பிஸாரோ என்னும் கார்ட்டூன் வரிசையின் டாக்டர் நகைச்சுவைகள். டான் பிராரோ வரைந்தவை.
நம்மூரிலும் நாம் டாக்டர் நகைச்சுவைகள் எழுதிக்கொண்டிருக்கிறோம். “இடுக்கண் [பிறருக்கு] வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொன்னதன் அடிப்படையில் நாம் அதிகம் சிரிப்பது டாக்டர்களைப் பார்த்துத்தான். ஏனென்றால் நாம் மருத்துவமனையில் சிரிப்பதில்லை. அங்கிருந்து வருவதுதான் அங்கே நிகழும் மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆகவே வந்தபின் சிரிக்கிறோம்.
ஒப்புநோக்க நம் டாக்டர் ஜோக்குகள்தான் மேல். மதன் நிறையவே வரைந்திருக்கிறார். ஆனால் ஜோக்குகளுக்கு ஒரு பிரசிச்னை உண்டு. நகைச்சுவைதான் ஒரு பண்பாட்டிலும், அன்றாடத்திலும் ஆழமாக வேரூன்றியது. அப்பண்பாட்டில் ஊறாமல் அந்நகைச்சுவையை ரசிக்க முடியாது. சினிமாக்களை டப் செய்யும்போது காமெடியை மட்டும் அந்த ஊர்க்காரர்களை வைத்து மீண்டும் புதியதாக எடுக்கும் வழக்கம் அதனால்தான் இருந்தது. வடிவேலு நகைச்சுவைக்குச் சிரிக்கும் மலையாளியை பார்த்ததே இல்லை. மலையாளத்தில் காமெடி உண்டா என நந்தமிழர் கேட்கிறார்கள்.
டாக்டர்கள் நகைச்சுவையாக இருப்பது குறைவு. இருந்தால் நமக்கு கொஞ்சம் பீதியாகும். இரண்டு டாக்டர் நகைச்சுவைகள் எனக்கு பிடித்தவை. ஒன்று அடூர்பாசி டாக்டராக வந்து ஒரு படத்தில் சொன்னது. மோசமாக இருமும் நோயாளியிடம் “ரொம்ப முடியலேன்னா இருமாதீங்க”
இன்னொன்று திருவனந்தபுரத்திலிருந்த டாக்டர் குருவிளா என்ற புகழ்பெற்ற சர்ஜனைப் பற்றியது. இலவசமாக அறுவைசிகிழ்ச்சை செய்து பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றிய மேதை. எந்த மேதையையும் போல கிறுக்கு.
ஒரு நோயாளி. அவனுக்கு கிட்னியில் கல். அதற்கு அறுவை செய்யவேண்டும். ஆனால் கழற்றிப் பார்த்தால் அவனுடைய விதைப்பையில் தொடக்க நிலை கான்ஸர்.டாக்டர் அதை வெட்டி வீசிவிட்டார்.
மறுநாள் டாக்டர் நோயாளியிடம் “பேரென்னன்னு சொன்னீங்க?”
“மணிகண்டன், டாக்டர்”
‘இனிமே கண்டன்னு மட்டும் சொல்லிக்கோ”
நகைச்சுவையைப் பற்றி இவ்வளவு சோகமாக பேசவேண்டியிருக்கிறது
https://www.bizarro.com/cartoons