அஞ்சலி எஸ்.என்.நாகராஜன்

எஸ்.என்.நாகராஜன்

எஸ்.என்.நாகராஜன் -விக்கி

கீழைமார்க்ஸியம் என்று அவருடைய நண்பரும் மாணவருமான ஞானியால் பெயரிடப்பட்ட ஒரு தனித்துவம் கொண்ட பார்வையை முன்வைத்தவர் எஸ்.என்.நாகராஜன். வேளாண் அறிஞர், பொருளியல் ஆய்வாளர், மார்க்ஸிய ஆய்வாளர். தமிழகத்தில் இருந்து மார்க்ஸிய சிந்தனைக்கு அசலான ஒரே கொடை என்பது எஸ்.என்.நாகராஜனின் கீழைமார்க்சியம் என்னும் கருத்தாக்கமே. ஆகவே அவரை இந்நூற்றாண்டின் தமிழகத்து முதற்சிந்தனையாளர்களில் ஒருவராக முன்வைப்பது என் வழக்கம்.

எஸ்.என்.நாகராஜன் பெரும்பாலும் ஏதும் எழுதியதில்லை. உரையாடலே அவருடைய வழி. அவருடன் உரையாடியவர்கள் வழியாக அவர் தன் சிந்தனைகளை நிகழ்த்தினார். அவருடைய பிற்காலத்தைய பேட்டிகள் அவருடைய சிந்தனைகளை முன்வைப்பவை. கோவை ஞானியில் அவர் வெளிப்பட்டார். அவர் எழுதிய குறிப்புகள், கடிதங்களின் தொகுப்பாக ஞானி வெளியிட்ட கீழைமார்க்சியம் என்னும் நூலே அவருடைய சிந்தனைகளின் ஒரே ஆவணமாக நிலைகொள்கிறது.

பெரும்பாலான முதல் சிந்தனையாளர்களைப்போல எஸ்.என்.நாகராஜனும் அலைமோதியவர். சீராக, முறையான தத்துவ- தர்க்கக் கட்டமைப்புடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவரால் இயன்றதில்லை. வெவ்வேறு புள்ளிகளை தொட்டு தொட்டு இணைத்துச் செல்லும் அவருடைய சிந்தனை என்பது பலசமயங்களில் தர்க்கமற்ற தாவல்களாகவும், ஊகங்களாகவும், உருவகங்களாகவுமே இருந்துள்ளது. ஆனால் அவருடன் விவாதித்து, தானாகச் சிந்தனைசெய்பவர்களுக்கு பெருந்திறப்புகளை அளிப்பவை அவை.

எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸியத்தின் செவ்வியல்வடிவத்தின் மேல் ஆழமான ஐயங்களையும் விமர்சனங்களையும் 1970கள் முதல் முன்வைத்தவர். எளிமையாக அதை இப்படிச் சொல்லலாம். மேலைமார்க்ஸியம் ’ஆண்தன்மை’ கொண்டது. ஆகவே தாக்கும்தன்மை, தன்முனைப்பு ஆகியவை கொண்டது. அவர் ஆண்தன்மையை ஓர் எதிர்மறைப் பண்பாகக் கண்டார்.

மேலைமார்க்ஸியம் இயற்கையின்மேல் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது, மையப்படுத்தும் தன்மை கொண்டது, அதிகாரத்தின் வழியாக மாற்றத்தைக் கொண்டுவரும் இயல்பு கொண்டது என்பது எஸ்.என்.நாகராஜனின் கருத்து.

அதற்கு மாற்றாக எஸ்.என்.நாகராஜன் முன்வைத்தது கீழை மார்க்ஸியம். அது ’பெண்தன்மை’கொண்டது. ஆகவே படைப்புச்சக்தி கொண்டது. இயற்கையுடன் ஒத்திசைந்துசெல்லுதல், பரவலாக்கப்பட்ட பன்மையாக்கப்பட்ட மையமற்ற தன்மை, சேவையினூடாக சமூகமாற்றம் ஆகியவை அதன் இயல்புகள் என்றார்.

மார்க்ஸியம் ஒரு மண்ணில் அங்கிருக்கும் மெய்ஞான மரபுகளின் நீட்சியாகவே உருவாகமுடியும். அவ்வண்ணம் ‘மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்’ உருவானால் மட்டுமே அந்தச் சமூகத்துடன் அது மெய்யான உரையாடலை நிகழ்த்தும்.  ‘மார்க்சியத்தை மொழிபெயர்க்கக்கூடாது’ என்பது எஸ்.என்.நாகராஜனின் தரப்பு.

இந்தியாவின் மரபில் மார்க்ஸியத்திற்கான முன்தொடர்ச்சிகள் என்னென்ன என்று அவர் ஆராய்ந்தார். இந்தியாவின் நாத்திகமரபையும் இந்தியாவின் சேவை அல்லது பிரபத்தி சார்ந்த மரபையும் அவ்வாறு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்திய மார்க்சியர்களில் ஈவேராவை முதலில் மார்க்ஸிய முன்னோடியாக கருதியவர் அவர்தான். அதேபோல ராமானுஜரையும் வள்ளலாரையும் முன்னோடியாக கருதினார்.

எஸ்.என்.நாகராஜன் வைணவத்தின் ‘பிரபத்தி’ என்ற கருதுகோள் மிகமுக்கியமானது என்றார்.மக்களை அவர்களுக்குச் செய்யும் சேவையினூடாக அறிதல் என்பது அதன்வழி. மக்களிடமிருந்து விலகிநின்று அவர்களை ஆராய்ந்து அறியும் அறிஞர்களின் பார்வை ஆணவம் கொண்டது, அது பிழையாகவே ஆகும் என வாதிட்டார். ‘அறிவுக்குப் பதிலாக அன்பை ஓர் அறிதல்முறையாகக் கொள்ளவேண்டும்’ என அவர் சொன்னார்.

அந்நம்பிக்கையே அவரை நடமாடக்கூடிய ஆற்றல் இருக்கும் வரை தமிழகம் முழுக்க அலையவைத்தது. பெரும்பாலும் அவர் விவசாயிகளின் நடுவிலேயே இருந்தார். விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். வேளாண் அறிஞர் என்பதனால் அவர் விவசாயிகளுக்கு உதவியானவராகவும் அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்தார்.

அறிஞர்கள், மார்க்ஸியக்கூச்சல்கார்களிடம் பேசுவதை விட அவரால் விவசாயிகளிடம் எளிதில் பேசமுடிந்தது. நாம் மார்க்சியர் என நம்பும் ஆளுமைகள் எவராலும் விவசாயிகளிடமோ தொழிலாளர்களிடமோ ஐந்துநிமிடம் பேசமுடியாது என்பதை நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். அவர்களால் இன்னொரு மார்க்ஸியரிடமே உரையாடமுடியும்.

எண்பதுகளில் வேதசகாயகுமார் எஸ்.என்.நாகராஜனை குமாரகோயில் அருகே ஒரு விவசாயிகளின் கூட்டத்திற்குப் பேச அழைத்துச்சென்றார். எஸ்.என்.நாகராஜன் வந்து நின்றதுமே விவசாயிகள் அவர்மேல் ஒவ்வாமை கொண்டனர். எஸ்.என்.நாகராஜன் ஆரம்பித்தார். “நீங்க வெள்ளாமைய சிறப்பாச் செஞ்சா என்ன ஆகும்?”.  “வெளைச்சல் கூடும்” என்று பதில். “வெளைச்சல்கூடினா நெல்லு நிறைய வரும். பொருள் சந்தைக்கு நிறைய வந்தா விலை கூடுமா குறையுமா?” விவசாயிகள் ஸ்தம்பித்துவிட்டனர்.

“நிறைய விளைய விளைய விலை குறைஞ்சிட்டே இருக்கும். நிறைய விளைய வச்சா மண்ணு உரமும் பூச்சிமருந்தும் கூடுதலா கேக்கும். அதெல்லாம் வெலை ஏறும். எங்கோ ஒரு எடத்திலே விவசாயம் நஷ்டமா ஆயிரும்” என்று அவர் பேச ஆரம்பித்தார். அவர்கள் அக்கணமே அவரை தங்களவர் என ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல விவசாயிகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். தக்கலை குமாரகோயில் பகுதியில் விவசாயிகள் வயலில் எருவிட்டு அதை நொதிக்கவைத்து சிவப்பாக ஒரு பாசி படரச்செய்தார்கள். சதுப்புவிவசாயத்தின் வழி அது. அதை வயல்பூப்பது என்றார்கள். அது ஒருவயலில் இருந்து இன்னொரு வயலுக்கு கொண்டுசென்று பரப்பப்பட்டது. வயலின் தரத்தை அது மிகுதியாக்கியது.

அது நுண்பூஞ்சை. எஸ்.என். நாகராஜன் அதை வேளாண்விஞ்ஞானிகளிடையே கவனப்படுத்தினார். பின்னாளில் அஸோஸ் பைரில்லம் போன்ற நுண்பூஞ்சை உரங்கள் சந்தைக்கு வந்தன. பேச்சிப்பாறை பகுதியில் ஆழ்களி நிலத்தில் வேய்மூங்கிலை தறித்துப்போட்டு உள்ளே காற்றோட்டம் உருவாக்கி விவசாயம் செய்யும் வழிமுறையை அவதானித்து எழுதியிருக்கிறார்.  ‘மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்பது அவருடைய கோஷங்களில் முக்கியமானது.

துரதிர்ஷ்டவசமாக எவரையும் பிறப்புசார்ந்த அடையாளத்தால் அன்றி வேறெவ்வகையிலும் பார்க்க முடியாத சாதிக்குறுகல் கொண்டவர்களாகவே நம் அறிவுச்சூழல் அன்றும் இன்றும் இருக்கிறது. எஸ்.என்.நாகராஜனை அவருடைய பிராமண -வைணவச் சாதி அடையாளத்தை கொண்டு வசைபாடி இழிவுபடுத்தி அப்படியே கடந்துசென்றனர் இங்குள்ள மார்க்சியர். அந்த வசையையே அவருடைய அடையாளமாக நிலைநாட்டுவதிலும் வெற்றிபெற்றனர்.

எஸ்.என்.நாகராஜன் ராமானுஜரின் பிரபத்தியை முன்வைப்பதைக்கொண்டு அவரை சாதிநோக்கில் வசைபாடினர். ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே எந்தக் கோணத்தில் எஸ்.என்.நாகராஜன் ராமானுஜரை பார்த்தாரோ அந்தப்பார்வையே தமிழில் பொதுவாக நிலைகொண்டது. மு.கருணாநிதி ராமானுஜரைப் பற்றி நூல் எழுதியபோது ஒரு குரல்கூட எதிராக எழவில்லை. ஆனால் எஸ்.என்.நாகராஜனுக்கு சாபவிமோசனம் கொடுக்கப்படவுமில்லை.

இங்கே அன்று மார்க்ஸியம் ஒரு மதமாகவே இருந்தது. மார்க்ஸை மேற்கோள் காட்டுவது தவிர மேற்கொண்டு சிந்திப்பதே பிழை என கருதபட்டது. மார்க்ஸை கடந்துசிந்திப்பது துரோகமேதான். இன்னும் வியப்பூட்டுவது ஒன்றுண்டு, அதை கோவை ஞானியே ஓர் உரையாடலில் சொன்னார். எவரெல்லாம் ‘தூயமார்க்ஸியம்’ பேசி எஸ்.என்.நாகராஜனை வசைபாடினார்களோ அவர்களெல்லாம் அப்படியே சாதிவாத, இனவாத, பண்பாட்டு அடிப்படைவாத சிந்தனைகளுக்குள் சென்று குடியேறி அப்படியே நீடிக்கிறார்கள்.

சோவியத் ருஷ்யாவின் உடைவைப் பற்றி எழுபதுகளின் தொடக்கம் முதலே கணித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் எஸ்.என்.நாகராஜன். அப்போது அதன்பொருட்டு வசைபாடவும்பட்டார். அந்த வீழ்ச்சி இன்றியமையாதது, ஏனென்றால் சோவியத் ருஷ்யாவின் ஆக்ரமிப்பு- ஆதிக்கம் சார்ந்த போக்கின் முடிவு அது என்று அவர் நினைத்தார். அதனால்தான் மாற்று மார்க்சியத்தை முன்வைத்தார்.

ஆனால் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அவரை அழுத்தமாகப் பாதித்தது என இப்போது காணமுடிகிறது. அதற்குப்பின் வந்த மாற்றங்கள் அவரை நம்பிக்கையிழக்கச் செய்தன. கீழைமார்க்ஸியத்தின் விளைநிலம் என அவர் நம்பிய சீனா ஓரு அரசுமுதலாளித்துவப் பேரரசாக மாறியது, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிகளில் வந்த முதலாளித்துவத்துடன் ஒத்துப்போகும் தொழிற்சங்கவாதம், இடதுசாரித் தீவிரக்குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளும் அவர்களின் பரஸ்பர வசைகளும், தமிழகத்தில் சட்டென்று மீண்டும் பேருருக்கொண்டு எழுந்த இனவாத- சாதியவாத அரசியல் ஆகியவை அவரை அன்னியமாக்கி அமைதியாக்கின.

அவருடன் தொடர்பும் உரையாடலும் 1986 முதல் எனக்கு இருந்தது. கீழைமார்க்ஸியம் நூல் தொகுப்பிலும் சிறுபங்காற்றினேன். அவரைப்பற்றிய ஒரு குறிப்பை நான் மலையாளத்தில் எழுதியபோது அவருக்கு அனுப்பியிருந்தேன். 2017ல். அப்போதுதான் அவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது முதுமையால் பேச்சில் ஒத்திசைவும் இல்லாமலாகியிருந்ததாகத் தோன்றியது. கடைசியாக அவர் குரலை கேட்டது அப்போதுதான்.

மார்க்ஸியம் ஒரு சிந்தனையாக தமிழகத்தில் இனி எவ்வகையில் நீடிக்கும், நீடிக்குமா என்பதெல்லாமே கேள்விகள்தான். இன்று மார்க்ஸியம் பேசுபவர்கள் எல்லாமே மார்க்ஸியத்தை ஓரத்தில் தொட்டுக்கொண்டு பண்பாட்டு அடிப்படைவாதம், இனவாதம், சாதியவாதமே பேசுகிறார்கள். அவை மார்க்ஸியத்திற்கு நேர்எதிர்க் கொள்கைகள். ஆனால் அந்தப்பேச்சில் ஓரத்தில் மார்க்ஸை எல்லைச்சாமிக்கல் போல அமரச்செய்கிறார்கள்.

மார்க்ஸியத்தை ஒரு தத்துவமாக, இலட்சியமாக அதன் தூயவடிவில் ஏற்று முன்சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர் எஸ்.என்.நாகராஜன். இன்று அந்த தலைமுறை இல்லை, இன்றிருப்பது அன்றாட அரசியலின் காழ்ப்புகளை மார்க்ஸியத்தின்பெயரால் கொட்டும் ஒரு கூட்டம். ஓர் அரசியல்கும்பலாக அல்லாமல் மெய்யான சிந்தனைக்களமாக மார்க்ஸியம் தமிழகத்தில் உயிர்கொண்டு எழுமென்றால் எஸ்.என்.நாகராஜன் மீண்டும் பேசப்படுவார். ஞானியும்.

பசுமை முகங்கள்
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1

அசிங்கமான மார்க்ஸியம் – எரிக் ஹாப்ஸ்வம்

ஞானி-3

முந்தைய கட்டுரைபகடை பன்னிரண்டு
அடுத்த கட்டுரைவெண்முரசு திரையிடல், ஆஸ்டின் பதிவு