ஓ.என்.வி பற்றி…

ஓ.என்.வி.குறுப்பு

அன்புள்ள ஜெ,

ஓ.என்.வி குறுப்பு முக்கியமான கவிஞரா? ஞானபீடம் பெற்றிருக்கிறார். ஆனால் சினிமாக்கவிஞர் மட்டுமே என்கிறார்கள். ஆகவே கேட்கிறேன்

ஆர்.ராஜன்

***

அன்புள்ள ராஜன்,

நான் முன்பு ஓ.என்.வி குறுப்பு பற்றி எழுதியிருக்கிறேன். மீண்டும்.

ஓ.என்.வேலுக்குறுப்பு என்னும் ஓ.என்.வி குறுப்பு இடதுசாரிகளுக்கு உகந்த கவிஞர். இடதுசாரிகளின் எழுச்சிக்காலமான 1950களில் தோப்பில் பாசியால் நடத்தப்பட்ட இடதுசாரி நாடகக்குழுவான கே.பி.ஏ.சிக்கான பாடல்களை எழுதியவர். இடதுசாரி ஆதரவு வேட்பாளராக தேர்தலில் நின்றிருக்கிறார்.

ஓ.என்.வி குறுப்பு கல்லூரி ஆசிரியராக இருந்தார். அப்போது பாலமுரளி என்ற பெயரில் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதினார். ஓய்வுக்குப் பின்னர் ஓ.என்.வி குறுப்பு என்றபேரிலேயே பாடல்களை எழுதினார்.

இடதுசாரி ஆதரவாளராக தோன்றினாலும் ஓர் உயர்குடிப் பேராசிரியரின் வாழ்வும், நோக்கும் கொண்டவர். சம்ஸ்கிருதம் நிறைந்த மலையாளத்தில் சம்பிரதாயமான பழைய கருத்துக்களையே கவிதைகளாக எழுதினார்.

அரசியல் தலைவர்களுடன் அணுக்கமாக இருப்பவர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கையில் காங்கிரஸுக்கு தீவிர ஆதரவாளராக இருப்பார். எல்லா தரப்பு மேடைகளிலும் தோன்றுவார். ஆகவே அனைவருக்கும் வேண்டியவர்.

இந்த பொதுவான அடையாளமும் வெகுஜனப்புகழும் அனைவருடனான சீரான தொடர்பும் அவருக்கு பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் பட்டங்களையும் ஞானபீடம் உட்பட விருதுகளையும் பெற்றுத்தந்தன.

அவருடைய கவிதைகள் இருவகை. காமத்தின் சம்பிரதாயமான வர்ணனைகள், பொதுவான சமகால அரசியல் கருத்துக்கள். அவை தலையங்கக் கவிதைகள் எனப்படுகின்றன. யாப்பில் எழுதினார். அவருடைய சொல்லாட்சிகள் சம்ஸ்கிருதத்தின் அழகு கொண்டவை. அத்துடன் அனைவருக்கும் அஞ்சலிக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

ஓ.என்.வி குறுப்புயின் கவிதை மரபு சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை என்னும் முன்னோடியிடமிருந்து தொடங்குகிறது. ஷெல்லியில் இருந்து தூண்டுதல்பெற்ற கற்பனாவாதக் கவிஞரான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு பின்னர் பல நகல்கள் உருவானார்கள். அவர்களை பொதுவாக ‘மாற்றொலிக் கவிஞர்கள்’ என்பார்கள். [எதிரொலி] வயலார் ராமவர்மா அவ்வாறு குறிப்பிடப்பட்ட திரைக்கவிஞர். வயலார் ராமவர்மாவின் எதிரொலி என ஓ.என்.வி குறுப்பைச் சொல்ல முடியும்.

ஓ.என்.வி குறுப்பு திரையிசையில் நல்ல பல பாடல்களை எழுதியிருக்கிறார். அதிருஷ்டவசமாக அக்காலத்தில் பாடல் முதலில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. ஆகவே அழகிய கற்பனாவாத வரிகளை அவர் எழுத முடிந்தது. மெட்டுக்கு எழுதவேண்டியிருந்தபோது அவர் பின்னடைவு கொண்டார்.

ஓ.என்.வி குறுப்பு புதுக்கவிதை அல்லது நாட்டார்பாடல்களின் சாயலே அற்ற சம்பிரதாயமான மரபுக்கவிதையின் மொழிநடை, உவமைகள், அணிகளையே கவிதையில் பயன்படுத்தினார்.

ஓ.என்.வி குறுப்பு வெகுஜனத் தொடர்புகளால் பலமடங்கு மிகைப்படுத்தப்பட்ட, சுமாரான கவிஞர். நல்ல பாடலாசிரியர்.

ஒ.என்.விக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டபோது நான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறேன் – தமிழிலும் மலையாளத்திலும். அக்கித்தம் அவர்களே தகுதியானவர் என்று வாதிட்டேன். அதற்கு ஆதரவும் திரண்டது. பத்தாண்டுகளுக்குப்பின் அக்கித்தம் ஞானபீடம் பெற்றார்.

ஜெ

ஓ.என்.வி
ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்
விருதுகள், அமைப்புகள்
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

பொன்னரிவாள் அம்பிளியில் கண்ணெறியுந்நோளே
கதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பு
ஓ என் வி நாடகப் பாடல்கள் தொகுதி
இந்து புஷ்பம் சூடி நில்கும் ராத்ரி – பாம்பே ரவி ஓ என் வி
இவிடே காற்றினு சுகந்தம் — சலீல் சௌதுரி ஓ என் வி
முந்தைய கட்டுரைஒரு கல்லூரி மாணவியின் கடிதம்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 6