கி.ரா. உரையாடல்

அஞ்சலி:கி.ரா

ஜெ,

கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலக்கிய அறிமுகம் இல்லாத இளமை காலங்களில் வாசித்த ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ மூலமாகதான் கிரா அறிமுகமானார். இலக்கிய பரிச்சயம் ஏற்பட ஏற்பட அவரது மற்ற படைப்புகளையும் வாசிக்க தொடங்கினேன். நகரங்களில் வளர்ந்த எனக்கு கரிசல் நிலத்தை, அதன் வாழ்வை அவர் அறிமுகம் செய்து வைத்தார். என்றும் வணங்குதலுக்குரிய மூத்த படைப்பாளியாக என் மனதில் அவர் நின்றாலும், கிராவை சந்திக்க முயன்றதில்லை.

இந்நிலையில், சென்ற வருடம்,அக்டோபர் 2ம் தேதி, உங்கள் வாசக நண்பர் முத்து மாணிக்கம் என்னை தொடர்புக்கொண்டார். அன்று தான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். அவர் கி ராவை சந்திக்கப்போவதாக கூறினார். நானும் இணைவது என முடிவு செய்து, அக்டோபர் 4ம் தேதி இருவரும் புதுவைக்கு பயணப்பட்டோம். ஒரு தெய்வச்செயலாக தான் நான் கிராவை சந்திக்க அந்த வாய்ப்பு அமைந்தது. அதை தவறவிட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

நோய்தொற்று காலத்தில் அவரை சந்திப்பது குறித்து தயக்கம் இருந்தது. சந்திப்பை பற்றி கூறும் பொழுது தாங்களும் என்னை எச்சரித்தீர்கள். இளவேணிலிடம் உறுதிசெய்துக்கொண்டு சென்றோம். கிரா மிக உற்சாகமாக இருந்தார். தினமும் 4-5 பேர் வந்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது அது வாரத்தில் ஓரிருவராக குறைந்துவிட்டது என அவரது மகன் குறிப்பிட்டார். வாசகர்களை சந்திப்பது கிராவிற்கு உற்சாகமூட்டுவதாகவே இருந்தது. நாங்கள் சென்ற அன்று கவிஞர் சாம்ராஜும் தனது நண்பருடன் கிராவை சந்திக்க வந்திருந்தார்.

உணவு இடைவேளைகளை தவிர்த்து கிட்டத்தட்ட 5 மணிநேரம் சோர்வோ தளர்வோ ஏதுமின்றி கிரா உரையாடினார். மெல்லிய கிண்டல் ஊடோடிய உரையாடல். தனது பால்யம், எழுத தொடங்கியது, இசை நாட்டம் என அவர் பகிந்தவற்றை தனி பதிவாக எழுத வேண்டும். இன்று நினைவுகூறுகையில், அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச கேட்டுக்கொண்டிருந்ததும், சிறிது நேரம் அவருக்கு கால் பிடித்துவிட வாய்த்ததும் வாழ்வின் மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.

தொடர்ந்து நமது விஷ்ணுபுரம் உரையாடலில் அவர் பங்குபெற்று வாசகர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். இந்த உரையாடல்களுக்கு ஒரு வாரம் முன்பு, ஆஸ்டின் சௌந்தர் அவர்களும் நானும் சில நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதிரி அமர்வை ஒருங்கிணைப்போம். முக்கிய அமர்வில் தொழில்நுட்ப சிக்கல்கள் வராமல் இருக்க இந்த மாதிரி அமர்வு உதவும். பொதுவாக பங்குபெறும் ஆளுமைகளுடன் சிறு அறிமுகம், நிகழ்சி நிரல் குறித்த தகவல்கள் என சிறு நிகழ்வாக முடிந்து விடும். ஆனால், கிராவுடனான மாதிரி அமர்வு, ஒரு சிறு வாசக உரையாடலாக நீண்டது. பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலை சில  திருத்தங்களுடன் நண்பர்களுடன் பகிர வேண்டும் என முடிவு செய்திருந்தோம். பல காரணங்களால் தாமதமாகியதை, இந்த இரவு செய்துமுடித்து YouTubeல் பதிவேற்றி உள்ளேன்.

முதுபெரும் கதைச்சொல்லி, தனது வாழ்வின் சில கதைகளை பகிந்துக்கொண்டபோது…

அன்புடன்

லாஓசி

முந்தைய கட்டுரைஸாரி டாக்டர்!
அடுத்த கட்டுரைகி.ரா- அரசுமரியாதை, சிலை.