சுந்தர்லால் பகுகுணா – தன்மீட்சிப் பயணம்

அஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்

நீர் நெருப்பு – ஒரு பயணம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்தியச் சூழலியக் களச்செயல்பாட்டு முன்னோடியும், இமயமலை வனப்பிரதேசத்தில் சிப்கோ சத்தியாகிரகப் பேரியக்கத்தை முன்னெடுத்தவரும், காந்தியச் சித்தாந்தவாதியுமான மூதாசான் சுந்தர்லால் பகுகுணா அவர்கள் இன்று (21.05.2021) இயற்கை எய்தியுள்ளார். தன்னுடைய 13  வயதில், பள்ளி பயின்றுகொண்டிருந்த  காலகட்டத்தில் காதி குல்லா, குர்தா, வேட்டி மற்றும் செருப்பு அணிந்து, கையில் ஒரு சிறுபெட்டியில் இராட்டையை தூக்கி ஊரூராக சுமந்துபோகிற சத்தியாகிரகி மனிதரின் வாயிலாக ‘காந்தி’யை தனக்குள் முதலறிமுகம் செய்துகொண்டவர்.

தான் இணைந்துள்ள சுதேசிக்குழு, பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் அகப்படாமல் இருக்க, ஊருக்கு ஒதுக்குப்புற கல்லறைப் பகுதிகளில் சென்று நூல்நூற்று, அங்கேயே இருந்து காந்தியின் சுயசரிதையை வாசித்தவர். பிர்லா ஹவுசில் காந்தியின் இறுதி நாட்களில் நடந்த பிரார்த்தனைக் கூட்டங்களில் காந்தியை பகுகுணா சந்தித்திருக்கிறார். காந்தி மரணமடைவதற்கு முந்தைய தினம் அது!

கன்சாலி சத்தியாகிரக ஆசிரமத்துக்கு அருகில் ஒரு சாராயக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, சாராயக்கடை முன் சத்தியாகிரகம் செய்ய வினோபாவின் அனுமதியைக் கேட்டுள்ளார் சுந்தர்லால் பகுகுணா.  “நீ மக்களை ஒன்று திரட்டி சாராயக் கடைகளை முற்றுகையிட  வேண்டும். போதை மருந்துகளிலிருந்து விடுதலை பெற்ற சீனாவை, தன் மக்களை குடிகாரர்களாக்கும் ஒரு அரசால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று ஆட்சி செய்பவர்களைச் சிந்திக்கச் செய்யப் போராட வேண்டும்” என்று அவர் உடனே பதிலளித்துள்ளார். ஆகவே, பெண்களைத் திரட்டி சாராயக் கடைகளுக்கு எதிரான சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் சாதித்தார் சுந்தர்லால் பகுகுணா.

இமயமலைப் பகுதிகளில் உள்ள வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கிற, இன்று உலகறிந்த சத்தியாகிரகப் போராட்டமான ‘சிப்கோ பேரியக்கத்தை’ (மரங்களைத் தழுவி அவைகளை வெட்டவிடாமல் காக்கும் உறுதிப்போராட்டம்) முன்னெடுத்து, அதை இமயப்பள்ளத்தாக்கின் எல்லா கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினார். அகிம்சை வழி போராட்டங்கள் குறித்த கல்வியறிவை உருவாக்க மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு நீண்ட ஆண்டுகாலமுயற்சியின் விளைவாகவே இந்த கருத்து தோற்றங்கொண்டது.

‘ஒரு மரம் பத்து பிள்ளைகளுக்குச் சமானம்’ என்று உபநிஷ வார்த்தைகளை கலாச்சாரக் குறியீடென ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னுரைத்து புவியியல் ரீதியான தொடர்போடு போராட்டத்தின் எல்லைகளை எல்லா தளங்களிலும் மக்கள் மனதில் விரிவாக்கியவர். இன்று உலகளாவிய சூழலியல் கருத்துருவாக்கங்களின் இந்திய அகிம்சை முகமென சுந்தர்லால் பகுகுணா எல்லோர் மனதிலும் பரவிநிற்கிறார்.

இரண்டு ஆண்டுகள் முன்பாக, அவருடைய வாழ்விடத்திற்குச் சென்று, தொண்ணூறு வயதான அவரையும் அவருடைய துணைவியாரையும் நண்பர்கள் நாங்கள் ஒருசேரச் சந்தித்து உரையாடிய அந்த ஆசித்தருணங்களை இக்கணம் நினைவுகூர்கிறோம். மேலும் இச்சந்திப்பின்போது , உங்களது ‘தன்மீட்சி’ புத்தகத்தை அவரிடம் கையளித்து, அவருடைய கையொப்பத்தை பெற்றுக்கொண்டோம். வாழ்த்துதலின் சொல்லாக, ‘Yes to Life, No to Death’ எனத் துவங்கும் சிறுகுறிப்பை எழுதியிருந்த அவ்வார்த்தைகள் ஒரு முதுமரத்தின் வேர்கள்போல பதிந்திருந்தன. அதற்குப் பிந்தைய வருடம், தன்னறம் நூல்வெளியின் ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்திற்கான ஆசிக்குறிப்பை அவரிடம் கேட்டுப்பெற்று, அவருடைய கையெழுத்தைத் தாங்கியே அப்புத்தகம் அச்சாகி வெளிவரவும், அச்சந்திப்பே மையக்காரணமாக அமைந்தது.

அச்சந்திப்பின் நெகிழ்வுக்கணமாக, அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் சுந்தர்லால் பகுகுணாவை தொலைபேசியில் உரையாட வைத்தது என்றும் நினைவழியாத பெருநிகழ்கை. காந்தியை நேரில் சந்தித்த இரு முதுமனங்கள் பரிமாற்றிக் கொண்ட அன்பின் சொற்களுக்குச் சாட்சியாக அன்றிருந்தோம். தும்பியின் 18வது இதழ் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் ஒளிப்படத்தை முதற்பக்கமாகத் தாங்கி, ‘மரங்களைத் தழுவி அவைகள் வெட்டப்படாமல் காப்பாற்றுங்கள்; மலைகளை வணங்கி அவைகள் கொள்ளை போகாமல் காப்பாற்றுங்கள்’ என்ற அவருடைய மேற்கோளோடு வெளிவந்திருந்தது. அதை அவர் கையில் ஒப்படைத்து அவர்சொன்ன சிறுவயது ஞாபகக்கதைகளை தரையிலமர்ந்து கேட்டுவந்தோம்.

பேச்சினூடாக அவர் சொன்ன, “எல்லா காலத்துலேயும் இந்த வாழ்க்கையில எதிர்மறைகள் இருக்கத்தான் செய்யும். நீங்க அதை மட்டுமே நினைச்சு சோர்ந்து தளர்ந்துபோய்டாதீங்க. எப்பவும் மனச துவளவிடாதீங்க. இப்பமாதிரியே எப்பவும் கூட்டா இருங்க. கூட்டமா இருக்கிறதுதான் மனுச மனசுக்கு எப்பவுமே பலம். அதனால, இந்த கூட்டுமனோபாவம் ஒன்னுபோதும், எவ்ளோ பெரிய எதிர்ப்புக்கு முன்னாடியும் ஆயுதமில்லாம, ஆத்மாவோட உண்மைய மட்டும் நம்பி நிக்கலாம். இந்தத் தன்மையோட அடிப்படை அந்த உண்மைதான்” என்ற வார்த்தைகள் அவ்வளவு தத்துவப்பூர்வமாகவும், வாழ்விலிருந்து பிறந்தவையாகவும் இருந்தன!

‘காந்தியின் சிலுவை’ கட்டுரையில் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பீர்கள்… “காந்தியம் அதன் உண்மை வடிவில் கொதிக்கும் அமிலம் போன்றது. சமரசமில்லாமல் நீதிக்கும் உண்மைக்கும் விசுவாசமாக இருப்பது என்ற சவாலை அது நமக்கு அளிக்கிறது. இயற்கைச் சூழலைக் காக்கமானுட சமத்துவத்துக்காக அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக முழுமூச்சான போராட்டங்களைச்செய்ய அது நம்மிடம் அறைகூவுகிறது. அந்தப்போராட்டம் முழுமையாகவே அறப்போராட்டமாக இருந்தாகவேண்டும் என நம் ஆன்ம வல்லமைக்கு ஆணையிடுகிறது…” சுந்தர்லால் பகுகுணாவின் அருகிலமர்ந்து அவருடன் உரையாடிய தருணங்களில், உங்கள் வார்த்தைகளின் உண்மையான பருவடிவமாக அவரைக் கண்டடைந்தோம்.

எல்லாவகையிலும், நமக்கான சூழலியல் மற்றும் வாழ்வியல் முன்னோடிப் பெருமனிதர் என எதிர்வரும் தலைமுறைக்குச் சுட்டிக்காட்ட முழுத்தகுதி வாய்ந்தவர் சுந்தர்லால் பகுகுணா. ‘அமைதியான வழிகளிலேயே நம்மால் உலகத்தை உலுக்க முடியும்’ என்ற கூற்றை மெய்ப்பிக்கத் தங்கள் வாழ்வர்ப்பணித்த ஆயிரமாயிரம் காந்தியர்களில் இவரும் முதன்மையானவர். மூதாசான் ஒருவர் இறப்பைத் தழுவுகையில், இச்சமூகம் அவருக்குச் செய்தாகவேண்டிய நன்றிக்கடன் என்பது, இயன்றவரை தற்காலத்திய தலைமுறையின் சிந்தைக்குள் அவரை உணர்வுநிறைப்பதே.

சத்தியாகிரகப் போராட்டங்களுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்த சுந்தர்லால் பகுகுணா அவர்களைப்பற்றிய சிறந்த புத்தகமொன்றை தன்னறம் நூல்வெளி மூலம்  வெளியிடும் கனவொன்றை இக்கடிதத்தின் வாயிலாக உங்களோடு பகிர்வதில் ஒரு உளநிம்மதி உண்டாகிறது. உயிரால் சிலகாலம் மண்ணில் வாழும் மாமனிதர்கள் சிலர், தங்களுடைய செயலால் நெடுங்காலம் வரலாற்றில் வாழ்வார்கள். இந்தியச் சூழலியல் கருத்துருவாக்கத்தின் இருதயத் துடிப்புகளால் ஒன்றாக, எக்காலத்தும் சுந்தர்லால் பகுகுணா காந்தியத்தின் பெருஞ்சாட்சியாக நிலைபெறுவார். அவர் கனவினை நிறைவேற்றச் செயல்புரியும் கணக்கிலா களச்சீடர்களுக்கு, அவருடைய நல்லான்மா துணிவளித்து துணையிருக்க வேண்டுகிறோம்.

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

தன்மீட்சியின் நெறிகள்

கண்கூடான காந்தி

அஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்

செவிக்குரிய குரல்கள் எவை?

முந்தைய கட்டுரைவைரம் [சிறுகதை] ம.நவீன்
அடுத்த கட்டுரைபாலையாகும் கடல்- கடலூர் சீனு