அடங்குதல்

இன்றிருத்தல்…

இன்றிருந்தேன்…

இந்த நோய்க்கால ஊரடங்கை எதிர்கொள்வதன் சவால்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். செய்வதற்கு சிலவே உள்ளன. முதன்மையானது நம்மையும் நம் குடும்பத்தையும் வீடடங்கில் வைத்து நோய் பரவலாகாமல் இருக்க வேண்டியவற்றைச் செய்வது. அடுத்தபடியாக நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவுவது.

ஆனால் இரண்டையும் விட முக்கியமானது இந்த ஒடுங்கும் சூழ்நிலை நம் உள்ளத்தை பாதித்து நம்மை கசப்பும் காழ்ப்பும் நிறைந்தவர்களாக ஆக்காமல் பார்த்துக் கொள்வது. அதனாலென்ன என்று கேட்கலாம். இதை எழுதும்நாள் சு.ரா நினைவுநாள். அவருடைய சொல் ஒன்று உண்டு. காழ்ப்பு, பதற்றம், அச்சம் கொண்டிருப்பவன் கவனிக்க முடியாது. எதிர்மறை மனநிலை கொண்டிருப்பவர் எதையுமே அறிய முடியாது. அறியாமையென்னும் போர்வையால் நம்மை மூடிக்கொள்வதே அது. சிந்திப்பவன் தன் அகத்தை கூர்மையாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளவன்.

மூன்றாவதுதான் உண்மையில் சிரமமானது. இன்றைய செய்தி ஊடகச் சூழலும் சரி, சமூக ஊடகச் சூழலும் சரி, தனிப்பட்ட உரையாடல்சூழலும் சரி, எதிர்மறைத் தன்மையை நம் மீது அள்ளிக்கொட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த புழுதிப்புயலில் இருந்து தப்புவதே முதலில் செய்யவேண்டியது.

செய்தியூடகங்களைப் பொறுத்தவரை எதிர்மறைச் செய்தியே அனைவராலும் கவனிக்கப்படும் செய்தி. செய்தி இன்று ஒரு விற்பனைப்பொருள். ஆகவே எதிர்ம்றைச் செய்தியே அதில் நிறைந்திருக்கிறது. அவர்களுக்கு வேறுவழியில்லை.

சமூக ஊடகச் சூழல் பெரும்பாலானவர்கள் தங்கள் மனச்சிக்கல்களை கொட்டும் வெளி. கசப்பை, காழ்ப்பை கொட்டிவைப்பதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். அதன்பொருட்டு தங்களை முழுக்க நல்லவர்கள், அறச்சீற்றம்கொண்டவர்கள், அரசியல்சரிகளின்படி மட்டுமே சிந்திப்பவர்கள், கோட்பாட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்றெல்லாம் கட்டமைத்துக்கொண்டு எதிரிகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அகப்பட்டவுடன் நச்சுமிழத் தொடங்குகிறார்கள். அவதூறுகள், வசைகள், அரைச்செய்திகள், சதிகளின் உலகம் அது.

தனிப்பட்ட உரையாடல்சூழலில் பெரும்பாலும் சோர்வுறச்செய்யும் செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன. சாவுச்செய்திகள், நோய்ச்செய்திகள்தான் மிகுதி. அவற்றை பகிராமலும் இருக்கமுடியாது [நான் பகிர்வதில்லை] என்னைப்போன்ற ஒருவரின் உறவு-நட்பு வட்டம் தமிழகம் கேரளம் என மிகப்பெரியது. ஆகவே தினமும் இரண்டுமூன்று சாவுச்செய்திகள்.

இவை அனைத்தும் இணைந்து அளிக்கும் சோர்வு நம்மை உருமாற்றிவிடும். நாம் பிறருக்கு பெரும் கசப்பும் சோர்வும் அளிப்பவர்களாக மாறிவிடுவோம். அதுவே நம் ஆளுமை சென்றடையும் இழிந்த நிலை. அதற்கு எதிராகவே போராடவேண்டும்

செய்திகளில் தேவையற்றதை தவிர்த்துவிடலாம். சமூக ஊடகங்களை அகற்றலாம். தனிப்பட்ட செய்திகளிலிருந்து கூடுமானவரை விலகலாம். ஆனால் தவிர்க்கவே முடியாத ஒன்றுண்டு, அதைப் பற்றியும் எழுதியாகவேண்டும். அது நாம் செய்யும் உதவிகளில் இருந்து நமக்கு வரும் கசப்பு. உதவி செய்யச் செய்ய அது கூடுதலாக வந்துசேர்கிறது.

இன்று உதவிகள் செய்தால் அதில் எப்படியும் ஒரு பகுதியினர் நம்மை ஏமாற்றுவார்கள். தவறிப்போய் பொய்யர்களுக்கு, ஏமாற்றுபவர்களுக்கு  உதவிசெய்ய நேரிடாமல் எவரும் எந்த உதவியும் செய்ய முடியாது.

ஏனென்றால் மனிதர்கள் அப்படித்தான். அதைப் புரிந்துகொள்வதே இலக்கியம். ஒவ்வொருவரும் அவரவருக்கான சாத்தியக்கூறுகளை அவரவர் இயல்புப்படி எதிர்கொள்கிறார்கள். இதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம். முற்றிலும் எச்சரிக்கையாக இருக்க எவராலும் முடியாது. அந்த எச்சரிக்கை நிலை எதுவும் செய்யாத நிலையை கொண்டுவரும்.

ஏமாற்றமடைந்து அதிலிருந்து கசப்படைந்தால் இழப்பு நமக்கே. நம் நல்லமனநிலையை இழக்கிறோம், நம் ஆளுமையை நாமே அழித்துக் கொள்கிறோம். ஆகவே அது அப்படித்தான், ‘பேக்கேஜில்’ அதுவும் உண்டு என்று கொள்ளவேண்டியதுதான். எனக்கெல்லாம் ஒருநாளில் இரண்டு அனுபவங்களேனும் அத்தகையவை உள்ளன.

அதோடு உதவிபெறுபவர்களின் நிலையும் சிக்கலானது. அவர்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள். ஓர் உதவி சற்று தாமதமானால்கூட வசையும் குடும்பத்துக்கே சாபமும் வருகிறது. அதன்பின் அந்த உதவி சென்றுசேர்ந்தால் கூச்சமடைந்து பேசாமலிருந்துவிடுகிறார்கள்.

வெல்வதற்கு ஒரே வழி சிரிப்பதுதான். நமக்கு நாமே சிரித்துக்கொள்வது. சிரிப்பூட்டுவனவற்றை தேடி ஈடுபடுவது. படைப்பாக்கத்தில் ஈடுபடுவது. உயர்ந்தவற்றை நோக்கி நம்மை நிரந்தரமாகத் திருப்பி வைத்திருப்பது. சிறியார், சிறுமைகளின் உறவுகலவாமைக்காக நோன்பு கொள்வது.பிறர்மேல் குற்றம்சாட்டாமலிருப்பது.

காலையில் செல்போனை எடுக்கக் கூடாது, நேரடியாக இணையத்துக்குச் சென்று நகைச்சுவைகளை மட்டுமே பார்க்கவேண்டும் என்பது என் இப்போதைய முடிவுகளில் ஒன்று. உலகமெங்குமுள்ள கார்ட்டூன்காரர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். நானே முழுக்கமுழுக்க ஒரு கார்ட்டூன் நாவல் எழுதும்வரை இதுதான் கதி.

முன்பு எழுதியதுதான்,மீண்டும். நண்பர்கள் நமக்குநாமே சொல்லிக்கொள்ள. நண்பர்கள் நடித்த சூம் நாடகம் அவர்களை வெளியே கொண்டுவந்தது என்றனர். மீண்டும் ஊக்கமும் சிரிப்பும் கொண்டவர்களாக ஆகிவிட்டனர். படைப்புநிலையே மீளும் வழி. இன்று நிலைகொள்ளவேண்டிய பீடம்

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 10
அடுத்த கட்டுரை“சயன்ஸ்!”