அதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா

(காடு நாவல் – வாசிப்பனுபவம்)

நோய் பெருந்தொற்றுக்காலத்தில் பதற்றமும் அச்சமும் அலைக்கழிக்க பெரும்பான்மை நேரம் நான்கு சுவருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை இரக்கமற்ற இச்சூழலிலிருந்து முற்றிலுமாக விடுவித்து மிளாக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் அயனி மரத்தடியில் அமரச் செய்தது காடு. வெண்ணமுதைப் பொழியும் நிலவொளியில் கையில் செறியாழோடு அமர்ந்திருக்கும் என் செவியில் கீறக்காதன் பிளிறும் ஓசை கேட்கிறது. காதருகே குறிஞ்சிப்பூவைச் சூடி ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் என்னிடமிருந்து எழுந்து பரவும் சந்தன வாசனை காற்றில் கரைந்து இரவை ரம்மியமாக்குகிறது. கை எட்டும் தூரத்தில் நிற்கும் மணிக்கெட்டி என்னை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் மேயத் தொடங்குகிறது.

சற்று தொலைவிலிருக்கும் புதர்களில் குறுக்கன்கள் ஒற்றை உடலாக மாறி பாய்வதற்கு நேரம் பார்த்துப் பதுங்கி இருக்கின்றன. பார்க்கப் பரிதாபமாக இருக்கும் ரெசாலத்தின் தேவாங்கு மரத்தின் உச்சியில் அமர்ந்து இலைகளைத் தின்றுகொண்டிருக்கிறது. சற்றுத் தள்ளி இருக்கும் குட்டப்பனின் அடுப்பிலுள்ள கங்கு நெருப்பைப் போல எனக்குள் காதல் கனன்று கொண்டிருக்கிறது. ஓலைக்கூடையிலிருந்து தேனீக்கள் செத்து மிதக்கும் சற்றுப் புளித்த மலைத்தேனை காதலனுக்குக் கொடுத்து, ருசிக்கும் அவனை கண்களால் அள்ளிப் பருகிறாள் இந்த நீலி. ஆம். நான்தான் அந்த நீலி. அப்படித்தான் என்னை ஒவ்வொரு கணமும் உணர்ந்தேன்.

வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதத்தில் பிறந்தவளாகிய என்னை “இனியசெய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!” என வருந்தவிடாமல் “கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர்” என கூறச் செய்கிறது காடு. மருத உழத்தியை குறிஞ்சி மலையத்தியாக மாற்றும் மாயத்தைச் செய்கிறது காடு. எந்த நிலத்திணையில் பிறந்தவரையும் காடு குறிஞ்சிக்கு கட்டி இழுத்து வந்து விடும் வல்லமை கொண்டது என்றாலும் கூட நான் என்னை நீலியாக உணர்வதற்கு காரணமிருக்கிறது. எனது வாழ்வில் எனக்குள் முதல் காதல் முகிழ்த்தது குறிஞ்சியில்தான். மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள முண்டன்துறை காடும் யாருமற்ற ஒற்றையடிப் பாதையில் காதலனுடன் பேசிக்கொண்டே நடந்த அந்தச் சித்திரா பௌர்ணமி இரவும் சொல்லில் அள்ள முடியாத பரவசமாக, இனிய கனவாக இன்றும் என்னுள் இருக்கிறது. என்றும் என்னுள் இருக்கப் போவது. நீலியும் கிரியும் போல எங்களிடமிருந்தும் உலகிலிருந்தும் விடுபட்டு இனிமை மட்டுமே சூழ வெறுமனே இருந்தோமென்பதை காடு வழியாக அறிந்தபோது, ஏதோ ஒரு மலை உச்சியிலிருந்த எல்லாம் அறிந்த சாத்தன் பறவை எங்கள் காதலுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது நான் அடைந்த அகஎழுச்சி  அளவில்லாதது. காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை என்கிறது காடு. தெய்வத்தை அறிமுகம் செய்யும் காதலை தெய்வங்கள் வாழும் காட்டில் சந்தித்த வகையில் நான் எத்தனை பாக்கியம் செய்தவள் என்பதை காடு வழியாகத்தான் உணர்ந்தேன். இந்த ஒரு காரணத்தினாலேயே காடு எனக்கு மிக, மிக நெருக்கமான படைப்பாக வாழ்நாள் முழுதும் இருக்கும்.

நீலி மீது காதல் வயப்பட்ட கிரி ஏன் அத்தனை தெய்வீகத்தோடும் புனிதத்தோடும் அவளை அணுகினான்? அவனைச் சுற்றி இருந்தவர்களிடம் இயல்பாக தினசரி அரங்கேறிக் கொண்டிருந்த காமம் அவனுக்குள் எழவில்லையா? பெண் நினைவையும் காம நினைவையும் தூண்டி அவனை சுயபோகம் செய்ய வைத்த காடு நீலியோடு இருக்கையில் அவனுக்குள் ஏன் காமத்தைக் கிளர்த்தவில்லை? என்ற எனது கேள்விகளுக்கு இளையராஜாவின் கதைதான் பதிலாக கிடைத்தது. காஞ்சிர மரத்தில் ஆணியில் சிறைப்பட்டிருக்கும் வனநீலி குட்டப்பனின் சொற்கள் வழியாக கிரியின் ஆழ்மனதுக்குள் ஊடுருவி மீண்டும் நிஜ நீலியாக நீட்சியடைந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

நல்லவேளையாக கிரி சுண்டன் மலையனின் மகள் நீலியை மணக்காமல் கண்டன் புலையனின் மகள் வேணியை மணந்தான். இல்லாவிட்டால் ‘அம்மா வந்தாள்’ தண்டபாணி அலங்காரத்தம்மாவின் காமத்தை எதிர்கொள்ள இயலாமல் அவளை அம்பாளாக ஆராதித்தது போல கிரியும் வாழ்நாள் முழுதும் லௌகீக வாழ்க்கையில் நீலி என்ற அணங்கை எதிர்கொள்ள முடியாமல் களைத்திருப்பான். கனவில் உறைந்த நீலியோடும் வாழ்வில் உடனிருந்த வேணியோடும் இரு வேறு வாழ்க்கை வாழ்ந்ததால் அவன் ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல புறப்பார்வைக்குத் தோன்றினாலும் எனது வாசிப்பில் அவனது காதல் வாழ்வு நிறைவான ஒன்றாகவே தோன்றுகிறது. பலாச் சுளைகளைச் சாப்பிட்டுவிட்டு நாரகத் தளிர்களை மென்றால்தான் பசி அடங்குகிறது. கரிய யானையைத் தள்ளி நின்று பார்த்து மகிழ்ந்தாலும் கரிக்குரங்கோடு இருக்கையில்தான் விளையாட்டு பூரணத்துவத்தை அடைகிறது. கனவில் இளையோளோடும் நிஜத்தில் மூத்தோளோடும் வாழ்ந்த கிரி அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தவன்தான்.

ஆயுதமேந்தும் கடவுளை வணங்கும் குட்டப்பனும் ஆட்டை ஏந்தும் கடவுளை வணங்கும் குரிசுவும் மதமென்ற புள்ளியில் தொடர்ந்து முரண்பட்டாலும் மனிதமென்ற புள்ளியில் இறுதியில் ஒன்றிணைகிறார்கள். விஷக்காய்ச்சலால் மரணித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சீனிக்கிழங்கை அவித்து எடுத்துக்கொண்டு ஓடும் குட்டப்பனும் “நோயில கிடக்குத ஒரு ஜீவனிட்ட கையப் பிடிச்சு கண்ணீரோட நாம பேசுத பாஷை சினேகமாக்கும். அதாக்கும் கிறிஸ்துவுக்க பாஷை” என்று கூறும் குரிசுவும் காமமென்ற சாத்தானின் பாதையில் பயணித்து இறுதியில் கடவுளை கண்டுகொள்பவர்களாகவும் இதுதான் கடவுளை அடைவதற்கான வழி என்று நமக்கு அடையாளம் காட்டக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குட்டப்பன், குரிசு இருவருக்கும் எதிர்துருவத்தில் நிற்கிறார் ‘தவளை’ பாதிரி. ‘டெவிள்’ என பெண்களை வசைபாடியவாறு சாத்தானை சிறிதும் அண்டவிடாமல் சிலுவை தூக்கும் பாதிரி மரண வாசலில் கோம்பன் சங்கரனுடைய மனைவியின் அழுக்கான கால்கள் வழியாக சாத்தானைப் பார்க்க விழைந்து அந்த இறுதி வாய்ப்பும் நழுவிப் போக கழுவிய கால்களின் தூய்மை வழியாக வீடுபேறைத் தவறவிடுகிறார்.

இருத்தல், வெறுமனே இருத்தல், தன்னைப் பற்றி எண்ணாமல் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தைப் பற்றி எண்ணாமல் நிகழ்கணத்தில் இருத்தலென்பது பெரும் சுகம். பெரும் தவம். அப்படியான சில தருணங்கள் கிரிக்கு காதலில் கிடைக்கின்றன. சிலருக்குப் பக்தியில் கைகூடலாம். ஐயருக்கு அது காடு மூலம் சாத்தியமாகிறது. மது, மாது, இசை, இயற்கை என அனைத்திற்கும் ரசிகனான  ஐயர் இருக்கிறார். சும்மா இருக்கிறார். காட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாலும் ஏதோ ஒரு ஏக்கம் கொண்டவராக அந்த ஏக்கத்திற்கான காரணத்தையும் அறிந்தவராக இருக்கிறார். காரணம் என்னவாக இருக்க முடியும்? ஐயர் இயற்கையோடு தன்னைக் கரைத்துக்கொள்ள விரும்புகிறார். பரு வடிவான உடலும் பிரமாண்டமான இயற்கையோடு ஓர் எல்லைக்கு மேல் கலக்க விடாமல் கட்டுப்பாடு விதிக்கும் மனதும் அவருக்குத் தடையாக இருக்கின்றன. உடலிலிருந்தும் மனதிலிருந்தும் விடுபட்டு காற்றோடு கரைந்து காடு போல வான் நோக்கி எழும் ஏக்கமே ஐயரை வதைக்கிறது.     

அறம் மீறி பல கொடூரங்களையும் பெரும் பாவங்களையும் செய்யும் மிருகங்களை விட மோசமான இருவர் காட்டில் உலாவுகின்றனர். சதாசிவம் மாமா ரெசாலத்தால் குத்துப்பட்டுச் சாகிறார். சண்முகம் பிள்ளை அண்ணாச்சியோ புளுத்து சாகும் தருவாயில் இருக்கிறார். இவ்வளவுதான் இவர்களது பாவங்களுக்கான தண்டனையா? மாமாவின் மகன் அமெரிக்காவில். அண்ணாச்சியின் மகன் வக்கீலாகி சுகபோக வாழ்வில். தந்தைகள் செய்த பாவங்கள் மகன்களைத் தொடரவில்லையா? வாழ்விலும் இலக்கியத்திலும் விடை தெரியாமல் தொக்கி நிற்கும் இந்த கேள்விக்கு மதங்களும் தத்துவங்களும் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் வஞ்சிக்கப்பட்ட செட்டிச்சி, கால்கள் சூம்பிய அவளது மகள், குறைப்பிறவி தங்கன், மேரி, கிரி, ரெசாலத்தின் குறைப்பிறவி மகள் ஆகியோரது வலியும் கண்ணீரும் அணைக்க இயலா பெருந்தீயாக மாறி எனக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது.

காடு முதற்பொருள் சார்ந்து குறிஞ்சி, முல்லை என்ற இரண்டு நிலப்பரப்பில் நிகழ்ந்தாலும் உரிப்பொருள் சார்ந்து அனைத்து ஒழுக்கங்கள் வழியாகவும் குறிப்பாக பெண்கள் மூலம் பயணிக்கிறது. குட்டப்பனோடு கூடிப் புணரும் சினேகம்மையில் குறிஞ்சி, கிரிக்காக காத்திருக்கும் நீலியில் முல்லை, கணவனோடு செல்ல சண்டையிடும் அம்புஜத்தில் மருதம், நாகராஜ ஐயரின் மனைவியில் நெய்தல், சிறு வயதில் விதவையான அனந்தலட்சுமி பாட்டியில் பாலை, ஒரு தலைக் காதலோடு இருக்கும் வேணியில் கைக்கிளை, பொருந்தாக் காமத்தை வெளிப்படுத்தும் புவனா மாமி, மேனன் மனைவி இருவரில் பெருந்திணை என ஒட்டு மொத்த காட்டின் வழியாக பெண்களின் அக உணர்வுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுகின்றன. காடு காட்டும் சில பெண்களில் அன்னை, அணங்கு, அம்மன் என மூன்று தன்மைகளும் மாறி, மாறி ஊடாடுகின்றன. எத்தன்மை எப்போது வெளிப்படும் என்று அறியாதவர்களாக, வெளிப்படும் தருணத்தில் அதை எதிர்கொள்ள திராணியற்றவர்களாக, சில சமயங்களில் அந்த உக்கிர வெளிப்பாட்டின் முன் தோற்றுப் போகிறவர்களாக காடு காட்டும் சில ஆண்கள் இருக்கிறார்கள்.

பெரும் இரைச்சலோடு பெய்யும் மழையால் காடு வேறொன்றாக மாறுவது போல புயலென அடிக்கும் காமத்தால் மனிதர்கள் வேறொன்றாக மாறுகிறார்கள். சிலர் அப்புயலை எதிர்த்து நின்று களமாடுகிறார்கள். சிலர் இருக்குமிடம் தெரியாமல் அடித்துச் செல்லப்படுகிறார்கள். காமத்தை விருத்தி கெட்ட காரியமாக பார்க்கும் சினேகம்மை, “லஸ்ட் இஸ் மை பவர்” என்று சொல்வதன் மூலம் காமத்தைப் பலமாக பார்க்கும் மேனன் மனைவி, காமத்தை விளையாட்டாக நிகழ்த்தும் குட்டப்பன், காமத்தை வக்கிரமாக நிறைவேற்றிக் கொள்ளும் மாமா, காமம் பெண் உடல் சார்ந்ததா என்ற கேள்விக்குப் பதிலாக எப்போதும் பிணைந்தே இருக்கும் நாகங்களான ஆபேல், ராபி, காதலற்ற காமத்தை எதிர்கொள்ளும் வேணி, கன்னிமையை அழிக்கும் அதிகார காமத்தால் திணறும் கிரி, பேசிப் பேசி சொற்கள் வழியாக காமத்தைக் கடக்கும் அனந்தலட்சுமி பாட்டி, காமத்தின் மூலம் கடவுளை நெருங்கும் குரிசு, அணையா நெருப்பாக காமத்தைச் சுமக்கும் புவனா மாமி என காமம் மனிதர்களிடம் வெவ்வேறாக வெளிப்பட்டு வாசகனை நிலைகுலையச் செய்கிறது.

நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையும் காடு புதிதாக திறக்கக்கூடியதாகவும் விரியக்கூடியதாகவும் இருக்கிறது. வாசிப்பனுபவத்தில் ஒட்டுமொத்தக் காட்டையும் ஒரு வாசகன் தனது சொற்களால் கடத்திவிட முடியுமா என்பது சந்தேகம்தான். எனது மதுர காதலை மதுர சொற்கள் வழியாக இனிமை சொட்ட, சொட்ட மீண்டும் நிகழ்த்திக் காட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்திய காட்டில் அதிமதுர தழைகளைத் உண்டு உணர்வெழுச்சி கொள்ளும் யானையாகவே என்னை உணர்ந்தேன். காட்டின் ராஜ யானையான ஆசானுக்கு அதிமதுரம் தின்ற யானையின் அன்பும் நன்றியுமான பிளிறல்.

[அழகுநிலா சிங்கப்பூர்]

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

காடு- கதிரேசன்

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு – கடிதம்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- ஆஸ்டின்
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்