கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 7

அன்புள்ள ஜெ

கதாநாயகி ஒரு மெல்லிய அச்சத்தை மட்டுமே வளர்த்தெடுத்துக் கொண்டு செல்கிறது. அந்த அச்சம் அறியாததன் மீதான அச்சம். அதுதான் ஆழமானது. நாவலை வாசிக்கும்போது எனக்கு எங்கே பேய் இன்னும் வரவில்லை, நீட்டி நீட்டிச் செல்கிறாரே என்ற பொறுமையின்மை கொஞ்சம் இருந்தது. அவ்வப்போது சலிப்பும்.

ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று பார்த்தேன். அந்த எண்ணம் வந்தது கான்ஜூரிங் போன்ற ஆங்கிலப்படங்களைப் பார்த்ததில் இருந்துதான். அவை படுபயங்கரமாக பேய்களை காட்டிவிடுகின்றன. சட்டென்று கொடிய பேய்கள் தோன்றும் காட்சிகளுக்காக நாம் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம். திடுக்கிடவைப்பது, அலறவைப்பதுதான் பேய்க்கதை என நினைக்கிறோம்.

ஆனால் கதாநாயகி வேண்டுமென்றே மென்மையான அச்சத்தை மட்டுமே முன்வைக்கிறது. எடித் வார்ட்டன், மேரி கெரெல்லி எழுதியதுபோன்ற பேய்க்கதை. பத்தொன்பதாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் பேய்க்கதைகள் எல்லாமே இந்தவகைதான். பேயா பிரமையா என்ற எல்லையிலேயே கதை சென்றுகொண்டிருக்கும். அவற்றில் அந்த எட்ஜ் தான் உண்மையில் கலைத்தன்மை கொண்டது.

படித்து முடித்தபிறகு உண்மையில் குழப்பிக்கொண்டே இருப்பது இத மதில்மேல்பூனை தன்மைதான். உளவியல்சிக்கலாக இருக்கலாம். பேயாகவும் இருக்கலாம். புத்தகம் எழுப்பும் பிரமைகளாகவும் இருக்கலாம். ஆனால் இது இங்கே நடந்துகொண்டிருக்கும் நிஜம். யாருக்கும் நடக்கக்கூடியது. வெறும் கொடூரக்கனவு அல்ல. அந்த எண்ணம்தான் நீடித்த பயத்தை உருவாக்குகிறது.

இந்தக்கதையை படித்து முடித்தபிறகுதான் தொகுக்க முடிகிறது. தொட்டுத்தொட்டு தொகுத்துக்கொண்டே இருந்தேன். ஃப்ரான்ஸெஸ்ன் பர்னி முதல் ஹெலெனா வரையிலான கதைகள் பல தொடர்ச்சியில்லாமல் வருகின்றன. விர்ஜீனியஸ் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறான். இன்றைக்கும் இருக்கிறான்.

எஸ்.கே.ராம்

அன்புள்ள ஜெ

கதாநாயகி முடியும்போதுதான் அது எதன் கதை என்று புரிந்தது. இன்று வைரமுத்து, பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் என்று பேசப்பட்டுக்கொண்டிருப்பதும் அதுதானே. பெண்களால் சிலவற்றை மறக்கவோ கடக்கவோ முடிவதில்லை. அவர்களும்  அதில் சூழ்ச்சியாலோ அறியாமையாலோ ஈடுபட்டிருந்தால் இன்னும் கடுமையான மனப்பாதிப்பை அடைகிறார்கள். மூன்றுபெண்களில் விடுபட்டவர் ஃப்ரான்ஸெஸ் பர்னிதான். ஹெலெனா மாட்டிக்கொள்கிறாள். ஆகவேதான் நிறைவேறாத ஆத்மாவாக அந்தப்புத்தகப்பக்கங்களில் அவளும் இருந்துகொண்டிருக்கிறாள்.

எம்.கிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

நான் மனவியல் சிகிச்சை மையத்தில் கொஞ்சகாலம் பணியாற்றியிருக்கிறேன். 13 வருடம். அதில் நான் கண்டடைந்த ஒரு விஷயம் உண்டு. மனவியல்பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக மிக அபாயமானது புத்தகம்தான். அதிலும் புனைவுக்கதைகள். அவற்றை அவர்கள் வாசிக்கவே கூடாது. நாம் புனைவுக்கதைகளை வாசிக்கும்போது அவை கற்பனை என்று நம் கான்சியஸ் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அந்தக் கான்சியஸ் பலவீனமானது. ஆகவே அதெல்லாம் அவர்களுக்கு உண்மையாகிவிடுகிறது.

புனைவுக்கதைகள் சுற்றிநடக்கும் உண்மைக்கதைகளைவிட கூர்மையானவை, ஆழமான பாதிப்பை அளிப்பவை. ஏனென்றால் அவை முறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன, மனிதர்களை தெளிவாக வரையறை செய்து காட்டுகின்றன. ஆகவே மனச்சிக்கல்கொண்டவர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களை அந்தக்கதைகள் மூடிவிடுகின்றன. திரும்பவே முடியாது.

நாம் வாசிக்கும்போது சுற்றுப்புறம் பற்றிய பிரக்ஞை இருக்கும். ஆனால் அவர்களுக்கு அதெல்லாம் இருக்காது. பத்துப்பனிரண்டு மணிநேரம் வாசிப்பவர்கள் உண்டு. ஒரே நூலை பல ஆண்டுகள் வாசிப்பவர்கள் உண்டு. அவர்களுக்கு அதிலிருந்து கடந்தகாலம் அப்படியே எழுந்து வந்து விர்ச்சுவல் ரியாலிட்டியாக ஆகிவிடுகிறது.

வாசித்த உலகத்துக்குள் வாழும் நோயாளிகள்தான் ஸ்கிஸோப்ரினியா நோயாளிகளில் பாதிக்குமேல். ஆகவே அவர்கள் வாசிக்கக்கூடாது என்றுதான் டாக்டர்கள் சொல்வார்கள்.

கதாநாயகி நாவலில் வாசித்து வாசித்து அவன் ஆழ்ந்து செல்வதும், அப்படி ஆழ்ந்து செல்வதை உனர்ந்து அவனே பயப்படுவதும், அதை நிறுத்த முயலும்போது அந்தப்புத்தகம் அவனை இழுத்து இழுத்து எடுத்துக்கொள்வதுமான போராட்டம் அந்த பிரேக்கிங் பாயிண்ட் வரை உக்கிரமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ராஜ்குமார் முருகேசன்

***

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 2
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1
முந்தைய கட்டுரைஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபின்னே?