‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

[அரங்கசாமி]

இன்றிருத்தல்…

இன்றிருத்தல் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். நண்பர்களின் ஒரு குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் பலவகை வெளிப்பாடுகளை மட்டுமே நிகழ்த்துவதாக. ஏற்கனவே சுக்கிரி, நற்றுணை, சொல்முகம், ஈரோடு வாசிப்புவட்டம் என பல குழுமங்கள் நம் நண்பர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. வெண்முரசு விவாதக்குழுமங்களே பல உள்ளன. இது இலக்கிய விவாதத்திற்காக அல்ல. வாரம் இருமுறை சந்திப்பது, நண்பர்கள் வெவ்வேறுவகையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வாசிப்பு, சினிமா பார்த்தல், பாட்டு கேட்டல் எல்லாம் passive ஈடுபாடுகள். அவை முக்கியம்தான். ஆனால் இத்தகைய சூழல்களில் போதுமானவை அல்ல. எழுதுவது, நடிப்பது, பாடுவது, வரைவது தான் active ஈடுபாடுகள். நாமே ஈடுபடுபவை. அவை நம்மை நம்மையறியாமலேயே மாற்றியமைக்கின்றன. நம்மை நாம் விரும்பும் மனநிலைக்கு மாற்றிக்கொள்ள ஒரே வழி என்பது அதுதான். அதற்காகவே அந்த குழுமம்.

முதல் நாள் முதலே நண்பர்கள் பங்கு கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தினர். காளிப்பிரசாத், குக்கூ ஸ்டாலின், ராஜகோபாலன், சந்திரசேகர்,சக்தி கிருஷ்ணன், செல்வேந்திரன் என பல நண்பர்கள் ‘உரைநகைச்சுவை’ நடத்தினர். ராஜகோபாலன் நடத்திய வடை கதாகாலட்சேபம் ஓர் உச்சம்.

[சுசித்ரா]

ரம்யா ஒரு கதைசொல்லல் நிகழ்வை நடத்தினார். சுபஸ்ரீ நீலம் நாவலின் சிலபகுதிகளை மிகச்சிறந்த தனியுரை நடிப்பாக வழங்கினார். ஒவ்வொன்றுமே சிறப்பாக அமைந்தன.

நான் தனிநடிப்பு நாடகங்கள் இரண்டை எழுதினேன். அவை பத்துநிமிட நகைச்சுவைகள் எனலாம். அரங்கசாமி, டோக்கியோ செந்தில் ஆகியோர் அவற்றை நடித்தனர். ஒரு சந்திப்பு ஒன்றரை மணிநேரம். நிகழ்ச்சிகள், அவற்றைப்பற்றிய உரையாடல்கள் சிரிப்புகள் என நிறைவடையும்.

இச்சந்திப்புகள் தொடங்கியபோது நான் ஒரு நாடகம் எழுதினேன். ’சூம் நாடகம்’ எனலாம். சூம் என்னும் செயலியின் எல்லைக்குள் நின்று, அதன் சாத்தியக்கூறுகளைக் கொண்டு எழுதப்பட்ட ஓரங்கநாடகம். மணிரத்னத்தின் உதவியாளரும் படைவீரன், தேகி, வானம்கொட்டட்டும் படங்களின் இயக்குநருமான தனா இயக்கினார்.

[நவீன்]

முற்றிலும் புதிய ஊடகம். முற்றிலும் புதிய வடிவம். இதன் சாத்தியங்கள் என்னவென்றே தெரியவில்லை. முக்கியமாக சூம் செயலியின் காமிரா என்பது கம்ப்யூட்டரிலுள்ள காமிராதான். அதை அசைக்கவோ திருப்பவோ முடியாது. அதன் காட்சிவட்டத்திற்குள் நிகழ்பவைதான் நாடகத்தில் வரமுடியும். அதன் ஒலிப்பதிவுதான் பயன்படுத்தப்பட முடியும்.தனியான ஒளியமைப்பு கிடையாது. செட்டிங் கிடையாது.

அதைவிட கதாபாத்திரங்கள் தனித்தனியாகவே இருக்கமுடியும். அவர்கள் ஒருவரையொருவர் பார்ப்பதாகவே காட்டமுடியாது. வேறுவேறு இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பேசுவதை இன்னொருவர் மறித்துப்பேசினாலே சூம் செயலி குழம்பிவிடும்.

இத்தனை எல்லைகளுடன் இந்நாடகத்தை தனா இயக்கினார். முக்கியமாக இயற்கையான நடிப்பை கொண்டுவரவும் பேசுபவர்கள் எத்திசைநோக்கிப் பேசுகிறார்கள் என்பதை வரையறை செய்யவும் பெரும் சிரத்தை தேவைப்பட்டது. அனைவருக்குமே முதல் நாடக அனுபவம்.

[சிவசங்கர்]

நேற்று முன்தினம் [28- 5-2021, வெள்ளி ] 6 மணிக்கு ஐம்பதுபேர் இருந்த சூம் கூட்டத்தில் நாடகம் நடைபெற்றது. நடிகர்கள் தவிர அனைவரும் மியூட் பண்ணப்பட்டனர். ஐந்து பெட்டிகளில் ஐந்து நடிகர்கள். நரேன் கோவையில். அரங்கசாமி பெங்களூரில். நவீன் ஈரோட்டில். சிவசங்கர் காஞ்சீபுரத்தில். சுசித்ரா சுவிட்சர்லாந்தில். வெவ்வேறு நாடுகளில், காலநிலைகளில். இந்த வாய்ப்பு இந்நூற்றாண்டிற்கு மட்டுமெ உரியது.

இந்நாடகத்தின் ஆச்சரியம் இதன் ‘எடிட்டிங்’ என்பது சூம் செயலியால் தானாகவே செய்யப்பட்டது. பேசும்போது பேசுபவரை அது காட்டும். ஆகவே ஒருவர் வசனம் பேசும்போது அது அவரைச் சரியாக திரைக்கு கொண்டுவந்தது.உரையாடல்கள் மாறிமாறி ஒலித்தபோது சினிமாவுக்கு நிகராக அது எடிட் செய்து அளித்தது.

இது இத்தனை சிறப்பாக அமையும் என நினைக்கவே இல்லை. கணிப்பொறியின் ஒலிப்பதிவு என்பதனால் சில இடங்களில் ஒலிக்குறைபாடு உள்ளது. இணையத்தின் வேகத்திற்கு ஏற்பச் சில இடங்களில்  காட்சியும் மங்கலாகிறது. ஆனால் இக்குறைகளை இனி திருத்திக்கொள்ள முடியும். நாடகத்தின் உணர்வுநிலையும், தரிசனமும் சிறப்பாகவே வெளிப்பட்டன.

இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்களைக் கொண்டு ஒளிப்பதிவு செய்து அனுப்பி நல்ல எடிட்டர் தொகுத்து குறும்படமாகவும் ஆக்கலாம். அப்படிப்பட்ட முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் நாடகம் முற்றிலும் வேறு. நாடகம் ஒரே விசையில் நடைபெறுகிறது.  ‘நாடகநேரம்’ ‘நாடகவெளி’ என ஒன்று உண்டு. அங்கே நடிகர்கள் கதாபாத்திரங்களாக மாறும் மாயம் நிகழ்கிறது. அதற்கு நிகர் வேறில்லை. நடிப்புக்கலையில் நாடகமே உச்சமானது.

[நரேன்]

மேலும் இதை முதன்மையாக பங்கெடுப்பவர்களின் மனமகிழ்ச்சிக்காகவே ஏற்பாடு செய்தோம். நான் அந்த அறிவிப்பை வெளியிட்டபோது என் மனதிலிருந்தது இதுதான். என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாட்களில் இளமையில் நாடகங்கள் போட்டதும் உண்டு. நாடகம் அளவுக்கே உற்சாகமானவை நாடக் ஒத்திகைப்பொழுதுகள். மெல்லமெல்ல நாம் ஒரு நாடகத்தில் நுழைந்து, கதாபாத்திரமாக ஆகிறோம். பெரும் பரவசம் அளிப்பது அந்த பரிணாமம். நாடகமல்ல ஒத்திகையே பேரின்பம் என்றுகூடத் தோன்றுவதுண்டு.

சினிமா இயக்குநரின் கலை. மற்றவர்கள் பங்களிப்பாளர்கள் மட்டுமே. என்ன நிகழ்கிறதென்றே பிறருக்குத் தெரியாது. நாடகம் நடிகர்கள் இயக்குநர் அனைவரும் சேர்ந்து ஒன்றாக உருவாக்கும் கலை. ஆகவே இது நாடகமாக நிகழ்த்தப்படவேண்டும் என நினைத்தேன்.

தனா

நடித்தவர்கள் ஒவ்வொருவரும் இந்நாடகத்துக்குள் நுழைந்ததன் பரவசத்தைப் பற்றிப் பேசினார்கள். பார்வையாளர்களும் ஓர் உச்சநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நாடகம் முடிந்த பின் இருந்த மகிழ்ச்சிக் கொப்பளிப்பும் சிரிப்பும் பேச்சும் இந்த தொன்மையான கலை அடைந்த புதுவடிவை கொண்டாடுவதாக அமைந்தது

இவ்வடிவில் பிறரும் எழுதலாம், நடிக்கலாம், இந்த வீடடங்குநிலையை மீறி படைப்பாற்றலால் விடுதலையை அடையலாம்.

ஒளி- தமிழின் முதல் ஸூம் நாடகம்

முந்தைய கட்டுரைபழம் கிழம்
அடுத்த கட்டுரைமழையும் நிலமும்