சௌந்தரிய லகரியும் சங்கரரும்

ரிஷிமூலம்

பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வணங்குகிறேன்! தங்களது ரிஷிமூலம் பற்றிய கேள்விக்கான பதிலில் “ஆதிசங்கரரின் சௌந்தரிய லகரி “அது பெருந்தரிசனமாகிஅவரை முழுமைகொள்ளச் செய்தது”, என்று குறிப்பிடுகிறீர்கள்.

நீங்கள் முன்பு சில கட்டுரைகள், பதில்கள் இவற்றில்  சௌந்தரியலகரி ஆதி சங்கரர் எழுதியிருக்கவாய்ப்பில்லை அவர் தூய அத்வைதி என்றேசொல்லியிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த கருத்து மாற்றத்தின் பரிணாமத்தை எங்களுக்கு சிறிது விளக்க முடியுமா? (குமரித்துறைவி- கொண்டு  அதை நான் ஓரளவுக்கு புரிந்து கொளள முயல்கிறேன்). ஆயினும் தர்க்க பூர்வமாக அதை விளங்கவைக்க முடியுமா? அல்லது என் புரிதலில் பிழையா?

என்றும் நன்றியுடன்,

கருணாகரன்.

அன்புள்ள கருணாகரன்,

ஆதிசங்கரர் சௌந்தரிய லகரியை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு விவாதத்திற்குரிய ஊகம், நிறுவப்பட்ட கருத்து அல்ல. ஆதிசங்கரர் பெயரில் புழங்கும் துதிகளும் சில ஸ்மிருதிநூல்களும் அவர் எழுதிய பெருநூல்களின் மொழிநடைக்கு காலத்தால் பிந்திய நடைகொண்டவை, மாறுபட்ட பார்வை கொண்டவை. ஆகவே பின்னாளில் சங்கரர் என அறியப்பட்ட அவருடைய வழித்தோன்றல்கள் எழுதியிருக்கலாம் என்பது ஒரு தரப்பு. அது ஏற்கப்பட்ட உண்மை அல்ல.

ஆகவே ஒரு பொது விவாதத்தில், வேறொரு சூழலில் மேற்கோள் காட்டும்போது சௌந்தரிய லகரியை ஆதிசங்கரர் எழுதியதாகச் சொல்வதே முறை. ஏனென்றால் அதுவே ஏற்கப்பட்டது. அங்கே ஒரு விவாதக்கருத்தைச் சொல்லக்கூடாது. அக்கட்டுரைக்குள் அந்த விவாதத்திற்கு இடமில்லை. ஒரு விவாதத்திற்குரிய கருத்தை நிறுவப்பட்டதுபோலச் சொல்லக் கூடாது.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு -குந்தி மணத்தன்னேற்பு
அடுத்த கட்டுரைகொற்றவை, கரு.ஆறுமுகத் தமிழன் – கடிதம்