இனிய ஜெயம்,
இந்த 2020 இலும் கூட்டுக் குடும்ப வாழ்வு கொண்ட சொந்தங்கள் வசமிருந்தும், வேறொரு கூட்டுக் குடும்ப வாழ்வான நண்பர்கள் என்ற உறவுகள் வசமிருந்தும் அனேகமாக நாளுக்கொரு துயர செய்தி என்று வந்த வண்ணம் இருக்கிறது.
கலையில் ஈடுபாடு இருந்து, பின்னரும் துயர் கொண்டோர் செய்வதற்கு உள்ளதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மூன்று நாள் உண்ணாமல் உறங்காமல் துயர் காத்துவிட்டு, அழுது தீர்த்துவிட்டு, அத்துடன் முற்ற முடிவாக உங்களை இறந்த காலத்துடன் இருந்து துண்டித்துக் கொண்டு, இன்றைய நாளில் நிலைத்து விடுவது.
முடிந்த வரை கைகளால் அல்லது முழு உடல் ஆற்றல் கொண்டும் செய்ய முடிந்த ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடுவது. ஹரிப்ரஸாத் செளராஸ்யா குழல் இசை போல எண்ணங்களை நனைந்து படிய வைக்கும் ஏதேனும் ஒன்றை செவிக்கு அளிப்பது. இக்கணம் இழந்த நமது இறந்தகாலம் கிளர்த்தும் துயர் கடல் எனும் மாயையை, அதை துளி என்றாகும் ஏதேனும் செவ்வியல் புனைவுகளில் மீண்டும் தோய்வது. உதாரணம் பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது. பைரப்பாவின் சொந்த வாழ்வே ஒரு கடல் தான். ஓநாய்ப் பசியுடன் மீண்டும் இலக்கியக்துக்கு மீளுங்கள் என்று மட்டுமே சொல்வேன். நிகர் வாழ்வில் இருந்து தப்பிக்க இலக்கியத்துக்குள் முகம் புதைக்கும் வேலை இல்லை இது. காரணம், இலக்கியமும் வாழ்வும் வேறு வேறல்ல. இலக்கியத்திலிருந்தும் கலைகளிலிருந்தும் வாழ்வுப் பயணத்தை மீண்டும் துவங்குவோம்.
உண்மையில் இந்த நாட்களில் கனவுகளில் வீறு கொண்டு எழுகிறார்கள் நஞ்சம்மா சென்னிகராயர் என பற்பலர். அவர்கள் எல்லாம் இன்று இந்த நோய் வெளியில் வெவ்வேறு ரூபம் கொண்டு மீண்டும் பிறந்து வந்திருக்கிறார்களா என்ன? செய்திகள் வந்து தொட்டு, எண்ண எண்ண எழுந்து எங்கெங்கோ பறக்கத்துவங்கும் எண்ணங்களை மீண்டும் புனைவுகளில் கொண்டு தளைக்கிறேன். சமீபத்தில் படித்த புனைவுகளில் இரண்டு குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. முதலாவது எஸ். செந்தில்குமார் எழுதிய கழுதைப்பாதை எனும் நாவல்.
போடி பகுதியில் கழுதையில் சுமைகளை மலை ஏற்றி இறக்கும் குழுக்கள் ஒன்றின் இரண்டு தலைமுறை வாழ்வை சித்தரித்து கிட்டத்தட்ட 1950 வாக்கில் நிறையும் நாவல். 300 கழுதையை வைத்து மேய்த்து, மலை மேல் இருக்கும் செட்டியார்களின் காப்பி தோட்டத்து சுமைகளை கிழே தரைக்கு கொண்டு வந்து சேர்க்கும் தொழிலில் இருக்கும் மூவண்ணா பெருமாள், மற்றும் அவரது தம்பி சுப்பண்ணா இருவரின் எழுச்சி வீழ்ச்சிக்குப் பகைப்புலமான வாழ்க்கைத் தருணங்களை சித்தரிக்கும் புனைவு.
கிட்டத்தட்ட 100 ஆட்களை வைத்து மலை மேல் சுமை ஏற்றி இறக்கும் முத்துசாமி நாயக்கன் அவன் வசம் தணிந்து போக விரும்பாத காப்பி தோட்ட முதலாளி செளடையா செட்டியார், தரையில் இருந்து மலை தோட்டத்துக்கு கழுதைகளை கொண்டு சுமை ஏற்ற (அதற்கு புதிய பாதை போடப்பட்ட வேண்டும்) மூவண்ணா சகோதரர்களின் அப்பா முத்தனை அணுகுகிறார். முத்துசாமி நாயக்கனின் தொழிலை முடித்து மேலேறி வரும் மூவண்ணா வாழ்க்கை சுழிப்பின் இறுதியில் தனது தொழிலை இழந்து வெறும் கையுடன் போடிப்பட்டியை விட்டு வெளியேறுகிறார்.
மலையின் முதுவா குடிக்கும் தரை காட்டு குடிகளுக்கும் இருக்கும் சாதிய ஏற்ற தாழ்வு, சுமை கழுதை முதலாளிகளுக்கும், சுமை அடிமை முதலாளிகளுக்கும் உள்ள முரண், காப்பி தோட்ட முதலாளிகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான ஆண்டான் அடிமை உறவு, போன்ற பல்வேறு இருமை நிலைகள் வழியே சுழிக்கிரது இந்த நாவல் சித்தரிக்கும் வாழ்வு.
முதுவாகுடிக்கு கங்கம்மா ராகப்பன் சாமிதான் கண்கண்ட தெய்வம். சுமை கழுதை முதலாளிகளும் கழுதைகள் காலிடறி பள்ளத்தில் விழாமலோ, சொன்னாய் போன்ற மிருகங்களின் இடைஞ்சல் வராமல் இருக்கவும், திருடர்கள் குறுக்கே வராமல் இருக்கவும் கங்கம்மாவை வழிபட்டபிறகே கழுதை பாதைக்குள் காலடி எடுத்து வைப்பார்கள்.
நாவலின் போக்கில் தர்மன் பச்சைக்கிளி இணையர் வழியே முதுவா குடியின் திருமணம் முதல் உணவு கலாச்சாரம் தொடர்ந்து இறப்பு சடங்குகள் வரை விவரிக்கப் படுகிறது. வரலாற்றுப் போக்கில் அந்த மலை எவரெவர் ஆட்சியின் கீழ் வந்தது, அதில் காபி தோட்ட செட்டியார்கள் நிலைத்த விதம், காட்டின் தெய்வத்தின் கதைகள் தொன்மக் கதைகள் எல்லாம் நாவலுக்குள் செவ்வந்தி போன்ற கதை சொல்லிகள் வழியே பேசப் படுகிறது. இவர்களுடன் பின்னிப் பிணைந்ததே சுமை கழுதை முதலாளிகள் வாழ்வு.
மொத்த நாவலும் துரோகங்களின் தருணங்கள் வழியாகவே நகர்கிறது. மலைக்காட்டு ராக்கப்பன் தரைக்காட்டு கங்கம்மா காதலுக்கு முதுவாக்குடி செய்யும் துரோகம், முத்துசாமி நாயக்கனின் தொடுப்பான வெள்ளையம்மா, தெம்மன்னாவுக்கு செய்யும் துரோகம். முலையில் நஞ்சு தடவி முத்துசாமி நாயக்கனுக்கு செய்யும் துரோகம். நாயக்கணின் மனைவி நாகவல்லி, நாயக்கனின் செல்வாக்கு பணம் அடிமைகள் மீதான அதிகார மோகத்தில் ஏர்ராவுக்கு இழைக்கும் துரோகம்.
சுப்பண்ணா தனது அண்ணி உடனான உறவு வழியே அண்ணனுக்கு இழைக்கும் துரோகம். சுப்பண்ணனின் இரண்டாவது மகன் மணிப்பயல் சரசு வுக்கு செய்யும் துரோகம். என இந்த நாவலின் ஒட்டுமொத்த செயற் களத்தையும் முன் நகர்த்தும் விசை என காமமும் பிறழ்உறவுகளும் துரோகமும் அமைகிறது. இந்த துரோகத்துக்கு இது என தனக்கான விதி வந்து பற்றும் சூழல் ஒவ்வொன்றிலும் அந்த பாத்திரங்கள் அதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறது.
நாவலுக்குள் சொல்லப்படும் பல கதைகளில் ஒன்று ராவுத்தர் ராஜா முகமது கதை மொத்த நாவலின் வாழ்க்கை பார்வையையும் திரட்டி ஒரே அத்தியாயத்தில் நிகழும் கதை. அடுத்த கதை 100 அடிமைகளும் வருடம் ஒரு முறை கிடைக்கும் இட்லி சாம்பார் எனும் ‘பெரு விருந்துக்காக’ எச்சில் இலை போடும் இடம் அருகே வரிசையாக குத்தவைத்து அமர்ந்து காத்திருக்கும் கதை. இறுதி அடிமை வரிசையின் முடிவுக்கு இட்லி வராமல் தீர்ந்து போகுமோ எனும் பதட்டத்தில் ‘எனக்கு இட்லி வேணும்’ என பெருங்குரலெடுத்து அழுகிறான். இறுதியிலும் இருதியாக கொஞ்சம் குடிக்க சாம்பார் கேட்ட வகையில், அத்தனை பேரும் கொதிக்கும் சுடுநீர் குளியல் வாங்கி உடல் வெந்து ஓடுவதில் முடிகிறது அந்த விருந்து. காட்டுத் தீயில் மொத்த சுமை கழுதைகளும் நகர முடியாமல் நின்ற இடத்திலேயே எறிந்து அடங்கும் நாவலின் இறுதி அத்தியாயம் தமிழ் கண்ட யதார்த்தவாத நாவல்களின் சித்தரிப்புகளின் வரிசையில் ஒரு இணையற்ற தருணம் என்பேன்.
இச்சைகளால் அலைக்கழிந்து காம க்ரோத மோகங்களின் விசையால் சுண்டி எறியப்பட்டு வெறுமையின் சரிவில் இறங்கி பாழில் சென்றொடுங்கும் வாழ்வை சித்தரித்துக் காட்டும் இந்த நாவல் நல்ல வாசிப்பனுபவம். அழுத்தமான பதிவை உருவாக்குவது. ஆயினும் சற்று இலக்குதவறியது என்றும் சொல்லலாம்.
காரணம் நாவலுக்குள் தொழிற்படும் வடிவ போதம். உத்வேகமான ஓட்டமும் கச்சிதமான வடிவமும்தான் (320 பக்கம்) இந்த நாவலின் அடிப்படைத் தடை. நிலத்தை சித்தரித்துக் காட்டுவதில் உள்ள முப்பரிமாணத் தன்மையை நாவல் பொழுதுகளையும் சீதோஷ்ண நிலைகளையும் சித்தரிப்பதில் தவறி விடுகிறது. அந்த மலையும் தரையும் கோடையில், மழையில், வேனிலில், குளிரில், எப்படி இருக்கும், ஒவ்வொரு பருவ காலத்திலும் காலையும் மாலையும் இரவும் எப்படி இருக்கும் என சீதோஷ்ண நிலைகளை வாசகர் இக் கணம் தனது சருமத்தால் உணரும் நிலையை அளிக்க நாவல் தவறி விட்டது.
எனவே இந்த நிலமும் பொழுதும் மனிதரில் கிளர்த்தும் உணர்வு சித்தரிப்புகள் என நாவலுக்குள் எதுவுமே இல்லை. மனிதர்களை அவர்களின் உணர்வு நிலைகளை வாழ்க்கை தருணங்களை சித்தரித்துக் காட்டும் இப் புனைவு, ‘வெறுமனே சித்தரித்துக் காட்டி’ அங்கேயே நின்று விடுகிறது. தனித்துவம் மிளிரும் மனித நடத்தைகள், மனித அகத்தின் ஆழத்திலிருந்து எழுந்து வெளிப்படும் நாமறியா மனோ நிலைகள் என ஏதும் இல்லை. உதாரணமாக ஒரு குடும்பம் சிதைக்கிறது நாவலின் இறுதியில் சென்னிகராயர் தனது மகன் விசு தன்னை விட்டு இந்த ஊரைவிட்டுப் போவதை வெறுமனே பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருப்பார், அவருக்கு விசுவை அழைக்க தோன்றும் ஆனால் வாயில் உள்ள தாம்பூலம் தடுக்கும். எத்தனை தீவிர தருணம், இப்படி எத்தனையோ தருணம் நிகழ சாத்தியம் உள்ள இந்த கதைக் களம் அந்த சாத்தியங்களை தவற விட்டிருக்கிறது.
ஒரு குடும்பம் சிதைக்கிறது போலவோ, மீஸான் கற்கள் போலவோ மண்ணையும் மனிதர்களையும் வலிமையாக சித்தரித்து இந்திய செவ்வியல் நாவல் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய ஒரு நாவல், வடிவத்தால் எல்லை கட்டப்பட்டு, அதன் காரணமாக நிகழ வேண்டிய கற்பனைகள் எல்லை கட்டப்பட்டு, அதன் காரணமாக நாவல் கலை சென்று தீண்ட வேண்டிய உள்ளுணர்வின் ஆழத்தை சென்று தீண்டத் தவறி விட்டது. ஆயினும் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான புனைவு என்றே இந்த நாவலை மதிப்பிட முடிகிறது.
கடலூர் சீனு