கதாநாயகி – குறுநாவல் : 9

கோதையாறு வந்து இறங்கினாலே அருமைநாயகம் கடையில் ஒரு டீ குடிக்காமல் இருக்கமுடியாது. மேலிருந்து இறங்கும்போதே அந்த நினைவு வந்துவிடும். அவ்வப்போது கோதையாறு வரும்போது மட்டும் பால்டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒரே சமயம் பால் டீ பிடித்தமானதாகவும் ஒவ்வாததாகவும் இருந்தது. பால் முறுகி வரும் மணமும் அதில் சரியான அளவில் டீ கலந்து உருவாகும் மணமும் நாவூறச் செய்தன. அங்கே நல்ல கெட்டி எருமைப்பால். டீக்கடையின் பின்னாலேயே நான்கு எருமைகள் நின்றன.

நான் ஒரு டீ சொன்னேன். பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். கசங்கிய தினத்தந்தி கிடந்தது. அங்கே தந்திப்பேப்பர் மதியம் வந்து விடும், என் காலடியில் தரையில் கோரன் குந்தி அமர்ந்திருந்தான். அவன் பால் விட்டு எதையும் குடிப்பதில்லை. காணிக்காரர்கள் பொதுவாகவே பால் குடிப்பதில்லை. அவர்கள் அதை எப்படியோ சீழுடன் சம்மந்தப்படுத்தி வைத்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் மாடுகளின் ரத்தத்தை நேரடியாக குடிப்பதுண்டு. மாடுகளின் கழுத்தில் ஒரு இடத்தில் மிகச்சிறிய அளவில் ஒரு இடத்தில் வெட்டி ரத்தத்தை ரத்தத்தை குடித்தபிறகு அதன்மேல் ஒரு பச்சிலையைக் கசக்கி வைத்து ரத்தத்தை நிறுத்திவிடுவார்கள். அது உடலுக்கு நல்லது, குழந்தைகளுக்கு நல்ல மருந்து என்று அவர்கள் நம்பினார்கள். கோரன் பால் காய்ச்சுமிடத்திற்கு வந்தாலே அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவன் போல தரையில் அமர்ந்துகொள்வான்.

ஆனால் அவன் பீடி பிடிப்பதை விரும்பினான். அவனால் ஒரு பீடியை முழுக்கப் பிடிக்க முடியாது. இரண்டு மூன்று முறை புகை இழுத்ததுமே கமறி இரும ஆரம்பித்துவிடுவான். ஆனால் அந்த மணம் அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் பீடி வாங்கிக்கொண்டு சென்று பிடிக்கும் வழக்கமில்லை. கோதையாறு வந்தால்தான் பீடி. அங்கேயே ஒரு பீடியை வாங்கி ஏழெட்டு முறை இழுத்துவிட்டு கீழே போட்டுவிடுவான். பிறகு ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் தொண்டையை கனைத்துக்கொண்டும் இருப்பான்.

கப்ரியேல் நாடார் கைவீசி என்னை அழைத்தார். நான் காப்ரியேல் நாடாரிடம் சென்று “என்ன நாடாரே?” என்றேன்.

“ஒரு லெட்டர் உண்டு” என்று அவர் எனக்கு ஒரு இன்லண்ட் உறையை கொடுத்தார்.

நான் அதை வாங்கி விளிம்புகள் எச்சில் தேய்த்து மிகக்கவனமாகக் கிழித்தேன். என் அப்பாவை எனக்குத் தெரியும் அவர் இன்லண்டின் கடைசி இடுக்கு வரை விடாமல் எழுதக்கூடியவர். அது பணம் கொடுத்து வாங்கப்பட்ட பொருள் என்பதனாலேயே முழுக்க பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணுவார். ஆகவே தேவையில்லாத தகவல்களை எழுதி குவித்திருப்பார்.

நான் பயிற்சியிலிருக்கும்போது அவருடைய கடிதங்களை தவறாகக் கிழித்து முக்கியமான செய்தியை தொலைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் எழுதிய பிறகுதான் அவருக்கு தெரிவித்தே ஆகவேண்டிய முக்கியமான செய்தி நினைவுக்கு வரும். அதை பெரும்பாலும் இன்லண்டின் மடிப்புகளில் தான் எழுதியிருப்பார். அதுவும் சுருக்கமாக, பொடி எழுத்துக்களில். நான் தவறாக கிழித்து பலமுறை முக்கியமான செய்தியை தவறவிட்டிருக்கிறேன்

கடிதத்தில் வழக்கமான குடும்பச் செய்திகள். யார் யாருக்கெல்லாம் உடம்பு சரியில்லாமல் ஆகி மீண்டது என்பது விரிவாக. நெல் விதைத்தது, விருந்தினர்கள் வந்தது, பக்கத்துவீட்டு விசேஷங்கள். வழக்கம் போல விளிம்பில் ஒரு செய்தி இருந்தது. நாங்குநேரி மாமா ஒரு சம்மந்த ஆலோசனையுடன் வந்திருக்கிறார். அவர்களுக்கு குலசேகரம்தான். நல்ல வசதியானவர்கள். அவர்களே தேடி வந்தார்கள். நல்ல இடம் என்று தெரிகிறது. அதை நீ சொன்னால் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆச்சரியமாக இருந்தது அதென்ன அத்தனை சீக்கிரமாக முடிவு செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன். நாடார் கடையில் சோப்பு போன்ற தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டேன். குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக நூறு சீனி மிட்டாய்களையும் புளிப்பு மிட்டாய்களையும் வாங்கினேன்.

திரும்பும்போது நாடார் “இருங்க இன்னொரு லெட்டர் இருக்கு” என்றார்.

“இன்னொரு லெட்டரா?” என்று நான் வியப்புடன் அவரை பார்த்தேன்.

அவர் எனக்கு இன்னொரு இன்லண்டை எடுத்து தந்தார். அதை அம்மா சொல்ல இளைய தங்கை தன் கையெழுத்தில் உருட்டி உருட்டி எழுதியிருந்தாள். அதில் அம்மா பேசுவது போலவே எழுதப்பட்டிருந்தது.

குலசேகரத்திலிருந்து திருமண ஆலோசனையுடன் வந்த குடும்பம் முன்பும் தென்தாமரைக்குளத்தில் இருந்தது. அங்கே அவர்கள் சமையல் வேலை பார்த்தவர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பே குலசேகரத்திற்கு வந்து அங்கே ஒரு மளிகைக்கடையை தொடங்கி அதை பெரிய அளவில் நடத்தி பணம் சேர்த்திருக்கிறார்கள். சக்ரபாணிப் பிள்ளைக்கு ஒரே மகள். அவளுக்கு சரியாக காது கேட்காது. வாய்ப்பேச்சும் சரியாக வராது. ஆகவே வீட்டோடு இருக்கும் மருமகனை தேடுகிறார்கள். என்னைப்பற்றிய தகவல்களை நாங்குநேரி மாமா என அழைக்கப்படும் சண்முகம்பிள்ளை மாமா சொல்ல அவர்களுக்குப் பிடித்துப்போய் தொடர்பு கொண்டார்கள்.

திருமணம் நடந்தால் நான் குலசேகரத்தில் அவர்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும். என்னுடைய குடும்பத்தை நான் என் வருமானத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். அந்தச் சம்பளம் அவர்களுக்கு தேவையில்லை. பெண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டு கையில் ஐந்து லட்சம் பணமும் கொடுப்பார்கள். அதை வைத்து மற்ற தங்கைகளுக்கு உடனே திருமணம் செய்துவிடலாம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மூன்றே மாதத்தில் பேச்சிப்பாறையிலிருந்து குலசேகரம் அருகே ஒரு ஊருக்கு வேலை மாறுதலும் வாங்கிக் கொடுப்பார்கள். ஓய்வு நேரத்தில் மளிகைக்கடையும் பார்த்துக் கொள்ளும்படியாக பக்கத்திலேயே வேலை இருக்கும்படி ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

எல்லாவகையிலும் சிறந்ததென்று நினைக்கிறேன் என்று அம்மா எழுதியிருந்தாள். ஒரு வருடத்திற்குள் எல்லாப் பொறுப்புகளும் முடிந்து நிம்மதியாக ஆகிவிடமுடியும். இது குமாரகோயில் முருகனே கொண்டு வந்த சம்மந்தம். நான்குநேரி மாமாவுக்கு நமது குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தெரியும். இந்த ஆலோசனை வந்ததுமே நமது பேரை அவர்தான் சொல்லியிருக்கிறார். நீ உடனே உன் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பு. நீ குடும்பத்துக்கு நன்மையைத்தான் செய்வாய் என எனக்குத் தெரியும். குலசேகரத்திலிருந்து அவர்கள் ஒருவேளை வந்து உன்னைப் பார்ப்பார்கள்.

நான் உறையை மடித்து பையில் வைத்துக்கொண்டு கையில் பொருட்களை எடுத்துக்கொண்டு நடந்தேன். கோரன் என்னிடம் “கரண்டு” என்றான்.

நான் திரும்பி அவனைப் பார்த்தேன்.

அவன் காட்டுக்குள் ஓடிய கம்பிகளைப்பார்த்து ”கரண்டு பாடுந்நு” என்றான்.

கம்பிகளில் காற்று வீசும்போது ஏற்படும் விம்மலோசையும் இசையும் எழுந்து கொண்டிருந்தது. நான் ஆமென்று தலையசைத்தேன். காட்டுக்குள் நடக்கும்போது மிகப்பெரிய வண்டின் ஓசை போல அந்தக் கம்பிகள் ரீங்கரித்துக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டு நடந்தேன்.

நான் பங்களாவை அணுகுவதற்குள்ளேயே அங்கே எவரோ வந்துவிட்டிருப்பது தெரிந்தது. பறவைகளின் சத்தத்தின் மாறுபாட்டை உடனடியாக என் காதுகள் எப்படி கவனித்தன? அதைவிட அதை என் உள்ளம் எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது என்பது வியப்பாக இருந்தது.

நான் வந்து அதிக நாளாகவில்லை. அதற்குள்ளாகவே காட்டை என் அகம் உள்வாங்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில் அது என்னுடைய உயிர்வாழ்தலுடன் தொடர்பு கொண்டிருந்தது. காட்டில் எவரும் காட்டைப் புரிந்துகொள்ளாமல் வாழ முடியாது. ஒரு நகரத்தை புரிந்து கொள்வதற்கு அறிவும், தொடர்ந்த கவனமும், கல்வியும் தேவை .காட்டை நம் அறிவு புரிந்து கொள்ளவில்லை. உள்ளுணர்வுதான் புரிந்துகொள்கிறது.

காடு எப்போதும் நம்முள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மனிதனின் ஆதி வீடு என்று காட்டை சொல்வார்கள். எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அத்தனை பேருக்கும் காடு உள்ளே இருக்கிறது. கால்களில் பாம்பு பற்றிய பயம் இருப்பது போல.

கோரனிடம் “யார் வந்திருக்கிறது?” என்று கேட்டேன்.

கோரன் “ஆ” என்று சொல்லி கைவிரித்தான்.

அவனுடைய ஆ ஒரு அழகான சைகை. யாருக்குத் தெரியும் என்பது போலிருக்கும் அது. அவர்கள் புறத்தார்கள் கேட்கக்கூடிய பெரும்பாலான கேள்விகளுக்கு அந்த ஓசையைத்தான் பதிலளிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்! தெரிந்து என்ன ஆகப்போகிறது! எனக்கெப்படி தெரியும்! நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்! அதைப்போன்ற எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு வரும். தெரிந்துகொள்ள நான் யார் என்பது கூட சில சமயங்களில் தோன்றும்.

பங்களாவின் முன் இரண்டு காணிக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். முற்றத்தில் இரு தோல்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அலுமினிய கம்பிச்சுருள்கள், இரும்புக்கம்பிகள், பலவகையான இரும்பு கொக்கிகள், மூங்கில்கள் கிடந்தன. மின்சாரத்துறை சார்ந்த யாரோ வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

நான் வீட்டை நெருங்கியதும் உள்ளிருந்து ஒருவன் வந்து என்னைப் பார்த்து சலாம் வைத்தான்.

“யார் வந்திருக்கிறது?” என்று நான் கேட்டேன்.

”இஞ்ஜினியர் சார்” என்று அவன் சொன்னான்.

அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உள்ளே சென்றபோது அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த பெரிய மீசை வைத்த வழுக்கை நபர் எழுந்து கைநீட்டி “ஹலோ” என்றார்.

நான் ”வணக்கம்” என்று சொல்லி “என் பேரு மெய்யன் பிள்ளை. இங்கே வாத்தியாரா வந்திருக்கேன்” என்றேன்.

“தெரியும், தெரியும். சொன்னாங்க” என்றார். “என் பேரு ராஜப்பன். இங்கே ஜேஈயா இருக்கேன். சோலியா இந்தப் பக்கமா போனேன். ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு தோணுச்சு. இன்னிக்கு கொஞ்சம் நேரமே மழை வந்துரும்னு இவன் சொல்றான்” என்றார்.

”இவங்க மழையைப்பத்தி பெரும்பாலும் சரியாதான் சொல்றாங்க” என்றேன்.  “டீ குடிக்கிறியளா?” என்று கேட்டேன்.

“டீ போட்டாச்சு” என்று அவர் சொன்னார்.

“சாப்பாடு என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

”அதுவும் ஏற்பாடாக்கியாச்சு. வந்ததுமே பாக்கச்சொன்னேன்.
அரிசி இருக்கு, கறி ஒண்ணும் இல்லன்னு சொன்னான். ஒருத்தன காட்டுக்குள்ள அனுப்பி எதையாவது பொறிவச்சு பிடிச்சுட்டு வான்னு அனுப்பியிருக்கு” என்றார்.

உள்ளே வந்த ஒருவன் தயங்கி சுவர் அருகே நின்றான்.

“இவன் பேரு செபாஸ்டியன் லைன்மேனா இருக்கான்” என்றார்.

நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.

“எப்படிப் போயிட்டிருக்கு பள்ளிக்கூடம்? எல்லாம் சும்மா ஒரு நாலஞ்சு நாள் என்ன ஏதுன்னு பாருங்க. அதுக்கப்புறம் எப்பவாவது வந்துட்டு போனா போதும். இங்க இவுனுகளும் யாரும் படிக்கிற மாதிரி தெரியல்லே” என்றார்.

நான் அதற்கும் புன்னகைத்தேன்.

“இந்தக்காட்டில் எவன் தங்க முடியும்? இது வெயிலு காலம். மழக்காலம் வருது. மழக்காலம்னா இங்க ஒத்த ஒரு மழயாக்கும். ஒத்த மழன்னா ஒரு முழூ மழக்காலத்துக்கு ஒத்த மழ… ஆமா, தொடங்கினா முப்பத்தஞ்சு நாள் களிச்சுதான் நிப்பாட்டும். சீவிக்க முடியாது” என்று அவர் சொன்னார்.

நான் அதற்கும் புன்னகைத்தேன்.

“ஆனா ஒண்ணு, சிலபேருக்கு காடு பிடிச்சுப்போயிரும். ரெண்டு டைப்பு ஆளுங்கதான். வந்த நாலாம்நாளிலே போறத நினைக்க ஆரம்பிப்பான். தலைய அடகுவச்சாவது கெளம்பி போயிருவான். சிலபேரு அப்டி இல்ல, வந்தா இங்கியே வாழ்ந்து சாவான்…” என்றார் ராஜப்பன் “நமக்கு எப்டின்னு தெரியல்ல. வந்தேன், ஆனால் இதுவரை போகத்தோணல்ல.”

“எனக்கு இங்க பிரச்சினை ஒண்ணுமில்லை. நல்ல எடம்” என்றேன்.

“ஆமா, இந்த பங்களா ஒரு நல்ல எடமாக்கும்” என்றார் ராஜப்பன். “இந்தப் பங்களாவுக்கு பளைய பேரு ஹண்டர்ஸ்ஹட். நல்ல ஒறப்புள்ள பங்களாவாக்கும். இது கெட்டி எரநூறு வருஷம் ஆச்சு பண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் இருந்தப்ப ஒரு ப்ளாண்டர் கட்டினது… ஆயிரத்தி எழுநூற்றி அறுபதிலேயோ எழுவதிலேயோ…”

நான் “அவருக்க பேரு அட்கின்ஸன், ஜெரால்ட் அட்கின்ஸன் இல்லியா?” என்று கேட்டேன்.

“ஆமா, சரிதான். ஜெரால்ட் அட்கின்சன். எப்படித் தெரியும்? யாரு சொன்னானுவ?” என்றார். “எனக்கே ஆறு மாசம் முன்னாடிதான் தெரியும். பழய ரெக்கார்டு ஒண்ணை பாத்திட்டிருந்தபோது நம்ம நாகப்பன் சார் தான் சொன்னார். பாத்தயாலே அக்கரை பங்களா 1922-ல தான் திருவிதாங்கூர் சர்க்காருக்கே ஹேண்ட் ஓவர் ஆகியிருக்குன்னு. அக்கரை எஸ்டேட் ஓனருக்குச் சொந்தமா இருந்தது. எஸ்டேட்டையும் திருவிதாங்கூர் சர்க்கார் எடுத்துக்கிட்டுது.”

“அப்றம் தமிழ்நாடு சர்க்காருக்கு வந்ததா?”

“இல்ல, எஸ்டேட் இப்பவும் திருவிதாங்கூர் சர்க்காருக்குத்தான். மகாராஜாவோட பிரைவேட் பிராப்பர்ட்டி. அதை அவரு ஒரு கோவாப்பரேட்டிவ் சொசைட்டிக்கு குடுத்திட்டார். இந்த பங்களா தமிழ்நாடு ஃபாரஸ்ட் டிப்பார்ட்மெண்டுக்கு வந்தது. கொஞ்சநாள் யாருக்கும் அக்கறை இல்லாம கெடந்தது. ஒரு அறுபது வருஷம் அப்படியே பாழடஞ்சு கிடந்தது. இங்க கோதையாறு பிராஜக்ட் வந்தப்ப வந்த முதல் எக்ஸிகியூட்டிவ் எஞ்சினியர் ஒரு ஆங்கிலோ இண்டியனாக்கும். ஹால்மான்னு பேரு. அவர் பங்களாவ ரிப்பேர் பண்ணி இப்ப இருக்கிற மாதிரி ஆக்கினாரு. ஓடெல்லாம் போயிருந்தது. மொத்த ஓடும் மாத்தியிருக்கு” என்றார்.

“நான் அப்படியா?” என்றேன்.

“உங்களுக்கு யார் சொன்னது இது கட்டின வெள்ளக்காரன் பேரெல்லாம்?” என்றார் ராஜப்பன். “அவன் பேரெல்லாம் இங்க யாருக்குமே தெரியாது. அதனாலே கேக்கேன்.”

”யாரோ சொன்னாங்க” என்று நான் சொன்னேன்.

அச்செய்தி ஏன் எனக்கு படபடப்பை தரவில்லை, ஏன் அத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

“வெள்ளக்காரன் இந்த அத்துவான காட்டுக்குள்ள எதுக்கு கட்டினான்னு தெரியல்ல. அந்தக்காலத்துல அவனுங்க இங்க வந்தான்னா ஒரு பதினஞ்சு இருபது நாள் தங்கி வேட்டையாடுவானுக. சின்ன சின்னதெல்லாம் வேட்டையாடினா திம்பானுக. பெரிய வேட்டையாடுனா தலையை எடுத்துக்கிடுவானுக. காட்டெருது, மானெல்லாம் வேட்டையாடினா தலையை வெட்டி கொண்டு போவானுங்க. பாடம் பண்ணி வீட்டுகள்ல வெக்கிறதுக்கு. அப்புறம் தான் ஆனத்துப்பாக்கி வந்தது. தெரியும்ல. ரொம்ப பெரிசு. பத்து காஜ் காலிபர் ரைபிள். அது வந்த பிறகு ஆனைய கொல்றது ஒரு பெரிய வேட்ட அவனுகளுக்கு”

“திருவிதாங்கூர் ராஜா 1936 லே ஆனய கொல்லக்கூடாதுன்னு ஒரு ஆர்டர் போட்டாரு. அதோட இங்க ஆளுக வர்றது கொறஞ்சிருச்சு. ரகசியமாட்டு கொஞ்ச நாளக்கி சில பேரு வந்தும் போயும் இருந்தானுங்க. அப்புறம் அப்படியே விட்டாச்சு. அதுக்கப்புறம் பேச்சிப்பாறை அணை கட்டினாங்க. அதுக்கான ஆளுங்க வந்து தங்கியிருக்காங்க. பிறகு ஈபி கைக்கு வந்த பிறகு நாங்க மெயிண்டெயின் பண்ணினோம். பிறகு எங்களுக்கும் ஆர்வம் கிடையாது. வாத்தியார் வந்துட்டு போறதுனாலயாவது இங்க ஒரு இது இருக்கு” என்று ராஜப்பன் சொன்னார். “இப்படி ஒரு இடம் இருக்கது நல்லதாக்கும். இந்த வழியா போனா வந்து ஒரு நாள் தங்கி போலாம் மழ வந்தா இந்தக்காடு ஒரு நரகமாக்கும் பாத்துக்கிடுங்க.”

நான் தலையை அசைத்தேன். அவர் திரும்பி அருகிலிருந்த புத்தகத்தை பார்த்தார்.

”சாருக்கென்ன படிப்பு?” என்றார்.

நான் ”எஸ்எஸ்எல்சி தான். அப்புறம் டீச்சர் ட்ரெயினிங்” என்றேன்.

“ஓ நான் டிகிரி உண்டோன்னு நெனச்சுப் போட்டேன். ஏன்னா இந்தப் புக்கெல்லாம் டிகிரி இல்லாதவன் படிக்க முடியாது பாத்துக்கிடுங்க” என்றார்.

நான் ”காலேஜ்ல போகல” என்றேன்.

“ஆனா இங்கிலீஷ் நல்ல வசமுண்டுன்னு தோணுது. இத படிக்கிறதுக்கு இங்கிலீஷ் நல்ல வேணுமே?” என்றபடி அதை கையிலெடுத்து புரட்டினார். கூர்ந்து படித்து “சுத்திச் சுத்தி எழுதுதாங்க. ஆனால் பழய திருவிதாங்கூர் டாக்குமெண்டெல்லாம் பார்த்தா இப்படித்தான் எழுதிருக்காங்க. அதப் படிச்சு புரிஞ்சுக்கறதுக்குள்ள செத்திருவோம். இந்த கோதையாறுக்கு லேண்ட் அலொகேஷன் டாக்குமெண்ட் எல்லாமே இந்த பாஷையிலதான் இருக்கும். அதக் கொண்டுபோய் நாகருகோயிலிலே ஏதாவது கிளட்டு வக்கீல் கிட்ட குடுத்து அதுக்கு அர்த்தம் என்னன்னு இங்கிலீஷ்ல இன்னொருவாட்டி எழுதி வாங்கிட்டு வருவோம்” என்றார்.

“ அந்தக்காலத்து பாஷை” என்றேன்.

“இப்படி எழுதிருக்க ஒரு முன்னூறு நானூறு லெட்டர் உண்டு. பழய திருவிதாங்கூருக்கும் தமிழ்நாடு அரசுக்குமான லெட்டர்ஸ். இதுல காமராஜர் எழுதின நாலு லெட்டர் இருக்கும். அது ஒண்ணு தான் மனுசன் வாசிக்கிறது மாதிரி இருக்கும்” என்றார்.

நான் “நீங்க இருங்க. நான் ஏதாவது சாப்பிடறதுக்கு ரெடி பண்றேன்” என்றேன்.

“அத அவனுக பாத்துக்கிடுவானுக. நீங்க இருங்க” என்று அவர் சொன்னார். நான் அமர்ந்து கொண்டேன்.

அவர் அதைப் படித்தபடி “ஆனா இந்தப் பாஷை படிக்கிறதுல ஒரு சௌகரியம் என்னான்னா இந்தப் பாஷையே நம்மள கொஞ்சம் பழய காலத்துக்கு கொண்டு போயிடும் பாத்துகிடுங்க. ரொம்ப பழய பாஷ இல்ல?” என்றார். “மணமும் பாஷயும்தான் நம்மள அப்டியே பழய காலத்துக்கு கொண்டு போற விசயங்கள்” என்றார்.

நான் அவரிடம் ‘உங்க படிப்பெல்லாம் எங்கே?” என்று கேட்டேன்.

“நான் படிச்சது மெட்ராஸ் ஆர்ஏசில. இஞ்சினியரிங் முடிச்சிருக்கேன். கோதையாறு எலக்ட்ரோ ப்ராஜக்ட் வாற சமயத்துல நாம இங்க வந்தாச்சு. ஒரு சின்னக் கேஸ்ல மாட்டிக்கிட்டேன். ஒரு லேண்ட்கிராபிங்க கையோட பிடிச்சேன். அவன் அரசியல்வாதி. அதனாலே ஒரு சிக்கல். அதனாலயாக்கும் இன்னும் ஜேஈ யா இருக்கேன். முடிஞ்சிரும் இந்த ஆண்டுக்குள்ளே ஏஈ ஆயிருவேன். டீஈயா ரிட்டயர் ஆகலாம். பிள்ளயள்ளாம் நாகர்கோவில்ல இருக்காங்க. அங்க மாசத்துக்கொரு தடவ போயிட்டு வர்றது” என்றார்.

நான் எழுந்து சென்று உடைகளை மாற்றிக் கொண்டேன். முற்றத்தில் நின்று சுற்றிலும் காடு ஒளியடங்கி வருவதைப் பார்த்தேன். வானத்தில் மேகங்கள் பெருகிக் கொண்டிருந்தன.

இங்கே மேகங்கள் வருவது பார்க்க வியப்பாக இருக்கும். மெல்ல மெல்ல தண்ணீர் ஊறி தேங்குவது போலத்தான் பொதுவாக வானத்தில் மேகங்கள் வரும். இங்கு காட்டில் மட்டும் ஒரு மேகம் இன்னொரு மேகத்தை முட்டி முட்டி நெரித்து உந்திக்கொண்டு மேலே வருவது போல் தோன்றும். சில சமயம் அலையலையாக வருவதும் உண்டு. கரிய தார் வழிந்து நிறைவது போல. ஒரு பெரிய திரையை இழுத்து மொத்தமாக வானத்தை மூடுவது போல. கண் இருட்டிக்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வரும்.

முழுமையாக இருட்டியது. வெளியே போயிருந்த இரு காணிக்காரர்கள் ஒரு மானைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அதன் நான்கு கால்களையும் இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டி நடுவே ஒரு கழியை செலுத்தி தூக்கிக்கொண்டு வந்தார்கள். பெரிய மான் முப்பது நாற்பது கிலோ எடை இருக்கும். ஆனால் இவர்கள் அனைவரும் சேர்ந்து அதை தின்று முடித்துவிடுவார்கள்.

அவர்கள் அதை சமையலறைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே கோரனின் உற்சாகக்குரல் கேட்க தொடங்கியது.

நான் படிகளில் அமர்ந்து மழை வருவதற்காக காத்திருந்தேன். இதோ இதோ என்று ஒவ்வொரு கணமாக சென்று கொண்டிருந்தது. பின்னர் மழை எதையோ சத்தியம் செய்வது போல மண்ணை ஓங்கி அறைந்தது.

நான் எழுந்து நின்றேன். ஒரு கணத்திற்குள் என் கால்கள் முழுக்க நனைந்துவிட்டன. பெட்டிகளையெல்லாம் ஏற்கனவே உள்ளே கொண்டு சென்றிருந்தார்கள். முற்றம் நீரில் கொப்பளிக்க ஆரம்பித்தது. நீரில் நீர்விழுந்து தெறிப்பது நீராலான சிறிய நாற்றுக்கள் போல தோன்றியது.

உள்ளே வந்து அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்தேன். ராஜப்பன் மேஜை விளக்கை ஏற்றிவிட்டு அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து புன்னகைத்து “நல்ல புக்காக்கும்” என்றார்.

“கத புரியுதா?” என்றேன்.

“கத புரியல்ல. சும்மா புரட்டிப் பார்த்தேன். ஒரு பொண்ணு சும்மா இப்படியே லண்டனுக்கு போறா பாத்தேளா. அங்க உள்ள சடங்கு சம்பிரதாயங்கள்ல கெடந்து நீந்துதா. ஆனா அவளுக்கு அது பிடிக்கவும் இல்ல” என்றார். பிறகு திரும்ப படிக்க ஆரம்பித்தார்.

நான் சமையலறைக்குச் சென்றேன். அங்கு அந்த மானை தோலை உரித்துக் கொண்டிருந்தார்கள் அதன் கண்கள் திறந்திருக்க முகம் உயிருள்ளது போல பார்த்துக் கொண்டிருந்தது. பின்பகுதியிலிருந்து அதன் தோலை அவர்கள் உரித்துக் கொண்டிருக்க அது அசைந்து அசைந்து தன் தோலை உரிக்க ஒப்புக்கொடுப்பது போல இருந்தது.

கோரன் என்னிடம் ”மான் கறி! கடைமான்!” என்றான்.

சரி என்று தலையசைத்துவிட்டு வெளியே வந்தேன். என்ன செய்வதென்றறியாமல் அக்கூடத்திற்குள்ளேயே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எழுதியது நினைவுக்கு வந்த.து அந்த முடிவைத்தான் நான் எடுக்க வேண்டும். வேறொரு முடிவெடுக்க எனக்கு உரிமை கிடையாது. என்னுடைய பொறுப்பென்பது என் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பது. இந்த பிறவிக்கே அதுதான் நோக்கமென்பது போல.

நான் சின்னப்பையனாக இருக்கும்போதே எல்லாரும் அதை சொல்லி வருகிறார்கள். அதற்கு என்னை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். ஏழாங்கிளாஸ் எட்டாங்கிளாஸ் படிக்கும்போதே ஒவ்வொரு முறை மதிப்பெண் கார்டை பார்க்கும்போதும் அப்பா அதைத்தான் ஞாபகப்படுத்துவார். வேலை கிடைத்தபோதும் அதுதான் பேச்சாக இருந்தது.

இந்த வாத்தியார் வேலையில் எனக்குக் கிடைக்கும் சம்பளத்தை சேர்த்து வைத்து ஒருபோதும் அந்தப் பணத்தை நான் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. அதை வைத்து திருமணம் செய்ய வேண்டுமென்றால் குறைந்தது பத்தாண்டுகள் சேமிக்க வேண்டும். மீண்டும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் கடனை அடைக்க வேண்டும். அப்படியென்றால் என் வாழ்க்கை முழுக்க இதற்கே செலவாகிவிடும்.

இந்த திருமணம் என்பது ஒரே ஆண்டில் எல்லாவற்றையும் முடித்து மீள்வது. அந்தப்பெண் காது கேட்காதவள், பேச முடியாதவள். அதற்கென்ன, அதைவிட ஒரு நல்ல பெண்ணை நான் அடைவதற்கு வாய்ப்பில்லை. பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து நாலைந்து லட்ச ரூபாய் கடனுடன் நான் பெண் தேடிப்போனால் எனக்கு இந்தப் பெண்ணைப்போல ஒருத்தி கிடைப்பதற்கு கூட வாய்ப்பில்லை. வேறொன்றை யோசிப்பதற்கு வழியே இல்லை. நான் என்னுடைய தாள்களை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

அன்புள்ள அப்பாவுக்கு என்று எழுதி பிறகு நெடுநேரம் தாளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பிறகு ’அனேக நமஸ்காரம்’ என்று தொடங்கி எழுதினேன். என்னுடைய வேலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. தங்குமிடம் வசதியாக இருக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. இங்குள்ள பணிச்சூழலும் நன்றாக இருக்கிறது. எல்லாரும் அன்பாகவே இருக்கிறார்கள் என்று பொதுவாகவே எழுதிக் கொண்டு சென்றேன்.

கடைசியில் பெரியவர்கள் பார்த்து எதைச் செய்தாலும் எனக்கு சம்மதம்தான் என்று எழுதினேன். நமது குடும்பத்திற்கு குமாரகோயில் முருகன் துணையிருப்பான். எழுதி அதை மடித்து வைத்தேன். நாளை அதை அனுப்ப முடியாது. பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தான் கோதையாறு செல்ல வேண்டும். அல்லது இவர்களில் எவராவது நாளைக்கு கோதையாறு செல்வார்கள் என்றால் காப்ரியேல் நாடாரின் கைகளில் கொடுத்தால் போதும் அவரே ஸ்டாம்பு ஒட்டி தபாலில் சேர்த்துவிடுவார்.

நான் மழையைப் பார்த்துக்கொண்டு நின்றபோது கோரன் வந்து “சாப்பிட வாங்க… மான்கறி உண்டு” என்றான்.

”ரெடியாயிருச்சா?” என்று நான் கேட்டேன்.

“கறிக்கஞ்ஞி! சுட்ட மான்கறி!” என்று கையைத்தூக்கி உடலை ஊசலாட்டியபடி சொன்னான். “நெறைய கறி! சுட்ட கறி! சுட்ட கறி!” என்றான்.

நான் புன்னகையுடன் “கொண்டு வா” என்று சொன்னேன்.

எஞ்சினியர் புத்தகத்தை மடித்து மேஜைமேல் வைத்துவிட்டு “இது எங்க கெடச்சுது?” என்றார். “கொண்டு வந்திங்களா??”

“இல்ல இங்க இருந்தது.”

”அதான் பாத்தேன். ரொம்பப் பழசா இருக்கு. அது மட்டும் இல்ல ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இருக்கு பாத்தேளா?” என்றார்.

”ரப்பர் ஸ்டாம்பா?” என்று நான் கேட்டேன்.

“இங்க பாருங்க” என்று அவர் புரட்டி உள்ளே ஓரு பக்கத்தில் அடிக்கப் பட்டிருந்த ரப்பர் ஸ்டாம்பை காட்டினார். அது திருவனந்தபுரம் பிரிட்டிஷ் ராணுவத்தின் முத்திரை.

“ஆமாம் இது பட்டாளத்துக்காரன் புக்காக்கும். பட்டாளத்துக்காரனுக்க எல்லா உடைமையிலேயும் சீலு வைச்சுப்போடுவான். இப்ப உள்ள பட்டாளம் இல்ல. பழய திருவிதாங்கூர்ல இருந்த வெள்ளக்காரப் பட்டாளம். ரெசிடெண்ட் ஆர்மின்னு சொல்லுவாக. அவனுகளுக்கு அங்க நல்ல லைப்ரரி எல்லாம் வெச்சிருந்தாவ. அவனுக படிக்க மாட்டாங்க. அவுனுக எல்லாம் தண்ணிப் பார்ட்டியாக்கும். சாயங்காலம் ஆனா அவனவன் மண்ணுமோந்து விழுந்துருவாங்க. ரம்மு ஃப்ரீ இல்ல? ஆனா அவனுக லண்டன்லே இருந்து கெட்டி கொண்டு வரப்பட்ட பொம்பளக வாசிப்பாளுக. அவளுகளுக்கு வேற வேலயே கெடயாது. இங்க ஒவ்வொருத்திகளுக்கும் வீட்டு வேல செய்யுதுக்கு அஞ்சு ஆறோ ஆளு ஆளு இருப்பா. துணி துவெக்க ஒருத்தி. பாத்திரம் கழுவ ஒருத்தி. சமைக்க ஒருத்தி. காலப்பிடிக்க ஒருத்தி. கையப்பிடிக்க ஒருத்தி. பின்ன என்ன பண்ணுவாளுக? நேரம் போகணுமே? படிப்புதான். அப்ப இந்த மாதிரி ரேடியோ ஒண்ணும் கெடயாதில்ல? புக்கு படிச்சுட்டே இருப்பாளுக.”

“அவளுக படிக்கதுக்காக அங்கிருந்து புத்தகங்கள கொண்டு வருவானுங்க. அங்க லைப்ரரில அடுக்கி வெப்பாங்க. எங்க அப்பா திருவனந்தபுரத்தில வேல பாத்தாரு. அவர் ஓவர்சீயராக்கும். பிடபிள்யூடி ஓவர்சீயர். திருவனந்தபுரத்திலே. அதாவது பழய திருவனந்தபுரத்தில. அவர் சொன்னதுண்டு, அங்க இப்ப பாங்ஙோடு இருக்கில்ல, மிலிட்டரி ஹெட்குவார்ட்டஸ்? அது பண்டு ரெசிடெண்ட் பட்டாளம் இருந்த எடமாக்கும். அங்க உள்ள பாதிக் கட்டிடம் எங்க அப்பன் நின்னு கட்டினதாக்கும்.”

“ஒகோ” என்று நான் சொன்னேன்.

“அன்னிக்கெல்லாம் காண்ட்ராக்ட் நல்ல லாபம். பழய பிரிட்டிஷ் ஆட்சியாக்கும். நூறு ரூபான்னா முப்பது ரூபா பிரிட்டிஷ் துரைக்கு. பத்து ரூபா நமக்கு. பாக்கி அறுவது ரூவால அங்க இங்கன்னு ஒரு இருவது. மிச்சம் நாப்பது ரூவாயிலே கெட்டினா போதும். இப்ப ஊழல் ஊழல்னு சொல்லுதோம். அன்னிக்கு இருந்த ஊழல் சாதாரண ஊழல் கெடயாது. தொர கையில பைசா இல்லாம ஒண்ணுக்கும் கையெழுத்து போடமாட்டான்.”

“அப்டியா?”

“பின்ன? ஒருத்தன் அங்கேருந்து காப்டனோ கர்னலோ ஆகி வந்தான்னா பத்து வருஷத்துல அவன் லண்டன்ல வீடு கட்டிப்போடுவான். நல்ல ரெண்டு சாரட் வண்டி வாங்கி விட்டுட்டு சக்ரவர்த்தி மாதிரி அலைவான். அவனுகளுக்கெல்லாம் ஒருமாதிரி ஒரு நரச்ச விக் உண்டு. சணல்ல செஞ்சிருப்பாங்க. அத தலையில வெச்சுகிட்டு அலையணும்னு அவனுகளுக்கு ஆச. அத வச்சுகிட்டா பெரிய ஆள்னு நெனப்பு. அதுக்காக எவன் சங்கறுத்தாலும் சரி” என்றார் ராஜப்பன்.

“அந்தக்காலத்தில இந்தப் புக்கெல்லாம் கப்பல்ல வருமாம். அங்க இதெல்லாம் படிச்சுப்போட்டு செகண்ட் ஹாண்டில குடுக்கது. அத வாங்கி டப்பால போட்டு போட்டா இங்க அஞ்சுதெங்கு துறைமுகத்துக்கு வந்துரும். அங்கருந்து எடுத்துக் கொண்டு வந்து இந்த மாதிரி வெள்ளக்காரன் இருக்க எடத்துல வித்தா லாபம் உண்டு. மகாராஜா கூட நெறய புக் வாங்கி வெச்சிருந்திருக்காரு. ஏன்னா இங்கிலீஸ் படிப்புள்ளவன்லா பெரிய ஆளெல்லாம். இங்கிலீஸ் படிக்கப்பட்ட ஆளுகெல்லாம் அந்த புக்க விரும்பிப் படிப்பாங்க.”

“ஆமா, நாகர்கோயிலிலே லைப்ரரியிலேயும் நெறைய புக் இருக்கு” என்றேன்.

“அந்தக்கால பிரிட்டிஷ் பொம்புளைக அந்த புக்கெல்லாம் எடுத்து வெச்சு காணாதத கண்ட மாதிரி கொஞ்சம் கொஞ்சமா படிப்பாளுகன்னு நெனக்கறேன். நான் அந்தக் காலத்துல ஒண்ணு ரெண்டு புத்தகம் படிச்சு பாத்திருக்கேன். ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட்டு… ரெயினால்ட்ஸ் நல்ல எளுத்தாளராக்கும். அவருக்க லண்டன் அரண்மனை ரகசியங்கள்னு புக் உண்டு படிச்சிருக்கியளா?”

“இல்ல.”

“லண்டனுக்கு அடியில முழுக்க எலி வளையா நோண்டி வச்சிருக்கானுகன்னு தோணிப்போடும். பாதிக்கதை சுரங்கப் பாதையிலேதான். எங்க பாத்தாலும் எல்லாரும் சதி பண்ணிட்டே இருப்பாங்க. சின்ன வயசில நானும் நெனப்பேன், நாமளும் பெருசாயி இந்த மாதிரி நல்ல சதி பண்ணனும் அப்படின்னு. சதி பண்ணினாதான் பெரிய ஆளு அப்படின்னு ஒரு நெனப்பு. நான் பண்ண வேண்டிய சதிகளைப் பத்தில்லாம் அப்பவே யோசிச்சு அலஞ்சுட்டு கெடப்பேன். பெரிய ஆளுகள்ளாம் அப்படி பயங்கரமா சூழ்ச்சிகளா பண்ணிட்டிருக்காங்கன்னு ஒவ்வொருத்தர் மூஞ்சிகளா பாப்பேன். அது ஒரு காலம்” என்றார்.

கோரன் பெரிய கமுகுப்பாளை தொன்னைகளில் கறிக்கஞ்சியும் சுட்டகறியும் கொண்டு வந்து இருவருக்கும் வைத்தான்.

“இவனுகளுக்கு சமைக்க தெரியாது. மொதல்ல இது என்னடான்னு சப்புன்னு இருக்குன்னு தோணும். ஆனா இத தின்னு பாத்தப்புறம் இது பிடிச்சுப்போடும். எனக்கு வீட்டுல சமயல் பிடிக்காது இப்போ. அங்க காரத்த வாறி போடுகா, புளிய பிழிஞ்சு விடுகான்னு தோணும். ஒரே சண்ட. நமக்கு மட்டும் சுட்டு குடுன்னு கேட்டு சுட்டோ அவிச்சோ தின்னுட்டு வந்திறது” என்றபடி எஞ்சினியர் சாப்பிட ஆரம்பித்தார்.

வெளியே மழை உரத்துப் பெய்து கொண்டிருந்தது. “இவனுக திங்கறதுதாங்க சரி. மனுசனுக்கு தானியம் இவ்வளவு வேண்டாம் கேட்டியளா? கறிதான் மனுசனுக்கு நேச்சுரலான ஃபுட். என்ன சொல்லுதியோ?”

“ஆமாம்” என்றேன்.

”ஒரு நேரம் நல்ல கறி சாப்பிட்டா பிறகு மறுநாளைக்கு சாப்பிட்டா போதும். நான் ஒரு நேரம் தான் சாப்பிடுவேன். அரக்கிலோக்கு மேல கறி சாப்பிடுவேன் அவ்ளொதான். இப்ப இன்னிக்கு சாப்பிடுறேன். நாளைக்கு ராத்திரிதான் சாப்பிடுவேன். நடுவுல ஒரு டீயோ வெள்ளமோ குடிச்சா உண்டு. பழங்கள் ஏதாவது கெடச்சா சாப்பிடுவேன்” என்றார்.

“காலையில சாப்பிட மாட்டிங்களா?” என்றேன்.

“இல்லியே காலையில் ஒரு சாயா. சில சமயம் ஒரு துண்டு ரொட்டி. மத்தபடி சாப்பிடுகதில்ல” என்றார்.

நினைத்தது போலவே அவர் பெரிய அளவு கறி சாப்பிட்டார். ஏப்பம் விட்டு கழுவி மீசையை நீவியபடி வந்து அமர்ந்தார். “இந்த ராத்திரி முழிச்சிருக்கிற வழக்கமும் நமக்கு கெடயாது. சாப்பிட்டமா அந்தால படுத்துர்றது. காலையில விடிஞ்சபிறகுதான் எந்திருக்கது. பத்துமணிநேரம் நல்ல ஒறக்கம். ஆனா அதுக்கான கொணம் உண்டு. பகல்ல ஒரு பத்து மணிக்கூர் நேரம் காட்டுக்குள்ள கெடந்தாலும் எனக்கொண்ணும் ஆகறதில்ல” என்றபின் ஏப்பம் விட்டு “உங்களுக்குக் காட்டுக்குள்ள நடந்தா மூச்சுவாங்குமா?” என்று என்னைக் கேட்டார்.

“மொதல் ரெண்டு மூணு நாளு மூச்சு வாங்கிச்சு” என்று நான் சொன்னேன்.

“கொஞ்சம் கொஞ்சமா அது போயிடும். என்னன்னா நம்ம லங்ஸும் ஹார்ட்டும் ஸ்ட்ராங்கா ஆகுது. காடு நம்ம உள்ளுக்குள்ள ஸ்டிராங் ஆக்கிரும். இந்த காட்டில நின்னுக்கிடுங்க. நூறு வயசு வரைக்கும் கிண்ணு கிண்ணுன்னு இருக்கும் உடம்பு” என்றார்.

அதன்பிறகு அவருடைய ஆர்இசி நாட்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் படிக்கும்போதுதான் நக்ஸலைட் புரட்சி வந்திருக்கிறது. “நக்சலைட்டுக ஹாஸ்டல்ல வந்து தங்கிட்டாங்க. போலீஸ்காரன் வந்து மொத்த ஹாஸ்டல்ல உள்ளதையும் வெளிய அள்ளிப் போட்டு சர்ச்சு பண்ணுனான். பாத்தா நாலு ஹாஸ்டல் ரூமில நக்சலைட்டு இருக்கானுக. நமக்கே ஆருன்னு தெரியாது அவன. யார்லாம் அவனுக்கு நெருக்கமா இருந்தான்னு கேட்டு அவனுகளுக்கும் அடி.”

அவர் மீண்டும் ஏப்பம் விட்டு “நல்லவேளை நான் யார்ட்டயும் ஒரு சம்மந்தமும் வெச்சுக்கல. நமக்கு அப்ப இங்கிலீஸ் படம் பாக்குறது. இங்கிலீஸ் போர்னோகிராஃபி புக்கு வாங்கி படிக்கிறது. அதத் தவிர வேற இண்ட்ரஸ்ட் கெடயாது. ஆனா நாலஞ்சு பயக்களுக்கு நக்சலைட் ஈடுபாடு இருந்தது. அவனுகள கூட்டிட்டு போனாங்க. பொறகு அவனுங்க அப்பா வந்து பைசா கொண்டு போயி குடுத்து கைய கால பிடிச்சு எறக்கி வெளிய எடுத்தானுங்க.”

மிகச் சீக்கிரத்திலேயே தூங்கிவிட்டோம். நானும் இரவு ஏழரை மணிக்குமேல் விழித்திருக்கும் பழக்கத்தை விட்டிருந்தேன். ஆறு மணி தாண்டின உடனேயே கண்கள் கீழ் நோக்கி இழுபட ஆரம்பித்தது. கட்டிலில் அவர் படுத்தார். அருகே தரையில் பாய் போட்டு அதில் கம்பளி விரித்து நான் படுத்துக்கொண்டேன். அவருடன் வந்த காணிக்காரர்களில் மூவர் சமையலறையில் படுத்துக்கொள்ள கோரன் வழக்கம் போல அறையின் மூலையில் அமர்ந்து தூங்கினான்.

நான் இரவில் எப்போதோ புரண்டு படுத்தபோது அறைக்குள் வெளிச்சம் இருப்பதைப் பார்த்து ஒருக்களித்து கண் திறந்து பார்த்தேன். எஞ்சினியர் மேஜை விளக்கை வைத்து அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

“தூக்கம் வரலியா?” என்று நான் கேட்டேன்.

“ஆமா ஆச்சரியமா இருக்கு. தூக்கம் சுத்தமா வரல்ல. ஒருமணி நேரம் தூங்கிருப்பேன். என்னை ஆரோ வந்து விளிக்குத மாதிரி கனவு. சரின்னு எந்திரிச்சு உக்காந்து படிக்க ஆரம்பிச்சா நல்லா போயிட்டிருக்கு” என்றார்.

“கொஞ்சம் வளவளான்னு பேச்சாட்டு இருக்கும்” என்றேன்.

“ஆமா. ஆமா ஒரு மாதிரி ஒரு கூர்மை இருக்கு இதிலே. சில சமயம் நம்மள யாராவது நம்மள பாத்து கெட்ட வார்த்த சொன்னா நமக்கு ஒரு திருப்தி வருமில்ல, அந்த மாதிரி ஒரு திருப்தி. நம்ம மனசக்கிழிச்சு உள்ள இருக்க சங்கதில்லாம் வெளிய போடுத மாதிரி இருக்கு”

நான் ஆம் என தலையசைத்தேன்.

“இந்த வீட்டுக்கு வெள்ளையடிக்கும்போது பாத்தியள்னா வெள்ளையடிக்குதவன் நம்ம வீட்டில உள்ள பொருளெல்லாம் எடுத்து வெளிய போடுவான். அப்பதான் நம்ம வீட்டுக்குள்ள இவ்வளவு தேவையில்லாத ஓட்ட ஒடசல் குப்ப கெடக்குது நமக்கே தெரியும். அந்த மாதிரி ஒரு புக்காக்கும் இது. நீங்க தூங்குங்க” என்றார். ஏப்பம் விட்டு “எனக்கு இந்த மான்கறி அவ்வளவு பிடிக்கல்லேன்னு நெனக்கறேன். கொஞ்சம் முத்தல் மானாக்கும்” என்றார்.

“சரி” என்று நான் புரண்டு படுத்தேன். மறுபடியும் ஆழமாக தூங்கிவிட்டேன்.

விசும்பலோசை ஒன்று கேட்டு கண் திறந்தேன். யாரோ அழுதுகொண்டிருந்தார்கள். எழுந்து அமர்ந்து பார்த்தேன். எஞ்சினியர் விம்மி அழுதபடி கைநீட்டி எதையோ உளறலாக சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு நேர் முன்னால் யாரோ நின்று கொண்டிருப்பது போல தோன்றியது.

ஒரு விசித்திரமான கனவு போலிருந்தது அந்தக்காட்சி. அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன். கையை அசைத்து அசைத்து ஏதோ சொன்னார். ”இல்ல! நான் இல்ல!” என்றார்.

நான் எழுந்து “சார்! சார்!” என்று உரக்க கூப்பிட்டேன்.

அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்து உடனே எழுந்து “யாரது?” என்றார்.

“நான்தான். என்ன? என்ன ஆச்சு?” என்றேன்.

“ஒரு சொப்பனம்” என்றார் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

“சொப்பனமா?” என்றேன்.

“இல்ல சொப்பனம் இல்ல. இங்க வேற ஆராவது வந்தாவளா?” என்றார்.

”இல்லையே” என்றேன்.

“இல்ல, ஒண்ணுமில்ல” என்றவர் திடீர் என்று என்னை நோக்கி வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு “முழுச்சிருங்க… தூங்கிராதிங்க” என்றார். குரல் உடைந்து தழுதழுத்தது.

“ஏன்? என்ன ஆச்சு?” என்றேன்.

“ஒண்ணுமில்ல முழிச்சிருங்க…எங்கூட இருங்க. தூங்கிராதிங்க ”

“சரி” என்று நான் சொன்னேன்.

அவர் திரும்பி அந்த புத்தகத்தை பார்த்து “இந்த புக்காக்கும். இந்த புக்குல என்னமோ இருக்கு” என்றார்.

“என்ன?” என்றேன்.

“இந்த புக்கு… இதைத் தெறந்தா அதுக்குள்ள இருந்து என்னமோ வெளிய வருது.”

“என்ன?”

“என்னமோ ஒண்ணு. நான் என்னன்னு இப்ப சொல்ல விரும்பல்ல. அந்த புக்கெ எடுத்து உள்ள வைங்க” என்றார்.

நான் அந்த புத்தகத்தை எடுத்து ட்ராயருக்குள் போட்டு பூட்டி வைத்தேன்.

“அத தெறக்காதிங்க” என்றார். “நீங்க அதப்படிச்சேளா?”

“கொஞ்சம் படிச்சேன்” என்றேன்.

“வேண்டாம். சில சமயம் சில புக்குல அந்த மாதிரி இருக்கும். பைபிளிலேயும் திருமந்திரத்திலேயும் எல்லாம் அந்த மாதிரி உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன். சில வசனங்களில் சில வாதைகள் கெட்டிக் கிடக்கும். அத சரியான நேரத்துல தொட்டுட்டோம்னா எந்திரிச்சிரும்.”

“நீங்க என்ன பாத்திங்க?” என்றேன்.

“நான் இங்க ஒரு…” என்றபின் “என்ன பாத்தேன்னு தெரியல. ஆனா இங்க யாரோ இருக்காங்க” என்றார்.

“உங்களுக்கு என்ன நடந்தது?” என்றேன்.

“தெரியல ஆனா இங்க ஆரோ இருக்காங்க. நாம மட்டும் இல்ல. ஒரு பொம்பளயாளு. ஒரு லேடி. வெள்ளக்காரி” என்று அவர் சொன்னார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரை ஆறுதல் படுத்த முயலவில்லை. விடியும்வரை அப்படியே அமர்ந்திருந்தோம். அவர் அமர்ந்தபடியே தலை தொய்ய கொஞ்சம் தூங்கினார்.

வெளியே காகத்தின் முதற்குரல் கேட்டபோது அவர் அசைந்தமர்ந்து “பாவம் இல்ல?” என்றார்.

“என்ன?”என்றேன்.

“எதுவும் எங்கியோ முடியணும்… முடியாம வெறுமே இருந்திட்டிருக்கிறதுன்னா… ஆவியோ பேயோ எதுவா இருந்தாலும் அது வெறும் துக்கமாக்கும். கல்லு மாதிரி கிடக்குற துக்கம். எப்டி போட்டு அலம்பினாலும் அதை கரைச்சு அழிக்க முடியாது.”

”ஆமா” என்றேன்.

“பாவப்பட்ட வெள்ளைக்காரி… இந்த பாழடைஞ்ச பங்களாவிலே, இத்தனை ஆண்டா இருந்திட்டிருக்கான்னா… எங்கே யாரோ பெத்த புள்ளை. நமக்கும் பொட்டக்குட்டி இருக்கு…. இனி அவளை பாத்தா, அம்மா தாயி உனக்கு என்ன வேணும்? பெத்த அப்பனா நினைச்சுக்கோ. உனக்கு வேணுங்கிறத செய்யுதேன்னு சொல்லணும்” என்றார்.

எனக்கு நெஞ்சு பொங்கியது. “ஆமா, அப்டித்தான் சொல்லணும்” என்றேன்.

கோரன் எழுந்துகொண்டு “ஆ” என்று சோம்பல் முறித்தான். எங்க இருவரையும் மாறி மாறி பார்த்தான். “அவரு போயாச்சா?” என்றான்.

“ஆரு?” என்று நான் கேட்டேன்.

“வெள்ளக்காரி… இப்ப இங்க பேசிட்டு இருந்தவ?”

நான் எஞ்சீனியரைப் பார்த்தேன். அவர் கோரனிடம் “என்னது சொப்பனம் கண்டியா? போ, போயி டீய போடு” என்றார்.

கோரன் கம்பிளியுடன் எழுந்து சென்றான்.

“பாத்தியளா? இங்கதான் இருக்கா” என்றார். “ஆனா பலபேரு இங்க தங்கியிருக்காங்க… ஆரும் ஒண்ணும் சொன்னதில்லை.”

“அந்த புத்தகத்திலே இருந்திருக்கா. அந்த புத்தகம் சைன்போர்டு டிராயருக்குள்ள இருந்தது. ஒரு ரகசிய கேபின்லே.”

“ஓ, அதுசெரி. அகலிகையை எளுப்பிட்டீங்க.”

நான் புன்னகைத்தேன்.

“நான் கெளம்புறேன். என்னைக்கேட்டா நீங்களும் இங்க தங்க வேண்டாம்.”

“இல்ல, இங்கதான் இருக்கப்போறேன்.”

அவர் என்னைப் பார்த்தார்.

“சொன்னீங்கள்ல, பாவப்பெட்ட பொண்ணுன்னு. அப்டின்னுதான் நானும் நினைக்கிறேன். அவளை அப்டி விட்டுட்டு போனா தப்பில்ல?”

அவர் என்னைப் பார்த்தார். பிறகு புன்னகைத்து “நம்மளைப் பத்தி கேட்டுப்பாருங்க. ஒரு விசயம் சொல்லுவாங்க” என்றார்.

“என்ன?” என்றேன்.

“கொஞ்சம் லூசாக்கும்னு. அது உள்ளதாக்கும். ஒரு சின்ன ஸ்கிஸோஃபிர்னியா அட்டாக்கு எட்டு வருசம் முன்னாடி வந்து ஆறுமாசம் கஷ்டப்பட்டேன். அதுக்குமேலே எனக்கு பேயி பூதம் எல்லாம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிட்டுது… உங்களுக்கும் ஸ்கிஸோஃப்ரினியா உண்டுமா?”

“இதுவரை இல்லை” என்றேன்.

“கொஞ்சம் உள்ளது நல்லதாக்கும்” என்று சொல்லி சிரித்தார். எழுந்துகொண்டு “ஒரு டீயப்போடுவோம். விடியப்போகுது” என்றார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்நாட்டில் சமணர்