கதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 3

அன்புள்ள ஜெ.,

திரையில் வண்ணங்களை வாரியிறைத்து, வழிந்துவரும் தாரையை கத்தியால் நீவி ஓவியம் வனைந்தெடுக்கும் கே.எஸ்.புணிஞ்சித்தாயா என்ற மங்களூர் ஓவியரைப் பற்றி சிலநாட்களுக்கு முன் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். உங்கள் கதையில் மூன்று வண்ண விசிறல்கள்.  எழுத்தாளர் ஃப்ரான்ஸெஸ் பர்னியைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் மற்றும் அவள் எழுதிய கதைஉருவான கதை ஒரு விசிறலென்றால் – ஈவ்லினா, ஆர்வில் பிரபு, ரெவெரென்ட் வில்லர் என்று கதாபாத்திரங்கள் புழங்கும் அவளுடைய  History of a Young Lady’s Entrance into the World நாவல் (இணையத்தில் உள்ளது) மற்றொன்று – ஹெலனா, மெக்கின்ஸி, கர்னல் சாப்மான் என்று அவர்களுக்குச் சமமாக கதைசொல்லியின் புனைவில் தோன்றும் கதாபாத்திரங்கள் பிறிதொன்று.

இந்த வண்ணவாரியிறைப்பில் சிக்கிக்கொண்ட சிறு பூச்சியே கதைசொல்லி. இந்த பலவண்ண வழிசல்களின் முடிவில்லா சாத்தியக்கூறுகள் வழியே முகிழ்ந்தெழுந்ததே உங்கள் ‘அமானுஷ்ய’ உளவியல் நாவல். கோரன், துப்பன், உச்சன், காபிரியேல் நாடார் என்று கதைசொல்லியோடு நடமாடும் ரத்தமும் சதையுமான பாத்திரங்கள். இதையும் சேர்த்துக்கொண்டால் நான்கு வர்ணவீச்சுக்கள்.  வாசகனுக்கான ஆகப்பெரிய சவால் என்னவென்றால் எங்கு ஒரு வர்ணத்தின் வீச்சு குறைந்து அடுத்த வர்ணத்தின் வீச்சு ஆரம்பிக்கிறது என்று கண்டுகொள்வது.

மின்சாரவாரியத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற எண்பது வயதான என் உறவினர் ஒருவர் கூறியிருக்கிறார் ‘அப்பர்’ கோதையாறில்  ‘டன்னல்’ தோண்டும்போது எலும்புக்கூடும், மண்டையோடும் நிறைய பார்த்ததாக. சரியான இடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள்.

‘விர்ஜீனியாவும் ஆப்பியஸும்’ எழுதிய ‘அப்பா கிரிஸ்ப்’ பர்னியை பாதித்த முக்கியமான ஆளுமை. அதே ‘விர்ஜீனியாவும் ஆப்பியஸும்’ பற்றித்தான் சாப்மான் ஹெலெனாவிடம் உரையாடுகிறார். நாவலில் உள்ள விர்ஜீனியாவின் கௌரவக் கொலையை நியாயப்படுத்துகிறார். கடைசியில் ஹெலனா சாப்மானுக்குக் கொடுத்த ‘மரணஉதை’க்குக் காரணம் இதுதானா? ‘எதிர்பாராத கணத்தில் இயல்பான அசைவுபோல நீண்டுவந்து என் மார்பைப் பற்றிக் கசக்கி மீண்ட கை’ என்று ஈவ்லினா குறிப்பிடுவது யாருடைய கையை.

புலியின் பொன்னிற உடலின் அழகையும், அதன் அரச கம்பீரத்தையும் சாப்மான் ஹெலெனாவிடம் வருணிப்பதையும் பின் அதேமூச்சில் “துப்பாக்கி வேட்டின் ஓசை போதும், அக்கணமே அது அஞ்சிய பூனையாக ஆகிவிடும். அது பதறியடித்து ஓடுவதை நீ பார்க்கவேண்டும். நாம் துரத்திச் சென்றால் அது தன் வளையை அடைந்து பதுங்கி அமர்ந்துகொண்டு முகத்தைச் சுளித்து மீசை விடைக்க வெண்பற்களைக் காட்டி சீறும். அது ஒரு அபத்தமான சிரிப்பு போலிருக்கும். அஞ்சியவர்கள் வீராப்பு காட்டும்போது வரும் சிரிப்பு அது.”    என்று புலிவேட்டையைப் பற்றிச் சொல்லுவதை புலிமட்டும் படிக்க நேர்ந்தால் கண்ணீர் விட்டிருக்கும்.  அப்பாவிக் குரங்குகளைச் சுட்டுத்தள்ளும் சாப்மான் அதற்குக் கொடுக்கும் விளக்கம் கொடூரத்தின் உச்சம். மனிதர்களையே அப்படித்தானே கொன்றார்கள்.

தலையிலே பாளையிட்ட எளுத்து என்று ‘இ’ யைச் சொல்வதும், சிரிக்குன்ன வீடு என்று கதவு திறந்திருக்கும் வீட்டைச் சொல்வதுமான காணிக்காரர்களின் ஒப்பீடுகள் சிரிப்பை வரவழைப்பவை. உயர்தர மொராக்கோ தோல் சிம்மாசனம் பொருத்திய ஃபீட்டன் ரக சாரட் வண்டிகள், பாரஃபின் விளக்குகள், வெள்ளையர்களின் உடல் மொழிகள், மெய்ப்பாடுகள் என்று நீங்கள் தரும் நுண்விவரணைகள் அபாரம். ஏதோ பதினெட்டாம்நூற்றாண்டு வெள்ளைக்கார எழுத்தாளரின் ஆவி உங்களில் இறங்கி எழுதியது போல இருந்தது.

காட்டைப் பற்றி எழுதும்போது காணிக்காரராக மாறிவிடுகிறீர்கள். ‘ரீ என்னும் ஒற்றை ஓசையால் காடு சூழ்ந்து திகழ்ந்துகொண்டிருந்தது. அது ஆர்கனின் c2 போல முடிவில்லாமல் சுருளவிழ்ந்து செல்லும் ஓசை’ ஒலி வடிவமான காட்டை விளக்க இதற்குமேல் வார்த்தைகள் இல்லை. கதைசொல்லி இப்போது எந்தக்கதையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று கண்டுகொள்வது வாசகனாக எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி எழுத்துருக்களைப் பயன்படுத்தியிருந்தது நல்ல உத்தி. ‘Raising the bar’ என்பார்கள். அதை நீங்கள் இந்நாவலில் அத்தியாயத்திற்கு அத்தியாயம் செய்திருக்கிறீர்கள். வாசகனுக்கு சவால்விடும் இன்னொரு தனித்துவமான சாதனைப்படைப்பு.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம், இன்று இரவு நீங்கள் கதாநாயகியின் கடைசி பதிவை பதிவேற்றம் செய்ததுமே படித்துவிட்டேன். மிக அருமையான கதை. அதுவும் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தினமும் நான் லண்டனுக்கும் கொன்னமேட்டுக்கும் கோதையாறுக்கும் 30 வருடங்களுக்கு முன்னால் இருந்த காலகட்டத்தில் “கதாநாயகி”  வழியாக பயணம் செய்து கொண்டிருந்தேன். சொல்ல போனால் லண்டனுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால். மெய்யன் பிள்ளை, கோரன், துப்பன், உச்சன், காபிரியேல் நாடார், ஹெலெனா, கர்னல் சாப்மான், காப்டன் மெக்கின்ஸி என தொடர்ந்து 7 நாட்கள் என்னுடன் இருந்த நபர்கள் எல்லோரும் விடைபெற்று சென்றார்கள். பதினைந்தாவது பதிவில் கதை நிறைவு பெற்றாலும் நான் கொஞ்சம் பேராசையோடு பதிவின் கடைசியில் மேலும் என்றிருக்கிறதா இல்லை நிறைவு என்றிருக்கிறதா என்று பார்த்தேன். “நிறைவு”யை பார்த்துவிட்டு எனக்குள் நானே சிரித்துக் கொண்டு நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தேன்.

ஜனனி ஆர்

***

அன்புள்ள ஜெ

கதாநாயகி நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து முழுக்கவே விடுவித்துக்கொண்டு எழுதிய கதை. பழைய கதைகளின் எந்தச் சாயலும் இல்லை. தலைமுறை தலைமுறையாக, சரித்திர காலம் முதலிருந்தே நீளும் ஓர் அடக்குமுறையின், சுரண்டலின் கதை. அது வந்து முடியும் உச்சம். அதிலிருந்துதான் கதை தொடங்குகிறது. அந்த புத்தகம் அதன் சாட்சி. அங்கிருந்து சுற்றி அதையே வந்தடைந்து நிற்கிறது.

விர்ஜீனியாவை கொல்கிறார்கள். ஃபேன்னியும் ஈவ்லினாவும் ஹெலெனாவும் சுரண்டப்படுகிறார்கள். ஆழமாக அவமதிக்கப்படுகிறார்கள். அல்லது அவமானம் அடைகிறார்கள். ஆனால் அவர்களின் சர்வைவலுக்கு அதற்கு உடன்படவேண்டியிருக்கிறது. அது அளிக்கும் ஆழமான கசப்பு அவர்களுக்கு உள்ளது. அதிலிருந்து ஃபேன்னி ஒருவகையில் வெளியே வருகிறாள். ஈவ்லினா இன்னொருவகையில் வெளியே வருகிறாள். ஹெலெனா ஒருவகையில் வெளியே வருகிறாள்.

இத்தகைய கதைகளில் ஹெலெனா கொல்லப்படுவாள். பழிவாங்க காத்திருப்பாள். நான் கதையை அப்படித்தான் எதிர்பார்த்தேன். அது வந்து முடிந்த விதம் ஆச்சரியமானது. ஆனால் அதுதானே நியாயமானது என்றும் சொல்லவைத்துவிட்டது கதை.

அடுக்கடுக்காக விரியும் ஐரோப்பிய வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டுவரை பெண்ணின் இடமென்ன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. விர்ஜீனியாவில் தொடங்கி ஹெலெனா வரை. ஹெலெனா விடும் அந்த உதைதான் பதினெட்டாம்நூற்றாண்டின் திருப்புமுனை. அங்கிருந்து கதையை நீட்டிச்சென்று மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் ஃப்ரான்ஸெஸ் பர்னி அடையும் விடுதலைக்களியாட்டம் வரை நீட்டலாம்.

எம்.சந்திரசேகர்

***

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 2
கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1
முந்தைய கட்டுரைஎஸ்.செந்தில்குமாரின் ‘’கழுதைப்பாதை’ – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைரிச்சர்ட் பார்லெட் க்ரெக் , சில எண்ணங்கள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி