மிகுபுனைவுகள்,கனவுகள்
வணக்கம் ஜெ
இன்று தளத்தில் வந்த மிகுபுனைவு பற்றிய பதிவை வாசித்தேன். த லார்ட் ஆஃப த ரிங்க்ஸ் வெறும் மிகுபுனைவு மட்டுமே, நாம் சற்று reality ஐ மறந்து ஒரு நிகர் கற்பனை உலகில் வாழ அது இடமளிக்கிறது என்பது மட்டுமல்ல அந்நாவல். ஒருவேளை த லார்ட் ஆஃப த ரிங்க்ஸ் மட்டும் வாசித்தவர்களுக்கு அவ்வாறு தோன்றலாம். அல்லது அதை வெறும் மிகுபுனைவு என அணுகுபவருக்கு அது அவ்வாறே காட்சியளிக்கலாம்.
ஆரம்பகால இலக்கியம்,காவியம் அல்லது கதை என நாம் பொதுவாக ஒப்புக்கொள்வது ஹோமரின் தி இலியட் மற்றும் தி ஒடிசி. இவை இரண்டும் அடிப்படையில் ஒரு நாயகனின் சாகச பயணக்கதைகள். ஆனால் அவை அது மட்டுமல்ல என அதை வாசித்தவர் அறிவர். தத்துவம், உளவியல், வரலாறு என பலவும் பொதிந்த கவிதை நிறைந்த கதைகள். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸும் அதுவே. பில்போ மற்றும் ஃப்ரோடோ என இரண்டு ஹாப்பிட் நாயகர்களின் சாகச பயணக்கதை என முதலில் தோன்றினாலும் ஹோமரை கிளாஸிக் இலக்கியம் என ஒப்புக்கொண்டால் டோல்கீனும் அதுவே.
டோல்கீன் எழுத்துக்கள் பல வகையாக பொருள்கொள்ள பட்டிருக்கின்றன- யூதர்களுக்கு எதிரானது என ஒரு தரப்பும், அவர்களுக்கு ஆதரவானது என மற்றொரு தரப்பும், இது வகுப்புவாதத்தை, இனவாதத்தை ஆதரிக்கிறது எனவும், முதல் உலகப்போரின் மாற்றுவடிவு தான் இது என்றும், இந்நாவல் தொழில்மயமாக்கலுக்கு எதிரானது என பல வகை தரப்புகள். இவை அனைத்தையும் தாண்டி அது மிகப்பெரியது. அது எந்த காலமானாலும் நிற்கும். அதற்கு உரியவர்கள் தலைமுறைந்தோறும் வந்துக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களை சென்றடைந்துக்கொண்டேயிருக்கும்.
கார்ல் யங்க் 1913 ஆண்டு தொடர்ச்சியாக பல கனவுகளை காண்கிறார். அவற்றில் ஐரோப்பாவை மாபெரும் வெள்ளம் மூழ்கடிப்பது போலவும் பெரும் நாசம், சாவு, ரத்தபெருக்கு என காட்சிகள் அவருக்கு தோன்றுகின்றன. 1914 முதல் உலகப்போர் வெடித்து நான்கு ஆண்டுகள் ஐரோப்பா அக்கனவுகளுக்கு வண்ணம் ஏற்றியது. அக்கனவுகளை பதிந்து அவற்றை புரிந்துக்கொள்ள முயல்கிறார் யங். அவர் அவ்வாறு எழுத்தொடங்கியவை பின்னாளில் த பிளாக் புக்ஸ் என அழைக்கப்பட்டது. இன்று அச்சில் அவை ஏழு தொகுதிகளாக வாசிக்க கிடைக்கின்றன. அவர் இக்கனவுகளின் மூலம் அடைந்த ஞானம்/அறிவை த ரெட் புக்கில் எழுதினார். அதற்கு அவர் Liber Novus என லத்தீனில் தலைப்பிட்டார். புது நூல் என அர்த்தம். அது சிகப்பு உறையிடப்பட்ட புத்தகம் என்பதால் த ரெட் புக் எனவும் அறியப்படுகிறது. இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். டோல்கீனும் ஒரு ரெட் புக் வைத்து எழுதினார் என்பது பலர் அறியாதது.
யங்கின் ரெட் புக்கில் அவர் கீழுலக்கத்திற்கு சென்று அங்கிருந்து அறிவைப் பெற்று அதை நம் உலக மக்களுக்குச் சொல்ல மீண்டும் இங்கு வந்து சேர்கிறார், அதை நூலாக எழுதுகிறார். (கீழுலகத்தை நம் ஆழ்மனம் என கொள்பவர்க்கு அது ஆழ்மனம், இல்லை அது கீழுலகம் தான் என்பவருக்கு அவ்வாறே; அவ்விவாதத்திற்குள் இங்கே செல்ல விரும்பவில்லை) அவர் அடைந்த அவ்வறிவின் வெளிப்பாடு இப்புத்தகம். டோல்கீனை கூர்ந்து வாசித்தவர்களுக்கு தெரியும் பில்போவின் பயணம் தான் த ஹாப்பிட் நூல்- அதற்கு பில்போ தரும் தலைப்பு There and Back Again. யங்கின் எழுத்திற்கும் டோல்கீனின் எழுத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை ஒருவர் இங்கிருந்து அறிய துவங்கலாம்.
வாக்னரின் த ரிங்க் சைக்கிள் ஓபராக்களை பார்த்தவர் டோல்கீன் அதை அப்பட்டமாக திருடிவிட்டார் என நினைக்கலாம். அக்கதைகளின் ஊற்று Nordic ட்ரேடிஷனில் உள்ளது. டோல்கீன் அங்கிருந்து மட்டுமல்ல கிரேக்க தொன்மத்திலிருந்தும் கையாண்டிருக்கிறார்.
மேற்கூறியது போல இதை இலியட் ஒடிஸியுடன் ஒப்பிடலாம். பில்போவை அக்கீலிஸ் என்று கொண்டால் ஃப்ரோடோ ஒடீஸியஸ். இலியட் அக்கீலிஸின் சாகசத்தையும் புகழையும் பாடும் காவியம். த ஹாப்பிட் கிட்டதட்ட அதேபோல. ஒடிஸியில் ஒடிஸியஸ் கீழுலகிற்கு செல்கிறான். கிரேக்கர்களின் தொன்மையான வரலாற்றில் இவ்வாறாக கீழுலகங்களுக்கு சென்று அறிவை பெற்று திரும்புபவர் பலர் உண்டு- பார்மணீடிஸ், பித்தாகோரஸ் நன்கு தெரிந்த சில உதாரணங்கள். சாக்ரடீஸ் காலத்திற்கு முந்திய பார்மணீடிஸ்ஸின் வரலாறு பிளேட்டோவாலேயே திரிக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் மறைக்க, மறக்க பட்டது. சமீபத்தில் அவரின் உண்மையான வரலாற்றை பேசும் நூல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. பீட்டர் கிங்க்ஸ்லியின் நூல்கள் அவ்வகையில் முக்கியமானவை. ஒடிஸியஸ் போலவே ஃப்ரோடோ கீழுலகத்திற்கு சென்று மீண்டு வந்து பில்போ விட்டு சென்ற There and Back Again நூலை தொடர்ந்து எழுதுகிறார். அதன் கடைசிப் பக்கங்கள் அவருடன் கீழுலகிற்கு சென்ற சாம் இடம் விடப்படுகின்றன, அவரே அக்கதையை முடித்து வைக்கிறார்.\
ஃப்ரோடோ கீழுலகிற்கு செல்ல துவங்குவதை இந்த ஒரு காட்சியை மட்டும் கொண்டு இங்கு சொல்கிறேன். அவர் வசித்து வந்த த ஷயர் நகரத்தை விட்டு முதல் முறையாக பெரும் பயணத்திற்கு வெளியே செல்கையில் அவர் மூன்று நாய்களை எதிர்க்கொள்கிறார். கிரேக்க தொன்மத்தில் கீழுலக வாசலை பாதுகாப்பது மூன்று தலைக்கொண்ட நாய். அதன் பெயர் Cerberus(நம் மரபிலும் ஸர்வரா/கர்வரா என்ற நாய் எமனின் கதவின் காவல்காரன் என உள்ளது). இதே போல் பல உதாரணங்கள் அதை தேடுபவர்களுக்கு த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸில் கிடைக்கும்.
எனவே த லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் ஒரு மிகுபுனைவு நூல் மட்டுமல்ல. அதை வாசிக்க தெரிந்தவருக்கு அது அள்ளி அளிப்பது பல. அதன் சிறு துளியை உணர்ந்தவன் என்ற வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். மேலும் சொல்ல பல இருக்கின்றன ஆனால் அதை எழுத்து வடிவில் தெரியப்படுத்த எனக்கு எழுத்துத்திறமை இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்
பி.கு. யங் மற்றும் டோல்கீனை வாசித்தவர்கள் அவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை தொகுத்துக்கொள்ள ஒரு திறவுகோலாக இவ்வுரைகளை கேட்கலாம்.