அன்னா கரீனினா – சுகதேவ்

அன்னா கரீனினா வாங்க

அன்புள்ள ஜெ,

நலம் என்று நினைக்கிறேன், நானும் நலமே. இந்த ஊரடங்கு காலத்தில்  ருஷ்ய இலக்கியம் படிக்க எண்ணி டால்ஸ்டாயின் அன்னா கரினீனாவை வாசிக்க தொடங்கினேன் அதை குறித்த என் வாசிப்பனுபவத்தை உங்களுடன் பகிர இந்த கடிதம்.

“அன்னா கரீனினா ” படித்துக் கொண்டு இருக்கும் போது பெரிதாக அதை குறித்து ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் முடித்து விட்டு அதை பற்றி உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணும் போது அதில் சொல்லிய  பல சிக்கல்கள் இன்றும் இருக்கும் சிக்கல்களாக தான் இருக்கிறது என்று எனக்கு பட்டது.

அன்னா கரீனினாவை நான் இப்படி ஒரு கோணத்தில் இருத்து பார்க்கிறேன். அதாவது இது மூன்று பெண்களின் கதைகளாக. கிட்டி, அன்னா, டாலி  மற்றும் அவர்களின் கணவர்களுடனான அவர்களின் உறவு சிக்கல்கலாக. எனக்கு இப்படி யோசிக்கும் போது அது வெண்முரசில் அம்பையிடம் அவளின் மூன்று பருவங்கள் வந்து உரையாடும் அத்தியாயம் நினைவுக்கு வந்தது  அதை எடுத்து வாசித்தேன்.சுவர்ணை – குழந்தை பருவம், சோபை- இளமை பருவம், விருஷ்டி –  ஒரு அன்னையின் தேவதையின்  வடிவங்களாக வருகின்றன.

அன்னா கரீனினாவிலும் கிட்டியை ஒரு குழந்தை பருவத்து பெண்ணில் இருந்து ஒரு அன்னையாகும் ஒரு வளர்ச்சி கதையில் இருக்கும். ஆனால் அன்னா ஒரு அன்னை பருவத்தில் இருந்து ஒரு குழந்தை பருவத்துக்கு திரும்பி வரும் ஒரு வளர்ச்சி.ஆனால் டாலி மட்டும் தன் அன்னை என்ற ஒரு தகுதியில் இருத்துவிடுகிறவளாக தான் கதையில் இருக்கிறது.

முதலில் கிட்டி ஒரு குழந்தை பருவத்தில் இருந்து அவள் இளமை பருவத்திற்கு நகர்கிறாள்.விரான்ஸ்கியை காதலித்து  அவள் அடையும் ஏமாற்றம்  ஒரு குழந்தை தனக்கு பிடித்த ஒரு பொம்மையை வாங்க முடியாமல் போகும் அந்த ஒரு விரத்தியாக இருக்கிறது.அவளிடம் அந்த பொம்மையை பறிப்பவளாக அன்னா இருக்கிறாள்.

பின் கிட்டி மற்றும் லெவினின் காதல் அவள் அவனை மனதார விரும்பி திருமணம் செய்கிறார்கள் அவள் அன்னையாகிறாள்.

டாலி  அன்னாவின் அண்ணனின் மனைவி. அவர்களிடம் ஏற்படும் சிக்கலுக்காக தான் அவர்களை சேர்த்து வைக்க அன்னா வருகிறாள். டாலி தன்னை கதை எங்கும் ஒரு அன்னை என்பதில் இருந்துவிடுவித்து கொள்ளவில்லை. தன் கணவனிடம் தன் மீது காதல் இல்லாததை உணர்ந்தும் அவனை விட்டு பிரியாமல் இருக்கிறாள். தன் குழந்தைகளுக்காக மட்டுமே அவள் வாழ்கிறாள். ஒரு இடத்தில் அவளுக்கும் அன்னா போல் தன் மண உறவை முறித்து தன் இளமை காலத்திற்கு திரும்பி மீண்டும் காதலிக்க ஏங்குகிறாள் ஆனால் அவளின் நிதர்சனம்,  தான்  ஐந்து குழந்தைகளின் தாய் என்பது  அவளை அனுமதிப்பது இல்லை. அவளை ஒரு தாய் என்ற இடத்தில் மட்டுமே எங்கும்  பார்கிறோம். வெண்முரசின் அந்த அத்தியாயத்தில் ஒரு வரி ” இதயத்தின் சாறுகளான வேட்கை, விவேகம், ஞானம், என்னும் அற்பகுணங்களால் அலைக்கழிய விதிக்கப்பட்டவர்கள் ஆண்கள். கருப்பை என்னும் நங்கூரத்தால் ஆழக்கட்டப்பட்டவர்கள் பெண்கள்.”டாலிக்கு இந்த வரிகள் பொருந்தும்.

அன்னாவின் பாத்திரம் தான் மிகவும் சிக்கலான பாத்திரம். கிட்டி போல் இளமை – காதல் – அன்னை என்பதில் இருந்து விலகி. அவள் தன் இளமையில் காதலை அனுபவிக்கவில்லை தன் கணவன் கரீன்னிடம் காதல் இல்லாமல் தான் இருக்கிறாள்.ஒரு குழந்தைக்கு அன்னை ஆன பின் மீண்டும் அவள் தன் இளமையில் கிடைக்காத காதலில் திளைக்க  ஏங்குகிறாள்.ஆனால் அவளால் தன் காதலையும் தன் அன்னை என்ற தகுதியையும் ஒரு சேர சமாளிக்க  முடியாமல்  ஆகிறாள். இறுதியில் தன்னை காதலியாக  மட்டும் பாவித்துவாடுறாள்.பின் விரான்ஸ்கியுடன் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாலும் அவளால் மீண்டும்   தாய் என்ற ஒரு நிலையை அடைய முடியவில்லை அவள் விரான்ஸ்கியிடம் அவனின் முழு காதல் மட்டுமே வேண்டும் என்கிறாள். அந்த காதலின் அதீத வெளிப்பாடக அவள் அவனை குற்ற உணர்வில் ஆழ்த்த தற்கொலை செய்கிறாள்.

கிட்டி தன்னை ஒரு பதற்றமான   இளம் பெண்ணில் இருந்து  அன்னையாக மாறும் அதே வேளையில் அன்னா தன்னை ஒரு தாய் என்ற இடத்தில் இருத்து ஒரு பதற்றமான பெண்ணாக மாற்றி கொள்கிறாள்.அந்த பதற்றமான நிலையின் வெளிப்பாடே அவளின் தற்கொலை.

கிட்டி மற்றும் அன்னா இருவரும்  ஒரு இடத்தில் வேறு படுகிறார்கள். அன்னா, விரான்ஸ்கி,கரீனின் மூவரும் சந்திக்கும் ஓர் இடத்தில் கரீனின் அவர்களின் உரையாடலை வெகு இயல்பாக கடந்து போகிறான். ஆனால் கிட்டி, ஒரு இளைஞனிடம் பேசும் போது உடன் இருக்கும் லெவினால் நிலை கொள்ள முடியவில்லை அவளின் மேல் சந்தேகம் கொள்கிறான் பின் அவனை வீட்டைவிட்டு அனுப்புகிறான், தன் செயலுக்காக அவன் வருந்துகிறான்.லெவின் கிட்டி மீது உள்ள காதல் தன்னவள் மேல் அவன் கொள்ளும் அதீத காதலாக, வெளிப்படுகிறது.ஒரு வேளை  அன்னா கரீனின் இடையே ஒரு அதீத காதல் இருந்திருந்தால் அவளுக்கும் விரான்ஸ்கி மேல் காதல் வந்து இருக்காதோ?

அன்னா கரீனினா பல சிக்கல்களை கொண்ட ஒரு படைப்பு.

நான் லெவினை பற்றி அவனின் செயல்கள் பற்றி, அப்போது இருந்த அரசியல் பற்றி ஏதும் இல்லாமல் மூன்று பெண்களின் கதையாக  இதில் என் பார்வையை முன் வைக்கிறேன் உங்கள் பார்வைக்கு.

நன்றி,

சுகதேவ். 

மேட்டூர்.

முந்தைய கட்டுரைஇரா முருகனின் ‘ராமோஜியம்’ -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஒரு கதை விவாதம்