இமைக்கணம் வாசிப்பு

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

அன்புள்ள ஜெ,

நேற்று இமைக்கணம் நாவல் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்து உடனே தங்கும் எண்ணங்களை எழுதவே இதில் முற்படுகிறேன்.

எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த நாவல் தொடங்கியபோது இருந்த நாடகமும் தர்க்கமும் இது முடியும்போது கரைந்தழிந்து என்னால் பின்தொடர முடியாத வேறொரு தத்துவ சிந்தனைகளை இது பேசி முடிந்தது. முதலில் சற்று ஏமாற்றமாகவும், வெறும் போதனைகள் போலவும், பின்னர் நான் பின்தொடர முடியாத – தர்க்கத்தால் ஏற்கனவே சென்றடைந்த சில விஷயங்களை சில கருதுகோள்களை மேலும் வேறொரு கோணத்தில் வேறொருவனுக்கு விளக்கும் பொருட்டு சொல்லப்பட்டவையாக அந்த பகுதிகள் இருந்தது – என்று வகுதுக்கொண்டேன். கீதையை எனக்குத் தெரியாததால், பெரும்பாலும் அவை கீதையை ஒட்டி இருந்ததாக எனக்குத் தோன்றியதால் என்னால் பின்தொடர முடியாமல் போனதாக நான் நினைக்கிறேன். ஒருவேளை புரிந்துகொள்ள முயற்சி எடுப்பதற்கு பதிலாக improvisation மட்டும் என்ன நிகழ்ந்திருக்கிறது என்று நான் தேடிக்கொண்டிருந்திருக்கலாம்.

இந்த நாவல் அடிப்படையில் என்ன செய்கிறது? இதன் நுழைவாயிலில் ஒரு பெரிய முன்பின் இல்லாத பிரச்சினை நிகழ்கிறது. இறப்பு நின்றுவிடுகிறது. இறப்புக்கு இறைவன் அவன் தொழில் செய்யாமல் உள்ளம் கலங்கி அமைந்துவிட்டதால். அதனால் பூமி தேங்கி அதில் உள்ள உயிர்கள் பல வகையான துன்பங்களை எதிர்கொள்கிறது. அந்த உயிர்களின் பிரதிநிதியாக நாரதர் சென்று யமனிடம் பேசி, அவனுக்கு ஒரு யோசனை சொல்லி, ஒரு தற்காலிகமான தீர்வை சொல்லி அதை முடித்துவைக்கிறார். யமன் அவருக்கு இருக்கும் குழப்பங்களை மானிடர் பல உருவில் சென்று, ராமனின் அவதாரமான காட்டிற்கு சென்று அமைந்திருக்கும் கிருஷ்ணனிடம் கேட்கிறார். கிருஷ்ணன் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் என்னும் கதையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது. இது outline. ஆனால் உண்மையில் இந்த நாவல் எதை பேசுகிறது?

பலவகையான மனிதர்கள் அவர்களுக்கு இருக்கும் குழப்பங்களை வந்து கேட்கிறார்கள். அவற்றை எதிர்கொண்டு விரிவாக பதில் அளிக்கிறார் இளைய யாதவர். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் அமைந்திருக்கும் வாழ்க்கையிலிருந்து அந்த கேள்விகளை எடுக்கிறார்கள். அந்த கேள்விக்கான பின்னணியை, அது உருவாகி வந்த விதத்தை, அது எழுவதற்கான காரணத்தை விரிவாகி விளக்கி அந்தக் கேள்வியை திரட்டி முன்வைக்கிறார்கள். அதற்கு பதிலாக இளைய யாதவர் அளிக்கும் விளக்கங்களை, மறுமொழிகளை ஏற்று விடைபெறுகிறார்கள். கர்ணன், பீஷ்மர், சிகண்டி, விதுரர், வியாசர், யுதிஷ்டிரர், திரௌபதி, குசேலன், யக்ஞ முனிவர்கள், சுகர் என்ற உருக்களில் யமன் சென்று அந்த கேள்விகளை கேட்கிறார். யமன் விடைபெற்றபிறகு அர்ஜுனன் இவை எல்லாவற்றையும் தன் கனவில் கண்டதாக ஒரு பெரிய இறுதிபகுதி வருகிறது.

இவர்கள் அனைவருக்கும் விதவிதமான பிரச்சினைகளும் கேள்விகளும் உள்ளன. ஒருவருக்கு முக்கியமானது இன்னொருவருக்கு அவ்வளவு முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் அவரவர் கோணங்களை புரிந்துகொண்டு விளக்கம் அளிப்பவராக இளையயாதவர் இருக்கிறார். ஒவ்வொருவர் கேள்வியும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கேற்ப விடைகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக. அந்த பிரத்யேகமான விடைகளை அடைந்த பின்னரே அவர்கள் நிறைவுற்று மீண்டு செல்கின்றனர்.

எனக்கு ஏன் முழுதாக நான் விரும்பும் விஷயங்கள் கிடைக்கவில்லை, நான் செய்யும் விஷயங்களை பற்றற்று செய்துகொண்டிருக்கிறேன்- ஏன் நான் இவற்றை விட்டுச்செல்லக் கூடாது, நான் செய்ய நினைக்கும் விஷயம் உண்மையில் செய்யப்படத் தேவையானது தானா, இவ்வளவு நாள் செய்த விஷயங்களுக்கான பொருள் என்ன, உண்மையில் சுற்றி வளைக்காமல் இந்த உலகம், இந்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம், எப்போதும் மறுமுனையிலும் நின்று அறத்திற்காக வாதாடும் நான் எப்போதேனும் ஒரு விஷயத்தை முழு மனதுடன் ஐயமின்றி ஆற்ற முடியுமா, அழகை முதன்மையாக என்னும் நான் அவற்றின் அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்வது, இதன்பிறகு கேள்விகள் சிக்கலாகின்றன – இளைய யாதவர் என்பவர் யார் என்று பதைப்புடன் தெரிந்துகொள்ள வரும் அதர்வ வேத முனிவர்கள், குசேலனின் நிறைவு, இன்னொரு செட் முனிவர்களின் கேள்விகள், சுகரின் நிறைவு – அடைக்கலம், மோட்சம் என்பது என்ன என்றா? இன்மையின்மை என்னவென்றா? – இவைகளிலிருந்து அர்ஜுனனின் நீளமான பகுதி ஏற்கனவே கேட்கப்பட்ட இந்த கேள்விகளை தொகுத்து வேறுகோணத்தில் ஆராய்வதா அல்லது முற்றிலும் வேறொரு பேசுபொருளை கொண்டிருக்கும் பகுதியா அது? அந்தப் பகுதிகளை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கவே இல்லை. எப்படியும் திரும்ப வாசிப்பேன் என்ற எண்ணமிருந்ததால், அவற்றை வெறுமே வாசித்துச் சென்றேன். இப்போது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கலாம் என. இறுதிப் பகுதி நெருங்க நாவலை முடிக்கும் வேகத்திலேயே இருந்தேன்.

ஒருவேளை கடைசி சில பகுதிகளுக்கு விரிவான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து அந்த கேள்விகளை என்னால் பொருத்திக்கொள்ள முடியாததால் அந்த சோர்வு வந்திருக்கலாம். ஆனால் அது என்னுடைய குறையே. நான்தான் நாவலை இன்னும் பொறுமையாக கவனித்து அதை விரிவாக்க முயற்சி செய்திருக்க வேண்டும். கதை செல்ல செல்ல கேள்விகளும் நுன்மையாகிக் கொண்டே சென்றனவா? Abstraction நோக்கி சென்றபடி இருக்கின்றனவா இந்த கேள்விகள்? ஒருவகையில் நுண்மையை நோக்கி சென்றாலும் abstraction நோக்கி செல்பவை இவை என்று சொல்ல தோன்றவில்லை. மற்ற நாவல்களை விட அதிசயமாக தத்துவத்தை இத்தனை விரிவாக கையாளும் இந்த நாவலில் தத்துவத்தை விளக்குவதாக வரும் நேரடியான உவமைகள், பிற வெண்முரசு நாவல்களை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கின்றது. சொல்வளர்காட்டிலும் கிராதத்திலும் வரும் உவமைகள் இதில் உருவாவதில்லை. இதுவே இங்கு தத்துவம் விளக்கப்பட்டிருக்கும் கோணம் சற்று மாறுதல் ஆனது என்று என்ன வைக்கிறது. அல்லது இது வெறும் அர்த்தமற்ற முதற்கட்ட மனப்பதிவாக மட்டும் இருக்கலாம்.

இவர்களுக்கு எல்லாம் மறுதட்டில் அமர்ந்து பதில் சொல்லும் இளைய யாதவன் என்பது யார் – அல்லது எது அல்லது எதுவாகி வந்த ஒன்று என கேட்டுக்கொள்வதும் ஒரு துவக்கத்தை அளிக்கலாம். இதில் இந்த கேள்விகளும் அதற்கு விடையும் வருவதற்கு ஒரு முறை உள்ளது. எப்போதுமே விடைநாடிவரும்  கதாப்பாத்திரங்கள் கேள்விகளை அப்படியே முன்வைக்காமல், முதற்கட்டமாக  தங்கள் எண்ணங்களை, அல்லது ஒரு நிகழ்விலிருந்து அடைந்த கொந்தளிப்புகளை தான் முன்வைக்கிறார்கள். நேரடி கேள்விக்கோ, கேள்விகளுக்கோ அவர்கள் வரும் வரை, பின்னிலிருந்து பார்க்கும்போது அந்த கொந்தளிப்புகளே அபூர்வமான வகையில் அந்த கேள்விகளை துக்கத்தை சொல்பவையாக உள்ளன. அதாவது ஒரு மனிதன் எங்கிருந்து தொடங்கினாலும் அங்கு வந்து சேர்ந்தாக வேண்டுமென்பது போல, மறைத்தாலும் தவிர்த்தாலும் அது அங்கு இருந்தால் அந்த சொற்பெருக்கு காட்டுமென்று தோன்றுவது போல. இது எப்படி ஏன் எதனால் நிகழ்கிறது என்று தெரியவில்லை. ஆனால் எண்ணிப்பார்க்கும்போது விந்தையாகவும் அழகாகவும் உள்ளது.

விளைவாக, அவர்கள் மனதின் ஆழங்களுக்குச் சென்று விதவிதமான கேள்விகளை எதிர்கொள்கிறது. விதவிதமான ஆழங்கள். ஆழம் என்பது நாம் ஒருவகையில் எதிர்கொள்ளாதிருப்பது தானே? அதை எல்லாமே வாழ்க்கையாக ஆக்கி அந்தப் பரப்பில் வைத்து கேள்விகளை சந்திக்கிறது. அதிலிருந்து முன்னகர்ந்து அந்த உலகில் எழச் சாத்தியமான அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு விளக்கத்தையோ விடைகளையோ முன்வைக்கிறது. வயதடைய, சோர்வடைய, இறுக்கமாக வைக்கும் பகுதிகள் உள்ளன கர்ணன், பீஷ்மர், விதுரர் ஆகியோரின் அனுபவங்கள் போல. இலகுவாக்கும், துள்ளவைக்கும் – அதே சமயம் பிரம்மாண்டத்தை இன்மையை உணர்த்தும் சிகண்டி, வியாசர் ஆகியோரின் கதைகள். அழகையும் பெண்மையையும் தனக்குத் தானே தொகுத்துக்கொள்ளும் திரௌபதி. தன்னுள் எப்போதும் போரிட்டு கரையும் தருமர், தன்னை வெளிப்படுத்தி தன் எல்லையை, தன்னை கண்டுகொள்கிறார். வகுத்துக்கொள்கிறார், குசேலரின் ஈடற்ற முழுதளித்தல், துளிமனம் எஞ்சாத சுகரின் முகம். மற்றப் பகுதிகள் எனக்கு என்ன தந்தன என்று தெரியவில்லை.

இந்த நாவல் எனக்கு பொருள்படுவது இவற்றை எல்லாம் நான் ஒரு பெரும் நாடகமாக வாசிக்க முடியும் என்பதனால். இது இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் தன்னை காட்டியுள்ளது, மேலும் சில சாத்தியங்களை முன்வைத்துள்ளது என்பதனால். மேலும் இவற்றை நான் வாசிக்கும்போது உணர்ந்த ஒன்று வாசிப்பு அல்லது சிந்தனை அல்லது மொழி ஒரு சில இடங்களில் என்னுள் முன்னகர்ந்து தங்கியதாக நான் உணர்ந்தது. ஒரு செயல்பாடாக.

உங்கள் மொழி குறித்து பேசும்போது உங்கள் வருணனைகள், உவமைகள் குறித்து பேசப்படுவதுண்டு. அதற்கிணையாகவே அவையற்ற விஷயங்களை பேசுவதற்கான மொழி ஒன்றும் உங்களுக்கு கைவரப் பெற்றிருக்கிறது. ஒரு சாதாரண சொல் கூட உங்களிடம் இல்லை. ஒன்று கூட. எத்தனை அரிய விஷயம். ஒளியுண்டான வாக்கு. சொன்னால் ஒரு சொல் துலக்கம் பெறுமென்றால் அதுதானே சொல். இல்லாவிட்டால் அதை ஏன் சொல்லவேண்டும். வியாசர் கலைமகளும் திருமகளும் தோன்றுவதற்கு கோட்டோவியத்தின் கீற்று போல ஒரு சில சொற்களில் அவர்கள் வடிவை சொல்கிறார், தேவி தோன்றி விடுகிறாள். அது நினைவுக்கு வருகிறது. இமைக்கணத்தில் அந்த உவமைகளற்ற மொழியின் திறன் முழுதும் வெளிப்படுகிறதென நினைக்கிறேன். இலக்கியத்தில் தத்துவம் பயின்றாலும், உவமைகள் அதிகம் இல்லாத நீண்ட தத்துவ தன்னுரைகள் கூரியவையாக வெளிப்படும் மொழி.

இதை வைத்துக்கொண்டு தொடங்குகிறேன்.

ஸ்ரீநிவாஸ் ,

மதுரை

முந்தைய கட்டுரைஅஞ்சலி: சுந்தர்லால் பகுகுணா
அடுத்த கட்டுரைவைரம் [சிறுகதை] ம.நவீன்