நான் மோனாலிசாவின் மர்மப்புன்னகையை தினத்தந்தியில்தான் வாசித்தேன். ஒரு துணுக்குச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். ”லியனாடோ டாவின்ஸி வரைந்த இந்த ஓவியத்தில் இந்தப் பெண்மணி ஏன் புன்னகைக்கிறாள் என்ற மர்மத்தை உலக கலைவிற்ப்பன்னர்கள் இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றது செய்தி
உண்மையிலேயே அவள் புன்னகைக்கிறாளா இல்லையா என்பதுதான் மர்மம் என்பது பின்னாளில் தெரியவந்தது. ஆனால் அப்போதெல்லாம் ”அவ சிரிச்சா என்ன சிரிக்காட்டி என்ன?”என்னும் மனநிலைக்குச் சென்றுவிட்டிருந்தேன்.
“மர்மம் போதுமான அளவுக்கு வரலியோ?”
மோனாலிஸா என்பது சுருங்கி எம்மெல் என்றாகி, பின்னர் நீண்டு எம்மெல்லே ஆகி, அதன்பின் தமிழில் சட்டமன்ற உறுப்பிரனாகி ,அதன்பின் சஉ ஆகிகுறுகி, சவு ஆக திரிந்து ஒரு கலைச்சொல்லாக எங்கள் கல்லூரி நாட்களில் புழங்கியது. அன்றெல்லாம் மோனாலிசாக்கள் ஏராளம்.
இன்றைய கிட்களுக்கு அதெல்லாம் புரியாது. அன்று பேருந்துகளில் அழகிகள், அழகிகள் என நினைத்துக்கொள்பவர்கள், அழகிகளைப்போல ஆகிக் கொண்டிருப்பவர்கள் என பலவகைப் பெண்கள். அவர்கள் பேருந்துகளில் வசமான இருக்கைகளைப் பிடித்து அமர்ந்துகொள்வார்கள். முகத்தில் ஒரு பொதுவான புன்னகை இருக்கும். புன்னகையா இல்லையா என்று கண்டுபிடிக்கவே முடியாத ஒரு புன்னகை அது.
அந்தக்காலத்திலே புன்னகையிலே என்னமோ மர்மம் இருந்திருக்காம்
அவளைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அவர்களுக்கான தனிப்புன்னகை அது என்று தோன்றும். தன் நகைச்சுவை, ஸ்டைல் எல்லாவற்றையும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து அவள் புன்னகைக்கிறாள் என்று பிரமை ஏற்படும். ஆனால் அவள் அப்பா பேருந்தில் இருந்தால் அவள் சும்மா அமர்ந்திருப்பதாகவும் தெரியும்.
அந்தப்புன்னகை இந்த ஒளிரும் பூச்சிகளின் சூழ்ச்சி. அதை நம்பி முன்னால் சென்றால் அடிவிழும். அவள் அப்படியே கமர்கட் பாப்பாவாக மாறிவிடுவாள். ”லே ஆளு சவுவாக்கும் கேட்டுக்கோ… விட்டிலு பிடிக்க வெளக்கு வச்சிருக்கு” என்போம். மழைக்காலத்தில் ஹெட்லைட்டை பகலிலும் போட்டுக்கொள்வது போல சதா மோனாவாக இருந்த பெண்கள் உண்டு. பலரை இருபதாண்டுகளுக்குப் பின் பார்த்தேன். குமட்டலுக்கு முந்தைய முகபாவனையில் நிலைகொண்டிருந்தார்கள்.
”சிரிக்க வைக்கிறாப்ல ஆம்புளைய சந்திக்கலை, அப்புறம் என்ன பண்றது?”
மோனாலிசாவின் இந்த ‘மர்மத்தை’ பல அர்ச்சகர்கள் சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். “தோ அந்த தூணாண்டை நின்னு பாருங்கோ, அம்மன் சிரிக்கிறா மாதிரி இருக்கும். நேர் அந்தண்டை போய் பாருங்கோ அம்மன் வருத்தமா இருக்கிற மாதிரி இருக்கும். அப்டி செதுக்கியிருக்கா அந்தக்காலத்திலே. இப்பல்லாம் இதெல்லாம் முடியுமா? தபஸ் செஞ்சு செதுக்கியிருக்கா…”
எந்த சிலையும் வெளிச்சம் வரும் திசைக்கு மறுபக்கம் போய் நின்றால் உதட்டின் நிழல் பக்கவாட்டில் விழுந்து சோகமாகத்தான் தெரியும் என ஒர் அர்ச்சகரிடம் சொன்னேன். அவர் என்னை துஷ்டா என்பதுபோலப் பார்த்தார். அம்மனின் மர்மத்துடன் விளையாடும் அரக்கன்!
”இதவிட அந்த மர்மமே பரவால்லாம இருந்திச்சு”
மோனாலிசா ஓவியத்தை நேரில் லூவர் அருங்காட்சியகத்தில் பார்ப்பது பல நடிகைகளை நேரில்பார்ப்பதற்குச் சமம். சென்றுதேய்ந்திறுதல் அணி. முதலில் அது ஒரு சின்ன, மங்கலான ஓவியம். இரண்டு, அதில் எந்த அசாதாரணமான கைத்திறனும் கற்பனைத்திறனும் எனக்கு தெரியவில்லை. டாவின்ஸியின் ஓவியங்களில் கடைசி இரவுணவு போன்ற அற்புதமான ஓவியங்கள் உண்டு. இது அவர் தனக்காக வரைந்துகொண்டது.
மோனாலிசா டாவின்சி தன்னிடம் வைத்திருந்த ‘பர்ஸ் ஃபோட்டோ’ என்கிறார்கள். தூக்கிக்கொண்டு அலைந்திருக்கிறார். அப்படி கையோடு கொண்டுபோகும் பொருட்கள் காலப்போக்கில் அன்றாட உபயோகத்திற்கு வருவதை கண்டிருக்கிறேன். என் பழையகால சீனியர் அறைத்தோழர் காதல்மனைவியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பர்ஸிலிருந்து எடுத்து அதைக் கொண்டு மேஜையில் கொட்டிய மூக்குப்பொடியை வழித்து அள்ளுவதை கண்டிருக்கிறேன். டாவின்ஸி அந்தப் பலகையை எழுதுமணையாக பயன்படுத்தவில்லை என எவர் உறுதிசொல்லமுடியும்?
மோனா லிசா புன்னகைத்ததன் ரகசியம்
அவ்வப்போது இப்படி ஆகிவிடுகிறது.’ இங்கே உங்கள் கற்பனைகளைக் கொட்டவும்’ என்று ஒரு புள்ளியை சரித்திரத்தில் உருவாக்கிவிடுகிறார்கள். மானுடமே அங்கே கொட்டிக்கொட்டி அதை மலையாக உயரச்செய்துவிடுகிறது. வான்கோவின் காது போல நம்முடைய கூட்டுப்படிமங்கள் தொன்மங்களாகிவிடுகின்றன. ஆயிரமாண்டுகளுக்கு பின் வான்கோவின் காதுக்கு பாரிஸில் சிலை அல்லது கோயில் இருந்தால் ஆச்சரியப்படவே மாட்டேன்.
மோனாலிசா ஓவியத்தைவிட அதன்முன் மக்கள் கொள்ளும் பாவனைகள் மிகச் சுவாரசியமானவை. வரிசையாக செல்லவேண்டும் திருப்பதி சன்னிதானத்திற்குச் செல்வதுபோல. அருகே நெருங்கியதும் “ஏடுகொண்டலவாடா!” கூச்சல். ‘ஜருகண்டி ஜருகண்டி’யும் உண்டு.
”ஏம்மா டூத்பேஸ்ட் விளம்பரத்துக்கு வந்தா வாயை இப்டியா வச்சுக்கிட்டிருப்பே?”
பெரும்பாலான ஜப்பானியர்கள் கலையை சரிவரக் கையாளக் கற்றவர்கள். சட்டென்று சென்று ஒவியத்திற்கு முன் குண்டிகாட்டி நின்று இருவிரலைக் காட்டி ஃப்ளாஷ் இல்லாமல் நூறு காமிராக் கிளிக் கிளிக் கிளிக் செய்து குடுகுடுவென ஓடி அப்பால் செல்வார்கள். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்குவர். அப்பால் சென்று அங்கிருக்கும் வாசல்படிஓரத்து சுண்ணக்கல் சிங்கத்துடனும் அதே கிளிக் கிளிக் கிளிக்.
ஐரோப்பியர்களுக்கு கலைதின்று வாழ்ந்தவர்கள் என காட்டும் பொறுப்பு உள்ளது. சோகமான முகத்துடன் கிழவிகள் வியப்பொலிகளை வெளியிடுகிறார்கள். மேலும் சோகத்துடன் கிழவர்கள் ஆமோதிக்கிறார்கள். கலைக்கருத்துக்கள் வெளிவருகின்றன. கலைச்சொற்கள் இருக்கும். முனகல்களும் அவற்றில் சேர்த்தி. அதன்பின் சிறப்பாக வாயு வெளியேற்றிய நிம்மதியுடன் அப்பால் செல்கிறார்கள்.
ஐரோப்பாவில் இளைஞர்களை அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்களில் காணமுடியாது. அதெல்லாமே எண்பது கடந்தபின் செய்யவேண்டியவை. அதுவரை பப்தான். ”வயசானா ஏதாவது கலைக்கூடம் அருங்காட்சியகம்னு தொலையணும். அய்யய்ய, சும்மா நை நைன்னு உயிர வாங்கிட்டு…”என கிழங்கட்டைகளை திட்டுவார்களாக இருக்கும்.
இந்தியர்கள் அங்கே நம் நிலத்தின் அறிவுத்தளத்தை வெளிக்காட்டுகிறோம். ஓவியங்கள் முன் நின்று ஒரு கண் மூடிப் பார்ப்பது, கையை குவித்து குழலாக்கிப் பார்ப்பது, நுட்பங்களைத் தேடுவது. ‘திராட்சைப்பழத்தை என்னமா வரைஞ்சிருக்கா பாரு” என கணவன் சொல்ல மனைவி “நம்ம ரம்யாகூட அன்னிக்கு ஆப்பிள் வரைஞ்சா” என கலையார்வத்தை வெளிப்படுத்துவாள்.
மோனாலிசா முன் வருகிறோம். “மாப்ள ஒரிஜினலை அப்பவே கடத்தி வித்துட்டாங்களாம்டா… இது டூப்ளிக்கேட். மங்கலா இருக்கு பாரு” வண்ணச்சட்டை போட்ட ஆள் சொல்கிறார். “நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் ஒரிஜினலை பாத்திருக்கார். வா சொல்றேன்”. சதியும் அதைக் கண்டுபிடிப்பதும்தான் சிந்தனை என்பது இந்திய நவீன தத்துவம்.
எனக்குத்தான் ஏதாவது பிரச்சினை இருக்கவேண்டும். நான் பல சவுக்களின் நினைவுகளில் முகம் மலர்ந்து பரவசமாக நின்றேன். ஒருவேளை கலையனுபவம் என்பதே அதுதானோ?
ஆப்’
பகடை பன்னிரண்டு
சிரிக்கும் ஏசு
டேனியல் லாபெல்
ஊதிப்பெருக்கவைத்தல்
ஸாரி டாக்டர்!
ஆடல்
கம்யூட்டர் யுகத்துக் கடவுள்
மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…
ஆன்மிகமும் சிரிப்பும்