அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நேற்று மாலை ஆஸ்டினில் வெண்முரசு திரையிடல் நல்லமுறையில் நடந்தேறியது. ஆனந்தசந்திரிகை ஆசிரியரும், தங்களது வாசகருமான நண்பர் இராம்கி, அவரது மனைவி சுஜாதா, அறம் நூலின் வழி தளத்தின் வாசகியாகிய குணமொழி அவரது கணவர் ஹரி, திரைமறைவில் இதுவரை தெரியாமல் இருந்த வாசக நண்பர்கள் பாலாஜி பழனிசாமி, மூர்த்தி ஆகியோர் டாலஸிலிருந்து நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தனர்.
ஹூஸ்டனிலிருந்து நண்பர்கள் சிவசுப்ரமண்யன், சிவா அய்யனார், லாவன்யா, பாரதி கலை மன்றத்தின் சார்பாக அதன் இயக்குனர் தேவி அவரது கணவர் பிரபு மற்றும் குழந்தைகள் இஷா, குரு ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். இரண்டு பெரு நகரிலிருந்தும் நேற்று பயணம் செய்தவர்கள் ஐந்து அடிக்கு முன்னால் செல்லும் கார் கண்ணில் தெரியாத ஒரு பெருமழையின் ஊடே புகுந்து வந்திருந்தார்கள்.
ஆஸ்டின் நகர் நண்பர்களில் அலுவலக நண்பர்கள், வாசக நண்பர்கள், தமிழ் அல்லாது வேறு மொழி பேசும் நண்பர்கள் என்று எல்லாவகையினரும் ஒரு எதிர்பார்ப்புடன் வந்திருந்தனர். தமிழ் பேசாத நண்பர்கள் சிலர், விக்கிபீடியாவில், தங்களைப் பற்றியும் வெண்முரசைப் பற்றியும் வாசித்து அறிந்து, இந்தப் படம் ஒரு வரலாற்றுச் சாதனையை சொல்லவிருக்கிறது என்று தெரிந்தே வந்திருந்தார்கள்.
படம் ஆரம்பிக்கும் முன்னர், ஒரு பதினைந்து நிமிடம் அவகாசம் கொடுக்கும்படி திரையரங்கினரிடம் கேட்டிருந்தோம். எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் (அமெரிக்கா) செயல்பாடுகளை அறிவித்துக்கொள்ளவும், தொலைதூரத்திலிருந்து வந்திருந்த நண்பர்களை விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நண்பர்களின் சார்பாக மலர்ச்செண்டு கொடுத்து சிறப்பிக்கவும் கிடைத்த நிமிடங்களைப் பயன்படுத்திக்கொண்டோம்.
படம் முடிந்ததும், பலத்த கைதட்டலுக்குப்பின் பலமுனையிலிருந்தும் பல கேள்விகள் எழுந்தன. வெண்முரசு நாவல் வரிசையின் 26 நாவல்களையும் எங்கு வாங்குவது? 500,000 unique வார்த்தைகள் என்று எப்படிக் கணக்குப் போட்டீர்கள்? எந்த நாவலை வேண்டும் என்றாலும் முதலில் வாசிக்கலாமா? வெண்முரசை ஒலி வடிவில் கேட்பதற்கு என்ன செய்வது ? ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் இருக்கிறதா? திரைப்படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா? குழந்தைகள் பார்ப்பதுபோல் இதில் இருக்கும் கதைகளை அனிமேஷனுடன் கூடிய வீடியோக்களாக கொடுக்கும் யோசனை உண்டா?
அனைவரும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல திரையரங்களியே மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்தோம். அடுத்த படம் ஆரம்பிக்கவிருக்கிறது என்று திரையரங்கினர் விரட்டுவார்கள் என்பதாலேயே பிரிந்து சென்றோம் எனலாம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்