கி.ரா.அஞ்சலிகள்

ஒரு மொழியின் இலக்கியச்சூழல் அதன் பலதரப்பட்ட கதைசொல்லும் சாத்தியங்களால் வளமையடைகிறது. தமிழ் போன்ற ஒரு செவ்வியல் மொழி தனது இலக்கிய மரபை தக்க வைக்கவும் அதேநேரம் நவீன மொழியாக தனது இருப்பை நிறுவவும் பல கதையாடல் சாத்தியங்களை கொண்டிருக்க வேண்டியிருந்தது. நவீனத்துவம் ஒரு பெரும்புயலாக உருப்பெற்று சுழற்றியடித்த காலத்தில் ஒரு தனிமரம் அதன் சுழற்சிக்கு வீழ மறுத்து தனது கிளைகளை அசைத்த படி நின்றது.

மண்ணில் ஆழ வேரூன்றிய அந்த மரம் பெரும்புயலையே திகைக்க வைத்தது.தமிழ் நவீனத்துவத்தின் உச்ச ஆளுமையான சுந்தரராமசாமி ஒரு சிறுகதையை படித்துவிட்டு கி.ராஜநாராயணன் எனும் மண்ணின் கதைகளைப்பேசிய ஒரு சம்சாரியை “அந்தக்கூட்டத்திற்கு கோவில்பட்டி பக்கமிருந்து ஒரு சம்சாரி வருவாரே அவரா இதை எழுதினார்?” எனக்கேட்ட கணத்தை மேற்சொன்ன உருவகம் மூலம் பதிலீடு செய்து கொள்ளலாம்.

சீரான நுட்பமான கலையாக்கமாக இலக்கியத்தை வரையறுத்த சு.ரா கி.ராவின் எழுத்தை “ஆம் இது இலக்கியம்தான்” என உரைத்தார். அது ஏன் அபூர்வமானதெனில் கி.ரா பேசிய மொழியோ உள்ளடக்கமோ சு.ரா அதுவரை வலியுறுத்திய இலக்கியக்கொள்கைக்கு முரணானவை. ஆனால் கலை நமது வரையறைகளை கலைத்தெறிந்தே தன்னை நிறுவி நமக்கு புதிய சாளரத்தை திறந்து விடுகிறது. நாட்டாரியல் நவீன ஆய்வுத்துறையாக உருப்பெற்று வாய்மொழி வரலாறுகளுக்கு ஒரு ஆய்வுப்புல முக்கியத்துவத்தை அளித்தபோது கி.ரா தனது மண்ணில் வனங்களும் சோலைகளாகவுமே செழுமை என்பதற்கு நிகராக கருவைமுள்ளிற்கும்

கள்ளிச்செடிக்கும் மண்ணில் அதே நிலைபேறு உள்ளதென நிறுவினார். இலக்கியத்தோட்டம் பூங்காக்களை மட்டுமே உள்ளடக்கியது என்கிற சு.ராவின் மனநிலையை கி.ரா.வின் கரிசல்மண்ணும் கருவைமரங்களும் நிலைகுலைய வைத்தன. மண்ணும் மனிதர்களும் இப்படிக்கலந்து வாழ்வதின் அசலான நேர்காட்சியை கி.ராஜநாராயணனின் கதைகள் நம்முன் வைத்தன. தமிழ் தனது அசல்மைந்தர்களை மடியிலேந்திக்கொண்டது.போர்க்களத்தில் அம்புகள் துளைத்திருந்த கர்ணனை குந்தி மடியிலிட்டுக் கொண்டதைப்போல..!

தமிழ் இலக்கியத்தில் முன்மாதிரிகளோ, பின்தொடர்ச்சிகளோ அற்ற ஒரு ஆளுமை கி.ரா. ஒரு வாசகனாக என்னால் அவருக்கு முன்பின் என யாரையும் வரிசைப்படுத்த முடியவில்லை. கு.அழகிரிசாமி உட்பட.

கோபல்ல கிராமத்தில் வரும் காது மந்தமான பழங்கிழவியான தொட்டவ்வா காலத்தின் பிரதிநிதியாக நின்று ஊருக்கு ஆலோசனை சொல்லுவாள். அவள் தன் பெருவாழ்வின் முனையில் நின்று நுண்ணுணர்வால் சொல்லும் சொல்லில் புதியகாலம் பிறக்கும்.

அந்த நுண்ணுணர்வை வரையறுக்க முயன்றும் தோற்றுமே நவீனத்துவம் இங்கு நீடித்தது. நவீனத்துவத்தின் பரிதவிப்பை மேவாயின் ஓரத்தில் வெளிப்படும் எளிய புன்னகையால் கடந்து சென்ற கலைக்கு தமிழில் கி.ராஜநாராயணன் என்று பெயர்..!

எம்மொழியின் பெருங்கலைஞனுக்கு இறுதி வணக்கம்.

 

முருகானந்தம் ராமசாமி

 

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். வருஷம் ஒருக்கா அவன் ராஜாங்கத்துல யாரு பெரீய கலைஞனோ அவன கூப்பிட்டு மரியாத செஞ்சி பெரீய பரிசு குடுப்பானாம். என்னா பரிசுன்னு கேட்டாக்கா… ஒரு படி புத்தரிசி சுடுகஞ்சி.

இதையெல்லாம் ராசா கிட்ட மொற சொல்ல முடியுமா…பெறகு அந்த கஞ்சியும் இல்லாம போயிருமே. இந்த ராசா இருக்க ஊருக்கு இன்னொரு பெரிய ஆளு வந்து, இந்த ராசா அரண்மணல இருக்க எல்லா கலைஞனையும் தன்னோட கலைய வெச்சி தோக்கடிச்சானாம். இவன் இங்க இருக்க எல்லா ஆளுகளையும் தோக்கடிச்ச பெரியாளு, இவனுக்கு இன்னும் பெரிசா பரிசு குடுக்கணுமே அப்டின்னு ராசா ரொம்ப யோசிச்சி, இவனுக்கு சூடா ஒரு படி புத்தரசி கஞ்சி கூடவே கைபுடி அளவு காணத் தொகையலும் குடுங்கோ அப்டின்னு உத்தரவு போட்டானாம்.

இப்டியா பட்ட ராசா ஊருக்கு ஒரு சாமியார் வந்தானாம். அவன் ரொம்ப சக்தி உள்ள சாமியார். ஒரு ஆளை பாத்த ஒடனே அவனோட போன ஆறு ஜென்மத்துல அவன் என்னவா இருந்தான்னு சொல்லிப் புடுவான். ஊர் சனம் மொத்தமும் அவன் கிட்ட போய் அவங்கவங்க போன சென்மத்த பத்தி தெரிஞ்சுகிடுறத பாத்த ராசாவுக்கும் அவனோட போன சென்மத்த பத்தி தெரிஞ்சிக்க ஆசை வந்துச்சாம். அவனும் சாமியார் கிட்ட போனானாம்.

சாமியாருக்கு ராசோவோட போன பிறவி பத்தி தெரிஞ்சது. ஆனா சொல்ல பயம். தலைய வாங்கி புட்டான்னா? அதனால சாமியார் என்ன விட உன் முன் சென்மம் பத்தி நல்லா தெரிஞ்சவன் இப்ப உன் அரண்மனைக்கு வந்த கலைஞன் தான் அவனை போய் கேளு அப்டின்னு சொல்லி அனுப்பினானாம்.

ராசாவுக்கு ஒரே ஆச்சர்யம். என்னடாது  இவம் இந்த சாமியார விட சக்தி உள்ளவனா அப்டின்னு. ராசாவும் சாமியார் சொன்னபடி அவன் கிட்ட போய், தன்னோட போன பிறவி என்னா அப்டின்னு கேட்டானாம். அவன் மூஞ்சில அடிச்சா மாறி  ” போன சென்மம் மட்டும் இல்ல, அதுக்கு முந்தின அஞ்சு சென்மத்துலயும் நீ பல நாள் சோறு காணாத பிச்சக் காரன்தான்” அப்டின்னு சொன்னானாம்.

ராசாக்கு கடும் கோபம், இருந்தாலும் பயம் அந்த சாமியார விட இவன் பெரிய ஆளாச்சே… கோவத்த அடக்கிகிட்டு எதை வெச்சி அய்யா அப்படி சொல்றீங்க அப்டின்னு கேட்டானாம். கலைஞன் ” பின்ன ஒருத்தனுக்கு சந்தோசத்துல பெரிய சந்தோஷம் படி புத்தரசி சுடு கஞ்சி மட்டும்தான் அப்டின்னு நினைக்கிறவன் ஏழு சென்மம் பட்டினியா வாழ்ந்த பிச்சக்காரனா தானே இருக்கணும்” அப்டின்னு சொல்ல, அப்போதான் ராசாக்கு புத்தி வெளங்குச்சாம்.  அதுக்குப் பிரவு அந்த  ராசா மனம் மாறி எல்லோருக்கும் பொன்னும் மணியும் பரிசா குடுக்க ஆரம்பிச்சானாம்.

முன்பொரு சமயம் நான் நைனாவை பார்க்க சென்றிருந்தபோது தன் முன் அமரந்திருந்த ஆறு ஏழு பேருக்கு சொன்ன கதை இது. Sub text என்ன என்று சொல்லவே தேவை இல்லை. அமர்ந்திருந்த ஆட்களில் ஒருவர் அன்று அரசாங்கத்தால் “பெரிய” கவுரவம் ஒன்றை அடைந்திருந்தவர்.

நைனா ஒரே கதையில் யார் யார் இடம் எது என்று புன்னகையுடன் சொல்லி முடித்தார். நைனாவின் பெரும்பாலான விமர்சனம் இப்படியானதுதான். நைனா சொன்ன எத்தனையோ கதைகளில் சாமியார் வரும் கதைகள் மட்டும் தனி வகை. தனது 89 ஆவது பிறந்த நாள் விழாவின் கேள்வி பதில் நேரத்தில் அவர் சொன்ன சாமியார் கதை அன்று மிக புகழ் வாய்ந்தது. நைனாவின் எத்தனையோ தொகுக்க படாத ‘வாய் மொழி’கதைகளில் இப்படி நிறைய உண்டு.

கி.ரா வுக்கும் எனக்குமான முதல் தொடர்பு என் அதி தீவிர முன்னாள் காதலி வழியே நிகழ்ந்தது. அது ஒரு காலம், அதாவது முன்ன ஒரு காலம் , இந்தப் பயதான் இப்படியா பட்ட புஸ்தகம் எல்லாம் கட்டிக்கிட்டு அழுவான் அவனை கேளு வழி கிடைக்கும் என்ற எவரோவின்  மட்டுருத்தலின் பேரில் அவள் என்னை தேடி வந்தாள். பிறகென்ன கண்டதுமே பற்றி எரியும் காதல்தான். அவள் அவளது கல்லூரி hod வழி காட்டுதலின் படி ” கி.ரா புனைவுகளில் நிலக் காட்சிகள்” என்ற தலைப்பின் கீழ் தீஸிஸ் செய்து கொண்டிருந்தாள். இலக்கியத்தில் எல்லா புதுவை இலக்கிய மாணவிகள் போலவே இணையற்ற வெற்று ஏகாம்பரமாக திகழ்ந்தாள்.  தீஸிஸ் சப்மிட் செய்ய முதல் வரைவு என்னை எழுதி தர முடியுமா என்று புதுவை கடற்கரையில் வெண்ணிலா ஐஸ் க்ரீம் வாங்கி தந்து கேட்டாள்.

ஒரு எழுத்தாளரின் புனைவு உலகை முழுமையாக உட்கார்ந்து வாசிக்க நேர்ந்தது அதுவே முதல் முறை. முதல் கதவை திறந்து விட்டவர் பிரேம் ரமேஷ். கலைஞன் பதிப்பகம் என்று நினைவு அதன் வழியே கிரா உலகை நெருங்கி பார்க்கும் பிரேம் ரமேஷ் நூல்  ஒன்று கிடைத்தது.  சாதி என்பதன் சமுக ஒழுங்கு அலகு ஒன்றின் ஆக்கப்பூர்வ கூறு குறித்து அதில் வரும் கி.ரா உலகின் பின்புல உருவாக்கம் குறித்து நூலில் விரிவாக பேசி இருந்தார்கள்.

நைனா படைப்புலக்கின் முதல் அம்சம் இது. அடுத்த அம்சம் ரசனை. அது அவருக்கு ரசிகமணி வழியே கூர்மை பெற்ற ஒன்று. இறுதி அம்சம் இந்த இரண்டின் வழியே இந்த வாழ்வை பரிசீலிக்க பொருத்திப் பார்க்க அவர் கைக்கொண்ட (பெரும்பாலும் நிறுவனத்துக்கு அரசியலுக்கு கோட்பாட்டுக்கு வெளியிலான) படைப்பூக்கம் அவரை கொண்டு சேர்த்த சோசியலிச சட்டகம். இந்த அமைப்புக்குள் செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து மொழிக்கு வெளியே நிற்கும் ‘கதை சொல்லி’ யாக கி ரா எழுந்து வந்தார்.

என் தேவதையின் தேவையின் பொருட்டு நிகழ்த்திய முதல் வாசிப்பில் வக்கனையான பேச்சு போன்ற   சரளம் வசீகரிக்கும் தருணங்கள் நிகழ்வுகள் காரணமாக என்னை வசீகரித்த கி ரா, விரைவில், சுரா போல பலர் உள்ளே வந்த  தொடர் வாசிப்பில் எனது  விமர்சன மூளை கெட்டி தட்டி, அவர் விகடனில் எழுதும் வெகுஜன கேளிக்கை எழுத்தாளர், சப் டெக்ஸ்ட் டே இல்லை, நுண்மைகளே இல்லை, பூடகமே இல்லை, இப்படி பல இல்லைகளை ‘கண்டு பிடித்து’ உதறி எழுந்து நவீனம் அடைந்து, ஜெ வின் படுகை ரப்பர் எல்லாம் வாசித்து, கி.ரா அப்படி ஓண்ணும் கேளிக்கை எழுத்து இல்லை போலயே என சந்தேகம் வந்து மீண்டும் அவர் உலகில் நுழைந்து உலவி, ஜெ வின் இலக்கிய முன்னோடிகள் தொடரின் கி. ரா குறித்த மதிப்பீடு வழியே எனக்குள் கி.ராவை மீண்டும் மீட்டுக் கொண்டேன்.

தீஸிஸ் முடிந்த பிறகு, கவரில் போட்ட 5000 ரூ காசு அதற்கு மேல் வைத்த ஸ்டராபெரி ஃபிளேவர் ஐஸ் க்ரீம்(இந்த ஸ்டரா பெரி ஃப்லேவரை ‘ருசி’ என்று கண்டு கொண்டவன் மட்டும் என் கையில் சிக்கினால் அவனை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து உயிர்ப்பித்து அடித்து கொல்ல வேண்டும்)   அதை என் பக்கம் நகர்த்தி வைத்து விட்டு,  என் தேவதை என்னுடனான காதலை முடித்துக் கொண்டு ( சிறகு கொள் தேவதைக்கு ஒளி பொங்கும் வானன்றி புழுதி மண்ணில் என்ன வேலை ) பறந்து சென்று விட்டாலும். நைனாவுடனான தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

எந்த எல்லை வரை என்றால், ஒரு முறை விடை பெற்று கிளம்பிய என்னை நைனா அவரது கைத்தடி கொக்கி வளைவை கொண்டு என் காலில் மாட்டி இழுத்து நிறுத்தி சொன்னார் “இப்புடித்தான் இருக்கு எனக்கு, நீ போக வேண்டிய தின்னவேலி ரயில்ல நானும் வாரேன். நான் இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்திருச்சு. என்னை இறங்க விடாம தின்னவேலி வரைக்கும் பேசிக்கிட்டே வாங்க அப்டின்னுன்னு சொல்ற நீ ” என்றார் மீசைக்குள் பூத்த புன்னகையுடன்.

அதன் பிறகு விஷ்ணுபுரம் சார்ந்து மற்றும் தவிர்க்க இயலா நண்பர்களின் தேவை கொண்டு மட்டுமே அவரை சென்று சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் கூறியது கூறல் அற்ற, புத்தம் புதிய நைனா ஆகவே உரையாடலில் திகழ்வார். வெடித்து சிரிக்கும் தருணம் இன்றி அவரது உரையாடல் என்றும் அமைந்ததில்லை. இந்த இரவு நெடுக அவரை எண்ண எண்ண தித்திக்கும் சித்திரங்கள் மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் எழுகிறது.

இறுதியாக அவரை விஷ்ணுபுரம் நட்பு வட்ட நேர் காணலுக்காக சந்தித்தோம். இத்தனை வருட சந்திப்பு போலன்றி இம்முறை நைனாவை ‘வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன்’ என அங்கே அவர் முன் அமர்ந்திருந்தேன். விடை பெறுகையில் முதன் முறையாக அவரிடம் அவரது நூலில் ஆட்டோ கிராப் வாங்கிக்கொண்டேன். நண்பர்கள் மூவரும் ஒரு சேர அவர் காலில் விழுந்தோம். “ரொம்ப சந்தோஷம், சந்தோஷமா போய்ட்டு வாங்கோ” என்று ஆசீர்வதித்தார்.

சந்தோஷம்…முன்பு ஒரு உரையாடலில் கி.ரா சொன்னார் தமிழின் முதல் நாவல் வரைக்கும்கூட ஓர் இலக்கியம் அது முடிந்ததும் ’இதை வாசித்தவரும் வாசிக்க கேட்டவரும் சந்தோஷமா இருக்க வேணும் சுபம்’ என்று முடியும் என்று சொன்னார். நவீனம் வந்ததும் இலக்கியம் முடிவாகவும்  முதலிலும் தொலைத்து இதைத்தான்.

இப்போது யோசிக்கயில் நைனா வசம் கேட்ட அத்தனை கதைகளையும் அதில் உள்ள கசந்த தருணங்களை கடந்து சந்தோஷம் எனும் ஒரே உணர்வு நிலைக்குள் பொதிந்து விட முடியும் என்று தோன்றுகிறது. அந்த சந்தோஷத்தை இங்கே விட்டுச் சென்றிருக்கிரார் நைனா. அவர் உடலுக்கு மட்டுமே அஞ்சலி. அவரது  கதைகள் வழியே அவர் என்றும் வாழும் சிரஞ்சீவி.

கடலூர் சீனு

அமெரிக்க பகல்பொழுதில், எனது சக அலுவலருடன் தனிப்பட்ட உரையாடலை, அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தேன். இளவேனில் பாபுவின் பெயர் என் கைபேசியில் மின்னியது. இது நல்லதற்கல்லவே என்று எடுத்தேன். சக அலுவலரிடம், இது இந்தியாவிலிருந்து வரும் அழைப்பு என்று சொன்னதும், நாம் அப்புறம் பேசலாம் என்று துண்டித்துக்கொண்டார். இளவேனில் பேசவேயில்லை, குரல் கம்மியது. ‘எத்தனை மணிக்கு?’ என்றேன். ‘பதினொரு மணிக்கு’ என்றார்

கி.ரா.அஞ்சலி – ஆஸ்டின் சௌந்தர்


கி.ரா. உரையாடல்
முந்தைய கட்டுரைஉரைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 12