குளிர்கால இரவு. ஒரு வீட்டில் மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்று கொண்டிருந்தது. வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான தலைமயிர் கொண்ட அம்மா பின்னல் வேலை செய்து கொண்டிருந்தாள். அது அவர்கள் மூவர் மட்டும் கொண்ட சிறியகுடும்பம்.
“இந்தமாதிரி காற்றும் பனியும் கொட்டுகிறதே… அவர் வருவாரா?” என்று மகன் சந்தேகப்பட்டான். “பார்ப்போம்” என்றான்.
அப்போது வண்டிவந்து நிற்கும் ஒலி கேட்டது. கனத்த காலடி ஓசைகள் கேட்டன.
“வந்துவிட்டார்” என்றார் வைட். அவர் ஆவலாக எழுந்து சென்று வந்தவரை வரவேற்று கொண்டுவந்தார். அவரது மனைவி வந்தவரைக் கவனித்தாள். உயரமான களைத்துப்போன தோற்றம் கொண்ட ஒரு நடுவயதினர்.
“சார்ஜண்ட் மேஜர் மோரீஸ்” என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் அனைவருடனும் கைகுலுக்கிக் கொண்டு கணப்பருகே ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக்கொண்டார். அமைதியாகக் குடித்தார். பேசும் பழக்கம் குறைவு போல பட்டது. ஒருமாதிரி உடைந்துபோன மனிதன்போல இருந்தார்.
மூன்றாவது கோப்பை மது உள்ளே சென்றபோது அவரது கண்களில் ஒளிவந்தது. அவர் மெல்லமெல்ல பேச ஆரம்பித்தார். நிறைய அனுபவங்கள். பேசப்பேச அவரே அதில் ஒழுகிச்செல்ல ஆரம்பித்தார். விசித்திரமான கீழை நிலங்கள், போர்கள், கொள்ளைநோய்கள், அழிவுகள்…
“இருபத்தொரு வருடங்கள்” என்றார் வைட். “அப்போது சின்னப்பயலாக இருந்திருப்பான்… இப்போது எப்படி இருக்கிறான் பார்”
“ஏன் நன்றாகத்தானே இருக்கிறார்…” என்று கிழவி சும்மா ஆறுதலுக்காகச் சொன்னாள்.
“எனக்கும் இந்தியா செல்ல ஆசை”என்றார் கிழவர் “சும்மாதான்… ஒரு சுற்று சுற்றிவந்தால் நல்லது என்றுதான்…”
ஆனால் மேஜர் “எங்கேயும் போகவேண்டாம்…இருந்த இடத்திலேயே இருப்பதுதான் நல்லது” என்றார்.
“நான் அங்கேபோய் பழைய கோயில்கள் பக்கிரிகள் பிச்சைக்காரர்கள் எல்லாரையும் பார்க்க ஆசைப்படுகிறேன்…” என்றார் கிழவர் “போனதடவை ஏதோ குரங்கின் கை பற்றிச் சொன்னாயே… அது என்ன அது?”
“ஒன்றுமில்லை” என்றார் சார்ஜண்ட் மேஜர் மோரீஸ்” அதெல்லாம் சும்மா… ஒன்றுமில்லை”.
கிழவிக்கு ஆர்வம் ஏறியது “என்னது குரங்கின் பாதமா?”
“அது ஒரு சின்ன மந்திர சமாச்சாரம்…” என்றார் சார்ஜண்ட் மேஜர் மோரீஸ் . “பார்த்தால் அது ஒரு சாதாரண குரங்குப்பாதம் தான். உலரவைத்து மம்மியாக ஆக்கிய துண்டிக்கப்பட்ட பாதம்.” தன் சட்டைப்பையிலிருந்து அதை எடுத்து நீட்டினார்.
கிழவி அருவருப்புடன் பின்னகர்ந்தாள். ஆனால் அவள் மகன் அதை வாங்கி கூர்ந்து பார்த்தான்
“இதிலே என்ன விசேஷம்?” என்றாள் கிழவி.
மோரீஸ் “இதிலே ஒரு வயோதிக பக்கிரி தன்னுடைய சாபத்தை பொறித்திருக்கிறான். அவர் ஒரு பெரிய புனிதர். மனிதர்களை விதிதான் ஆட்சிசெய்கிறது என்று காட்டுவதற்காக இதை அவர் செய்திருக்கிறார். விதியை மீற விரும்புகிறவர்கள் பேராசைக்காரரக்ள். அவர்களுக்கு துக்கம்தான் வருமாம். இந்த குரங்குப்பாதத்தை கையிலே வைத்துக்கொண்டு ஒருவர் மூன்றுமுறை தனக்கு வேண்டியதைக் கேட்கலாம். மூன்று ஆசைகளும் நிறைவேறுமாம்.” என்றார்.
மூவரும் சிரித்துவிட்டார்கள். கிழவர், “சரி நீங்கள் ஏன் மூன்று ஆசைகளைக் கேட்கவில்லை?” என்றார்.
“நான் கேட்டுவிட்டேனே” என்றார் மேஜர் மோரீஸ் “அப்படியா மூன்று ஆசைகளையா?”
“ஆமாம்…”
கிழவருக்கு வேடிக்கையாக இருந்தது. “வேறு யாராவது அப்படி ஆசைகளை தெரிவித்திருக்கிறார்களா?”
மேஜர் மோரீஸ் சொன்னார் “ஆமாம். பலர் கேட்டிருக்கிறார்கள்.. ஒருவன் இரண்டு ஆசைகளைக் கேட்டான். மூன்றாவது ஆசையைக் கேட்பதற்குள் செத்துப்போனான். அதனால்தான் இந்த குரங்குப்பாதம் என் கைக்கே வந்தது.”
அவர் சொன்ன விதம் வேடிக்கையாக இல்லை. கணப்பைப் பார்த்தபடியே இருந்த சட்டென்று மேஜர் மோரீஸ் உணர்ச்சிவசப்பட்டு சாபமிட்டபடி அந்த குரங்குப்பாதத்தை தீயிலே எறியப்போனார். ஆனால் வைட் அதை தாவித்தடுத்து அந்த குரங்குப்பாதத்தை தன் கைகளில் பிடுங்கிக்கொண்டார்.
“அதை தீயிலே போட்டுவிடலாம்… அதுதான் நல்லது” என்று கோபமும் ஆத்திரமுமாக மேஜர் மோரீஸ் கூவினார்.
“அதை எனக்கே கொடுத்துவிடு மேஜர் மோரீஸ். எனக்கு அது வேண்டும்” என்றார் வைட்.
“நான் அதை தீயிலே எறியத்தான் போனேன். கேட்டு வாங்கியது நீங்கள். என்னை கடைசியில் குறைசொல்லக்கூடாது” என்றார் மேஜர் மோரீஸ்.
“இல்லை” என்று சொல்லி சிரித்தார் வைட்.
“இதை எப்படிக் கேட்பது?” என்றார் வைட்.
“ஒன்றுமில்லை… சும்மா கையிலே வைத்துக்கொண்டு உரக்க என்னவேண்டுமோ அதை சொன்னால் போதும்” என்றார் மேஜர் மோரீஸ்.
“அரேபியக்கதை போல் இருக்கிறது” என்று கிழவி சிரித்தாள்.
மேஜர் மோரீஸ் சட்டென்று கிழவரின் தோளைப்பிடித்தபடி “கேட்பதாக இருந்தால் கொஞ்சம் விவேகமான எதையாவது கேளுங்கள்” என்றார். வைட் புன்னகைத்தபடி அதை தன் சட்டைப்பைக்குள் போடுக்கொண்டார்.
விருந்தாளி போனதும் ஹெர்பெர்ட் தந்தையிடம் “நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் அப்பா?” என்றான்.
“விளையாட்டாகத்தான். ஆனால் அவர் விளையாட்டாக சொல்லவில்லை என்று தோன்றியது” என்றார் வைட்.
“அப்படியானால் நீங்கள் அதை நம்புகிறீர்கள்… ஆஹா… அப்பா ஏராளமான பணம் கேளுங்கள். நாம் சக்கரவர்த்திகளாக ஆகப்போகிறோம்… அட அட அட! மூன்று ஆசைகள்!”
வைட் அதை பையில் இருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டார். “என்ன ஆசைப்படுவதென்றே தெரியவில்லை…” என்றார்.
“எனக்கு எல்லாமே இருக்கிறதே!”
“வீட்டைப்பழுதுபார்க்க வேண்டும் என்று சொன்னீர்களே” என்றாள் கிழவி.
“ஆமாம்…” என்றபின் கிழவர். “எனக்கு இருநூறு பவுண்ட் பணம் வேண்டும்” என்று உரக்கச் சொன்னார். உடனே “ஆ!” என்று அலறியபடி கையை உதறினார்.
“என்ன? என்ன?” என்றான் ஹெர்பெர்ட்.
“அது என் கையில் இருந்து நெளிந்தது, பாம்பு போல” என்றார் கிழவர்.
“சரிதான் பணம் எங்கே? அவ்வளவுதானா?” என்று ஹெர்பெர்ட் சொன்னான். “நீங்கள் பயந்துபோய்விட்டீர்கள் அப்பா… எல்லாம் உங்கள் கற்பனை.”
அவர்கள் மேலும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஹெர்பெர்ட் அப்பாவை கிண்டல் செய்தான். “படுக்கையருகே ஒரு பையை கட்டி தொங்கவிடுங்கள் அப்பா பணம் வரப்போகிறது.” ஆனால் கிழவர் கொஞ்சம் நிலைகுலைந்துபோயிருந்தார். அந்த குரங்குப்பாதத்தை அவர் கணப்படுகே ஒரு பெட்டிக்குள் போட்டார்.
மறுநாள் மாலை கிழவரும் கிழவியும் மகனுக்காக காத்திருந்தார்கள். பேச்சு மேஜர் மோரீஸ் பற்றித்தான். “அந்த ஆள் ஒரு கிராக்கு. படைவீரர்கள் அப்படி ஆகிவிடுகிறார்கள். தங்கள் அனுபவங்களை மிகைப்படுத்தும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கையே இருக்கிறது” என்றார் வைட்.
“ஹெர்பெர்ட் இதை பெரிய நகைச்சுவையாக ஆக்கிவிடுவான்” என்று கிழவி சொன்னாள்.
ஒரு ஆசாமி அவர்கள் வீட்டுமுன் முன்னும் பின்னும் நடப்பதை கிழவி கவனித்தாள். பார்த்தால் நல்ல உடையணிந்தவராக தோன்றினார். அந்த ஆசாமி மனதை தயார் செய்துகொண்டு உள்ளே வந்தார்.
“என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். நான் ‘மா ஆண்ட் மக்கின்ஸ்’ கம்பெனிக்காக வந்திருக்கிறேன்.”
அது ஹெர்பெர்ட் வேலைசெய்யும் இடம். “ஏன் என்ன ஆச்சு?”என்று கிழவி பதற ஆரம்பித்தாள்.
“இருடீ…” என்றார் கிழவர். “நீங்கள் ஒன்றும் கெட்டசெய்தியுடன் வரவில்லையே?”
“என்னை மன்னியுங்கள்” என்றார் வந்தவர்.
“அவனுக்கு அடியா?”என்றாள் அம்மா.
“அவர் எந்திரத்தில் மாட்டிக்கொண்டு விட்டார்.” அதைச் சொன்னவிதமே காட்டிக் கொடுத்துவிட்டது.
“எங்களுக்கு அவனில்லாமல் யாருமே இல்லையே” என்று அம்மா பெருங்கதறலை எழுப்பினாள். கிழவர் நடுங்கினார்.
வந்தவர் கிழவரிடம் “நீங்கள் என்னை புரிந்துகொள்ள வேண்டும். நான் வேலைக்காரன் மட்டுந்தான். உண்மையில் மொத்த தப்பும் உங்கள் மகன்மேல்தான். ஆனாலும் எங்கள் நிறுவனத்தின் ஆழ்மான அனுதாபத்தையும் உதவியையும் நான் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்… இந்த நஷ்டம் மிகப்பெரியது… ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த தொகையைத்தான் உங்களுக்கு தர முடியும்…” அவர் ஒரு பணப்பையை நீட்டினார். “இதில் கொஞ்சம் பணம் இருக்கிறது…”
ஏனோ கிழவர் கேட்டார் “எவ்வளவு?”
“இருநூறு பவுண்ட்” என்றார் வந்தவர்.
அதைக் கேட்டதுமே கிரீச்சிட்டு அலறியபடி கிழவி மயங்கிவிழுந்தாள்.
மூன்று மைல் தள்ளியிருந்த சிமித்தேரியில் மகனை கிழ தம்பதிகள் புதைத்தார்கள். அந்த இழப்பு அவர்களின் வயோதிக மனத்துக்கு மிகப்பயங்கரமான அடியாக இருந்தது. வேறு எண்ணமே ஓடவில்லை. ஒவ்வொரு கணமும் அவனையே எண்ணி அழுது அழுது நாட்களை நீக்கினார்கள்.
குளிர்ந்த இரவில் கிழவி ஜன்னலை திறந்து மழையைப் பார்த்து நின்றாள். “உள்ளே வா… குளிரடிக்கிறது” என்றார் கிழவர்.
“என் மகன் அங்கே குளிரில் கிடக்கிறானே” என்றாள் கிழவி. சட்டென்று அவள் கூவினாள். “அந்த குரங்குப்பாதம்!”
“என்ன?” என்றார் கிழவர்.
“அந்த குரங்குப்பாதம்… அதை எடுங்கள்… எங்கே அது?”
“கணப்பு அருகே பெட்டியில் இருக்கிறது.”
“எடுங்கள் அதை… இன்னும் மிச்சம் இரு கோரிக்கைகள் இருக்கின்றன.”
“போதும்… இதுவே போதும்” என்றார் கிழவர்.
“இல்லை முதல் கோரிக்கை நடந்தது. ஆகவே இரண்டாம் கோரிக்கையும் நடக்கும்… அவனை திருப்பிக் கூப்பிடுங்கள்… என் மகனை கூப்பிடுங்கள். அவன் திரும்பி வரட்டும்.”
“முட்டாள்தனமாகப் பேசாதே… அவன் எப்படி வரமுடியும்? அது ஒரு தற்செயல்.”
“இல்லை… அவன் வருவான்… கூப்பிடுங்கள்… அவனைக் கூப்பிடுங்கள்… இல்லாவிட்டால் நான் செத்துப்போய்விடுவேன்.”
கிழவிக்கு வெறி பிடித்துவிட்டது. கிழவருக்கு வேறு வழியே தெரியவில்லை. அவர் கீழே போய் அந்த குரங்குப்பாதத்தை எடுத்துவந்தார். “கேளுங்கள்” என்று கிழவி கதறினாள்.
“இது கிறுக்குத்தனம்… தீய விருப்பம்” என்றார் கிழவர்.
“கேளுங்கள்” என்று கிழவி கத்தினாள்.
“என் மகன் திரும்பி வரட்டும்” என்றார் கிழவர்.
இம்முறையும் குரங்குப்பாதம் நெளிந்தது. அவர் கையை உதற அது தரையில் விழுந்துக் கிடந்தது. கிழவருக்கு அச்சமாக இருந்தது. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.
ஒரு சொல் கூடபேசாமல் இரவெல்லாம் அவர்கள் காத்திருந்தார்கள். ஒன்றும் நிகழவில்லை. மெழுகுவத்திகள் அணைந்து இருட்டு பரவியது. அப்போது கீழே ஒரு தட்டல் ஒலி கேட்டது. கதவில்.
“அது என்ன?” என்றாள் கிழவி பாய்ந்து எழுந்து.
“ஒன்றுமிலை, எலி!” என்றார் கிழவர். அவரது மனமும் துடித்தது.
மீண்டும் தட்டும் ஓசை “ஆ! அது ஹெர்பெர்ட்!” என்று கிழவி கூவினாள். “அது என் மகன் ஹெர்பெர்ட்.”
கிழவர் அவள் கையைப்பிடித்தார். “எங்கே போகிறாய்?”
“என் மகன் வந்துவிட்டான்.”
“அதை உள்ளே விடாதே.”
“இல்லை நம் மகன் தான்… அவன் இடுகாட்டில் இருந்து இரண்டு மைல் நடந்து வந்திருக்கிறான். அதுதான் இத்தனை நேரம்… அவன்தான் அது!” கிழவி திமிறினாள்.
“கடவுளை நினைத்துச் சொல்கிறேன், கதவைத் திறக்காதே” என்றார் கிழவர். “வேண்டாம்.. சொன்னதைக்கேள்… வேண்டாம்!”
ஆனால் கிழவி கூவினாள். “சொந்த மகனையா பயப்படுகிறீர்கள்?”
கீழே கதவு மீண்டும் தட்டப்பட்டது. இம்முறை ஹெர்பெர்ட்டின் குரலும் கேட்டது “அம்மா! அம்மா!”
கிழவி பாய்ந்துசென்று கதவை எட்டினாள். ஆனால் கீழே செல்லும் கதவை அவளால் திறக்க முடியவில்லை. அதன் தாழ் இறுக்கமாக இருந்தது. அதை அவள் இழுத்தாள். வெறியுடன் அதைப்போட்டு அசைத்தாள்.
கிழவர் இருட்டில் துழாவி அந்த குரங்குப்பாதத்தை எடுத்தார். தன் கையில் அதை பிடித்தபடி மூன்றாவது ஆசையைச் சொன்னார்.
பின்னர் அவர் கதவைத்திறந்து வெளியே சென்று பார்த்தார். இருண்ட பாதையில் தொலைதூரத்தில் ஒரு உருவம் திரும்பிச்செல்வது மழைப்படலத்தினூடாகத் தெரிந்தது.
[சுருக்கமான மொழியாக்கம்]
***
டபிள்யூ .டபிள்யூ. ஜேகப்ஸ் 1902ல் எழுதிய The Monkey’s Paw என்ற கதை இது. வில்லியல் வைமார்க் ஜேகப்ஸ் [William Wymark Jacobs] எழுதிய பல நூல்கள் என் அம்மாவின் சேமிப்பில் இருந்தன. நான் அந்த எழுத்தாளரை வேறெங்கும் பேசிக் கேள்விப்பட்டதே இல்லை. ஏன் அம்மா அவரை படித்தாள் என்றும் புரியவில்லை. ஒருசில கதைகளைப் படித்தபின்னும் அவரை என்னால் மதிப்பிட முடியவில்லை.
1987ல் காசர்கோடு நூலகத்தில் மீண்டும் ஜேகப்ஸின் நூல்களைப் பார்த்தேன். அவை எவராலோ நன்கொடையாக அளிக்கப்பட்டவை. அவர் பிரிட்டிஷ் இந்திய காலகட்டத்தில் இங்கே மிகப்பிரபலமான எழுத்தாளராக இருந்திருக்கிறார். அவரது பலகதைகளை நான் படித்திருந்தாலும் இந்தக்கதை ஒரு கிளாசிக் என்று தோன்றியிருக்கிறது.
1863 செப்டெம்பர் எட்டாம் தேதி லண்டனில் பிறந்த ஜேகப்ஸ் லண்டனில் படித்தார். அப்பா ஒரு துறைமுக ஊழியர். 1879ல் பொது நிர்வாகத்துறையில் குமாஸ்தாவாக பணிக்குச் சேர்ந்தார். இளமையில் இருந்தே பொருளாதார கஷ்டங்களில் வளர்ந்தவர் அவர். 1885 முதல் எழுத ஆரம்பித்தார். பிளாக்ப்ரெயர்ஸ் இதழில் அவரது ஆக்கங்கள் பெயரில்லாமல் பிரசுரமாயின. 1896ல் அவரது முதல் சிறுகதைத்தொகுதி வெளியாகியது. ஜேகப்ஸ் நிறைய எழுதிக்குவித்த ஆசிரியர். திகில்கதைகளும் அங்கதக்கதைகளும்தான் அதிகமும் எழுதியிருக்கிறார். 1943ல் லண்டனில் மரணமடைந்தார்.
ஜேகப்ஸை நான் அதிகமாக வாசித்ததில்லை. ஒரு முப்பது நாற்பது கதைகளை வாசித்திருப்பேன். முக்கியமான எழுத்தாளர் என்று சொல்ல முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தில் பேய்க்கதைகள், மர்மக்கதைகளுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. ஐரோப்பிய சமூகம் அஞ்சிய, வெறுத்த வரலாற்று நினைவுகள் எல்லாமே மத்திய காலகட்டத்தில் மையம் கொள்கின்றன. ஆகவே மதத்தண்டனைகள் ஆட்சி செய்த மத்திய காலகட்டத்தைப் பற்றி ஏராளமான திகில்கதைகள் அக்காலத்தில் வெளியாகின. அவை ஐரோப்பிய மனம் கிறித்தவ மதஆதிக்க அமைப்பின் உள்ளே உறைந்த அடக்குமுறையையும் வன்முறையையும் அடையாளம் கண்டு விலகிக்கொள்ள எடுத்த முயற்சிகளின் கலைவடிவங்கள் என்று சொல்லலாம். கோதிக் இலக்கியம் என அதை வகைப்படுத்துகிறார்கள். ஜேக்கப்பின் இக்கதையின் அழகியல் அதுதான்.
அக்காலகட்டத்தில் திகில்கதைகளுக்கு பிரிட்டனில் மிகப்பெரிய வாசகர் வட்டம் இருந்தது. அதோடு அன்றெல்லாம் நிறைய வாசித்தவர்கள் உலகமெங்கும் பரவியிருந்த காலனியாதிக்கவாதிகளான பிரிட்டிஷார். அவர்களுக்கு அச்சமூட்டும் வெளியாக இருந்த அன்னியச் சூழல்களைப் பற்றிய இத்தகைய புனைவுகளை அவர்கள் விரும்பினர்.
அன்றைய பிரிட்டிஷ் மக்களின் உளவியலையும் இக்கதைக்குள் எளிதாகக் கண்டடையலாம். அறியா உலகங்கள், விந்தைகள், மாயங்கள் அனைத்தையும் சாத்தானுக்குரியதாக அகற்றி அறிவுக்குட்பட்ட வாழ்க்கையே இயல்பானது, பாதுகாப்பானது என எண்ணும் மனநிலை. மனிதனின் விழைவெனும் ஆதித்தீமையைப் பற்றிய ஐரோப்பியக் கிறித்தவ நம்பிக்கை. இவ்வாறு ஒன்றிலிருந்து ஒன்றென இக்கதையை விரித்தபடியே செல்லலாம்.
அன்றைய நவீன ஐரோப்பா இந்தியா போன்ற ஒரு தொலைதூர கிழக்கு நாட்டை எதிர்கொண்ட விதம் இக்கதையில் உள்ளது என்பதனால் இது எனக்கு முக்கியமானது. அச்சம், அருவருப்பு ஆகிய இரண்டும் கலந்த ஒருவகை மதிப்பு. கிழக்கு என்றால் புரிந்துகொள்ள முடியாத தத்துவங்களும் மாயங்களும் கொண்ட ஒரு பிராந்தியம் என்ற பிரமை. அவ்வுணர்ச்சிகள் எல்லாமே இக்கதையில் பதிவாகியிருக்கின்றன. கிழக்கை ஒரு பாடம் செய்யப்பட்ட வடிவமாக காண்கிறதா ஜேகப்ஸின் மனம்? செத்து உலர்ந்த, ஆனால் இன்றும் மந்திர வல்லமை கொண்டதாக நீடிக்கும், ஒரு stuffed world?
ஜேகப்ஸை அதன்பொருட்டே அவ்வப்போது படிக்கலாம். அது நம்மை ஆண்ட காலனியாளர்களின் ஆழ்மனத்துக்குள் நாம் ஒரு பயணம் செய்வது போன்றது.
மறுபிரசுரம்/ Feb 11, 2009 முதற்பிரசுரம்
https://americanliterature.com/author/w-w-jacobs/short-story/the-monkeys-paw