வணக்கம்
“என்னடா இந்த மெயில் இவளோ பெருசா இருக்கே” என்று படிக்காமல் போய்விடாதீர்கள். இந்த மெயிலை நான் நீண்ட நாட்களாக அணுப்ப நினைத்து இப்போது தான் நீங்க வாசிக்கிறீர்கள்.
கல்லூரியில், மூன்றாம் பாடவேளை. அப்போதுதான் மதிய உணவு உண்டுவிட்டு வந்து அமர்ந்தோம். எங்கள் வகுப்பாசிரியர், நாங்கள் உணவுவேலை முடிந்து வருவதற்குள் மேசையில் ஸ்பீக்கரையும் புரோஜக்டெரையும் வைத்து இருந்தார். என் இருக்கையான மூன்றாவது வரிசையில் மூன்றாவது மேசையில் மேசை ஓரத்தில் அமர்ந்தேன்.
கண்டிப்பாக எங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆசிரியர் இலக்கியம் பற்றிய வீடியோவைதான் போடுவார் என்று. ஆனால் எங்கள் மனதிற்குள் ஒருநப்பாசை “திரைப்படம் போட்டால் எப்படியிருக்கும்”. இது நடந்து இருந்தால் உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்து இருக்கும்.
வீடியோவை போட ஆரம்பித்தார். சன்னல்களை மூட செய்தார். முதல் வரிசையில் இரண்டு மேசைகளில் மட்டும் தான் மாணவர்கள், மற்ற பதிமூன்று மேசையிலும் மாணவிகள். எதிர்ப்பார்த்தது போல் இலக்கிய சொற்பொழிவுதான். இருகுரல்கள் மட்டும் தான் கேட்டது வீடியோ தெரியவில்லை. ப்ரொஜக்டெர் பிரச்சனைதான்.
அப்போது ஆசிரியர் வீடியோவை நிறுத்தி விட்டு, இல்லை இல்லை ஆடியோவை நிறுத்தி விட்டு “இது ஒரு இன்ஞ்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்பட்ட சொற்பொழிவு, இத ஏன் உங்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினேன்னா, தமிழ் படிக்கிறவங்க தான் இலக்கியம் படிக்கனும்னு இல்ல எல்லாரும் இலக்கியம் படிக்கனும். கற்பனைத்திறன் அப்போதான் வரும். அதுமட்டும் இல்ல நெறய இருக்கு ஆன இப்ப உங்களுக்கு புரியருது இல்ல. தமிழ் படிக்கிற நீங்களும் இத தெரிஞிக்கனும். இதுல பேசுரவரு மிகப்பெரிய எழுத்தாளர் ஜெயமோகன்” என்றார்.
‘எங்கேயோ கேட்ட பெயரா இருக்கே’ என்று நினைத்தேன் ஆனால் அது ஜெயகாந்தன். அதும் சிலபசில் இருந்தது. ஆசிரியர் தொடர்ந்தார் “வீடியோவ காட்டலாம்ன்னு பாத்தா வீடியோ வரல. சரி ஆடியோ மட்டும் கேளுங்க” என்று ஆடியோவை போட்டார்.
’நல்லா கவனிக்கலாம், இலக்கணத்துலே இருந்து தப்பிச்சாச்சு’ என்று நினைத்தேன். ஆனால் ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம்தான் கழிந்து இருக்கும். உண்ட மயக்கம். வெறும் ஆடியோ. கூடவே நிசப்தம் எல்லாம் எனக்கு விரோதமாக இருந்து தூக்கத்தை வரவைத்தது. என்னை அறியாமலையே இருமுறை என் தலை மேசைக்கு ஒடியது.
இப்படித்தான் உங்களின் பெயர் எனக்கு அறிமுகமானது. பிறகு ஆசிரியர் உங்களின் சொற்பொழிவின் லின்க் அனுப்பினார் புலனம் குழுவில். பின்பு உங்களின் சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன்.
நீங்கள் யுடூப் சேனலில் வெண்முரசு பற்றி உரையாடல் நடத்தினீர்கள். அதில் ஒருவர் “மறுபிறவி இருக்கா இல்லையா நீங்க நம்புரீங்களா?” என்று கேட்டு இருந்தார். அதற்கு நீங்கள் அளித்த பதில் என்னை ஒரு நிமிடம் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை நான் அப்படி ஒரு பதிலை கேட்டது இல்லை. நான் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன் அல்லது இல்லை என்பது விஷயம் இல்லை, அந்த உறுதி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
இப்படியாக உங்களை பின் தொடர்ந்தேன். பவாசெல்லதுரை அவர்கள் உங்களின் சோற்றுக்கணக்கை சொல்லி கேட்டேன். ஆசிரியரும் வகுப்பில் ஒரு முறை அறம் பற்றி பேசினார். (9.3.2021) அன்று என் தோழியும் நானும் நந்தனம் புத்தக கண்காட்சிக்கு சென்றோம். எங்களின் ஆசிரியர் கூறியதின்படி ஆதிப்பதிப்பகத்தில் “அறம்” தொகுப்பை வாங்கினோம்.
அறம் வாசிப்பிற்கு முன் பின் என என்னை பிரிக்கல்லாம். சாதி இட ஒதிக்கீடு இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் அறம் வாசிப்பிற்கு பின் என் என்னம் மாறியது. உன்மையை அறிந்தேன் அதற்கு உதவியது “அறம்” தொகுப்பு தான். இதில் நீங்க “என்னை பற்றி மறைக்க எதுவும் இல்லை” என்று பதிவிட்டு உள்ளீர்கள். உங்களின் வாழ்கை வரலாற்றை அறிய விரும்புகிறேன்.
படித்ததற்கும் படைத்ததற்கும் நன்றி!
என்னை பற்றி. இந்துக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறையில் படிக்கும் என் பெயர் சு. தீபிகா. ஆண்காக்கை கவிதை தொகுப்பின் ஆசிரியர் சுப்பிரமணி இரமேஷ் என் வகுப்பு ஆசிரியர். இம் மெயிலை அனுப்ப ஊக்குவித்தவரும் அவரே. நன்றி!..
நீண்டதோர் கடிதம் இப்படி நான் யாருக்கும் இதுவரை அனுப்பியது இல்லை. ஆதனால் தான் இத்தலைப்பை வைத்தேன்.
நன்றி!
தீபிகா
அன்புள்ள தீபிகா,
நன்றி. தமிழ்ச்சூழலில் இலக்கியத்தையோ பொதுவான அறிவுச்செயல்பாடுகளையோ வகுப்பில் அறிமுகம் செய்யும் ஆசிரியர்கள் அரிதினும் அரிதானவர்கள். ஆகவே சுப்ரமணி இரமேஷ் அவர்களுக்கு என் நன்றி.
உங்கள் கடிதம் நேர்த்தியாக இருந்தது. எண்ணங்களை எழுத்தில் பதிவுசெய்வது மிக அரிதானது. இளமையிலேயே அதைச்செய்ய உங்களால் முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்
சில திருத்தங்கள் செய்திருக்கிறேன், கவனிக்கவும். ஒன்று பேச்சுமொழி எழுத்துமொழி ஆகியவற்றை கலந்து எழுதக்கூடாது. தட்டச்சு செய்யும்போதுவரும் எழுத்துப்பிழைகளை கவனித்து திருத்திக்கொள்ளவேண்டும்.
அறம் என் படைப்புலகில் நுழைவதற்கு சிறந்த வாசல். அதிலுள்ள கதைகள் நேரடியானவை, ஆகவே உள்ளே நுழைய முடியும். வாசிக்க வாசிக்க விரிந்து தீவிர இலக்கிய அனுபவமாகவும் ஆகக்கூடியவை.
என் வாழ்க்கை என் நூல்களிலேயே உள்ளது. பலநூல்கள் உள்ளன. புறப்பாடு, வாழ்விலே ஒருமுறை, சங்கசித்திரங்கள் என வாழ்க்கைப்பதிவுகள் உள்ள நூல்கள் நிறைய உள்ளன. வாசித்துப் பாருங்கள்.
அன்புடன்
ஜெ