இன்று காலை எழுந்ததுமே சைதன்யாவை நோக்கிச் சென்றேன், பிறந்தநாள் முத்தம் கொடுப்பதற்காக. அதற்குள் அவள் எழுந்து பல்தேய்த்துக் கொண்டிருந்தாள். ஹேப்பி பர்த் டே சொன்னபோது பொறுப்பைச் சுமக்கும் குடும்பத் தலைவிகளுக்குரிய அலட்சியத்துடன் உதட்டைச் சுழித்து அதைப் பெற்றுக் கொண்டு, “கேக் எடுத்து வச்சிரு” என்றாள். நான் போய் அஜிதனை எழுப்பினேன். எழுந்ததுமே “…இணைக்கு பாப்புவோட பர்த்டே இல்ல?” என்றான்.
ஏழுமணிக்கு கேக் வெட்டினோம். சைதன்யா புதிய மஞ்சள் சுடிதார் அணிந்து பதினொன்று என எழுதிய மெழுகுவத்தியை ஊதி அணைத்தாள். அஜிதன் அவனுடைய உடைந்து பலசில்லுகளாக ஆன குரலில், “ஹேப்பி பர்த் டே டூ யூ..” பாடியபோது ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நிறைவு எற்பட்டது. கேக்கை வெட்டி அருண்மொழிக்கும் எனக்கும் அஜிதனுக்கும் டெட்டிக்கும் ஹீரோவுக்கும் ஊட்டியபின் பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கச் சென்றார்கள்.
ஒன்பதுமணிக்குள் நாஞ்சில்நாடன் கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னார். பிறகு வரிசையாக முக்கியஸ்தர்களின் வாழ்த்துகள். சுரேஷ் கண்ணன், ஷாஜி…. இரவு ஒன்பது மணிவரை வாழ்த்துகள் வந்தன. விஜயராகவன் என்ற வாசக நண்பர் ஈரோட்டிலிருந்து கூப்பிட்டார். அவற்றை அம்மணி பெற்றுக்கொண்ட முறை புரட்சித்தலைவியருக்கே உரியது.
ஒன்பதுமணிக்கு கிளம்பி நாகராஜா கோயில் சென்றேன். அப்போது தேவதேவன் வந்து பேருந்துநிலையத்தில் நிற்பதாக ·போன் வந்தது. வழக்கம்போல நிற்குமிடத்தை தப்பாகச் சொல்லி கவலையில்லாமல் வேடிக்கை பார்த்து நின்ற அவரை முழுப் பேருந்துநிலையத்தையும் ஆளுக்கொரு பாகமாகப் பிரித்துக் கொண்டு நானும் குழந்தைகளும் தேடிக் கண்டுபிடித்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வசந்தம் ஓட்டல் சேர்த்தோம். அங்கே தங்கியிருந்த எம்.கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் ஆகியோர் வெளியே சிறு சுற்றுப்பயணமாகச் சென்றிருந்தார்கள். தேவதேவன் குளித்தபின் திரும்பிவந்து அவரையும் கூட்டிச்செல்வதாகச் சொன்னார்கள்.
கோயில் சென்றாக வேண்டுமென்ற சைதன்யாவின் கட்டாயத்துக்கு ஆட்பட்டு நாகராஜா கோயில் சென்றோம். அது புராதனமான சமண கோயில். பார்ஸ்வநாதர் ஆலயம். புடைப்புச் சிற்பங்களில் இப்போதும் தீர்த்தங்காரர்களைக் காணலாம். பார்ஸ்வநாதர் இப்போது அனந்தகிருஷ்ணனாக வழிபடப்படுகிறார். பக்கத்தில் ஓலைக் கூரையிடப்பட்ட புற்றுதான் நாகத்தின் கோயில் கருவறை. கோயிலைச் சுற்றிவந்து தீர்த்தங்காரரிடம் வேண்டிக் கொண்டபின் அஜிதனை அருகே இருந்த சதுப்புக்குளத்துக்கு, பறவைகளை நோக்க கூட்டிச் சென்றபின் வீடு திரும்பினேன்
மெல்ல மெல்ல பதற்றம் ஏற ஆரம்பித்தது. மாலையில் நாஞ்சில் நாடன் அறுபது நூல் வெளியீட்டுவிழா. நேற்று மாலை வீட்டு விழாவுக்குச் சென்றபின் மாலை போய் இரு மலர்மாலைகளுக்குச் சொல்லி முன்பணம் கொடுத்தேன். அப்போது அருண்மொழி கூப்பிட்டு, “பேனரை எங்கே வைத்திருக்கிறாய்?” என்றாள்.
“என்ன பேனர்?”
“ஜெயன், ஒரு மீட்டிங்னா பின்னணியில அதைப்பத்தி எழுதி வைக்கணும்ல?”
எனக்கு ஒன்றும் ஓடவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் நடுத்தெருவில் நின்றேன்.
“பக்கத்திலே இருக்கிற பெரிய வினைல் போர்டை பாரு. அதிலே அட்ரஸ் நம்பர் எல்லாம் கண்டிப்பா இருக்கும். கூப்பிட்டு செஞ்சு குடுக்கமுடியுமா கேளு,” என்றாள்.
“அதுக்கு இனி எங்க நேரம்?” என்றேன்.
“வினைல் போர்டெல்லாம் ஒருமணிநேரத்திலே ரெடியாயிரும்னு சொல்றாங்க”
பக்கத்திலேயே நாலாள் உயர ஸ்டாலின் படத்துக்குக் கீழே விலாசமும் எண்ணும் இருந்தது. கூப்பிட்டுக் கேட்டபோது அரைமணி நேரத்தில் கிடைக்கும் என்றார்கள். நேராக வசந்தம் ஓட்டல் சென்று கோபாலகிருஷ்ணனையும் தர்மராஜனையும் கூட்டிக் கொண்டு அங்கே போய் பேனருக்கு எழுத்துகள் எழுதிக்கொடுத்தோம். கோபாலகிருஷ்ணன் அமர்ந்து வண்ணமும் வடிவமும் சொன்னார். அரைமணிநேரம் கழித்து வரச்சொன்னார்கள்.
ஏ.பி.என் பிளாசாவுக்கு வந்து ஹாலைப் பார்த்தோம். அங்கிருந்த வாட்ச்மேன், “சார் இண்ணைக்கு குடும்ப விழாவுக்கு எம்பிட்டுப் பேர் வந்தாக?”என்றார்.
“நூறுபேரைத்தான் எதிர்பார்த்தாங்க. முந்நூறுபேர் வந்தாங்க” என்றேன்.
“அதிலே பாதி வந்தாக்கூட இந்த ஹால் தாங்காது சார். இங்க எம்பது பேர்தான் இருக்க முடியும். ஏஸி ஹால் ஆனதனால தெறந்து போடவும் முடியாது. ஆளை வெளியே விட்டா நல்லா இருக்காது..,” என்றார்.
“என்ன செய்றது?” என்றேன்.
“பக்கத்து ஹால் கான்சலாயிட்டுது. அதை சரி செஞ்சு தாறோம். சகாயமா பாத்துசெய்யலாம்..” என்றார்
கீழே வந்து ஹாலை மாற்றச் சொல்லி கேட்டபோது மானேஜர் இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்றார். எண்ணூறு ரூபாய் அதிகம்.
“இது இலக்கியக் கூட்டம். எனக்குக் கட்டுபடியாகாது… தனியாளா செய்றோம்” என்றேன்.
“என்ன கூட்டம் சார்?’ ‘என்றார். விஷயத்தைச் சொன்னேன்.
“பெரிய ரைட்டரா சார்?”
“ஆமா,” என்றேன்.
யோசித்துவிட்டு “சரி. கடசீல மாத்தினா நீங்க என்ன செய்வீங்க? குடுக்கிறத குடுங்க”
“ஆயிரத்தி ஐநூறு குடுங்க சார்” என்றார் வாட்ச்மேன். மேனேஜர் தலையாட்டினார். மேலதிக முன்பணம் கொடுத்து உறுதிசெய்துவிட்டு மீண்டும்போய் பேனரை வாங்கிவிட்டு நள்ளிரவில் வீடுதிரும்பினேன்.
புத்தகங்கள் இருபத்தியெட்டாம் தேதிதான் தயாராகின. வசந்தகுமார் இரு வழிகளிலாக அனுப்பியிருந்தார். ‘ரதிமீனா’ பஸ்ஸில் ஒன்று. புரபஷனல் கூரியரில் ஒன்று. பதினொரு மணிக்கு கூரியர் வரும் என்றார்கள். வரவில்லை. பன்னிரண்டுமணிக்கு ஒரு வண்டி நிறைய தபால் வந்ததில் நூல்கட்டு இல்லை. ஒரு மணிக்கு அடுத்த வண்டி. அதிலும் பொதி இல்லை என இந்துக்கல்லூரி பேராசிரியரும் ‘பத்ரகாளியின் புத்திரர்கள்’ ஆசிரியருமான ஜெகதீசன் கூப்பிட்டுச் சொன்னார். இனி வண்டி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ரதிமீனா பஸ் இரண்டுமணிக்கு வரும். பதற்றத்துடன் வீட்டில் படுத்துக் கொண்டு ·போனில் மாறி மாறி கூப்பிட்டேன். சென்னையில் இருந்து பொதிகள் கிளம்பிவிட்டன என்றார் வசந்தகுமார். ·போனில்பேசி சலித்தபோது சுரேஷ் கண்ணனைக் கூப்பிட்டு புலம்பினேன். இரண்டரை மணிக்கு ரதிமீனா பஸ் வந்தது. அதிலும் பொதி வந்து சேரவில்லை. ஆக புத்தகம் இல்லாமல் புத்தக வெளியீட்டுவிழா. மீண்டும் சுரேஷிடம் புலம்பல். வசந்தகுமாரை கூப்பிட்டு கோபத்துடன், “நீங்க ஒருநாள் முன்னாடி அனுப்பியிருக்கணும்” என்று திட்டினேன்.
“ஜெயன் இருபத்தி ரெண்டாம் தேதி நீங்க மேட்டர் அனுப்பி எனக்கு இருபத்தி மூணாம் தேதி கிடைச்சிருக்கு. ஒரு புக் அடிக்க நாலுநாளாவது வேண்டாமா?’ ‘என்றார்.
எனக்குப் புரியவில்லை. நாலு நாளில் எழுதிய நூலை ஏன் மூன்று நாளில் அச்சிட முடியாது? சோர்ந்து படுத்துவிட்டேன்.
அருண்மொழி போஸ்டாபீஸில் இருந்து வந்தாள்.
“சரி இப்ப என்ன? ஒரு வாழ்த்துக்கூட்டம் நடத்துவோம்… புக்ஸ் அப்றமா வரட்டும்,” என்றாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. “இது என்ன சின்ன விஷயம். இதுக்கு போயா அப்செட் ஆறது. புக் ஒண்ணும் இப்ப முக்கியமில்லை. நாஞ்சில்நாடனுக்கு நாம ஒரு மரியாதை செய்றோம்..அதான் முக்கியம்…”
அப்போது ·போன் வந்தது. புரபஷனல் கூரியரில் புத்தகம் வந்துவிட்டது. தவறுதலாக வேறு ஒரு இடத்துக்குப் போய்விட்டதை மடக்கி எடுத்திருக்கிறார்கள். கார்களும் ஆட்களுமாக வந்து கேட்டதில் பதற்றம் அடைந்த நிர்வாகி ஒரு டாக்ஸி பிடித்து, கொண்டுவந்து சேர்த்துவிட்டார். பத்து பிரதிகள். உற்சாகமடைந்து குளித்து உடைமாற்றக் கிளம்பினேன். மூளையில் இருந்து ரத்தம் வடிந்து காலியாகும் நிம்மதி. சுரேஷுக்கு ·போன்செய்து விஷயத்தைச் சொன்னேன்.
நானும் அஜிதனும் கடைக்குப்போய் பூமாலைகளை வாங்கிக் கொண்டு ஏபிஎன் பிளாஸாவுக்குச் சென்றோம். ஹாலை நன்றாக அமைத்திருந்தார்கள். வழக்கமாக இலக்கியக் கூட்டங்கள் மலிவாகக் கிடைக்கும் பள்ளிக்கூட அறைகளில் அல்லது பொதுக்கூடங்களில்தான் நடக்கும். அந்த தரித்திரச் சாயலே இல்லாத அழகிய இடம். அதுவே உற்சாகமாக இருந்தது. கீழே சென்று டீக்கு ஏற்பாடுசெய்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் வந்து மேஜைவிரிப்பு போட்டு அலங்காரம் செய்தார்கள்.
நண்பர்கள் வரத்தொடங்கினார்கள். நிகழ்ச்சி தொடங்கும் ஐந்தரை மணிக்கு வெறும் இருபதுபேர். ஆறுமணி வரை காத்தோம். மேலும் ஐந்துபேர். எனக்கு மீண்டும் ரத்தம் தலைக்கு ஏறியது. அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. கீழே இறங்கிவந்து நின்றேன். நிற்கவும் முடியவில்லை. மீண்டும் மாடிப்படி ஏறினேன். மீண்டும் இறங்கினேன்
ஆறுமணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால் ஆறரை மணிக்குள் அரங்கு நிறைந்தது. சற்றுநேரத்தில் உபரி நாற்காலிகளைப் போட்டோம். கடைசியில் அவையும் போதாமலாயின. மேலும் ஆள்வந்துவிடுமோ என்ற பதற்றம் ஆரம்பமாகியது. நிறைந்த முழு அரங்கு– நூற்றி நாற்பத்து மூன்றுபேர். நாகர்கோயிலில் அது ஒரு பெருங்கூட்டம்.
நிகழ்ச்சி முழுக்க பதற்றமாகவே இருந்தேன். அஜிதனும் சைதன்யாவும் கூட்டத்தில் ஊடுருவி டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பதைப் பார்த்து நிற்க முடியவில்லை. எதையோ கீழேபோட்டுவிடப் போகிறார்கள் என்ற ஐயம். இருபது முறையாவது நான்கு மாடிகளையும் ஏறி இறங்கியிருப்பேன். ஜேம்ஸ் ஆர். டேனியல் தாமதமாக வந்தார், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு. அவர் வருவாரா என்ற பதற்றம். வந்தபின் நூல் வெளியீடு. கடைசிவரை ரதிமீனா பொதி வருமா என்ற எதிர்பார்ப்பு. அது வரவேயில்லை
சுரேஷுக்கும் வசந்தகுமாருக்கும் ·போன்செய்து நிகழ்ச்சி சிறப்பாக நடப்பதைச் சொன்னேன். கூட்டத்தில் சென்று அமர முடியவில்லை. பக்கத்து இருளறைக்குள் போய் அமர்ந்துதான் பேச்சுகளைக் கேட்க முடிந்தது. நாலைந்து டீ குடித்தேன்.
நிகழ்ச்சி சரியாக எட்டுமணிக்கு நாஞ்சில்நாடனின் உணர்ச்சிகரமான பேருரையுடன் முடிந்தது. ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்கள். ஒன்பதுமணிவரை நாஞ்சில்நாடன், பெர்னாண்ட் சந்திரா, அ.கா.பெருமாள், வேதசகாய குமார் குடும்பங்களுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பதரை மணிக்கு அருண்மொழிக்கும் குழந்தைகளுக்கும் ஓட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஆட்டோவில் அனுப்பிவிட்டு தேவதேவனைப் பார்க்க அவர் தங்கியிருந்த வசந்தம் ஓட்டலுக்குப் போனேன். அவரை நலம் விசாரித்து மறுநாள் அவர் ஊருக்குச்செல்ல ஏற்பாடுசெய்துவிட்டு பதினொரு மணிக்கு நாஞ்சில்நாடனிடம் ·போனில் பேசியபடியே வீடு திரும்பினேன்.
“நல்லா நிறைவா இருக்கு ஜெயமோகன். நமக்கும் இவ்ளவு ஆளிருக்குன்னா ஒரு தெம்பா இருக்கு… இன்னும் நெறைய ஓடலாம்ணு தோணுது”
வீட்டில் அருண்மொழி, “நல்லபடியா எல்லாம் முடிஞ்சாச்சு… பிரமாதமான நிகழ்ச்சின்னு எல்லாரும் சொல்றாங்க… இனிமேலாவது டென்ஷன் இல்லாம இரு,” என்றாள்.
“அப்டியா? டென்ஷனாவா இருக்கேன்?” என்றேன். முகச்சதைகள் அந்த வெளிப்பாட்டுக்கு பழகிவிட்டிருந்தன. கண்ணாடியில் பார்த்து முகம் கழுவி புன்னகைத்து மீண்டேன்