ஒரு கதை விவாதம்

பிரிவு

 

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

உங்கள் கதையை வாசித்தேன். பிரிவு

உங்கள் வாசிப்பில், எழுத்தில் வந்துகொண்டிருக்கும் வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நாம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகின்றன. உங்கள் கடுமையான உடலுழைப்புவேலையின் பின்னணியில் இருந்து இலக்கியத்திற்கும் எழுத்துக்கும் வருவதிலுள்ள இடர்கள் என்ன, அதன் தொலைவு என்ன என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்தக் கதை எனக்கு முக்கியமானது, ஒருவகையில் மகனை சான்றோன் எனக்கேட்ட தாயின் மனநிலையை அளிப்பது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதத்தொடங்கியிருப்பது மிக முக்கியமானது. வேறு எதற்காக இல்லையென்றாலும் உங்களுக்காக எழுதுங்கள். எழுத்து உங்களுக்கு அளிப்பவை பல. முதலில் உங்களுக்கு அது ஒரு பெரிய விடுதலையை அளிக்கும். உங்கள் அன்றாடத்தின் சலிப்பான இடைவெளிகளை எல்லாம் நிரப்பிவிடும். ஒவ்வொருநாளும் செய்வதற்கு ஏதாவது இருக்கும். மனிதன் வாழ்க்கையை கற்பனையால்தான் நிரப்பிக்கொள்ளமுடியும், யதார்த்தம் மிகச்சிறியது.

அடுத்தபடியாக வாழ்க்கையை நாம் தொகுத்துக்கொள்ள அதை கதையாக்குவது மிகமிக உதவியானது. நாம் வாழ்க்கையை அப்படியே, தனித்தனித் துணுக்குகளாகவே எடுத்துக்கொள்கிறோம். அன்றாட அர்த்தங்களையே அளிக்கிறோம். புனைவாக்கும்போதுதான் அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாகிறது. மையம் உருவாகிறது. அர்த்தம் உருவாகிறது – அர்த்தமின்மை என்பதுகூட நாம் வாழ்வுக்கு அளிக்கும் அர்த்தம்தான்.வாழ்க்கை பற்றிய தெளிவு அவ்வாறே அமைகிறது.

எழுதுபவர் செய்யவேண்டியது எழுதியபின் தன் எழுத்தை திரும்பத் திரும்பப் படிப்பது. அதை செப்பனிட்டுக்கொண்டே இருப்பது. முறையான கல்வியின்மையால் உங்கள் உரைநடையில் இலக்கணப்பிழைகள் உள்ளன. முன்பு நீங்கள் எனக்கு எழுதிய நீண்ட கடிதங்களில் பிழைகள் மலிந்திருக்கும். சொற்றொடர்த்தொடர்ச்சி இருக்காது. ஆனால் அது ஒரு பயிற்சி என அன்று உங்களிடம் சொன்னேன். இன்று அப்பயிற்சியின் பயன் தெரிகிறது.

இலக்கணப்பிழைகள் இன்னும் சில உள்ளன என்றாலும் உரைநடை ஒழுக்கும் நேர்த்தியும் உடையதாக உள்ளது. வாழ்த்துக்கள். அதை மேலும் செம்மைப்படுத்தவேண்டும். பிழைகளைக் களைந்தபடியே இருங்கள். எவரேனும் உங்கள் உரைநடையை சீர்ப்படுத்தி அளித்தால் அது என்ன என்று கற்றுக்கொள்ளுங்கள். அந்தப்பிழை பிறகு ஒருபோதும் நிகழலாகாது.

உதாரணம். “என் பணி சார்ந்து சொல்லாமல் விட்டுவிட்டேன். நான் பணி செய்வது பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித் தரும் தொழிற்கூடம்,  20 பேர் வரை உள்ளோம்” நான் பணி செய்யுமிடம் பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித்தரும் தொழிற்கூடம் என இருக்கலாம். அல்லது நான் பணிசெய்வது பனியன் துணிக்கு வண்ண அச்சு ஏற்றித்தரும் தொழிற்கூடத்தில் என இருக்கலாம்.

இனி கதைக்குவருகிறேன். சிறுகதையின் வடிவம் என்பது எதைச் சொல்ல வருகிறோமோ அதையன்றி வேறுவிஷயங்களை நோக்கி வாசகனை திசைதிரும்ப விடாமல் முன்செல்வதாக இருக்கவேண்டும். ஏனென்றால் வாசகன் கூர்ந்து வாசிக்கிறான். அவனுடைய அந்தக் கவனத்தை நாம் வீணடிக்கக்கூடாது.

இந்தக்கதையில் கதைசொல்லியின் கதை எதற்கு? அவன் எங்கே வேலை செய்கிறான், அவன் முதலாளியம்மா யார், அவர்களின் பிரச்சினை என்ன என்பதெல்லாம் எதற்காக? அதை வாசகன் நினைவில் வைத்துக்கொண்டு கதையில் அதற்கு ஏதோ முக்கியமான பங்கு இருக்கப்போகிறது என்று நினைப்பான். அப்படி ஒரு பங்கு அதற்கு இல்லை. கதை வேறொரு பெண்மணியின் கதை. அப்போது அவனுக்கு ஏமாற்றம் வருகிறது. அவன் திசைதிருப்பப் படுகிறான், இல்லையா?ஆகவே அது வடிவப்பிழை.

கதை எவருடையதோ அவரை மையமாக முதன்மையாக அறிமுகம் செய்தபடி கதையைக் கொண்டுசெல்வதே தேவை. இது மாரியம்மாளின் கதை என்றால் நேரடியாக அவளிலேயே கதையை ஆரம்பித்திருக்கலாம். வாசகனுக்கு அவளை காட்டி, அவள் சொற்கள் வழியாக அவள் வாழ்க்கையைச் சொல்லியிருக்கலாம். கதைசொல்லி தன்னைப் பற்றி அவ்வளவு பெரிய அறிமுகம் அளித்திருக்கவேண்டிய தேவை இல்லை.

சிலசமயம் சில கதைகளில் கதைசொல்லியின் கருத்தும் பார்வைக்கோணமும் அக்கதைக்கு முக்கியமாக இருக்கும். அவன் அக்கதையில் ஏதோ ஒருவகையில் ஒரு பங்களிப்பாற்றுவான். உதாரணமாக இக்கதையில் கதைசொல்லி மாரியம்மாளின் மகனிடம் போய் பேசுகிறான் என்றால் கதைசொல்லியைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியது அவசியம்.ஆனால் கதையை அவனில் இருந்து தொடங்கினால் கதையே அவனுடையது என்று தோன்ற ஆரம்பிக்கும். அவனைப்பற்றி மிகக்குறைவாகவே சொல்லவேண்டும், கதையின் போக்கில் சொல்லிச் செல்லவேண்டும்.

மாரியம்மாளின் கதையை அவளே சொல்வதுபோல் அமைத்தால் அவள் மொழியிலெயே கதை விரியலாம். அவள் தன் மணவாழ்கை, தன் மகனின் மணவாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறாள்.

சிறுகதை வேறு, கதை வேறு. கதை என்பது ஒரு நிகழ்ச்சியையோ நிகழ்ச்சித்தொடரையோ சொல்லி அதன் முடிவாக ஒன்றைச் சொல்லி நிறுத்துவது. ஒரு நீதி, ஒரு கண்டடைதல் அதில் வரலாம். ஆனால் சிறுகதையில் அந்த முடிவு ஒரு திருப்பமாக, ஒரு விரிதலாகவே வரவேண்டும். வாசகன் எதிர்பாராமல் ஒன்று நிகழவேண்டும். அவன் அதுவரை வாசித்த கதை முடிவில் இருந்து சட்டென்று விரியவேண்டும்.

இந்தக்கதையில் மாரியம்மாளின் பேச்சினூடாக ஆசிரியர் கண்டடைந்த ஒரு கருத்து அல்லது உண்மை இருக்கிறது. ஆனால் அது திருப்பமாகவோ, விரிதலாகவோ வெளிப்படவில்லை.

இப்படி யோசித்துப் பாருங்கள். மாரியம்மாள் அவள் கணவனின் கதையையும் மருமகள் கதையையும் சொல்கிறாள். அப்போது அவள் கணவன் நோயுற்றிருக்கும் செய்தி வருகிறது. அவனை சேர்த்துக்கொள்ளும்படி கதைசொல்லி அவளிடம் சொல்கிறாள். முடியாது, அது தன் அம்மாவுக்கு எதிரான செயல்பாடு, வளையலை உடைத்து கணவனை முறித்துவிட்டவள் தன் அம்மா, அவள் ஆணையை மீறமாட்டேன் என்று மாரியம்மாள் சொல்கிறாள்

அந்த உறுதி கதைசொல்லியை வியக்கச் செய்கிறது. ஆகவே அவள் தன் மகனின் மனைவியைச் சேர்த்துக்கொள்ளவும் சம்மதிக்க மாட்டாள் என அவன் முடிவுசெய்துவிடுகிறான். ஆனால் நிகழ்வது நேர் எதிராக. மாரியம்மாள் மருமகளைச் சேர்த்துக்கொள்கிறாள். “நான் வாழவில்லை, மருமகளாவது வாழட்டும்” என்கிறாள். கதையில் இது திருப்பம். கூடவே இந்தக்கதையில் இதுவரை சொல்லப்படாத மாரியம்மாளின் ஆழத்து ஏக்கமும் வெளிப்படுகிறது. வாசகன் அதைநோக்கி விரியமுடியும்.இதுதான் சிறுகதையின் வடிவம்.

இன்னும் இரண்டு விஷயங்கள். ஒன்று, தவிர்க்கமுடியாத தேவை இருந்தாலொழிய எழுத்தாளனும் கதைசொல்லியும் ஒருவர்தானா என்ற எண்ணம் வாசகனுக்கு வரும்படி எழுதக்கூடாது. அது தேவையற்ற திசைதிரும்பல்

இரண்டு, ஒரு கதையை வெறுமே உரையாடலிலேயே முடிக்கக்கூடாது. கதையில் நிகழ்வுகள் முக்கியம். உண்மையில் கதை உரையாடலில் கேட்டதாகவே இருக்கலாம். ஆனால் அந்த மருமகள், மாரியம்மாளின் கணவர் இருவரையும் கதைசொல்லி சந்தித்திருக்கலாம். அது கதையை கண்முன் நிகழ்வதாக காட்டும். அது இலக்கியத்திற்கு முக்கியமானது

ஜெ

முந்தைய கட்டுரைஅன்னா கரீனினா – சுகதேவ்
அடுத்த கட்டுரைஞானமே இது பொய்யடா!