அன்புள்ள ஜெ
இந்தத்தளத்தில் வெளிவரும் கதைகள் , அதிலும் குறிப்பாகச் சென்ற ஓராண்டில் வெளிவந்த 120 கதைகளும் பொதுவாக கதை வாசிக்கக்கூடிய அனைவருமே வாசிக்கவேண்டியவை. எவரையும் ஏதேனும் ஒருவகையில் நிறைவடையச் செய்பவை. நுட்பங்களுக்குள் செல்வதெல்லாம் அடுத்தபடி.
ஆனால் கதாநாயகி வேறுவகையானது. அது இலக்கியவாசகனுக்கு மட்டும் உரியது. கதையோட்டம், நிகழ்ச்சிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுக்காக வாசிக்க வருபவர்களுக்கு ஏமாற்றம் வரும் என நினைக்கிறேன். அதிலும் பேய்க்கதை என்று நினைத்து வந்தால் ஏமாற்றம் உறுதி.
ஏனென்றால் இது பேய்க்கதை அல்ல. அந்த ஃபார்மாட்டில் சொல்லப்பட்ட ஒரு இலக்கியக்கதை. இலக்கியத்தை வாசிக்கும்போது நாம் அந்த உலகில் நுழைகிறோம். அந்தக் கதாபாத்திரமாகவே ஆகிறோம். வாசகன் கதைக்குள் நுழையமுடியுமென்றால் கதாபாத்திரம் வாசகனுக்குள் நுழைந்து சமகாலத்திலும் வரமுடியாதா என்ன? அதுதான் கதைக்குள் நிகழ்கிறது.
ஒரு கியூரியாசிட்டியாக ஆரம்பிக்கும் வாசிப்பு மெல்ல உள்ளிழுத்துக்கொண்டு எப்படியெல்லாம் ஆட்கொண்டு பித்துப்பிடிக்கவைக்கிறது என்பது பல படிநிலைகளாகச் சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஆர்வம் வருகிறது. அதன்பிறகு ஒரு விலகல் வருகிறது. தவிர்க்க நினைக்கிறான். ஆனால் அது உள்ளே இழுத்து வைத்துக்கொள்கிறது.
பெண்கள் பெண்களுக்காக எழுத ஆரம்பித்தது உலக இலக்கியத்திலேயே எவ்வளவு பெரிய திருப்புமுனை. முதல்முறையாக விர்ஜீனியாவின் தரப்பு அப்படித்தானே இலக்கியத்தில் பதிவாகியது.
ஆனால் நாவலில் ஈவ்லினா உலக இலக்கியத்தில் பெரும்பகுதி ஆண்கள் ஆண்களுக்காக எழுதிக்கொண்ட வெற்றுப் பெருமிதப்பேச்சுக்கள் அல்லவா? என்கிறாள். அவள் படிப்பது Foxe’s Book of Martyrs . இன்னொரு பெண்மணி முகம் சுளிக்கிறாள். அவள் படிக்கும் புத்தகம்.. The Worth of Women: Wherein Is Clearly Revealed Their Nobility and Their Superiority to Men.
நான் இந்தப் புத்தகங்கள் உங்கள் கற்பனையா என்று சந்தேகப்பட்டேன். இணையத்தில் தேடினேன். இரண்டு நூல்களுமே ஏறத்தாழ ஒரே காலத்தில் வெளிவந்திருக்கின்றன. இருசாராருமே எதிரெதிர் நின்றிருக்கிறார்கள். அந்த முரண்பாடுதான் இந்த கதாநாயகி நாவலுக்கே ஆதாரம். கிரிஸ்ப் எழுதிய விர்ஜீனியா என்ற நாடகமும் ஃப்ரான்ஸெஸ் எழுதிய ஈவ்லினா நாவலும் மோதிக்கொள்வதுதானே இந்தக் கதை? கடையில் வெல்வது ஈவ்லினாதான். அவள் இன்னொரு பெண் வழியாக நீடித்துவிட்டாள்.
சிவக்குமார் எஸ்
அன்புள்ள ஜெ
கதாநாயகி ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சுழற்றிக்கொண்டே சென்ற கதை. முதல் நாலைந்து அத்தியாயங்கள் கதை எங்கே செல்கிறதென்றே தெரியவில்லை. சுற்றிக்கொண்டே இருப்பது போலிருந்தது. புத்தகம், மறுபக்கம் காடு. காடும் புத்தகமும் சம்பந்தப்படவுமில்லை. புத்தகத்திற்குள் இருந்து இழுத்து உள்ளே கொண்டுசெல்லும் பேய்களை உணரமுடிந்தது. நல்ல வாசகர்கள் அனைவருமே அதை எப்படியோ உணர்ந்திருப்பார்கள்.
கடந்தகாலப் பேய்கள், வரலாற்றுப் பேய்கள். வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, வாழ்ந்தவர்களில் வாழ்ந்தவர்களும்கூட. பேய்களில் அந்த வேறுபாடில்லை. ஃபிரான்ஸெஸ் பர்னிக்கும் ஈவ்லினாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் ஒரே பரப்பில், ஒரே இயல்புகளுடன் வாழ்கிறார்கள். இருவருக்கும் சாவில்லை.
அதுதான் கதாநாயகி நாவலின் அடிப்படை. புத்தகங்களில்தான் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் உண்மையான பேய்கள் நிறைந்திருக்கின்றன. கடந்தகாலத்தில் ஓர் அநீதி நிகழ்ந்தால் அந்த அநீதியை யார் சரி செய்ய முடியும்? அதற்காகத்தான் பேய்கள் வருகின்றன. அவை பழிவாங்குகின்றன.ஆனால் உண்மையில் பேய்கள் அதைச் செய்வதில்லை. புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன.
நான் இதை வாசிக்கும்போது பின்தொடரும் நிழலின் குரல் நாவலை நினைவுகூர்ந்தேன். அந்நாவலும் இதேபோல ஒரு பேய் ஒரு வாசகன் வழியாக எழுந்து வந்ததுதானே? அன்னா புகாரினா, புகாரின், வீரபத்ரபிள்ளை எல்லாமே கடந்தகாலத்தின் பேய்கள். அவர்கள் நீதிகிடைக்காதவர்கள். அவர்களுக்கு நீதியை அளித்தது புத்தகங்கள்தானே?
செந்தில் முருகேசன்
அன்புள்ள ஜெ.,
Memento என்ற படத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். Short Term Memory Loss குறைபாடுடைய ஒருவனை மையமாகக் கொண்ட கதை.படம் முடியும் போது எனக்கே கொஞ்சம் ஞாபகங்கள் குழம்பியது போல் ஒரு மயக்கம் ஏற்பட்டது.
கதாநாயகி கதையைப் படிக்கும் போது நானும் அப்படித்தான் மாறிப் போனேன். என்னையும் அந்தப் புத்தகம் உள்ளிழுத்துக்கொண்டது.
சொல்லப்போனால், கடைசி அத்தியாயத்தில் வரும் ஞானாம்பாளும், அந்த மலைக்காட்டின் மாற்றமும் கூட நிஜமா அல்லது கதாநாயகனின் உளப்பிறழ்வின் ஒரு பகுதியா என்று கூட எனக்கு ஒரு சந்தேகம்.
மற்றபடி, அந்தப் புத்தகத்தின் கதாநாயகி யார், ஹெலனா என் அதன் பின் வரவில்லை என்றெல்லாம் இனிதான் யோசிக்கவேண்டும்.
நன்றி
ரத்தன்