’ஆப்’

”வைஃபை பாஸ்வேர்டா? ’தின்னுட்டுகிளம்பிப்போடா’ எல்லாம் ஸ்மால் லெட்டர்ஸ்”

இதழியல் நண்பர் ஒருவர் சொன்னார். ”மலையாள மனோரமா நாளிதழுக்கு ஒரு சாஃப்ட்வேர் தயாரிக்கிறார்கள். நூறாண்டுகால மலையாள மனோரமாவின் செய்திகளைக்கொண்டு அதை ஓர் ஆப் ஆக மாற்றுகிறார்கள். இணையத்தில் மனோரமாவுக்கு உகந்த டேட்டாக்களை அதுவே தேடி தன்னைத்தானே ஃபீட் பண்ணிக்கொண்டு அதுவே செய்தித்தாளின் பக்கங்களாக படங்களுடன் காட்டும். அதை தயாரித்தபின் அத்தனை செய்தி ஆசிரியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்”

மெய்யான சோகநடிப்புடன் அவர் சொல்ல, நான் நம்பிவிட்டேன். வாய்பிளந்து  அங்கே ஸ்மால் அடித்துக் கொண்டிருந்தவர்ளைப் பார்த்தேன். [கேரளத்தில் இவர்களுக்கு தும்பைப்பூ என்று பெயர். கொஞ்சமே மணம்கொண்ட சின்னபூக்கள். லிட்டில்ஃப்ளவர் கான்வெண்டுகளில் இருந்து இந்தப் பழக்கம் வந்தது என்பதனால் என்றும் ஒரு பாடம் உண்டு] 

”அதுக்குபேருதான் புத்தகம் வாசிக்கிறது. அந்தக்காலத்திலே அப்டித்தான் மூளையிலே புதிய சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிக்கிட்டாங்க.”

இன்னொரு இதழியல் நண்பர் [அவர் தும்பை அல்ல தாமரை. சதா நீரில் மிதப்பதனால். தண்ணீரிலே தாமரைப்பூ, தள்ளாடுதே அலைகளிலே என இதை கவிஞர் பாடியிருக்கிறார்] மேலும் சோகமாக “அப்படி ஒரு சாஃப்ட்வேர் வந்தால் அதை அப்படியே காங்கிரஸ் கட்சியும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாளாந்த அரசியலறிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் எல்லாமே ஆட்டமாட்டிக் ஆகிவிடும்”

அதன்பிறகுதான் பகடி என தெரிந்து மையமாகப் புன்னகைசெய்து வைத்தேன். கவிதைக்கெல்லாம் தமிழில் சாஃப்ட்வேர் இருப்பது சிலருடைய கவிதைகள் வழியாக நான் ஏற்கனவே ஊகித்ததுதான். இந்நாளில் எதுவும் சாத்தியம். சொற்களை கவிதையாக ஆக்கும் ஒரு சாப்ட்வேர் பரவலானால் அது மிக அபாயகரமானது. அதை தீவிரவாதக்குழு ஒன்று கைப்பற்றி உலகிலுள்ள மொத்த மொழியையும் கவிதையாக ஆக்கிவிட்டதென்றால் என்ன ஆகும்? பொருள்மயக்கம், புரிதல்பிரச்சினை, போர்கள், பேரழிவு! ஓர் அற்புதமான அறிவியல்நாவலுக்கான கரு.

”புதிய சாஃப்ட்வேருக்கு இணையா நான் என் மூளையை அப்டேட் பண்ணிக்கிடணுமாம். இல்லேன்னா வேலைசெய்யாதாம்”

தொழில்நுட்பம் பற்றிய காமெடிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. பாதிக் காமெடிகள் தொழில்நுட்பர்களுக்கு மட்டும் புரிபவை. எஞ்சியவற்றில் பெரும்பகுதி சில பொது ‘டெம்ப்ளேட்’கள் கொண்டவை. மௌஸ், வின்டோஸ், கிளவுட் போன்ற கணினித்துறைச் சொற்களை நேரடியாக எடுத்துக்கொண்டு குழம்புவதுதான் நகைச்சுவைகளில் பெரும்பகுதி. கணித்துறையின் நவீனமயமாக்கலுடன் இணைய முடியாது குழம்பும் சாமானியர்களின் திகைப்பு இரண்டாம்வகையானது.

கடவுள், சொர்க்கம் போன்ற கருத்துருவங்களையும் தொழில்நுட்பத்தையும் குழப்பிக்கொள்வது மூன்றாவது டெம்ப்ளேட்.புதிய தொழில்நுட்பமும் பழைய தொழில்நுட்பமும் முட்டிக்கொள்வது நான்காவது டெம்ப்ளேட். பெரும்பாலான ஜோக்குகள் இந்த டெம்ப்ளேட்டுக்கள் சிறிய சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை.

”பாட்டீ! நாங்க வந்துட்டோம்!”

ஆனால் டெம்ப்ளேட் என்பது உண்மையில் அவ்வளவு எதிர்மறையானது அல்ல. பின்நவீனத்துவப் பார்வையில் அது இல்லாமல் எதையும் எவராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் ஒரு முன்னோடி வடிவம் இருக்கும். சொல்லப்படும் ஒவ்வொன்றும் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றின் விரிவாக்கம்,நுண்மையாக்கம்,தலைகீழாக்கம் ஆகிய மூன்றில் ஒன்றாகவே இருக்கும்.

கதைகளுக்கும் இது பொருந்தும். பொதுவாக நிறையவாசிப்பவர்கள், இலக்கிய விமர்சகர்கள் கதைகளில் முற்றிலும் புதுமை இயல்வதே அல்ல என்பதை அறிவார்கள். எந்த ஆக்கத்துக்கும் உடனடி முன்னோடியை கண்டடைய முடியும். அதன் புராணகாலத் தொடக்கம் வரைச் செல்லவும் முடியும். அந்த டெம்ப்ளேட் மனித மூளையின் அமைப்பிலும் மானுட அனுபவத்தின் சாத்தியங்களிலும் உள்ள எல்லைதான். இப்படித்தான் நிகழமுடியும், அதை இப்படித்தான் அறியவும் முடியும்.

”திட்ட வரைவாளர் அலுவலகம்”

இந்த டெம்ப்ளேட்டுகளுக்குள் நிற்கும் நகைச்சுவைகளில் நாம் ரசிப்பது இரண்டு. ஒன்று அந்த டெம்ப்ளேட்டை சற்றே மீறி அது சென்றடையும் புதிய ஒரு பார்வை. புதிய கோணல் என்றும் சொல்லலாம். அந்த ஜோக் இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்து எதிர்பாராத இடத்தில் நிகழும் திறப்பினால் வியப்படைந்து சிரித்துவிடுகிறோம்.

இன்னொன்று, அந்த டெம்ப்ளேட் அப்படியே நிகழ்வது உருவாக்கும் மகிழ்ச்சி. டெனிஸ் தி மெனாஸ் அல்லது கால்வின் ஹோப்ஸ் கார்ட்டூன்களில் அந்த குட்டிப்பயல்களின் குணச்சித்திரம் நமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் என்ன செய்வார்கள், சொல்வார்கள் என்று தெரியும். அதையே அவர்கள் செய்யும்போது நாம் மலர்ந்துவிடுகிறோம். அது மனித இயல்பின் ஒரு மாறாத அம்சத்தை, அல்லது இங்குள்ள வாழ்க்கையின் ஒரு மாறாதகூறை நமக்குக் காட்டுவதாக எண்ணிக்கொள்கிறோம்.

”இல்ல, இன்னிக்கு நான் வர்க் ஃப்ரம் ஹோம்”

நம் உலகியல்செயல்பாடுகளில் எல்லாமே ஓர் அபத்த அம்சம் உண்டு. அது முழுக்க உலகியலில் மூழ்கியிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை என்பதுதான் அதில் மிகப்பெரிய அபத்தம். கொஞ்சம் யோசிப்பவர்கள் விலகிநின்று பார்க்கையில் அந்த அபத்தத்தை உணர்கிறார்கள். அவர்களுக்குரியதாகவே பெரும்பாலான மென்மையான நகைச்சுவைகள் உள்ளன. உலகியலாளர்களுக்கு அவர்கள் புழங்கும் உலகியலில் எவரையேனும் மட்டம்தட்டுவதோ கேலிசெய்வதோதான் நகைச்சுவை என்று தோன்றும்.

உலகியல்செயல்பாட்டின் அபத்தத்தைச் சுட்டும் நகைச்சுவைகளை வாசிக்கையில் உலகியலாளர்கள் திகைப்பது ஒரு பெரியவேடிக்கை. ‘இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது?” என்பார்கள். உண்மையில் அவர்கள் அந்த நகைச்சுவையை அன்றாட யதார்த்தமாகவே எடுத்துக்கொண்டு புழங்கிக்கொண்டிருப்பார்கள். ‘எங்கள் ஆபீஸில் ஜிபிஎஸ் இல்லாம வழிகண்டுபிடிக்க முடியாது’ என்று சொல்லிப்பாருங்கள் ‘அப்டியா? அவ்ளவு பெரிய ஆபீசா’என்று சாதாரணமாகக் கேட்பார்கள்.

”உள்ள நுழையறதுக்கு முன்னாடி ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும்”

இதேதான் wit எனப்படும் சொற்பகடிக்கும். தாங்கள் பேசும் மொழியை கவனிப்பவர்களால்தான் அவற்றை ரசிக்கமுடியும். பெரும்பாலானவர்களின் இயல்பு அது அல்ல. ஆகவேதான் ஒரே வகையான சொற்றொடர்களை சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப பயன்படுத்துகிறார்கள். ஒரே வடிவேலு காமெடிச் சொற்றொடரை நாளுக்கு நாற்பது முறை கையாள்கிறார்கள். என்னிடம் எவராவது ’ஆணியே புடுங்கவேண்டாம்’ என்றெல்லாம் பேசினால் அவரை அடுத்த முறை சந்திப்பதை தவிர்த்து சுற்றிப்போய்விடுவேன்.

விட் என்பது நாம் பயன்படுத்தும் சொற்களுக்கும் பொருளுக்கும் இடையே உள்ள உறவின் தற்செயல்தன்மையை வைத்து விளையாடுவது. [தமிழ் மொழி ஒன்றில்தான் போய்க்கொண்டே இருக்கமுடியும் -அசோகமித்திரன்] மொழி எத்தனை மேலோட்டமாக விஷயங்களைச் சொல்கிறது என்ற திகைப்பு அதிலுள்ளது. அத்துடன் ஒலிகளின் பொதுத்தன்மை சொற்களை எப்படி அபத்தமாக ஆக்குகிறது என்னும் திகைப்பு.

”உங்க இதயத்திலே பேஸ்மேக்கர் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. லிவர் கிட்னி எல்லாத்துக்குமான எல்லா ’ஆப்’களையும் நீங்களே அதிலேயே டௌன்லோடு பண்ணிக்கலாம்”

மலையாளத்தின் முதன்மையான நகைச்சுவை எழுத்தாளரான விகேஎன் இந்த சொற்பகடியில் விளையாடுபவர். அதை ஒரு ‘பிரக்ஞைபூர்வமான கிறுக்குத்தனம்’ என்று சொல்லலாம். சொற்பகடியின் முக்கியமான அம்சம் என்பது அது சரளமாக வந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது. அடிக்கோடிட்டுச் சொல்லக்கூடாது.

நான் திருவனந்தபுரத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் சென்றிருந்தேன். காண்டீனில் இருக்கையில் நண்பர் ஒருவரைச் சுட்டிக்காட்டி பேசிக்கொண்டே போனார். “இது நெல்சன் தி ஆப்மான். ஆளு மிடுக்கன். இங்க எல்லா தொழில்நுட்பமும் இவன்தான். ஆனா போனவாரம் மேனேஜருக்கு ஒரு ஆப் வைச்சான்…நெல்சா, ஒரு ஆப்பம் கடலைக்கறி சொல்லுடா” அரைமணிநேரத்திற்குள் ஆப் என்னும் சொல் முற்றிலும் அர்த்தமிழந்து திகைத்து நின்றிருந்தது.

“இவளோட பாஸ்வேர்ட்ஸ்தான் நாம”

தொழில்நுட்பத்தின் பெரிய நகைச்சுவை என்பது ஒரு கயிறு இழுக்கும்போட்டிதான் என நினைக்கிறேன். மனிதர்கள் இயந்திரங்களை மனிதர்கள் போல ஆக்க முயல்கிறார்கள். இயந்திரங்கள் மனிதர்களை இயந்திரங்கள்போல ஆக்க முயல்கின்றன. டைப்பிஸ்டுகளை பார்த்தாலே நமக்கு டைப்பிஸ்டுகள் என்று தெரியும். டைப்ரைட்டரின் ஏதோ ஒரு அம்சம் அவர்களிடமிருக்கும்.

அப்படிப்பார்த்தால் இன்றைக்கு உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையும் செல்போன்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒரு செல்போனில் இப்போதெல்லாம் நூறு ஆப்கள் வரை இருக்கின்றன. அதிலொரு ஆப்தான் அதன் உபயோகிப்பாளர் என்று சொன்னால் பிழையாக இருக்குமா என்ன?

”ரெண்டு செகண்டுக்கு ஒருவாட்டி ஃபோன் பாக்காம இருக்க இந்த ஆப் ரொம்ப உதவியா இருக்கு”

முந்தைய கட்டுரைஎஸ்.என்.நாகராஜன் -அஞ்சலிகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு, ஆஸ்டின்- பதிவு