கனலே முதற்கனல் நாவலானது போல, மழைப்பாடலில் ஒவ்வொரு விசும்பின் துளி விழுவதற்கும் பெண்களே காரணமாகிறார்கள். இந்த நாவலின் கதை நகர்வுக்கு முக்கியமாக விளங்கும் முடிவுகளைப் பட்டியலிட்டால் அதைக் கையிளேந்தியவர்கள் பெண்களாகவே அமைவதைக் காணலாம். அவற்றை முடித்துக் காட்டும் செயல் வீரர்களாகவே ஆண் கதாப்பாத்திரங்கள் அமைகின்றன. சத்தியவதியும், அம்பிகையும் எடுக்கும் முடிவுகளாலேயே அஸ்தினாபுரியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. காந்தாரத்தில் திருதிராஷ்டிரனுக்குப் பெண் எடுக்கும் முடிவு அவர்களாலேயே தீர்க்கமாக எடுக்கப்படுகிறது.

பாண்டுவுக்கு யாதவ அரசிலிருந்து பிருதையை கேட்கும் முடிவை எடுப்பவளும் சத்யவதியே. துரியோதனனின் பிறப்பிற்குப் பின்னர் நிகழும் தீய நிமித்தங்களால் அலைக்கழிந்து அஸ்தினாபுரியின் எதிர்காலம் குறித்த கவலைகளில் மூழ்கிப் போனவளாகிறாள். அவள் எடுக்கும் இறுதி முடிவு அனைத்தையும் துறந்து வனம் புகுவது மட்டுமே. “நான் இதுவரை சொன்ன எந்தச்சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்ட கனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு.” என்று பொறுப்புத் துறப்பு செய்கிறாள். ”அனைத்தையும் அறுத்து விலகிக்கொள்வதில் உள்ள விடுதலையை நீயும் என்றோ உணர்வாய் விதுரா. அன்று என்னை நினைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு அனைத்தையும் தான் உருவாக்கிய விதுரனிடம் அளித்துவிட்டு இந்த மழைப்பாடலிலேயே கரைந்து விடுகிறாள்.

ஏதோவொரு வகையில் உடற்குறை கொண்ட மகன்களின் தாயாக மட்டுமே விளங்கும் அம்பிகையும் அம்பாலிகையும் தன் மகன்களுக்கான அரியணை ஆசை ஒன்றையே குறிக்கோளாக வைத்து காய்களை நகர்த்துகிறார்கள். ஒருவர் மற்றவரை வெறுத்தொதுக்குவதும், பொறாமை கொள்வதுமென நாவல் முழுவதும் இருக்கின்றனர். ”அவனுக்கு விழியில்லை. அவனால் பிறர் உதவியின்றி ஆளமுடியாது. ஆனால் காந்தார இளவரசியின் வயிற்றில் ஒருகுழந்தை பிறந்து அவன் மாவீரனாக வந்தால் அவன் அஸ்தினபுரியை மீண்டும் பேரரசாக ஆக்கமுடியும்…” என்ற கனவை அம்பிகை விதைக்கிறாள். காந்தாரியின் வருகைக்குப் பின்னர் அவளே கதை முன்னகர்த்தியாகி விடுவதால் அம்பிகை ஆற்றுப்படுகிறாள்.

அம்பாலிகை நாளும் பொழுதுமென பாண்டுவை அரியணை ஏற்றும் கனவுகளில் திழைக்கிறாள். அதற்கான பல திட்டங்களில் ஒன்றாக விதுரனிடம் சொன்னது முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டுவிற்கு உரிமையான சரிபாதி நிலத்தை உரிமை பெறமால் திருதிராஷ்டிரனால் அரியணை ஏறவியலாது. எனவே அதைக் கோரி அவன் அரியணை ஏறும் நிகழ்வைத் தடுப்பேன் என்று விதுரனிடம் சொன்ன சொல்லால் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெறுகிறது. அவள் சொன்ன வார்த்தையால் எதிர்காலத்தில் அப்படியொரு சங்கடம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பாண்டுவிடம் தன் சரிபாதி நிலத்தை வைரத்தை கைமாற்றிக் கொண்டு திருதிராஷ்டிரனுக்கு அளிக்கச் செய்கிறான். பின்னாளில் திருப்புமுனையாக அமையப்போகும் இச்செயலுக்கான வித்தை ஊன்றுபவள் அம்பாலிகையே. அதன் பின் பிருதையிடம் தன்னை முழுதளித்து தான் ஆடவியலாத ஆட்டத்தை தனக்காக அவளையே ஆடச் சொல்லி அவளிடம் தஞ்சம் புகுந்து சரணடைகிறாள்.

பேரழகும், பெரு அறிவும் கொண்ட காந்தாரி வசுமதி காந்தாரப் பேரரசின் எதிர்காலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் காந்தாரம் மட்டுமல்ல அஸ்தினாபுரியின் எதிர்காலமும் மாற்றத்திற்குள்ளாகிறது எனலாம். ”அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும்.” என்ற திருதிராஷ்டிரனின் வார்த்தைகள் மூலம் அவளைப் பற்றிய சித்திரத்தை நாம் அடைகிறோம். ”அனைத்துத் தகுதிகளும் கொண்டவள். வாளும் வேலும் யானையும் குதிரையும் கற்றவள். என்னைப்போல அந்தப்புரப்பெண் அல்ல. நாடாளும் கலையறிந்தவள். அவள் வந்தபின் சத்யவதி இன்றுபோல ஆதிக்கம் செலுத்த முடியாது. என் மைந்தனுக்கு அவளும் இவ்வரியணையும் வேண்டும்…” என்ற அம்பிகையின் வரிகளின் மூலம் அவள் அஸ்தினாபுரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதையும் அறியலாம். திருதிராஷ்டிரனின் மீது அவள் கொண்ட கண்மூடித்தனமான காதலால் அவனுக்குத் தன்னை முழுதளித்ததோடு தன் கண்களைக் கட்டிக் கொண்டு கற்புக்கரசி அனுசூயையின் இடத்தைப் பெறுகிறாள். திருதிராஷ்டிரன் இசையின் மீது கொண்ட காதலால் பிரகதியை மிகவும் விரும்பியது கண்டு தன் கண்மூடித் தனமான காதலின் மேல் சுயபச்சாதாபம் கொண்டு வருத்தமுறுகிறாள். ஆனால் இனி தன் வாழ்க்கை முழுவதும் ஒற்றை இலக்காக ’பிறக்கவிருக்கும் மகனுக்காக’ என்று சூல்கொண்டு முன்னகர்ந்து செல்கிறாள். கண்களைக் கட்டிக் கொண்டதால் விளைந்த கற்பின் தவப்பயன் முழுதையும் தன் மகனான துரியோதனைச் சென்றடைய முடியும் என்று தெரிந்த கணமே எந்தச் சலனமுமின்றி அதைச் செய்தது அவள் தாய்ப்பாசத்தை எடுத்தியம்புகிறது. தன் தவப்பயன் துரியனின் தொடைக்குச் செல்லவில்லை என்று அறிந்து வெகுண்டு தன் மகனுக்கு நூறு கெளரவர்கள் துணை வேண்டுமென தன் தங்கைகளை அது நோக்கி செலுத்தும் முடிவை எடுக்கிறாள். இந்த முடிவுகள் மழைப்பாடல் நாவலுக்கு மட்டுமல்ல இனி வரும் நாவல்களிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியது.

சூரசேனனின் மகளாக ஒரு சாதாரண ஆயர் குலச் சிறுமியாக வளர்ந்தவள் பிருதை. இடையனாக வாழ முடியாது என்று முடிவெடுத்து மதுராபுரியின் அமைச்சனாக உருவெடுத்த தன் அண்ணன் வசுதேவனுக்கு இணக்கமானவள். அவன் கனவுகளைத் தன் இளமைப் பருவம் முழுதும் கேட்டு வளர்ந்தவள். . தாய்வழிச் சமூகமான யாதவர்களில் பெண்களின் முடிவே இறுதியானது. அத்தகைய முடிவெடுக்கும் தருணங்கள் தோறும் அடுத்த கட்ட கதையின் போக்கை நிர்ணயிப்பவளாக அமைந்து விடுகிறாள் குந்தி. தந்தை வேண்டாமெனச் சொல்லியும் பெண் வாரிசு இல்லாத விருஷ்ணி குலத்து போஜனுக்கு மகற்கொடையாக்க தன்னை சம்மதித்தவள். தன்னேற்பு மண நிகழ்வின் போது பாண்டுவின் கழுத்தில் மாலை அணிவித்து யாதவ அரசு அஸ்தினாபுரியின் வரலாற்றோடு இணைய வழிவகுத்தவள். அஸ்தினாபுரியில் நுழைந்த நாளிலிருந்து அரசிக்குரிய நிமிர்வோடும் மிடுக்கோடும் ஆளுமையோடும் வலம் வருபவள். அஸ்தினாபுரியின் இந்த ஆட்டக்களத்தில் ஆடவியலாத பாண்டுவையும் அம்பாலிகையும் அணைத்துக் கொண்டு அன்னையாகிறாள். தான் தேவையாணியின் மணிமகுடத்தை சூடுவதற்கு முன் காந்தாரிகள் தன்னை கேளி செய்த போது கண்ணியமாக பொறுத்துக் கொண்டிருந்தவள். அரசியாக முடி சூட்டப்பட்ட பின் தன்னை கேளிபேசிய காந்தரிகளை வெகுண்டெழுந்து அரற்றியவளாக நிமிர்வைப் பெறுகிறாள். பாண்டுவிற்காக துர்வாசரின் மந்திரங்களைப் பயன்படுத்தி மகவை ஈனும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவால் விளைந்த பாண்டவர்கள் குலம் இனி வரும் நாவல்களில் முக்கிய கதை நகர்த்திகளாக அமைவார்கள் என்பதில் ஐயமில்லை. வனம் புகுந்த பின்னரும், ஒற்றர்கள் மூலம் அரசியல் நிலைகளை அறிந்து கொள்கிறாள். துர்வாசரின் மந்திரத்தை விளையாட்டாகப் பயன்படுத்தி சூரியபுத்திரனைக் கருவில் சுமந்தாள். குந்தியின் வாழ்க்கையில் ஆறாத வடுவாக என்றும் மாறிவிடப்போகும் கர்ணனைக் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் முடிவை எடுக்கிறாள். கம்சன் தன்னை சிறையெடுக்கவே ஆட்களை அனுப்பியிருக்கிறான் என்பதை உய்த்துணர்ந்து, மதியூகமாக செயல்பட்டு காவலனைக் கொன்று யமுனையை நீந்தி மர்க்காவதியை அடைகிறாள். கர்ணனைக் காக்கும் பொருட்டு அவனை யமுனை ஆற்றில் விடும் முடிவை எடுக்கிறாள். இந்த முடிவே கர்ணன் என்னும் ஒரு கதாப்பாத்திரத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அவன் தன் வாழ் நாளில் அனுபவிக்கப் போகும் வலிகளுக்கெல்லாம் கர்த்தாவாக அமையப் போகிறது என்பதை அறியாதவளாய் செய்துவிடுகிறாள். இங்ஙனம் குந்தி மழைப்பாடலின் முக்கியக் கதை நகர்வுக்குக் காரணமாகிறாள்.

யமுனை ஆற்றில் தன் கைகளில் கிடைத்த குழந்தையைத் தானே வளர்க்கும் முடிவை எடுப்பதால் ராதை எனும் பெண் கதை முன்னகர்த்தியாக அமையப் பெறுகிறாள். அவள் கணவனும் குதிரைச் சாரதியுமான அதிரதன் எவ்வளவு வேண்டாமெனக் கூறியும் ஏற்க மறுத்து கர்ணனை வளர்க்கத் தலைப்படுகிறாள். அவளுள் ஊறி வளர்ந்த தாய்மையால் கனிந்து பிருதையின் தாய்மையை தனதாக்கிக் கொண்டு முலைப்பாலூட்டுகிறாள். ஒருவேளை அவள் அதிரதனின் சொல் கேட்டு குழந்தையைத் தேடுபவர்களுக்கு இசைவாக தெரியப்படுத்தியிருந்தால் கதையின் போக்கே மாறியிருக்கும். ஆகையால் ராதையின் முடிவு இங்கு முக்கிய இடம் பெறுகிறது.

மழைப்பாடல் நாவலின் முழுமையில், ஜெயமோகன் சொல்லும்போது, ”மகாபாரதத்தை ஆக்கிய பெண்களின் கதை என்று இதைச் சொல்லலாம். மகாபாரதத்தில் ஆண்கள் வந்து இனி ஆற்றப்போகும் அனைத்துக்கும் இங்கே பெண்கள் அடித்தளம் அமைத்துவிட்டார்கள்.” என்கிறார். அதனின்றே இந்த நாவலின் பெண்களின் இடத்தை நாம் உய்த்துணரலாம்.

இறுதியாக:

ஆட்டத்தை நிகழ்த்தவிருக்கும் கண்ணனின் வருகையும் நிமித்தமாக நாவலில் வருகிறது. ”அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும். எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்” என்ற நிமித்திகரின் வரிகளில் அவன் வரவு அறிவிக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட முடிவுகளும், நிகழ்த்தப்பட்ட செயல்களும், யாவும் இந்த சதுரங்க ஆட்டத்திற்காக அவன் நகர்த்திய காய்களே என்று உணரச் செய்கின்ற வரிகள் இவை.

முப்பதாண்டுகளுக்கு முன் சந்தனு மன்னர் விண்ணேகிய நாளில் அஸ்தினபுரியின் அழிவை முன்னறிவித்த அஜபாலர் சொன்ன வரிகள், “தர்மத்துக்குமேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்றும் வெற்று இச்சை வீரியத்தை அழிக்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது”. அவர் சொன்ன வரிகள் நிறைவேறிக் கொண்டிருக்கும் நாவலாக மழைப்பாடல் அமைகிறது. அஸ்தினாபுரியின் எதிர்காலம் குறித்த சத்யவதியின் இச்சையும், அம்பிகை அம்பலிகை எனும் அன்னையர்களுக்குத் தன் மைந்தர்கள் அரியணை ஏற வேண்டும் எனும் இச்சையும், குந்தி மற்றும் காந்தாரிக்கு பேரரசியாகத் திகழ வேண்டுமென்ற இச்சையும், ஒரு அன்னையாக தன் மைந்தர்கள் அரியணை ஏற வேண்டுமென்ற இச்சையும் என இச்சை பெருகிக் கொண்டே செல்கிறது. இச்சை ஒன்றாலேயே இப்படி பல்கிப் பெருக முடியும். வதையை நோக்கி அது அஸ்தினாபுரியை முடுக்குகிறது.

இங்ஙனம் இந்த வெண்முரசு எனும் தொடர் நாவல் வரிசையின் முக்கியமான நாவலாக மழைப்பாடல் அமையப் பெறுகிறது. மழைப்பாடலை வெறுமே நாவல் என்ற சொல்லைக் கொண்டு அழைப்பதை விட பற்பல குறுங்கதைகளையும், சிறுகதைகளையும் கோர்த்துத் தொகுத்த மாலை என்று அழைக்குமளவு அமைகிறது. இந்த சிறு வாசிப்பனுவத்தைத் தாண்டி ஓர் அற்புதமான புனைவுக் காட்சியை தத்தம் கற்பனைகளுக்கேற்ப கட்டியெழுப்பி திழைக்க வைக்கும் அனுபவத்திற்காகவே நாவல் அணுவணுவாக வாசிக்கப்பட வேண்டியது. நாம் கட்டியெழுப்பக்கூடிய புனைவுக் காட்சிகளுக்கான கருவை ஷண்முகவேல் அவர்களின் படங்கள் நமக்கு அளிக்கிறது. அவரின் ஓவியங்கொண்டு நாம் விரித்துச் செல்லும் புனைவு வெளி மேலும் உயிர்ப்பானதாக நாவலை மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு படமென தொண்ணூற்றியிரண்டு படங்கள் வரைந்திருக்கிறார். அவற்றை மட்டுமே தனியே சேமித்து வைத்து வாசித்தபின் ஓட்டிப்பார்க்க அதுவே கதைசொல்லியாக மாறுவதை நாம் உணரலாம். இங்ஙனம் நிறைவைத் தரவல்ல வாசிப்பனுபவத்தை வாசகர்கள் தத்தமது வாசிப்பால் உய்த்துணர்ந்து அடையலாம்.

இரம்யா

முந்தைய கட்டுரை‘ஒளி’ ஒரு சூம் நாடகம்
அடுத்த கட்டுரைசிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்