கதாநாயகி – குறுநாவல் : 14

நான் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதை நானே எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை அதை வேறேதோ புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இல்லை அதே புத்தகத்தில் அதை படித்துக் கொண்டிருந்தேன்.  அதே புத்தகத்தில் அங்கிருந்துகொண்டு அதே புத்தகத்தைப் படிப்பதைப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்திற்குள் இருந்துகொண்டு வெளியே நான் படிப்பதை படித்துக் கொண்டிருந்தேன். அல்லது அந்தப் புத்தகத்திற்குள் இருந்து அதற்குள் அதே புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப்புத்தகத்திற்குள்ளும் அவ்வாறு படித்துக்கொண்டிருந்தேன். அதே புத்தகம்தான்.

The moment I was alone my spirits failed me; the exertion with which I had supported them had fatigued my mind; I flung away my work, and, leaning my arms on the table, gave way to a train of disagreeable reflections, which, bursting from the restraint that had smothered them, filled me with unusual sadness. எப்போதுமே கவனிக்கிறேன், நான் என்ன மனநிலையில் வாசிக்கிறேனோ அதுதான் புத்தகத்திலும் இருக்கிறது. அல்லது நான் அந்த வரிகளை வாசித்ததும் இயல்பாகவே அதற்கேற்ப என்னை மாற்றிக்கொள்கிறேன். அக்கணமே, அறியாமலேயே.

ஈவ்லினா எழுதிய கடிதம் அது. அவள் ஒரு மலைப்பங்களாவில் அமர்ந்திருந்தாள். மழை கொட்டத் தொடங்கியது. பாரஃபின் விளக்கின் ஒளியில் அந்த அறை துலங்கியது. வெளியே கூடாரங்கள் மழையின் சாட்டைகளால் அடிவாங்கி துடிதுடிப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். காற்றில் அந்த பாரஃபின் விளக்கு அசைந்தாடியது.அது அந்த அறையையே கப்பல் போல ஊசலாடச்செய்தது.

கர்னல் சாப்மான் பிராந்தியை சிறிது சிறிதாக உறிஞ்சிக்கொண்டிருந்தார். அவர் முன் அவள் அமர்ந்திருந்தாள். அக்காட்சியை நான் பார்த்தேன். தோளில் ஒரு சிவப்புக் கம்பிளிச்சால்வையை மேலோட்டமாக போர்த்தியிருந்தாள். அவள் ஒயின் அருந்தியிருந்தாலும் போதை ஏறவில்லை. கைகளால் தன் பொன்னிறமான கூந்தலிழையைப் பிடித்து சுருட்டிக்கொண்டிருந்தாள். அவள் நிலைகொள்ளாமலிருக்கும்போது எப்போதும் செய்வது அது.

அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் அதை கவிழ்க்கப்பட்ட கூடைபோன்ற மேடைமேல் வைத்துவிட்டு ஏப்பம் விட்டார். “என்ன நினைக்கிறாய்?” என்றார். “அருமையான இடம் இல்லையா?”

“ஆமாம்”என்று அவள் சொன்னாள்.

“இந்தவகையான தன்னுரைகள்தான் ஆங்கிலேயர்களாகிய  நாம் உலக இலக்கியத்திற்கு அளித்த கொடை என்பது என் எண்ணம். இந்த ஆசிரியரை எனக்குத் தெரியாது. இந்த புத்தகத்தை நான் எடுப்பதற்கு ஒரே காரணம் இதன் கதைதான். விர்ஜீனியாவும் ஆப்பியஸும் நான் பள்ளியிலேயே படித்த கதை. நான் வெப்ஸ்டர் எழுதிய நாடகத்தை படித்திருக்கிறேன். இதை எங்கள் ராணுவப்பள்ளியில் நடித்தார்கள். பின்னாளில் பிரிட்டிஷ் ஜெனரல் ஆக பதவி வகித்த ஜான் லெஸ்லி பிரபு அதில் விர்ஜீனியஸாக அற்புதமாக நடித்தார். அவரை நீ கேள்விப்பட்டிருக்கலாம். பதினொன்றாவது ஏர்ல் ஆஃப் ரோத்ஸ் அவர்”

“கேள்விப்பட்டிருக்கிறேன்”என்று அவள் சொன்னாள்.

“அப்போது ஒரு விவாதம் நடந்தது. விர்ஜீனியா கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று. அந்த விவாதம் ரோம் காலகட்டத்தில் இருந்தே நடந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அதில் உண்மையான ஒரு தத்துவப் பிரச்சினை உள்ளது. ஒரு பெண்ணைக் கொல்லலாமா, தந்தை தன் மகளைக் கொலைசெய்யலாமா, குடும்ப கௌரவம் என்பது தந்தைப்பாசத்தைவிட பெரியதா, ஒரு கொலை எப்படி பொதுவாக நம்மால் நியாயப்படுத்தப்படுகிறது—இப்படி பல கோணங்களில் அந்த விவாதம் நிகழும்.அதற்கு முடிவே இல்லை.” என்று கர்னல் சொன்னார்.

“ஆனால், அன்று நடந்த விவாதம் அப்படி அல்ல. ஜான் லெஸ்லீ ஆரம்பத்திலேயே ஒன்றை பேசி ,நிறுவி ,ஒதுக்கிவிட்டார். விர்ஜீனியா என்ற ஒன்றும் அறியாத கன்னிப்பெண் கொல்லப்பட்டிருக்கலாமா? அவர் சொன்னார், கொடி என்பது வெறும் துணிதான். அந்தத் துணியின் மதிப்பு என்பது அதன்பொருட்டு எத்தனைபேர் சாவதற்கு சித்தமாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான். எத்தனைபேர் அதைக் கைப்பற்றச் சித்தமாக இருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சாகிறவர்களின் எண்ணிக்கை முடிவாகிறது. பெண் நமது கொடி. அதன் மதிப்பை நாம் முடிவுசெய்வதில்லை, எதிரி முடிவுசெய்கிறான்”

“அன்று ஒலித்த கைத்தட்டலை நீ கேட்டிருக்கவேண்டும்” என்று கர்னல் சாப்மான் தொடர்ந்தார். “அதன்பின்புதான் அவர் உண்மையான சிக்கலை தொட்டுக் காட்டினார். அதை இப்படிச் சொல்கிறேன். கள்ளமின்மையின் அழிவு. அதிகாரம் அவ்வாறு பல கள்ளமின்மைகளை அழிக்காமல் கட்டி எழுப்பப்பட முடியாதது. போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். ஒன்றுமறியாத கன்னிப்பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைவிடக் கொடுமை, அழகான பச்சைவயல்கள் அழிகின்றன. தொன்மையான கட்டிடங்கள் சிதைகின்றன. அனைத்தையும் விட கள்ளமற்ற உற்சாகத்துடன் கிளம்பிச் செல்லும் நம்முடைய நீலக்கண் பையன்கள் களத்தில் சாகிறார்கள்”

“ஆம்”என்று அவள் சொன்னாள்.

“அதை பேச்சில் சொல்லலாம், ஆனால் மெய்யாகவே அதை களத்தில் காண்பது எளிதல்ல. பிறகு நான் பர்மாவில் அதை உணர்ந்தேன்.டெமோசாவில் ஒரு தாக்குதலுக்காக என் படையை அனுப்பினேன். அத்தனைபேரும் இருபதுக்குள் வயது கொண்டவர்கள். பெரிய மூக்கும், பருக்கள் கொண்ட முகமும், தொண்டைமுழையும், உடைந்த குரலும் கொண்ட நெட்டையன்கள். அவர்கள் அப்போது கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரே கூச்சல் கொண்டாட்டம். அப்போதுதான் தாய்லாந்திலிருந்து ஒரு படை வந்து எல்லைகளை சூறையாடும் செய்தி வந்தது”.

“எங்களிடம் இருந்த மொத்த படைவீரர்களே இருநூறுபேர்தான். ஆனால் அந்த ஊடுருவல்காரர்களை தடுக்காவிட்டால் அப்படியே ராணுவமுகாம் வரை வந்துவிடுவார்கள். அந்த முகாமை கைவிட்டுவிட்டால் மீண்டும் கைப்பற்றவே முடியாது, அத்தனை முக்கியமான இடம் அது. என்ன செய்வது? உதவிகோரி செய்தி அனுப்பினேன். உதவி வந்துசேர ஒருநாள் ஆகும். அது வரை போர் நடக்கவேண்டும். அனைவரையும் போருக்குச் செல்ல ஆணையிட்டேன். ஆணை பிறந்ததுமே சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும் கிளம்பிச் சென்றார்கள். ஒருவர் கூட மிஞ்சவில்லை” கர்னல் சொன்னார்.

”அன்று நான் ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடவில்லை. நாலைந்துநாள் போதையிலேயே தூங்கினேன். அதைத்தான் முன்பு லண்டனில் ஜான் லெஸ்லீ பிரபு சொன்னார். கள்ளமின்மையை அழிக்க கைகள் தயங்கினால் நம்மால் அதிகாரத்தை அடையவே முடியாது என்று. பழைய கிரீஸில் தன் சொந்தக்குழந்தையையே ஆண்கள் கொல்லவேண்டியிருக்கும். குழந்தை ஊனமுற்றுப் பிறந்தால், கோழையாக வளர்ந்தால் கொன்றுவிடவேண்டும். சில சமயம் தெய்வங்களுக்கே குழந்தைகளைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும்” கர்னல் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டு சொன்னார். அவர் அந்த சொற்களால் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.

”ஆப்ரிக்காவின் பழங்குடிகளிடம்கூட அந்த வழக்கம் இருந்தது  அவர்கள் தங்கள் சொந்தக் குழந்தை ஒன்றை கொல்லவேண்டும். அதன்பிறகு எங்குமே அவர்களின் வாள் தயங்காது. ரோமில் மட்டுமல்ல பல நாடுகளிலும் போருக்குச் செல்வதற்கு முன்பே தோல்வி உறுதியென்று தெரிந்தால் மனைவிமக்களை கொன்றுவிட்டுக் கிளம்பும் வழக்கம் இருந்தது. அது ஓர் உறுதிப்பாடு. தயங்காமையைப்போல ஆற்றல் கொண்ட மனநிலை வேறு கிடையாது.”

அவர் குரல் உணர்வெழுச்சியுடன் கிசுகிசுப்பாக ஒலித்தது. ”கள்ளமின்மையை கொன்றுதான் நாம் உலகை வென்றுகொண்டிருக்கிறோம். கீழைநாடுகளில் எத்தனை பழங்குடிகளை அழித்தோம். ஆஸ்திரேலியாவையே அழித்தோம். தென்னமேரிக்காவின் பழங்குடிகளை முழுமையாக அழித்தோம். கள்ளமின்மையின் மேல் வாள் எழுந்துவிட்டதென்றால் அதன்பின் அவனை வெல்ல எவராலும் முடியாது.”

அவர் பேசிப்பேசி வேகமேறிச் சென்று அதற்குமேல் சொல்வதற்கு கருத்துக்கள் இல்லாமல் தடுமாறினார். மீண்டும் ஒரு கோப்பை மதுவை கலந்துகொண்டார். உறிஞ்சியபடிச் சொன்னார்.

“அதைத்தான் அன்று ஜான் லெஸ்லீ பிரபு அற்புதமாகச் சொன்னார். விர்ஜீனியாவின் கதை நம்மை கவர்வது அதிலிருக்கும் விர்ஜீனியஸின் அந்த தயக்கமின்மையால்தான். அது எழுப்பும் அடிப்படையான கேள்வியால்தான்… நான் அன்று அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.அவர் என்னை நினைவு வைத்திருந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விருந்தில் அவரைப் பார்த்ததும் விசாரித்தார்.அவர் மெய்யாகவே உயர்ந்த பண்புகள் கொண்ட பிரபு”

அவள் புன்னகை செய்தாள். அவள் அரைத்தூக்கத்தில் புன்னகைசெய்வதைப் போலிருந்தது. “நான் அதன்பின் இரண்டு நாடகங்களை பார்த்திருக்கிறேன். விர்ஜீனியாவும் ஆப்பியசும். எல்லாமே வெறும் வளவளப்புகள். ஆனால் இந்த நாடகம் ஆழமானது. மெய்யாகவே அடிப்படைப் பிரச்சினைகளை தொடுவது. இந்த ஆசிரியரை நான் கேள்விப்பட்டதே இல்லை. இந்தப் புத்தகத்தை வைத்துப் பார்த்தால் இது பெரிதாக ஏற்கப்பட்ட நாடகம் இல்லை”

”ஆமாம், அவரை எனக்கு தெரியும்” என்று அவள் சொன்னாள்

”இவரையா? இவர் பெயர் சாமுவேல் கிரிஸ்ப்”

“ஆமாம், ஒரு விருந்தில் பார்த்தேன். அவர் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் காவல்தேவதை போல. அப்பாவின் இடத்தில் இருந்தார். அவர்தான் அந்த பெண்ணை பயிற்சிகொடுத்து எழுத்தாளராக ஆக்கிக்கொண்டிருந்தார்”

“குரங்குகளுக்கு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து ராணுவத்தை உருவாக்கலாமா என்று முன்பு ஜெனரல் ஹாமில்டன் முயற்சி செய்தார் என்பார்கள்” என்று கர்னல் சாப்மான் உரக்கச் சிரித்தார்.

அவளும் சிரித்தபடி “ஆனால் இந்நாடகம் கவனிக்கப்படவில்லை. ஆகவே அவர் கசப்பு நிறைந்தவராக இருந்தார்”என்றாள்.

“அது எப்போதுமே அப்படித்தான். உண்மையை லண்டனில் உயர்குடிப்பெண்கள் விரும்புவதில்லை. அவர்கள் பொய்யான கற்பனாவாதக் காதல்பேச்சுக்களையும் செயற்கையான நெகிழ்ச்சிகளையும்தான் விரும்புகிறார்கள். எப்போது எது கலை, எது இலக்கியம் என்று முடிவுசெய்பவர்களாக பெண்கள் ஆனார்களோ அப்போதே எல்லாம் அழிந்துவிட்டது. ஷேக்ஸ்பியர் இன்றிருந்தால் அவருடைய துன்பியல் நாடகங்களை பெண்கள் வெறுத்து வெளியே தெரியாமலாக்கியிருப்பார்கள்” என்று கர்னல் சாப்மான் சொன்னார். “பெண்களுக்கு அவர்கள் பேசும் வம்புகளையே எழுத்தில் வாசிக்க ஆசை… பேதைகள்”

அவள் அதேபோல புன்னகை செய்தாள், இயந்திரம்போன்ற கச்சிதமான பொய்யான புன்னகை.

“உன் கருத்தைச் சொல்” என்றார் சாப்மான். “நான் இங்கே வரும்போது இந்தப்புத்தகத்தை வேண்டுமென்றேதான் எடுத்துவந்தேன்” என்றார் கர்னல் சாப்மான்.  “ஏனென்றால் இதில் நீ ஏதோ சொல்வதற்கிருக்கிறது… ஆமாம், அது எனக்குத் தெரியும். நீ ஒன்று சொல்லவேண்டியிருக்கிறது”

But why should I allow myself to be humbled by a man who can suffer his reason to be thus abjectly debased.ஈவ்லினாவின் வரிகளா? அவை ஏன் என் தலைக்குள் ஒலிக்கின்றன. எதிர்பாராத கணத்தில் இயல்பான அசைவுபோல நீண்டுவந்து என் மார்பைப் பற்றிக் கசக்கி மீண்ட கை. புலி வந்து இரை கவ்வுவது போல. புலி தன்னை பூனையென ஆக்கிக்கொள்ளத் தெரிந்த விலங்கு. 

முதல் அந்நியத் தொடுகை. அதிலிருந்தது வெறும் வேட்கை. வெறும் தசையாக என் உடலை மாற்றும் ஒன்று அந்த விரல்களில் இருந்தது. அந்தக் கையை எத்தனை முறை எத்தனை வகைகளில் பின்னர் அறிந்துவிட்டேன். கனவுகளில் மேலும் பலநூறுமுறை? நான் ஏன் என்னை சிறுமைசெய்துகொள்கிறேன்? என்னை அறுத்து எடைபோட்டு விற்கிறேனா? …when I am exalted by one who knows no vice, and scarcely a failing, but by hearsay?

”நல்ல படைப்பு” என்று அவள் சொன்னாள்.

அவர் எரிச்சலடைந்தார். “நான் உன்னிடம் கேட்பது அதையல்ல.ஓர்  இலக்கிய படைப்பைப் பற்றி சொல்லவேண்டிய வரி அது அல்ல”

“பிறகு எது?” என்று அவள் கேட்டாள். அவளுடைய புன்னகை மீண்டும் இளமையும் கள்ளமின்மையும் கொண்டதாக ஆகியது.அவள் ஓர் ஆயுதத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டுவிட்டாள். பூமுள், ஆனால் நஞ்சு கொண்டது.

”தெரியவில்லை. ஆனால் வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல . நான் கேட்க விரும்புவது அதற்கப்பால் ஆழமான ஒன்று. உன் ஆத்மாவிலிருந்து வரும் ஒன்று. அது உன் சொற்களில் வெளிவரவேண்டும். அதைத்தான் நீ இங்கே சொல்லியிருக்கவேண்டும்” என்றார் கர்னல் சாப்மான்

அவள் “மெய்யாக சொல்லப் போனால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை” என்றாள்

அவர் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவள் புன்னகையுடன் எழுந்துகொண்டு “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கர்னல் சாப்மான்?”என்றாள். “நான் என்னை விர்ஜீனியாவாக நினைத்துக் கொள்வேன் என்றா?”

அவர்  நடுங்கும் கைகளைக் கோர்த்தபடி  “அதெப்படி?” என்றார்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

“ஏன்?” என்று கேட்டபோது அவர் முகம் அத்தனை கோணலாக வலிப்பு கொண்டிருந்தது. கீழ்பற்கள் வெளித்தெரிந்தன. சுருட்டுப் புகையால் கருமை படிந்த உதடுகள்.

“ஆனால் அத்தனை இளம்பெண்களும் அப்படித்தான் உண்ர்வார்கள். அதனாலென்ன?” என்று சொன்னபின் அவள் எழுந்து படுக்கைக்குச் சென்றாள்.

வெளியே மென்மழை தொடங்கியிருக்கலாம். ஓசை முழங்கியது. அரிக்கேன் விளக்கின் ஆடும் ஒளியில் அறை மிதந்தலைந்தது. நான் புத்தகத்தை தழைத்தேன். கண்களை மூடியபடி அமர்ந்திருந்தேன். கண்களை மூடினாலும் புத்தகம் அதேபோல எழுத்துக்களுடன் அப்படியே தெரிந்தது. அப்படியே படித்துச் செல்லமுடியும் என்று தோன்றியது. There has been company here all day, part of which I have spent most happily: for after tea, when the ladies played at cards, Lord Orville, who does not, and I, who cannot play, were consequently at our own disposal; and then his Lordship entered into a conversation with me, which lasted till supper-time.

அந்த வார்த்தைகள் புத்தகமோ காகிதமோ இல்லாமல் அப்படியே நின்றிருந்தன. அவற்றை அழிக்கவே முடியாது. நான் இல்லாவிட்டால்கூட அவை அப்படியே நின்றிருக்கும். தெளிவான செதுக்கப்பட்ட எழுத்துக்களுடன்.ஆங்கிலமா? ஆமாம் ஆங்கிலம்தான். ஆனால் நான் வாசித்தவை முழுக்க ஆங்கிலம் என்று சொல்லிவிடமுடியாது.நான் தமிழ் உரையாடல்களைத்தான் வாசித்ததாக நினைவில் இருந்தது. என்னுடன் அவள் பேசியவை எல்லாம் தமிழில்தான்.

என் முன் உடையின் அசைவை கேட்டேன். அருகே அவள் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். மிக அருகே, என்னைக் கூர்ந்து பார்த்தபடி.There has been company here all day.

நான் கண்களைத் திறக்கபோனேன். அவள் மிக மெல்ல “வேண்டாம்” என்றாள்

“யார்?”என்று நான் கேட்டேன். “ஹெலெனாவா?”

“இந்நாவலின் கதாநாயகி”

“அதுதான், யார்?”

“கண்களை திறக்கவேண்டாம்” என்று அவள் சொன்னாள். “என்னை கண்களால் பார்க்கமுடியாது”

நான் சற்றுநேரம் கழித்து “ஏன்?” என்றேன்.

“ஏனென்றால் என் இருப்பு மொழிவடிவத்தில்தான்.”

நான் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் “ஆனால் நீ என் மனப்பிரமையாக இருக்கலாமே?” என்றேன்.

”அப்படியென்றால் கைநீட்டி என்னை தொடலாம்”

“அப்படியா?”

”கை நீட்டுங்கள்”

நான் என் கையை மெல்ல நீட்டினேன். மிகமெல்ல, தயங்கி, மீண்டும் நகர்த்தி. என் கைமேல் ஒரு கைவிரல்நுனி பட்டது. நான் அது என் பிரமையா என்று எண்ணினேன். மீண்டும் கையை நீட்டி அந்த விரலை தொட்டேன். மனிதக் கை, வெப்பமும் உயிர்த்தன்மையும் கொண்ட கை.

சட்டென்று கண்களைத் திறந்தேன். எதிரில் எவருமில்லை. ஆனால் அப்போதும் கைகளில் அந்த தொடுவுணர்வு இருந்தது. நான் திகைத்து எழுந்துவிட்டேன்.

ஆனால் சற்றுநேரம் சிறிய நடுக்கத்துடன் நின்றுவிட்டு மீண்டும் அமர்ந்தேன். அந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். ஈவ்லினாவின் வரிகள் கண்ணுக்குப்ப் பட்டன. Almost insensibly have three days glided on since I wrote last, and so serenely, that, but for your absence, I could not have formed a wish. அந்த வரிகள் அப்படியே விசைகொண்டன. பின்னர் நான் அந்த வரிகளில் சென்றுகொண்டிருந்தேன். ஈவ்லினா இயல்பாக ஹெலெனாவாக மாறினாள்.

இன்று காலை நல்ல இருட்டிலேயே எழுப்பிவிட்டார்கள். நான் நேற்று தூங்க நெடுநேரமாகியது. எழுந்து பார்த்தபோது படுக்கையில் கர்னல் இல்லை. அவர் எழுந்து வெளியே அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார். சற்று அப்பால் மக்கின்ஸி தரையில் கால்மடித்து அமர்ந்து துப்பாக்கிகளை சரிபார்த்து குண்டுகளை பெல்ட்டில் அடுக்கிக் கொண்டிருந்தார். அவர் அருகே ஜான் ஃப்ரேசர் நின்று உதவினான். அவர்களைச் சுற்றி கருப்பர்களான வேலைக்காரர்கள் நிழல்கள் போல நடமாடினர்.

அவர்களில் இரண்டு பட்லர்கள் மட்டுமே மேலாடை அணிந்தவர்கள். மற்றவர்கள் கரிய வெற்றுடலில் இடுப்பில் மட்டும் வெள்ளை ஆடையை வரிந்து கால்சட்டை போல உடுத்தவர்கள். அழுக்கடைந்து மண்நிறமாக மாறிவிட்டிருத ஆடை. ஜான் ஃப்ரேசரும் காக்கி உடையில் இருந்தான்.

நான் கர்னலிடம் “குட்மார்னிங்”என்றேன்.

அவர் உற்சாகமாக “வெரி குட்மார்னிங்…நாம் இன்னும் அரைமணிநேரத்தில் கிளம்பவேண்டும். வெளிச்சம் எழும்போது நாம் அந்த மலையின் உச்சியில் இருக்கவேண்டும். அங்குதான் புலி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றார்.

ஜான் ஃப்ரேசர் நிமிர்ந்து என்னை பார்த்து மரியாதையாக தலைவணங்கிவிட்டு பார்வையை விலக்கிக் கொண்டான். இனி இந்த நாள் முழுக்க என்னுடன் பேசமாட்டான்.

மக்கின்சி என்னிடம் “இந்த ஆடைகள் அணிந்துகொள்ள எளியவை. உனக்கு டீ தரச் சொல்லியிருக்கிறேன். எதையும் சாப்பிடவேண்டாம். சாப்பாடு முழுக்க பெட்டிகளில் உள்ளது. காட்டிலேயே சாப்பிடலாம். நடந்து மேலேறினால் நன்றாகவே பசிக்கும்”என்றார்.

நான் வெளியே தட்டி வைத்து மறைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு அந்த கடினமான காக்கித்துணியாலான கால்சட்டையையும் சட்டையையும் அணிந்துகொண்டேன். முழங்கலவரை வரும் ஃபீல்ட் பூட்ஸுகள் அணிந்து வெளியே வந்தபோது என் நடையே மாறியிருந்தது.

அனைவரும் அப்போது தயாராகி முற்றத்தில் நின்றிருந்தனர். தோல்பைகளுடன் வேலையாட்கள் நின்றனர். வழிகாட்டியான பழங்குடி இளைஞன் இடுப்பில் ஒரு சிறிய ஆடை மட்டும் அணிந்து கையில் ஒரு முனைகூர்த்த கழி வைத்திருந்தான். வேறு ஆயுதம் ஏதுமில்லை.

“கிளம்புவோம்”என்று கர்னல் சொன்னார்.

வழிகாட்டி இளைஞன் முன்னால் சென்றான். அவனுக்குப்பின்னால் துப்பாக்கியுடன் இரண்டு படைவீரர்கள். அவர்களைத் தொடர்ந்து மக்கின்ஸியும் ஜான் ஃப்ரேசரும். கர்னலும் நானும் இணையாக நடந்தோம். எங்களுக்குப்பின்னால் மேலும் இரண்டு படைவீரர்கள். துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு மிகப்பின்னால் பொதிசுமப்பவர்கள். நீண்ட வரிசையாக நாங்கள் மலையில் ஏறிச்சென்றோம்.

இருபக்கமும் காடு இன்னமும் இரவின் ஒலியுடன் இருட்டாகச் சூழ்ந்திருந்தது. உள்ளே விதவிதமான விலங்கொலிகள் கேட்டன. தும்மல்போல ஒலிப்பது காட்டு ஆடின் ஓசை என்று கர்னல் என்னிடம் சொன்னார். இருட்டுக்குக் கண்பழகியபோது நான் மரங்களை தனித்தனியாகப் பார்த்தேன். இலைகளையும் அவற்றில் அமர்ந்திருந்த தவளைகளையும்கூடப் பார்க்கமுடிந்தது.

சற்றுநேரத்திலேயே நுரையீரல் உடையுமளவுக்கு மூச்சுவாங்க ஆரம்பித்தது. வாயால் மூச்சுவிட்டபடி நின்றேன்.

கர்னல் என்னிடம் “இளைப்பாற எளிதான வழி இது. இரு முழங்கால்களிலும் கைகளை ஊன்றி முன்னால்குனிந்து நின்று வாயால் ஆழமாக இழுத்து மூச்சை விடவேண்டும். உன் நுரையீரல் தொங்கியிருக்கவேண்டும், அதனால் அதிகமாக ஆக்ஸிஜனை இழுக்க முடியும்”

நான் குனிந்து நின்று மூச்சை இழுத்தேன். என் வியர்வையின் மணமும், மண்ணின் ஈரமணமும், சூழ்ந்திருந்த பச்சைத்தழைப்பின் மணமும் நுரையீரல்களை நிறைத்தன.

கர்னல் குரல் தாழ்த்தி “சற்று தொங்கவிடுவது உன் மார்பகங்களுக்கும் நல்லது”என்றார்.

நான் புன்னகைத்தேன். நாங்கள் மீண்டும் மலையில் ஏறிச்சென்றோம். மெல்லமெல்ல காடு வெளிச்சம் பெறத்தொடங்கியது. எப்போது விடிந்தது என்றே தெரியவில்லை. இலைகளில் வண்ணம் தோன்றியது. பறவையொலிகள் உச்சம் பெற்றன. நாங்கள் சென்ற பாதை முழுக்க தலைக்குமேல் மரங்களின் இலைகள் செறிந்து கூரையாக இருந்தன. அந்த இலைப்பரப்பின் இடைவெளிகள் வழியாக ஒளிச்சட்டங்கள் இறங்கி மண்ணில் ஊன்றிருந்தன.

எதிரே மலை எழுந்து வந்துகொண்டே இருந்தது. மடிப்பு மடிப்பாக விரியும் பச்சைநிற வெல்வெட்போல. மலைச்சரிவின் உச்சியில் ஒரு பாறை தெரிந்தது.

மெக்கின்ஸி திரும்பி “அது உண்மையில் இரண்டுபாறை. இரண்டுக்கும் நடுவில் நல்ல ஆழமான குகை உண்டு. அது ஒரு புலியின் தங்குமிடம்” என்றார்.

“அங்கே புலி இருக்கிறதா?”என்று கர்னல் கேட்டார்.

“அது பல இடங்களில் தங்கும்… இருக்கிறதா என்று தெரியவில்லை”

“இத்தனை ஓசைக்கு ஓடிவிடப் போகிறது” என்றார் கர்னல்.

“இந்தப் புலிகள் ஓடுவதில்லை. இங்கே எவரும் புலியை வேட்டையாடுவதில்லை. ஆகவே அவற்றுக்கு அச்சமென்பதே தெரியாது” என்று மெக்கின்ஸி சொன்னார்.

நாங்கள் அந்தக் குகையை அடைந்தோம். பழங்குடி இளைஞன் கிட்டத்தட்ட தரையோடு தரையாக உடல்வளைத்து மெல்ல நடந்தான். குகையை அணுகி உள்ளே பார்த்தபின் எழுந்து ’இல்லை’ என கைகாட்டினான்.

அதன்பின் தரையைக் கூர்ந்து பார்த்தான். தரையில் புலியின் பாதத்தடம் இருந்தது. அவன் ’இந்தத்திசையில் ’என்று சுட்டிக் காட்டினான். அங்கே அவன் மட்டுமே தெளிவாக தொடர்புறுத்தக் கூடியவனாக இருந்தான். உலகம் முழுக்க வேட்டைக்காரர்களின் மொழி ஒன்றுதான் போலும்.

நான் மீண்டும் காட்டின்மேல் ஆர்வம் கொண்டேன். அவர்கள் அந்தப்புலியை கொல்லக்கூடும் என்ற எண்ணமே வரவில்லை, அதைப் பார்க்கலாம் என்ற ஆவலே மிகுந்திருந்தது. மெக்கின்ஸி கைகாட்டி அத்தனை சுமையாட்களையும் அங்கேயே நிற்கும்படி ஆணையிட்டார். அவர்கள் பொதிகளை இறக்கி வைத்து பெருமூச்சுவிட்டார்கள். நான்கு படைவீரர்களும், நானும், கர்னலும் ,மெக்கின்சியும், ஃப்ரேசரும் மட்டும் பழங்குடி வழிகாட்டியை தொடர்ந்து சென்றோம்.

அந்த பாறையிலிருந்து மறுபக்கம் நிலம் சரிந்திறங்கிச் சென்றது. மிக ஆழத்தில் ஒர் ஓடையில் முடிந்து அங்கே மடிந்து மேலேறி இன்னொரு மலையாக மாறி எதிரே நின்றது. அதன் உச்சியில் வரிசையாக மரக்கூட்டங்கள். அதற்குமேல் வானம் மழைமேகங்கள் செறிந்ததாக தெரிந்தது. ஆனால் அந்த  மேகங்கள் ஒளிகொண்டிருந்தன. சூரிய ஒளிவிழுந்த உறைபனிக்குவியல்கள் போல சாம்பல் படிந்து, விளிம்புகள் வெண்மை கொண்டு, படிகத்தன்மையுடன்…  

பக்கவாட்டில் அந்த புலிப்பாதத் தடத்தை பழங்குடி இளைஞன் சுட்டிக்காட்டி சைகையால் ஏதோ சொன்னான். மிகமெல்ல காலடி வைத்து , எதுவும் பேசிக்கொள்ளாமல் நாங்கள் நடந்தோம். அடர்காட்டுக்குள் அதன் பின்னர்தான் ஊடுருவிச் சென்றோம். அது ஒரு பச்சைநுரைப்பரப்புக்குள் மூழ்கிச் செல்வது போலிருந்தது. அத்தனை பச்சை, அத்தனை தாவரச்செறிவு, அத்தனை உயிர்த்திரள். எங்கு பார்த்தாலும் தவளைகள், அட்டைகள், தாவும்புழுக்கள், நெளியும் புழுக்கள், வண்டுகள், பூச்சிகள். நூற்றுக்கணக்கான குளிர்ந்த நாக்குகள் போல பச்சை இலைகள் எங்கள் உடல்களை நக்கின.

மரங்களும் செடிகளும் கொடிகளும் பூசணங்களும் பெரணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி முண்டியடித்து மேலெழெ முயன்றன. எழுந்து மேலே சென்ற மரங்களின் அடித்தடிகள் கோபுரங்கள் போலிருந்தன. அவற்றில் இடைவெளியில்லாமல் கொடிகள் படர்ந்திருந்தன. அவற்றுக்குள் சிறு பறவைகள். அத்தனை மரங்களும் பச்சை லினன் ஆடையை அணிந்திருப்பதுபோல பாசி மூடியிருந்தன. ரீ என்னும் ஒற்றை ஓசையால் காடு சூழ்ந்து திகழ்ந்துகொண்டிருந்தது. அது ஆர்கனின் c2 போல முடிவில்லாமல் சுருளவிழ்ந்து செல்லும் ஓசை. 

பழங்குடி இளைஞன் நின்று புலி சென்ற திசையை கையால் சுட்டிக் காட்டினான். இப்போது அவன் தன் மூக்கையே பெரிதாக நம்பினான். புலி சென்றவழியில் சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்திருந்தது.அதை அவனால் முகர்ந்து தடம் அறிய முடிந்தது.

நின்று தண்ணீர் குடித்துக் கொண்டோம். எங்கள் தலைக்குமேல் பறவைகளின் ஓசைகள் நிறைந்திருந்தன. ஆனால் முதலடுக்கு தலைக்குமேலே உள்ள பச்சைக்கூரைக்கு மேலே அவை இருந்தமையால் பார்க்கமுடியவில்லை.  காலடியோசையில் பல பறவைகள் எழுந்து பறந்தன. ஒளிரும் சிவப்புநிற வால்கொண்ட காட்டுக்கோழிகள், தவிட்டுநிறம் கொண்ட காகம் போன்ற ஒரு பறவை, தத்தி நடக்கும் ஒரு சிறுபறவை. நாலைந்து முயல்கள் வெண்பந்துகள் போல துள்ளி அப்பால் சென்றன.

ஆனால் மான்கள், ஆடுகள் எவற்றையும் நாங்கள் பார்க்கவில்லை. அவை புலியை முன்னரே உணர்ந்து பதுங்கியிருக்கக்கூடும். ஒரு பச்சைப்பாம்பை மிக அருகே கண்டு நின்றுவிட்டேன்.

கர்னல் “அது விஷமற்றது” என்றபின் தன் கத்தியால் அதை வெட்டி தள்ளினார். அதன் எஞ்சிய உடல் தரையில் விழுந்து வளைந்து நெளிந்து முறுகியது.

“மரக்கிளைகளில் கொடிபோலச் சுற்றியிருக்கும். உண்மையில் லூசிஃபர் இந்த வடிவில்தான் வந்தான்” என்றார்.

அது நகைச்சுவை என நான் புன்னகையால் ஏற்றுக்கொண்டேன்.

“லூசிஃபர் பெண்களைத்தான் எப்போதும் பின்தொடர்கிறான்” என்றார் கர்னல். நான் அதற்கும் புன்னகைத்தேன்.

வழிகாட்டி தரையைச் சுட்டிக்காட்டினான். யானைக்கூட்டம் ஒன்று சென்றிருந்தது. தரையில் சிதறிய யானைச்சாணி கிடந்தது. ஒரு வண்டி சென்றதுபோல சிதைந்து விலகிய புதர்கள் வழியாக அக்கூட்டம் சென்ற தடம் தெரிந்தது. அது நாங்கள் செல்லவேண்டிய திசை அல்ல.அதிலிருந்து வலப்பக்கமாக திரும்பி புலியின் தடம் தேடிச்சென்றோம்.

நான் கால்களை தூக்கித் தூக்கி வைக்க பயின்றுவிட்டேன். அது நடையை மேலும் எளிதாக்கியது. கொடிகள் சப்பாத்துகளில் சுற்றிக்கொள்ளவில்லை. ஆனால் வேர்களில் கால் படியாமல் தடுமாறவேண்டியிருந்தது. அந்தச் சப்பாத்தின் அடி மிகக் கனமானது, அகன்றது. ஆகவே விழவேண்டியதில்லை. என் நடை என் உள்ளத்தின் எண்ணங்களை மாற்றியது. என்னையே ஆண்மைகொண்டவளாக ஆக்கியது.அந்தக் காட்டிலும் நான் லண்டன் வரவேற்பறைகளுக்காக பழகிய ஒயில் நடையிலேயே அதுவரை வந்துகொண்டிருந்தேன் என்று நினைத்தபோது புன்னகை வந்தது.

மிகப்பெரிய பல்லி போன்ற ஒரு விலங்கு மரத்தில் கைகளாலும் கால்களாலும் கவ்வியபடி அமர்ந்திருந்தது. செதில்செதிலான உடல். முதலையின் சிறுவடிவம். அதன் இமைகள் சிமிட்டி மூடி திறந்தன. எங்கள் தலைக்குமேல் பூனை அளவிலான பெரிய அணில்கள் சில தாவிச்சென்றன. அவற்றின் வால்கள் தவிட்டுநிறத்தில் பூக்குலை போல மென்மயிர்ப் பிசிறலைக் கொண்டிருந்தன. ஒன்று அமர்ந்து எங்களைப் பார்த்தது.சிறிய நாய்க்குட்டி போன்ற முகம் கொண்டிருந்தது.

சட்டென்று ஒரு பிளிறலோசை கேட்டது. பழங்குடி இளைஞன் கைகளை அசைத்தபடி கூவிக்கொண்டு ஓடிவந்தான். புதர்களுக்குள் இருந்து மிக அருகே ஓர் யானை தோன்றியது. ஒரு செம்மண்குன்று போலிருந்தது அது. அதன் உடலெங்கும் மண், அதில் சிறு விதைகள் முளைத்துச் செடியாகியிருந்தன. மிகப்பெரிய தந்தம் மரத்தாலானதுபோலிருந்தது.

நான் சிலகணங்கள் பிரமைபிடித்தவளாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவருக்கும் துப்பாக்கி எடுக்க அவகாசமில்லை. கர்னல் “வா” என்று என் கையை பிடித்துக்கொண்டுஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினார். படைவீரர்கள் வானை நோக்கிச் சுட்டார்கள். ஜான் ஃப்ரேசர் விசில் அடித்தபடி எதிர்த்திசையில் ஓடி யானைகளை திசைதிருப்பினான். மெக்கின்ஸி தன் ஃரைபிளுடன் பின்னோக்கி பாய்ந்து முழந்தாளிட்டு அமர்ந்து குறிபார்த்தார்.

வெடியின் ஓசையில் காடு முழங்கியது. மேலும் ஒரு பிளிறல் எழுந்தது. நான் வெறிபிடித்தவளைப்போல ஓடினேன். கர்னல் “அப்படி ஓடாதே, நில்” என்று என்னை நோக்கி கூவியபடி ஓடிவந்தார். இன்னொரு யானை பக்கவாட்டிலிருந்து எழுவதை நான் ஓரக்கண்ணால் கண்டேன்.

யானைகளைச் சுடாமல் வானைநோக்கி சுட்டபடியே அவற்றை திசை திருப்பி வீரர்கள் அங்குமிங்கும் ஓடினர். நான் பாய்ந்தொடிச் சென்றபோது நேர் எதிரில் யானை ஒன்றைக் கண்டேன். நின்று அலறி அப்படியே பக்கவாட்டில் திரும்பி பாய்ந்தபோது அங்கே என்ன இருக்கிறதென்றே உணரவில்லை. அது புதர்ப்பரப்பு. என் கால்கள் அமிழ்ந்தன. நீர்ப்படலம் போல அது என்னை உள்ளே விட்டது. என் கால்கள் அடியிலியை உணர்ந்து பதற, என் உடல் விரைப்பு கொண்டது.

நான் கீழே விழுந்தேன். மிகச்செங்குத்தான சரிவு. ஆனால் புதர்கள் மண்டியிருந்தமையால் நான் அவற்றில் தங்கி தங்கி விழுந்துகொண்டே இருந்தேன். நூற்றுக்கணக்கான கைகள் என்னை பந்து போல ஏந்தி ஏந்தி வீசுவதாகத் தோன்றியது.

“ஹெலெனா… இரு… அவசரப்படாதே… நான் வருகிறேன்” என்று சொல்லி கர்னல் பக்கத்து புதர்மேல் பாய்ந்தார். புதரிலிருந்து புதருக்கு தாவி என்னை தொடர்ந்து வந்தார்.

நான் விழுந்து விழுந்து கடைசியாக ஒரு கிளையில் தங்கி, அது வளைந்து என்னை உதிர்க்க, கீழே ஓடிய ஓடையில் சென்று விழுந்தேன். குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருந்தது. நீர்ப்புல்கள் சூழ்ந்த ஓடை. சேறு இல்லை. நீரில் இருந்து நான் எழுந்தபோது என் மேலிருந்து நீர்ப்பாம்பு ஒன்று உதிர்ந்து நீரில் நெளிந்தோடியது. நான் அலறியபடி ஓடையின் மறுபக்கம் ஏறிக்கொண்டேன்.

கர்னலும் வந்து ஓடையில் குதித்தார். நீரில் காலை இழுத்தபடி எழுந்து மேலே வந்தார். என்னிடம் ”அடி ஒன்றும் படவில்லையே?”என்றார்

எனக்குச் சிறிய சிராய்ப்புகள் அன்றி ஏதுமில்லை. முழங்கையில் இருந்து மட்டும் ரத்தம் வந்து நீரில் கரைந்து வழிந்துகொண்டிருந்தது. முழங்கால்கள் எரிந்தன. உடலெங்கும் புல்லும் இலைகளும் ஒட்டியிருந்தன. அவர் வந்து என் முகத்திலும் கைகளிலும் இருந்த புல்லை தட்டிவிட்டார்.

“நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை”என்றார்

”ஆமாம், அத்தனை ஆழத்துக்கு வந்திருக்கிறோம்”

“இங்கே சரிவுகள் எல்லாமே செடிகள் செறிந்தவை. மொட்டைப்பாறையாலான மலைவிளிம்புகள்தான் ஆபத்தானவை. விழுந்தபோது நீ பயப்படாமல் இருந்திருந்தால் ஏதாவது ஒரு செடியை பற்றிக்கொண்டிருக்க முடியும்”

“எனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை”

“விலங்குகள் தாக்கும்போது அப்படி மிரண்டு தன் போக்கில் ஓடக்கூடாது. சமயங்களில் விலங்குகளின் முன்னாலேயே சென்று மாட்டிக்கொள்வோம். அங்கே அவர்கள் யானைகளை திசைதிருப்புவார்கள். நாம் வசதியாக ஒளிந்துகொண்டிருக்கலாம்” என்றார் கர்னல் சாப்மான்.

“என்னால் எதையுமே யோசிக்க முடியவில்லை” என்றேன். என் உடலெங்கும் ஏதோதோ எரிச்சல்கள், காந்தல்கள். கழுத்திலும் கன்னத்திலும் சிறுபூச்சிகள் ஒட்டியிருந்தன. வாயில் சிக்கிய சருகுத்துகள்களை துப்பினேன்.அல்லது அவை சிறு பூச்சிகள்.

“உண்மைதான், நீ காட்டுக்கு புதியவள். உன்னை என் அருகே நிறுத்தியிருக்கவேண்டும்” அவர் மேலே பார்த்தார். “மேலே ஒன்றுமே தெரியவில்லை. இப்படியே மீண்டும் மேலேற முடியாது. புதர்கள் அழுத்தமாகச் நிறைந்திருக்கின்றன. அவர்களும் விலகி ஓடியிருக்கலாம்…”

அவர் நிலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு “அந்த பகுதியிலிருந்துதான் மேலேறினோம். அப்படியென்றால் இந்த மேட்டுப்பகுதி சரிந்து இறங்கிச்சென்று அங்கே இந்த ஓடைவரை வந்துசேரும். மேலிருந்து இந்த ஓடைக்கு வந்துசேரும் ஓர் ஓடை இருக்கும். இந்த ஓடையில் இருந்து அந்த ஓடை வழியாக மேலே சென்று விடலாம்…” என்றார்.

“இந்த ஓடைவழியாக நடக்கவேண்டுமா?” என்றேன்.

“ஆமாம், கொஞ்சம் வழுக்கும். ஆனால் சேறு இல்லை. அது நல்லது”

“தண்ணீர்ப்பாம்புகள்…”

“அவை கடிக்காது” என்று அவர் சொன்னார். “எனக்கு ஒரு வண்ணத்துணி வேண்டும்”

நான் என் கைக்குட்டையை சட்டைப்பையில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவர் அதை கிழித்து ஒருதுண்டை அங்கிருந்த ஒரு புதரில் கட்டினார்.

”இது எதற்காக?”

“நம்மைத் தேடிவந்தார்கள் என்றால் நாம் எங்கே சென்றோம் என்று தெரியும்”

அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். “மெய்யாகவே நான் பயந்துவிட்டேன். நீ கீழே செல்வதைக் கண்டபோது எதுவுமே தோன்றவில்லை” என்றார். “இங்கே சட்டென்று மலைச்சரிவு முடிந்து பாறைவிளிம்பு இருந்திருந்தால் நீ ஆழத்திற்கு விழுந்திருப்பாய்…அப்படியும் பல இடங்கள் இருக்கின்றன”

நான் புன்னகைத்தேன். அவர் என் கையை பிடித்துக்கொண்டு “பார்த்து வா… ” என்றார் ”இங்கே உள்ள நல்ல அம்சம் என்னவென்றால் இங்கே அந்த யானைக்கூட்டம் வராது… துப்பாக்கி இருந்தாலும் நாம் அஞ்சவேண்டியது யானைகளைத்தான்.”

“அந்த பழங்குடி இளைஞன் யானை வருவதை ஏன் சொல்லவில்லை?”

“அவனும் மாட்டிக்கொண்டான். யானை எல்லாரையும் ஏமாற்றிவிட்டது. மிக அரிதாக அப்படி ஆகும்” என்றார் “யானையைப் பற்றி உனக்குத் தெரியாது. அது மனிதனைப் போலவே கூர்மையான மிருகம். அது சதிசெய்யும், திட்டமிட்டு தாக்கும், கூட்டமாக வேலைகளைப் பிரித்துக்கொண்டு வளைந்து தாக்கும்…” என்றார் கர்னல் சாப்மான்.

நான் மேலே பார்த்தேன், அங்கே வெறும் பச்சைப்பரப்பே தெரிந்தது.

“யானைகள் இம்முறை நன்றாகவே திட்டமிட்டிருக்கின்றன. ஒரு யானைக் கூட்டம் வேண்டுமென்றே சாணிபோட்டுக்கொண்டு காட்டில் முன்னால் சென்றிருக்கிறது. நெடுநேரம் முன்பு யானைக்கூட்டம் அவ்வழியாகச் சென்றிருக்கிறது என்று வழிகாட்டி நினைத்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் இருந்து மூன்று யானைகள் மட்டும் புதர்களுக்குள் ஒளிந்து நின்றிருக்கின்றன. ஒன்று நம்மை முன்னால் தாக்கியது. ஒரு யானை பக்கவாட்டில், ஒன்று நேர்பின்னால்… மிகச்சரியான தாக்குதல். அங்கே எவராவது இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது”

“மெக்கின்ஸி?”என்று சொல்லி அச்சத்துடன் நின்றுவிட்டேன்.

“அவனுக்கு ஒன்றும் ஆகாது. படைவீரர்கள் அவனை பாதுகாப்பார்கள். அவர்களில் எவராவது யானையால் கொல்லப்பட்டிருக்கலாம்”

நான் பெருமூச்சுவிட்டேன்.

ஓடை சரிந்து இறங்கியது. ஒரு சிறு அருவி போல ஓசையிட்டது. வழுக்கும் பாறைகள் வழியாக இறங்கி கீழிருந்த மென்மையான மணற்குவியல் மேல் நின்றேன்.

கர்னல் “மணலை இங்கே நம்பக்கூடாது. அடியில் சருகுக்குவியல் இருக்கும். அதன்மேல் மணல் நிறைந்திருக்கும். மணல் என நினைத்து மிதித்தால் கால்கள் உள்ளே சென்றுவிடும்” என்றார்.

அங்கே கைக்குட்டையின் இன்னொரு துண்டை கிழித்து ஒரு செடியில் கட்டினார்.

“இந்த முடிச்சு எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசைநோக்கிச் சென்றிருக்கிறோம், சரிதானே?” என்றேன்.

“ஆமாம், இரண்டு முடிச்சு இருந்தால் இரண்டுபேர் இருக்கிறோம். குச்சி ஒன்றை வைத்துக் கட்டியிருந்தால் இரண்டுக்கும் மேல்” என்றார் கர்னல் சாப்மான்.

ஓடைவழியாகவே சென்றோம். மேலே எங்கோ மெல்லிய சீழ்கை ஒலி கேட்டது.

கர்னல் கையில் விரல்களை வைத்து விசிலடித்தார். எதிர்வினைக்குச் செவிகூர்ந்துவிட்டு மீண்டும் விசிலடித்தார்.

நான் என் கைகளில் இருந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டிருந்தபோது என் இடப்பக்கம் புதர்களின் அசைவைக் கண்டேன். அது அங்கே மெல்லிய காற்று அசைவது என்றுதான் தோன்றியது. திரும்பிப் பார்த்த பின்னரும் அங்கே புதரோ பூத்தசெடியோ இருப்பதாகவே நினைத்தேன். அதன்பிறகுதான் என் தலைக்குள் அமிலம் விழுந்த துடிப்பு ஏற்பட்டது. அலறியபடி கர்னலை நோக்கி பாய்ந்து அவரைப் பிடித்துக்கொண்டு அவருக்குப் பின்னால் மறைந்தேன். அவர்திரும்பிப் பார்த்தார். எங்களுக்கு முன்னால் புதரிலிருந்து பாதி வெளிப்பட்டபடி ஒரு பெரிய புலி நின்றிருந்தது.

பொன்னிறமான மயிர்ப்பரப்பு, ஊடே கலந்த வெண்மயிர். கரிய சூட்டுத்தழும்புகள் போன்ற கோடுகள். அத்தனைபெரிய முகம் புலிக்கு உண்டு என அப்போதுதான் அறிந்தேன். மீன்முட்கள் போன்ற நீண்ட மீசை விடைத்திருந்தது. தலைக்குமேல் இருந்த இரு சிறிய காதுகள் மட்டும் அசைந்தன. அதன் தலையைச் சுற்றி சிறு பூச்சிகள் பறந்தன். அதன் வால் பின்பக்கம் ஒரு தனி உயிர் போல எழுந்து நின்று மெல்ல அசைந்துகொண்டிருந்தது.

கர்னல் மிக மெல்லிய குரலில் “என்னை பிடிக்காதே. பின்னகரும்போது நான் உன்மேல் தடுக்கி விழக்கூடாது” என்றார்.

நான் அவர்மேல் பிடியை விட்டு பின்னால் விலகினேன். அவர் மிகமெல்ல காலெடுத்து பின்னகர்ந்தார். நானும் அதேபோல பின்னகர்ந்தேன்.

“பிஸ்டல் நீட்டும் தொலைவுக்கு நாம் நகர்ந்தால் போதும்” என்றபடி அவர் மிகமிக மெல்ல கையை அசைத்து இடுப்பிலிருந்து பிஸ்டலை எடுத்தார்.

அது அங்கேயே நின்றது. அதன் முகத்தின் அருகே பறந்த பூச்சிகளை துரத்த தலையை உதறியது. வாய் திறந்து பற்களைக் காட்டியபடி தலையை அசைத்தது. மூக்கைச் சுளித்து, அகலத்திறந்த வாயுடன் அது எதையோ சொல்வதுபோலிருந்தது. அதன் மஞ்சள்நிறமான கோரைப்பற்களை, வாய்க்குள் வளைந்திருந்த சிவந்த நாக்கை நான் அருகே கண்டேன்.

ஒருகணம்தான், ஏதோ நிகழ்ந்தது. நான் அலறியபடி அங்கிருந்து திரும்பி ஓடினேன். திரும்பிப் பார்க்காமல், ஆடையில் தீப்பற்றியவள்போல கைகளை வீசி அர்த்தமில்லாமல் கூச்சலிட்டுக்கொண்டே ஓடினேன். எனக்குப்பின்னால் புலியின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. தகரத்தை உரசுவதுபோல, முழவை மீட்டுவதுபோல. அடிவயிற்றை அதிரவைக்கும் கார்வைகொண்ட உறுமல்.

இரண்டு மூன்று இடங்களில் விழுந்தேன். உருண்டு எழுந்து ஓடி, பாறையில் வழுக்கி, ஓடைநீரில் உருண்டு ,கீழுள்ள பள்ளத்தில் விழுந்து, தவழ்ந்து எழுந்து, மீண்டும் ஓடியபோது எதிரே மெக்கின்ஸியை கண்டேன்.

அலறிக்கொண்டே ஓடி அவரை அடைந்து அவர் முன் விழுந்தேன். அப்படியே மயங்கிவிட்டேன்.

மக்கின்ஸி என் முகத்தில் தண்ணீரை தெளித்து என்னை உலுக்கினார். “ஹெலெனா, சொல். என்ன ஆயிற்று? கர்னல் எங்கே?”

நான் கைசுட்டி “அங்கே…அங்கே” என்றேன்.  “அவரை புலி கவ்வி விட்டது…”

மெக்கின்ஸி ஜான் ஃப்ரேசரிடம் “இவளை அழைத்துச்செல். பங்ளாவுக்கு” என்று சொல்லிவிட்டு ரைஃபிளுடன் முன்னால் ஓடினார். இன்னொரு வீரன் அவர் பின்னால் ஓடினான்,

“இன்னொருவன் எங்கே?”என்று நான் கூவினேன்,

“ஸ்ரீதரன்நாயரை யானை கொன்றுவிட்டது”என்று ஃப்ரேசர் சொன்னான். “என் கைகளை பிடித்துக்கொள்ளுங்கள்… மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் நடக்கமுடியாது”

“மெக்கின்ஸி… மெக்கின்ஸி அங்கே போகிறார்”

“அவரிடம் துப்பாக்கி இருக்கிறது. வாருங்கள்”

“அவரை விட்டு வரமாட்டேன்” என்று நான் கூவினேன்

“அவருடைய ஆணை இது”

நான் அவனுடன் நடந்தேன். உடைந்துபோய் நரம்பு நோயாளிபோல விசும்பி அழுதுகொண்டிருந்தேன்.

என்னை ஃப்ரேசர் சுமைதூக்கிகளிடம் ஒப்படைத்துவிட்டு துப்பாக்கியுடன் திரும்பச் சென்றான். அவர்கள் என்னை பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.

நான் பங்களாவுக்குள் நுழைந்ததுமே அப்படியே படுக்கையில் சென்று விழுந்து அழத்தொடங்கினேன். நெடுநேரம் அழுதுகொண்டிருந்தேன். என் உடல் அழுந்தோறும் தளர்ந்தது. என் உள்ளத்தின் எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்தன. நான் ஆழ்ந்து தூங்கிவிட்டேன்.

வெளியே சந்தடி கேட்டது. நான் எழுந்தோடி வெளியே சென்று முற்றத்திற்கு வந்த மெக்கின்ஸியை நோக்கி  “என்ன ஆயிற்று? கர்னல் எங்கே?”என்றேன். ‘சொல்லுங்கள், அவர் எங்கே?”

மெக்கின்ஸி தடுமாற்றத்துடன் “அவரை காணவில்லை. புலி அவரை தூக்கிச் சென்றிருக்கலாம். புலியின் காலடிகள் ஆழமாக பதிந்திருக்கின்றன. அவரை அது கவ்விய இடத்தில் சேறு குழைந்திருக்கிறது. அவருடைய கடிகாரம் அறுந்து விழுந்திருக்கிறது…” என்றார்.

“ஏன் திரும்பி வந்தீர்கள்? அவரை காப்பாற்றுங்கள்… அவரைக் காப்பாற்றுங்கள்” என்று நான் கூவினேன்.

“இனி அவரை உயிருடன் காணமுடியாது. புலி அவரை கொண்டுபோய்விட்டது என்பதில் சந்தேகமில்லை. நாம் உடனே மேலிடத்துக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். இது மிகப்பெரிய விஷயம்” என்று மெக்கின்ஸி சொன்னார்.

“இல்லை, அவர் அங்கே இருக்கிறார். அவர் காத்திருக்கிறார். அங்கே போய் அவரைக் காப்பாற்றுங்கள்” என்று நான் அழுதேன்.

“ஒன்றுமில்லை, இதோபார், நாங்கள் எல்லா இடங்களிலும் தேடிவிட்டோம்” என்றார் மக்கின்ஸி.

“நீங்கள் தேடவில்லை. தேடவிரும்பவில்லை. ஆகவேதான் ஃப்ரேசரை என்னுடன் அனுப்பினீர்கள்” என்று நான் கைநீட்டிக் கூச்சலிட்டேன்.

“என்ன சொல்கிறாய், முட்டாள்” என்று மெக்க்னிஸ் பல்லைக் கடித்தார்.

நான் ஜான் ஃப்ரேசரை நோக்கி “இங்கே எப்படி திரும்பி வந்தாய்? அவருக்கு நீதான் மெய்க்காப்பாளர், முட்டாள், எப்படி திரும்பிவந்தாய்?”என்று கூவினேன்.

ஜான் ஃப்ரேசர் “காப்டனின் ஆணை” என்றான்.

“அவர்தான் கர்னலின் சாவுக்குக் காரணம்… இதோ இவர்தான். இது என் அறிக்கை. காப்டன் மெக்கின்ஸிதான் கர்னலை அபாயகரமான இந்த இடத்துக்கு திட்டமிட்டு இட்டுவந்தார். இவர்தான் அவர் சாவதற்கு ஏற்பாடு செய்தார். இது கொலை… இவரை கைதுசெய்யுங்கள்” என்று நான் உடைந்த குரலில் வீரிட்டேன். பைத்தியம்போல கைகால்கள் உதறிக்கொள்ள அங்குமிங்கும் திரும்பியபின் கீழே கிடந்த என் செருப்புகளை எடுத்து மெக்கின்ஸி மேல் எறிந்தேன்.

“என்ன சொல்கிறாய்? ஹனி, இதோ பார். என்ன சொல்கிறாய்? அன்பே…”என்று மெக்கின்ஸி பதறினார். கைகளை நீட்டியபடி என்னை பிடிக்க வந்தார்

“விலகிப்போ கொலைகாரா… நீ பொறாமை கொண்ட மிருகம். நீ என்னை அவரிடம் பழகவிட்டாய். என்னை தூண்டிலாகப் பயன்படுத்தினாய். அவரை வைத்து நீ முன்னேறப்பார்த்தாய். நான் மெய்யாகவே அவர்மேல் காதல் கொண்டதும் நீ பொறாமைகொண்டாய்… அவருடைய சாவு நீ ஏற்பாடு செய்தது… யானைக்கூட்டத்திற்கு உன் வழிகாட்டி வேண்டுமென்றே அழைத்துச் சென்றான்…”

மெக்கின்ஸி நடுங்கிவிட்டார் “ஹனி இதோ பார் ஹனி” என உடைந்த குரலில் அழைத்தார்

“கொலைகாரன்! கொலைகாரன்! நான் நீதிமன்றத்தில் சாட்சி சொல்வேன். ஜூரிகள் முடிவுசெய்யட்டும்… இவன் கொலைக்காரன்”

மெக்கின்ஸி உறுதி அடைந்தார். “உன் மனம் குழம்பியிருக்கிறது… நீ ஓய்வெடு” என்றபடி ஃப்ரேசரிடம் திரும்பினார். “நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். முதலில் அருகிலிருந்து படைகளை காட்டுக்குள் வரவழைக்கவேண்டும். ஃப்ரேசர் அது உன் பணி. என் கீழே நீ மட்டும்தான் இங்கே பிரிட்டிஷ் அதிகாரி”

ஃப்ரேசர் “எஸ் சர்” என்றான்.

“ஃப்ரேசர் மேலிடத்துக்குச் சொல். என்னை கர்னல் மணம்புரிவதாகச் சொன்னார். நான் அவரை ஏற்றுக்கொண்டேன்.அதை நான் இவரிடம் சொன்னேன்… சென்றவாரம்தான் சொன்னேன். அதனால்தான் இவர் இந்த திட்டத்தைப் போட்டார். அதனால்தான் இவர் கர்னலைக் கொன்றார்”

“வாயை மூடு, பைத்தியமே” என்று மெக்கின்ஸி துப்பாக்கியை ஓங்கினார்.

“கொல் என்னை, அவரைக் கொன்றதுபோல என்னையும் கொல்” என்றபடி நான் முன்னால் வந்தேன். படிகளில் தடுக்கி விழுந்து எழுந்து அமர்ந்து தலையை அறைந்தபடி அழத்தொடங்கினேன்.

ஃப்ரேசர் வெறித்த பார்வையுடன் நின்றான்.மற்றவர்களும் திகைப்பும் குழப்பமுமாகப் பார்த்து நின்றனர்.

“சோல்ஜர் இது என் ஆணை. உடனே மிக அருகிலுள்ள டிரிவாங்கூர் ராணுவநிலைத்திற்குப் போ. உன் அடையாளத்தைக் காட்டி கூடுமானவரை படைவீரர்களையும் குதிரைகளையும் கூட்டிக்கொண்டு வா. அங்கிருந்து எவரையாவது அனுப்பி டிரிவாண்டிரம் கம்பெனி ராணுவ மையத்திற்கு செய்தியை அனுப்பு…” என்று மெக்கின்ஸி சொன்னார்.

ஃப்ரேஸர் “எஸ்.சர்” என்று சல்யூட் அடித்துவிட்டு திரும்பிச் சென்றான்.

மெக்கின்ஸி “நாம் உடனே இங்குள்ள பழங்குடிகள் அத்தனைபேரையும் இங்கே வரச்சொல்லவேண்டும். படைகள் வருவதற்குள் பழங்குடிகள் ஒருமுறை காட்டில் தேடிப்பார்க்கட்டும்” என்றார்.

படைவீரன் “எஸ் சர்” என்றான்.

”செல்லுங்கள்… உடனே பழங்குடிகளை திரட்டி வாருங்கள்” என்று மக்கின்ஸி ஆணையிட்டார்.

ஒரு ஏவலன் தவிர எஞ்சியவர்கள் விலகிச் சென்றனர். மெக்கின்ஸி என்னிடம் “ஹனி…”  என ஆரம்பித்தார்.

நான் சட்டென்று எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டேன். அவர் கதவை தட்டினார். அதற்குள் அப்பால் அந்த வழிகாட்டியின் அழைப்போசை கேட்டது.

மெக்கின்ஸி அதைநோக்கிச் சென்றார். வெளியே ஓசையில்லை. நான் மட்டும் அந்த விரிந்த கூடத்தில் அந்த மேஜைக்க்கு அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மேஜைமேல் அந்த புத்தகம் இருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகி.ரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுந்தர்லால் பகுகுணா நினைவுகள்- சிவராஜ்