கதாநாயகி, சந்தேகம் இல்லாமல் உங்கள் மற்றுமொரு உச்சம்.
கடந்த 15 தினங்களாக காலை எழுந்தவுடன் (சில தினங்கள் அதிகாலை 3 மணி) செய்த முதல் வேலை. என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று நம்முள் நுழைந்து, இதனை முதல் வேலையாக செய்ய வைத்ததோ, இல்லை ஒரு வேளை இதுதான் மலைவாதையோ என்ற ஒரு எண்ணம் தோன்றுவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
நிறுத்தி நிதானமாக கடந்த 14 நாட்கள் சென்றதற்கு நேரெதிராக 15 வது அத்தியாயம் மிக விரைவாக சென்று நிறைவை நாடியது.
இன்னுமொருமுறை இக்கதையை நீங்கள் சொல்வதற்காக காத்திருபேன், அது நிச்சயமாக புதிய கதையாகவே இருக்கும்.
அதுவரை, இன்றிரவும் நான் விழித்துக்கொள்வேன், மீண்டும் அதைப் படிப்பேன். இதில் நான் நேற்றிரவு படித்த வரிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
அன்புடன்
சங்கர்
***
அன்புள்ள ஜெ
கதாநாயகி பற்றி அதிகம் வாசிப்புகள் வராது என்று நினைக்கிறேன். நான் பேசியவரை நண்பர்கள் சுவாரசியமாக வாசித்தாலும் குழம்பிப் போயிருக்கிறார்கள். இரண்டு உலகங்கள் . ஒன்று யதார்த்தம், ஒன்று மாயை. இரண்டும் தனித்தனியாக வந்து கடைசியில் முட்டிக்கொள்கின்றன. அது எப்படி நிகழ்கிறது என்ற விளக்கம் கதையின் கடைசி அத்தியாயத்தில்தான் உள்ளது. அதுவரை அவை தனித்தனியாகவே வந்தன. ஒன்றின் சின்ன ஊடுருவல் இன்னொன்றில் இருந்தது, அவ்வளவுதான். அந்த இரு கதைகளையும் இணைத்துக்கொள்ள முடியாத தவிப்பு வாசகர்களிடம் இருந்தது என நினைக்கிறேன்,
அந்த மாய உலகமும் பல அடுக்குகளால் ஆனது. ஒரு தொன்மக்கதையின் நாயகி [விர்ஜீனியா] ஒரு ஆசிரியை [ஃபேன்னி பர்னி] ஒருகதாபாத்திரம் [ஈவ்லினா] ஒரு வாசகி [ஹெலெனா] ஆகியோர் ஒரு புள்ளியில் ஒன்றாகிறார்கள். ஒன்றாகும் இடம் ஒரு புத்தகம். அதை வாசிப்பவன் அதை ஒன்றாக்கிக் கொள்கிறான். அந்த காலாதீதத்தன்மை வாசிப்பின்போது நிகழ்கிறது. வாசிப்பு என்பது வரலாற்றை ரோமாபுரி முதல் கோதையாறு வரை ஒரே கோட்டில் இணைத்துவிடுகிறது. ஒன்றன்மேல் ஒன்றாக இணையும் இந்த அடுக்குகள் கதைக்குள் வந்தபடியே இருக்கின்றன. வாசிக்கும்போது சிக்கலாக இருந்தாலும் சிந்தித்துப் பார்க்கையில் மிகத்தெளிவாகவே இருக்கின்றது.
ஒரேகதை என்று எடுத்துக்கொண்டால் அது மிகத்தெளிவாகவே ஒரு பழிவாங்கும் கதை. பெண் தன்னை மறுஅடையாளம் அளித்து மீட்டுக்கொண்ட கதை. விர்ஜீனியா அமைதியாக சாகிறாள். ஃபேன்னி பர்னியும் ஈவ்லினாவும் எக்ஸ்ப்ளாய்ட் செய்யப்படுகிறார்கள். தங்களை சினிக்குகளாக மாற்றிக்கொண்டுதான் அவர்களால் அதற்கு பழிதீர்க்கமுடிகிறது. ஈவ்லினா கசப்புடன் இருக்கிறாள். ஃபேன்னி தன் பெண் அடையாளத்தை அழித்து மீள்கிறாள். ஆனால் ஹெலெனா தங்கள் நால்வருக்காகவும் சேர்த்துப் பழிவாங்கிவிடுகிறாள். விர்ஜீனியாவின் கொலைக்கு கோதையாறில் வழிவாங்கல் நடைபெறுகிறது.
இந்தக்கதையில் ஒன்றின்மேல் ஒன்றாகப் படியும் கதைகளின் விளையாட்டு அபாரமான ஒரு வாசிப்பனுபவம். மெய்யான நூல்பகுதிகள், கற்பனையான நூல்பகுதிகள் இரண்டும் கலந்து வருகின்றன. ஹெலெனா பங்களாவுக்குள் நுழையும்போது அங்கே எதிர்காலத்தில் வாசித்துக்கொண்டிருக்கும் மெய்யனைப் பார்த்துவிடுகிறாள்.[ஆனால் அதெல்லாமே மெய்யனின் கற்பனைகள் என்னும்போது அது சாத்தியம்தான்] ஈவ்லினா என்ற புனைவுக் கதாபாத்திரத்தை ஹெலெனா நேரில் சந்திக்கிறாள்.ஒருவரின் கதை இன்னொருவரின் கதையாக ஆகிறது. விர்ஜீனியஸ், சாமுவேல் கிரிஸ்ப், ரெவெரெண்ட் வில்லர்ஸ், கர்னல் சாப்மான் அனைவருமே இணையும் ஒரு கோடு உருவாகிறது,
எளிமையின் பேரழகு கொண்டது என்று குமரித்துறைவியைச் சொல்வேன். சிக்கலின் அழகு என்று கதாநாயகியைச் சொல்வேன். அதை இந்தன் வழியாக கடந்து செல்கிறீர்கள்.
ராமச்சந்திரன்
***
அன்புள்ள ஜெ,
நீங்கள் சொன்னதுபோல வீசியெறியப்பட்ட வண்ணங்கள் இணைந்து இணைந்து கடைசி அத்தியாயத்தில் ஒரே ஓவியமாக ஆகிவிட்டன. காணிக்காரர்களுக்கான பள்ளிக்கூடமும், பதினெட்டாம்நூற்றாண்டின் லண்டனும் ஒரேகதையில் அழகாக ஒன்றாக மாறியிருக்கின்றன. ஒருவனின் இரண்டு மனநிலைகள், இரண்டு உலகங்கள் அவை. அவன் ஒன்றை வைத்து இன்னொன்றை சமன்செய்திருக்கிறான்.
அவன் காணிக்காரர்களின் நடுவே வாழும்போது கடைசிவரை அந்த பதினேழாம்நூற்றாண்டு ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த லண்டனின் உலகம் மிகப்பெரியது. அது ரோமில் தொடங்கி லண்டன் வழியாக திருவனந்தபுரம் வரை வருகிறது. அதிகாரம், ஆணவம், அடக்குமுறை, சுரண்டல் எல்லாம் கொண்டது. இந்த காணிக்காரர்களின் உலகம் எளிமையானது. இரண்டும் ஒன்றுக்கொன்று காம்ப்ளிமெண்டரியாக உள்ளன.
அந்த லண்டனின் உலகம் இவனுடைய மாயையாக இருக்கலாம். ஆனால் அது வரலாறு. அந்த வரலாற்றின்மேல்தான் இந்த அன்றாட உண்மைகள் இருந்துகொண்டிருக்கின்றன
மகாதேவன்