எஸ்.செந்தில்குமாரின் ‘’கழுதைப்பாதை’ – கடலூர் சீனு
நான் முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு நாவல் எழுத எண்ணியிருந்தேன். அருமனை மாறப்பாடி பகுதியில் ஆற்றில் பாலம் கட்டப்பட்டபோது வேலையிழந்த படகுக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி. படகுகள் விழுவதற்கான உரிமை திருவிதாங்கூர் மகாராஜாவால் அளிக்கப்பட்டது. திருவிதாங்கூரின் சக்தி வாய்ந்த அரசி பார்வதிபாய் காலம் முதல் அந்த சேவை அங்கே இருந்தது. அது ஒரு வரலாறும் அதையொட்டிய பண்பாடும் கொண்ட ஓர் உலகம்.
மாறப்பாடியில் உருவான சிமிண்ட் பாலம் அதை சட்டென்று இல்லாமலாக்கிவிட்டது. அங்கே படகுகளை ஓட்டிய குடும்பங்கள் வறுமையை அடைந்து வாழ்க்கையை மாற்றிக்கொண்டன. படகுகள் கொஞ்சகாலம் அங்கேயே கிடந்து மட்கி மறைந்தன. ஆனால் சற்று அப்பால் திருவட்டாறில் வெள்ளையர் ஆற்றின்மேல் அமைத்த இரும்புப்பாலம் அதனருகே உருவான கான்கிரீட் பாலத்தால் கைவிடப்பட்டது. துருப்பிடித்து நின்றுள்ளது. அந்த படகுகள் மட்கியதைப்போல.
அந்த கைவிடப்படுதலையும் இன்றியமையாத மறைவையும்தான் நான் எழுத விரும்பினேன். பாலம் என்பது நவீன உலகின் அடையாளம் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட இயற்கையின் இன்றியமையாத செயல்பாடு என்றும் சொல்லலாம். ஏனென்றால் எளிய, மேலும் எளிய , விரைவான, மேலும் விரைவான இணைப்புகளை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இயற்கையின் பரிணாமகதி. சாலை படகை இல்லாமலாக்கியது. ஒரு தேசியநெடுஞ்சாலை சிறியவழிகளை இல்லாமலாக்கிவிடும். நாளை பறத்தல் எளிதாகுமென்றால் சாலையே இல்லாமலாகிவிடும்.
எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை என்ற நாவலை நான் இந்தக் கோணத்தில், நான் எழுதாமல் விட்ட ஒன்றின் நிறைவேற்றம் என்ற அளவில்தான் வாசித்தேன். தமிழில் எழுதப்பட்ட நல்ல நாவல்களில் ஒன்று என்று கழுதைப்பாதையை தயங்காமல் சொல்லமுடியும்.
இது கேரளமும் தமிழகமும் சாலைகளால், லாரிகளால் இணைக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தின் நாவல். மலைகளைக் பொதிகளுடன் கடந்துசெல்ல கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கழுதைகளுடன் கழுதையாக வாழ்பவர்களின் ஒரு குட்டிச் சமூகம் உருவாகிறது. அடக்குமுறை, அதைமீறும் எளியவழியான திருட்டுத்தனம் எல்லாம் வளர்கின்றன. சாலைகளும் வண்டிகளும் உருவான 1950களில் கழுதைப்பாதைகள் கைவிடப்படுகின்றன. அவை பழைய புண்களின் வடு போல காட்டில் ஆங்காங்கே காணக்கிடைக்கலாம்.
ஒன்று அழிந்தபின்னர்தான் அதை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் கொள்ள முடிகிறது. கழுதைப்பாதையை செந்தில்குமார் வரலாற்றில் ‘தொலைந்துபோன ஒரு சிறு சமூகத்தின் வரலாறு’ என கட்டமைப்பதில் வெற்றியடைந்திருக்கிறார். வாசிக்கையில் அந்நினைவு எழுவதில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் அத்தனை ’காலத்தால் கைவிடப்பட்ட’ சமூகங்களின் கதையாகவும் ஆகும் தன்மை இந்த சித்தரிப்புக்கு உள்ளது. ஆகவேதான் இது முக்கியமான இலக்கியப்படைப்பாக ஆகிறது.
முக்கியமாக இந்தவகை நாவல்கள் இயல்புவாத [நாச்சுரலிச] பாணி கொண்டவை. உள்ளது உள்ளபடிச் சொல்வது, தகவல்களை மட்டுமே சொல்வது, கற்பனை கலக்காமல் சொல்வது என்னும் புனைவுப்பாவனையை கொண்டிருக்கின்றன. கற்பனைக்கதைதான், ஆனால் கற்பனையல்ல வாழ்க்கை என்று தோன்றவைப்பதுதான் இந்த வகையான கதையின் இயல்பு.
இதிலுள்ள சித்தரிப்புகள் பல ஆக்ரோஷமானவை. அன்றைய அடிமைத்தனமும் அதை மீறும்பொருட்டு செய்யப்படும் வேவ்வேறு துரோகங்களும் நம்பகத்தன்மையை அடைவது மொத்த நாவலுமே இயல்புவாத அழகியல் கொண்டிருப்பதனால்தான். ஆகவே இவை வாசிப்புக்கு ஒரு வணிகநாவல் அளிக்கும் வேகத்தை தருவதில்லை. நவீன நாவல்போல கச்சிதமாக இருப்பதில்லை. செவ்வியல்நாவல் போல பேருருவவிரிவையும் அளிப்பதில்லை. இவற்றின் இந்த இயல்புவாத அழகியலுடன் நாம் நம்மை பொருத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.
இந்நாவல் ஒரு தெளிவான அடையாளம் கொண்ட நிலச்சூழலில் நிகழ்ந்தாலும் அந்நிலம் பற்றிய விவரணைகள் குறைவு. சூழல்சித்தரிப்பே குறைவுதான். ஏனென்றால் இவை இச்சூழலில் உள்ள இயல்பான கதைமாந்தர் வழியாகவே வாசகனுக்குக் காட்டப்பட முடியும். அவர்கள் அந்த சூழலை, இயற்கையை ‘பார்ப்பவர்கள்’ அல்ல. அங்கே புழங்குபவர்கள். செவ்வியல்நாவல்கள் அச்சூழலில் இருந்து மேலெழுந்த கதாபாத்திரங்களை கொண்டு அச்சூழலை சித்தரிக்கவும் ஆராயவும் முற்படும். அந்த சௌகரியம் இயல்புவாத நாவல்களுக்கு இல்லை.
இயல்புவாத நாவல்களின் இன்னொரு எல்லை என்பது அவை வலுவான கதைமாந்தர்களை உருவாக்க முடியாது என்பது. ஏனென்றால் ‘கதாபாத்திரம்’ என்பது ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக தொகுத்து மையம் கற்பிக்கும்போது உருவாவது. இயல்புவாதம் அதற்கு எதிரானது. அது ‘அகத்துக்கு’ அதிகம் செல்வதில்லை. சாராம்சம் காண முற்படுவதில்லை. மனிதர்களை நிகழ்த்தி கடந்துசெல்கிறது. ஆகவே கதாபாத்திரங்கள் மனிதச்சித்திரங்களாகவே நிகழ்ந்து நின்றுவிடுவார்கள்.
கழுதைப்பாதை நாவல் முழுக்க கதாபாத்திரங்கள் செறிந்திருக்கிறார்கள். அவர்களினூடாக அன்றைய சமூக அதிகார மாற்றத்தை கற்பனையில் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. ராவுத்தர்களின் அழிவு அவர்களில் எழும் நாயக்கர்களின் வணிகம் என ஏற்கனவே இருந்த ஆதிக்கத்தின் ஒரு வரலாறு கதைகளினூடாக சொல்லப்படுகிறது. அவ்வரலாற்றின் அழிவிலிருந்து உருவாகி வருகிறது மூவண்ணா, சுப்பண்ணா குடும்பத்தின் மேலாதிக்கம்.
அவர்கள் நூறு கழுதைகளைக் கொண்டு மலைக்குமேலிருந்து தோட்டப்பொருட்களை மலையிறக்கி கீழிருக்கும் பொருட்களை மலைக்குமேல் கொண்டுசென்று ஒரு தொழிற்கண்ணியை நிலைநிறுத்துகிறார்கள். அக்கண்ணி நீடிப்பதற்குண்டான அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். கழுதைகள் எப்படி ஒடுக்கப்பட்டு சுமைதூக்கச் செய்யப்படுகின்றனவோ அப்படித்தான் அவற்றை கொண்டு செல்லும் கூலியாட்களும். அவர்கள் சாப்பாட்டுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டு அதன்வழியாக குரோதமும் கசப்பும் கொண்டவர்களாக ஆகிறார்கள்.
ஆதிக்கம் மாறுபடுகிறது, சுரண்டல் மேலும் வலுப்பெறுகிறது. இந்நாவலை வாசிப்பவர்கள் விரிவாக்க வேண்டிய புள்ளிகள் இது அளிக்கும் இந்த சமூக ஆதிக்கச் சித்தரிப்பில்தான் உள்ளன. ராவுத்தர் காலம் முதல் மூவண்ணா சுப்பண்ணா காலம் வரை பார்த்தால் சுரண்டல் வலுப்பெறவே செய்கிறது. ஒப்புநோக்க ராவுத்தர்தான் ஊழியர்களை மனிதாபிமானத்துடன் பார்த்தவராக இருக்கிறார்.
இதை இப்படி விளக்கிக்கொள்ளலாம். ராவுத்தர் தொன்மையான நிலவுடைமைக்காலத்தையவர். அவரும் அடிமை ஊழியர்களை வைத்திருந்தார். ஆனால் அவர்களுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். பண்டை நிலவுடைமையில் ஆண்டை என்பவர் தந்தையும்கூட. அரசன் கடவுளாக இருந்த காலம். அடுத்த காலகட்டத்தில் ஆண்டை மெல்ல முதலாளி ஆகிறான். அவனுக்கு உழைப்பாளர்கள் வெறும் கருவிகள். அவர்கள் அழியக்கூடாது அவ்வளவுதான். அவன் அவர்களுக்கு எவ்வகையிலும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை.
இந்நாவலில் இணையான இரு உலகங்களாக இருப்பவை முதுவர் என்னும் பழங்குடிகளின் வாழ்வும் தரைக்குடிகளின் வாழ்வும். மலையை நுட்பமாக, நன்கறிந்திருக்கும் முதுவர் காட்டை வெட்டி காப்பித்தோட்டங்களை அமைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை விரிவான நுண்ணிய செய்திகள் வழியாகச் சித்தரிக்கும் ஆசிரியர் அவர்களின் பண்பாட்டின்மேல் தரைக்குடிகள் ஊடுருவுதை, அதன் சிதைவை காட்டுகிறார்.
இந்நாவலில் அடிப்படை விசைகளான காமமும் வன்முறையும் வஞ்சமும் துரோகமும் மைய உணர்வுகளாக நீடிக்கின்றன. ஒருவரை ஒருவர் தின்று வாழும் சிற்றுயிர்களின் பெருந்திரள் என இந்நாவலில் உள்ள கதைமாந்தர் எங்கோ ஒரு புள்ளியில் நமக்கு திகைப்பை உருவாக்குகிறார்கள்.
புறவுலகச் சித்திரத்தைச் சொல்வதன் வழியாக உருவாக்கும் குறியீடுகளின் ஆற்றல் வழியாக இயல்புவாத நாவல்கள் நிலைகொள்கின்றன. இந்நாவலும் அத்தகைய குறியீடுகளால் வலுவாகக் கோக்கப்பட்டது. ஆனால் அவற்றை குறியீடுகளாக ஆக்கிக்கொண்டு மேலே சென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது வாசகனின் பணி. இந்நாவலில் வரும் கழுதைகள் இறுதியில் எரிந்தழிகின்றன. தளைபட்டு கிடந்த அவை அந்த தளையிலேயே மடிகின்றன. ஒரு காலகட்டம் ஊழியில் அறுதியாக அமைகிறது. நாம் வாழும் இன்னொரு காலகட்டம் தொடங்குகிறது.
வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் என தொடங்கி அனுபவக்குறிப்புகள் வாழ்க்கைநிகழ்வுகள் என கோத்துக்கொண்டே சென்று ஒரு சமூகத்துளியின் வரலாற்றைச் சொல்லிவிடுகிறது இந்நாவல். பெருவெள்ளம் வரும்போது ஆற்றில் ஒரு காட்சியைக் காணலாம். மணலாலும் சேறாலும் உருவான ஆற்றிடைக் குறை செடிகளுடன் ஒரு சிறு தீவென நின்றிருக்கும். வெள்ளம் அதைக் கரைத்துக் கரைத்து இல்லாமலாக்கிக்கொண்டே செல்லும்.ஒரு கட்டத்தில் முற்றாக மறையும். இன்றியமையாத ஒரு அழிவு. காலநதிக்கு உணவாகி செரிக்கப்பட்டுவிடுதல். அந்த காட்சியை பேருருவாகக் காணும் அனுபவம் எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை.