வெண்முரசு, ஆஸ்டின்- பதிவு

வெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு

அன்பு ஜெயமோகன்,

மகள் அவள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய ஒரு போட்டியில் ஒரு குறும்படம் செய்து அனுப்ப அப்படம் மெல்ல மெல்ல பள்ளி, மாவட்டம் என முதலிடம் பெற்று முன்னேறி மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றது. அதற்காக ஒரு பரிசளிப்பு விழாவிற்காக  ஆஸ்டினுக்கு மிக அருகே செல்ல வேண்டியிருந்தது. கோவிட்  காலக் கட்டுப்பாடுகள் குறைந்து (நன்றி தடுப்பூசி) இயல்பு வாழ்க்கை எட்டிப்பார்க்கத் தொடங்கியதால்  சற்றே நம்பிக்கைக் கொண்டு   ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப்பின் குடும்பத்துடன் பயணித்தபோதுதான் வெண்முரசு ராலே  திரையிடலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தயாரிப்பாளர் டெக்சாஸ்காரர் தான், கண்டிப்பாக இங்கே திரையிடுவார், கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று துண்டு போட்டு வைத்திருந்தேன் . மறுநாளே நம் தளத்தில் வெளியான ஆஸ்டின் அறிவிப்பைக் காட்டி அனுமதி வாங்கிவிட்டேன்.

இசையில் தொலைந்து கொலைக்குத் தலை கொடுத்த முன்னனுபவங்களினால் தனியான பயணங்களில் இளையராஜாவுக்குக் கண்டிப்பானத் தடை. மாற்றாக உங்கள் குறள் உரையுடன் மழைவிட்ட ஈர சாலையில்  இனிமையாகத்  தொடங்கியது பயணம். கூகுள் மேப்பில் திடீரென தோன்றிய நெரிசல் அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே  ஒரு பாலத்தில் மேலேறியபோது  ஒரு கருமேகக்கூட்டத்தைக் கண்டேன். ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே இருள் செறிந்து ஐம்பதடி தொலைவில் பெருமழை பெய்வதை அதற்கு வெளியிலிருந்து கண்டது நீண்ட நாள் நினைவிலிருக்கப்போகும் ஒரு பேரனுபவம்.

மழைக்குள் நுழைந்தது மட்டுமே நினைவில், மற்றபடி மணிக்கு நூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் மூன்று வரிசைகைளில் வாகனங்கள் விரையும் நீர் நிறைந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனத்தின் பின்விளக்கு சற்றே மங்கலாகத் தெரிந்த பதினைந்து நிமிடங்கள் – செய்வதற்கு ஏதுமில்லை எனும்போது மாபெரும் களிப்பெழும் எனக் கண்டுகொண்ட தருணம். “அம்மா மீனாட்சி நீயே ஓட்டிக்க” என்று சொல்லிவிட்டு ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாக கழிந்தது. மழை குறைந்தும் அடுத்த இளைப்பாறும் இடத்தில் நிறுத்தி அங்கிருந்த  மழைகழுவிய விரிந்த சோளக்கொல்லையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த போது  பின்னால் வந்த  ஒரு கறுப்புத் தாத்தா  “யூ ஷுட் பீ எ பார்மர் பாக் ஹோம், ஆரின்ட்  யூ? ” என்றார்.

டாலஸிலிருந்து மேலும் சிலரும் ஹியூஸ்டனிலிருந்தும் வந்திருந்தார்கள். கி.ராவுக்கு அஞ்சலியுடன் துவங்கிய விழாவில் இந்தப் படத்தின் தேவை குறித்தும் நோக்கம் குறித்தும் சௌந்தர் அவர்கள் விளக்கினார். பின்னர் படம் திரையிடப்பட்டது. என்னளவில் நோக்கம் நிறைவேறியதாகவே எண்ணுகிறேன்.

ஆசிரியர் யார், வெண்முரசின் இடம் என்ன, வாசகர்களிடம் அது ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு வாசிப்பு கோணங்கள், புது வாசகர்களுக்கு உதவும் குழு உரையாடல் தளம்  மற்றும் அதன் தொடர் பங்களிப்பு, மரபு என்ற பெயரில் பழைமையை நோக்கி வெறித்தனமாக ஓடும் இக்காலத்தில் மரபை நவீன காலத்தில் நின்று நோக்கும்  தன்மை போன்றவை அழகாகக் கோர்க்கப்பட்டிருந்தது.

பிரபலங்களும் வாசகர்களாகவே நின்று பேசியது ஒரு சிறப்புக்கூறு. பெயர்களாகவும் படங்களாகவுமே தெரிந்த கடலூர் சீனு, லோகமாதேவி, சுசித்ரா, ஸ்ரீனிவாசன் தம்பதியினர் ஆகியோரை திரையில் பார்த்தது  மகிழ்ச்சி.

நீலம் பாடலும் இறுதியில் வந்த தீம் இசையும் இப்படத்தை வேறு தளத்திற்கு அழைத்துச் சென்றது. ஷண்முகவேலின் அருமையான ஓவியங்களை  மாபெரும் இசைக்கோர்ப்புடன் பெரிய திரையில் கண்டது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவம்.

உங்கள் கடலோர நடை காட்சி “பொன்னொளிர்தடங்கள்” முன்னுரையை நினைவுபடுத்தியது. அருண்மொழி  அவர்கள் “வியாசரின் ஆசி என்றும் என் ஜெயனுக்கு உண்டு” என்று சொல்லி சிரிக்கும் இடம்  ஒரு குட்டிக் கவிதை.

இந்த சிறப்பான ஆக்கத்தில் பங்குபெற்ற அனைவரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

என்றும் நல்லனுபவங்களையே தரும் உங்களுக்கு நன்றி.

என்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்

வெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி

முந்தைய கட்டுரை’ஆப்’
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 4