வீகன் உணவுப்பழக்கம்
இனிய ஜெயம்
வீகன் மத பிரச்சாரத்தில் (அவர்கள் நம்பிக்கையில் உள்ள dooms day பகுதியாக) இப்போது முக்கிய பங்கு வகிப்பது அலி டாப்ராஸி இயக்கிய ஸீஸ்பைரசி எனும் ஆவணப்படம். இப்படம் வீகன் காக எடுக்கப்பட்ட படம் அல்ல, ஆனால் இப்படத்தில் விவாதிக்கப்படும் தீர்வுகளில் ஒன்றாக stop eating sea foods என்பதும் இருக்கிறது.
சமீபத்தில் பார்த்த, life in colour, my actopus teacher போன்ற முக்கிய ஆவணப் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. அலி சிறிய வயது முதல் அவர் வளர்த்துக் கொண்ட கனவு, அட்டன்பரோ போல உயிர் சூழல் சார்ந்த ஆவணப்பட இயக்குனர் என்றாவது. அவரது ஈடுபாடு கடல் உயிர்கள். தன்னார்வலராக கடலில் கலக்கும் பிலாஸ்டிக் குப்பைகளை தடுக்கும் பணியில் முதலில் இறங்குகிறார். ( சமீபத்தில் ஒரு தன்னார்வலர்கள் குழு புதுவை அருகே கடல் உள்ளே இறங்கி அடியில் படிந்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய, குப்பையாக கிடைத்ததோ பல நூறு கிலோ பயன்படுத்தி தூக்கி போட்ட கொரானா மாஸ்குகள்) அங்கே துவங்கிய அவரது பயணம், மீன்பிடி பெரு நிறுவனங்களின் நிழல் சாம்ராஜ்யம் தொட்டு அதன் ஆபத்துகள் வரை அவரை கொண்டு சேர்க்கிறது.
உலக மொத்த கடல் உணவின் தேவையில் முக்கால் வாசியை உரிஞ்சி எடுத்து கொடுக்கும் ஆசிய கடல் பகுதியில், குறிப்பாக ஜப்பானின் தாஜி கடல் பகுதியில் துவங்குகிறது ஆவணம். உலக டூனா மீன் ஏற்றுமதியில் 50 சதவீதம் ஜப்பான் கையில். அதன் அதிகாரத்துக்குகு உட்பட்ட கடல் பகுதியில் டூனா வளர பெரும் தடையாக உள்ள ஓங்கில் இனத்தை மொத்தமும் ஜப்பான் இன்றுவரை வேட்டையாடி கொன்றழித்து வருகிறது.
கடலுக்குள் உயிர் ராசிகள் கூட்டு வாழ்வுக்கான உணவு பிரமிட் உடைந்து, ஒன்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மற்றொன்று எனும் சங்கிலி அறுந்து, டூனா மீன்கள் எனும் இனம் இன்னும் கால் நூற்றாண்டில் முற்றிலும் அழிந்து போகும் நிலைக்கு ஜப்பான் கொண்டு வந்து விட்டது. ஒரு டூனா மீன் கு நான்கு ஓங்கில் எனும் கணக்கில் கொல்லப்படுவதாக ஆவணம் சொல்கிறது. சுறாக்களின் தூவிகள் சூப் கான உலகளாவிய சந்தைக்காக சுறாக்கள் வகை தொகை இன்றி கொன்று ஒழிக்கப்படுகிறது.
இதன் நான்கு மடங்கு அழிவை பிரான்ஸ் அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதியில் நிகழ்த்துகிறது. 1850 இன் ஒரு கப்பல் மீன் பிடி அளவு எதுவோ அதன் பல நூறு மடங்கு இன்றைய ஆற்றல் கொண்ட கப்பல் வழியே நிகழ்கிறது. (ஆவணம் காட்டும் கார்டூனில் ஒரு பெரிய மீன்பிடி கப்பலின் வலையில் இத்தாலி மாதா பேராலயமே அடங்கி விடுகிறது) கடல் ஆதிக்கத்தில் முன்னிலை வகிக்க ஆப்ரிக்க கடல் பகுதிகளில் சர்வதேசமும் கொண்டு கொட்டும் முதலீடு, அதன் வழியே பெரு மீன்பிடி முன்னே பிச்சைக்காரனாக கையேந்தும் எளிய மடி வலை மீனவன் போன்ற தீவிரம் கூடிய சிறிய சிறிய சித்திரங்களை காட்சிப் படுத்துகிறது ஆவணம். கடலின் மீது மானுட நுகர்வு வெறி தொடுத்த போரின் அடையாளமாக கடலுக்குள் ஆங்காங்கே மிதக்கும் பிலாஸ்டிக் குப்பைத் தீவுகள். அந்தக் குப்பையில் முக்கால் பங்கு, நைலான் மீன் வலை.
உலகின் பல பகுதிகள் மூர்க்கமான கொத்தடிமை முறை வழியே பண்ணை முறையை பேணுகின்றன. ஸ்காட்லாண்ட்ல் உள்ள சால்மன் மீன் பண்ணை ஒன்றில், இயற்கை சூழல் அன்றி செயற்கை சூழலில் வளரும் அம்மீன்களில் பெரும்பான்மை உன்னி பிடித்து குஷ்டரோகி போல காட்சி தருகின்றன. வெட்டி ரசாயனத்தில் முக்கி தர சான்று ஒட்டி ஏற்றுமதி செய்ய வேண்டியதுதான். இப்படி தர சான்று லேபிள்கள் பின்னால் அவற்றை சட்ட விரோதமாக வாங்க நிகழும் பேரங்களில் புழங்கும் கோடிகள் அதிர்ச்சி அளிப்பது.
சர்வதேச கடல் எல்லைகளின் சிக்கலால் பொது கண்காணிப்பு இயலாமல் போவது, கண்காணிப்பு உள்ள இடங்களிலும் காவலர்கள் ‘மர்மமாக’ காணாமல் போவது என்று பல விஷயங்களை தொட்டுப் பேசும் படம், கடலுக்குள் உள்ள செடி கொடிகள் உட்பட இதே மூர்க்கத்துடன் அழித்து சென்றோம் என்றால் இன்னும் அரை நூற்றாண்டில் நமக்கு செத்த கடல் மட்டுமே எஞ்சும் என்கிறது. செத்த கடலுடன் மானுடமும் சேர்ந்து சாக வேண்டியதுதான் என்று சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாவணம் எழுப்பும் முக்கிய வினா ‘மூலவளம் குன்றா சார்பு நிலை மீன் பிடி’ என்ற ஒன்று உண்மையில் சாத்தியமா என்பது. ஆவணத்துக்கு வெளியே சென்று காந்தி சொன்ன சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பதில் இதுதான் “இயற்க்கை மனிதனின் தேவையை பூர்த்தி செய்யும். பேராசையை பூர்த்தி செய்யாது”.
மானுடக் குரோதத்தின் கொடூர முகம் ஆவணத்தின் இறுதி 15 நிமிடத்திர்க்கு முன் வரும் காட்சியில் பதிவாகி உள்ளது. டென்மார்க்கில் எங்கோ நிகழும் திமிங்கல வேட்டை விழா. மிக சில வினாடிகள் மட்டுமே மின்னி மறையும் மான்டேஜ் வெட்டுக்கள். ஒரு கொடும் கனவின் சித்திரங்கள். முற்றிலும் குருதி கொப்பளித்து கொழகொழக்கும் நீர் வெளி, கருத்த திமிங்கலங்கள் சிதைத்து வீசப் படுகிறது. அதில் சிதைந்து கிழிந்து விழும் திமிங்கலங்களில் ஒன்று பூரண கர்பவதி. திமிங்கலம் ஒன்றை வெட்டி வீசும் அப்பா தோளில் ஒரு குழந்தை அமர்ந்து அதை வேடிக்கை பார்க்கிறது.
அ. முத்துலிங்கம் கதைகளில் ஒன்றில் (அல்லது கட்டுரையாகவோ நேர்காணலாகவோ இருக்கலாம்). கனடா தேசம் தேடி முறையற்ற வழியில் கப்பலில் வரும் அகதிகள் குழுவை, அக் கப்பலின் காப்டன் மிகசிறிய படகு ஒன்றில் ஏற்றி, கனடா கடல் எல்லைக்கு பல கிலோ மீட்டர் தள்ளி, நடுக் கடலில் அப்டியே போங்க கனடாதான் என்று சொல்லி விட்டு விடுகிறான்.
பாரம் தாளாமல் தள்ளாடி ததும்பி மெல்ல மெல்ல நகர்கிறது படகு. திக்கு திசை தெரியாத பல நாள் பயணம். வழியில் முற்ற முழுதாக இனி மரணம்தான் என்ற வகையிலான ஒரு ஆபத்து. மிகப்பெரிய கடற்சுழல் ஒன்று குறிக்கிடுகிறது. மெல்ல மெல்ல அதன் சுழிப்பு விளிம்பு நோக்கி படகு இழுபட, பயணிகள் எல்லோரும் கடவுளை நோக்கி கதற, மெய்யாகவே கடவுள் போலும் எழுகிறது ஒரு திமிங்கலம். சுழலுக்கும் படகுக்கும் இடையே வந்து நின்று தன்னைக் கொண்டு ஒரு தடுப்பு சமைக்கிறது. (ஜோ டி க்ரூஸ் அவர்களின் ஆவணப் படத்தில் அவர் ஆவேசமாக சொல்லும் சொல் ஒன்று உண்டு ” அவ கடலம்மா, கடல நம்புநுவங்கள அவா கைவிடவே மாட்டா…”). எங்களுக்கு வாழ்வு அளித்தது கனடா அது இரண்டாம் தாய், அந்த திமிங்கிலம்தான் முதல் தாய் என்று முடிப்பார் அந்த அகதி.
திமிங்கலம் முதல் சென்னா குன்னி வரை கடலில் உள்ள எல்லா உயிருக்கும் தனித்த சமூக வாழ்வு இருக்கிறது என்பது இன்று ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. அவற்றுக்கும் பசி காமம் மொழி கொண்டாட்டம் எல்லாம் உண்டு. குறிப்பாக வலி. எல்லாவற்றும் மேலே சக மனிதன் காட்டாத கருணையை அவற்றால் மனிதனுக்கு வழங்க இயலும். இந்த அறத்தின் மேல் நின்று வினவுவோம். எந்த எல்லை வரை மனிதனுக்கு மீன் உணவு தேவை? நிச்சயம் மானுட உணவுத் தேவையை புரத ஊட்டத் தேவைகளை கீரை கிழங்கு கொண்டு மட்டுமே தீர்த்துவிட முடியாது.
பசி ருசி ஊட்டம் தேவை என எல்லா நிலையிலும் நிச்சயம் மீன் அவசியம். ஆனால் நம்மால் சில வரையறைகளை போட்டுக்கொள்ள முடியும். முதல் வரையறை மற்றும் இறுதி வரையறை ஒன்றே ஒன்றுதான், புலால் அடிமை எனும் நிலையில் இருந்து வெளியேறுவது. இன்று தொடர் குடிகாரன், தொடர் புகை புடிப்பவன், தொடர் டீ காப்பி குடிப்பவன் மூளை அமைப்பில் ரசாயனம் நிகழ்த்தும் அடிமைத்தளை விவாதத்துக்கு வந்து விட்டது. ஆனால் இன்று வரை நாம் நேருக்கு நேர் முகம் காண மறுக்கும் ஒன்று புலால் அடிமை நிலை. ருசி முக்கியம் ருசி இல்லாத வாழ்வு செத்த வாழ்வேதான். ஊட்டமும் முக்கியம். ஆனால் இந்த இரண்டு நிலைகளை தாண்டி நிற்பது. புலால் அடிமை எனும் நிலை. இன்று புலால் உண்ணும் ஆட்களில் குழந்தை முதல் பெண்கள் வரை சரி பாதி மேற்சொன்ன அடிப்படையான இரண்டு நிலைகளை கடந்த புலால் அடிமைகள்தான். இந்த அடிமைத் தனத்தை ஈடு கட்டவே தற்போது கடல் அழிந்து கொண்டு இருக்கிறது. வளம் குன்றா மீன் பிடி எப்போது சாத்தியம் என்றால், இந்த புலால் அடிமை நிலையில் இருந்து எப்போது நாம் விடுபடுகிறோமோ அப்போதுதான் துவங்கும்.
பல விவாத முகங்களை திறக்கும் இந்த ஆவணப் படமும் அதன் இயக்குனரும் உலகளாவிய அளவில் கடும் கண்டனங்களை கண்டு வருவதாக கார்டியன் உள்ளிட்ட செய்தி தளங்கள் வழியே அறியக் கிடைக்கிறது. ஒட்டு மொத்த விமர்சனம் என்பது ‘ஆசாமி பேனை பெருமாளின் விஸ்வரூபம் அளவுக்கு காட்டிட்டார்’ என்பது. நல்ல வேளை ‘பேன் இருக்கிறது’ என்ற அளவுக்காவது நம்மால் ஒப்புக் கொள்ள முடிந்திருக்கிறதே. படத்தில் இறுதியில் முக்கியமான காட்சி மற்றொன்று உண்டு. செத்துக் கரையில் கிடக்கும் திமிங்கலம் மேலே அமர்ந்து குருதி பொங்கும் நீர் வெளியை பார்த்துக் கொண்டிருக்கும் தனியன் என்ற அதிக பட்ச மூன்று வினாடி காட்சி சித்திரம் ஒன்று அது. மொத்த ஆவணத்தின் வினா எதுவோ அதன் காட்சிப் படிமம். நெடு நாள் தொந்தரவு செய்யப் போகும் சித்திரம் என்பது இதை எழுதும் இக்கணம் உணர்கிறேன்.
கடலூர் சீனு