இன்று- கடிதங்கள்

இன்றிருத்தல்…

அன்புள்ள ஜெ,

இன்றிருத்தல் வாசித்தேன். எப்போதும் போலவே வீட்டில் இருக்கிறேன். சென்ற ஆண்டை விட இப்போது மகிழ்வாக உள்ளேன். உடன் ஆக்கப்பூர்வமாக வாசித்து கொண்டும் இருக்கிறேன். தொடர்ச்சியாக வெண்முரசை வாசித்து கொண்டிருப்பது பேரின்பம். ஒரு நாவலுக்கு ஒரு நாவல் மூன்று நாட்கள் இடைவிட்டால் தான் அடுத்து தொடங்க முடிகிறது. ஆனால் வாசிக்கும் நாட்களில் கனவின் பெரும்பயணம் போதையளிப்பது. சமீபத்தில் வாசித்த கிராதம் கனவின் பேராழத்தை மின்னல் கீற்றென திறந்து காட்டியது. குருஜீயிடம் (சௌந்தர் ஜி) பகிர்ந்து மகிழ்ந்தேன். அதை சரியாக சொல்லாக்க முடியுமென்ற  நம்பிக்கையில்லாததால் எழுத முடியவில்லை.

இந்த கடிதத்தில் முதன்மையாக கேட்க நினைத்தது. இன்றைக்கு பதிவில் தினமும் ஏதேனும் ஒரு வாசகரிடம் 40 நிமிடங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றிருந்தீர்கள். ஏற்கெனவே கடந்த ஜனவரியில் செந்தில் குமார் அவர்களின் இசூமியின் நறுமணம் புத்தக வெளியிட்டு விழாவின் போது காளி அண்ணா என்னை அழைத்து வர கேட்டிருந்த போது நோய் தொற்று என்பதால் வேண்டாம் என்றீர்கள். அதே போல தன்மீட்சி வாசிப்பனுபவம் எழுதும் போதும் உங்களை சந்திக்கலாம் என்ற ஆவல் இருந்தது. அதுவும் தொலைவு கொரானா காலம் ஆகியவற்றால் தவிர்க்கப்பட்டது. இந்த 40 நிமிடத்தில் என்னிடம் பேசுவீர்களா.

உண்மையில் எனக்கு இது வெறும் ஆசையாக மட்டுமே உள்ளது. அப்புறம் 40 நிமிடம் என்பது எனக்கு தயக்கத்தை கொடுக்கிறது. மதிப்பானவை என என்னிடம் பேச நிறைய விஷயங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் நேரத்தை வீணடித்து விடுவேனோ என்ற ஐயம் உள்ளது. அப்புறம் நான் இன்னும் முதிராவும் இல்லை என்று தயக்கம் உள்ளது. உங்களை நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று ஆசை. கடந்த சித்ரா பௌணர்மி அன்று காளி அண்ணாவின் உதவியால் நீங்கள் நண்பர்களுடன் பேசியதில் கலந்து கொண்டது போலிருந்தால் எனக்கு தயக்கமே இருந்திருக்காது. ஒரமாக உட்கார்ந்து உங்களை பார்த்து கொண்டும் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம்.. ஆனால் இப்படி என்றால் ஆசையாகவும் அதே சமயம் தயக்கமும் இருக்கிறது. என் விருப்பத்தை சொல்லிவிட்டேன். உங்கள் முடிவு எதுவானாலும் மகிழ்வே.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

இந்தவகையான தயக்கங்களை கடப்பதற்காகவே இந்தச் சந்திப்பு. பொதுவாகப் பேசுவதில் தயக்கம் கொண்டவர்களுக்காகவே இந்த தனிப்பட்டச் சந்திப்பு. நாம் முயலாதவரை நமது சாத்தியங்கள் நமக்கு தெரியாது. நமது பிரச்சினைகளும் நமக்குத்தெரியாது

ஜெ

***

இனிய ஜெயம்,

முன்பு கரோனா முதல் அலை விஷயத்தில் அன்றைய சுகாதார அமைச்சரை  நீங்கள் பாராட்டி எழுதியதில் இரண்டு நாள் இலக்கிய வாசகர் -கம்- தி மு க தொண்டர்கள் போனில் வந்து குமுறினார்கள்.

இப்போது இன்று நீங்கள் முதலமைச்சரை பாராட்டி எழுதிய வகையில் தீவிர இலக்கிய வாசகர்- கம் -இந்துத்துவ -அண்ட்- அ தி மு க தொண்டர்கள் கொதித்து அழைத்து அழுகிறார்கள் சற்று முன் மூன்றாவது அழைப்பு.

உண்மையில் இவங்களுக்கு என்னதான் பிரச்சனை?

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

அதனால்தான் உங்கள் எண் கொடுக்கப்பட்டுள்ளது இணைய தளத்தில். என் போன் எண் ரகசியம் அல்ல. ஆனால் ஒருமுறை ஒரு சலிப்பூட்டும் அழைப்பு வந்தால், ஒரு ஃபார்வேட் வாட்ஸப் அனுப்பப்பட்டால் முப்பது செகண்டுகளுக்குள் நிரந்தரமாக பிளாக் செய்துவிடுவேன்.

உங்களை அழைத்தவர்களின் மனநிலையை நான் முப்பதாண்டுகளாகக் கண்டுவருகிறேன். இரண்டு வகையான உளவியல் சிக்கல்கள் அவை.

ஒன்று, தான் ஒரு விஷயத்தை நம்பினால் அதுவே முழு உண்மை என கருதி, அதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் சேகரித்துக்கொண்டு, அதையே பேசி எழுதி கொந்தளித்து, சதிக்கோட்பாடுகளை பின்னி அதிலேயே வாழ்வது. அதற்கு வெளியே எதைக்கேட்டாலும் ஆவேசமாவது, கொந்தளிப்பது. இந்த ஒற்றைக்கண் பார்வைக்கு தன்னைக் கொடுத்தவருக்குரியதல்ல இலக்கியம். இடதோ வலதோ.

இலக்கியம் இந்தவகையான மூர்க்கங்களுக்கு அப்பால் நிலைகொள்ள முயல்பவர்களுக்கு உரியது. அன்றாட யதார்த்தத்தையும், அதன் முடிவில்லாத அனுபவ விரிவையும், அதன் நுணுக்கமான உளவியல் சிக்கல்களையும், அதன்மேல் கவியும் வரலாற்றையும் தத்துவத்தையும் பார்ப்பவர்களுக்குரியது. எப்போதும் எதற்கும் மறுபக்கம் உண்டு என்றும், எப்போதும் காண்பதற்கு அப்பால் உண்மை உண்டு என்றும் அறிந்தவர்களுக்குரியது. மற்றவர்கள் இங்கே தேவையில்லாமல் நுழைந்து நோயை உண்டுபண்ணும் வைரஸ்கள்.

இரண்டு, தான் வாசிக்கும் ஓர் எழுத்தாளர் தன் அரசியல், மத, சாதி நம்பிக்கைகள் கொண்டவர் அல்ல என்றால் அவரை வெறுப்பது. அவரை வசைபாடுவது. அவர் தன் அரசியல் அணியில் வந்து நின்று தன்னைப்போலவே கூச்சலிடும் ஒருவராக இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது.

ஓர் எழுத்தாளர் உங்களுக்கு அளிப்பது ஒரு புனைவுலகை. ஒரு கருத்துலகை. அதனூடாக கற்பனையாலும் சிந்தனையாலும் பயணம் செய்பவனே இலக்கியவாசகன். வாசகன் என்பவன் இலக்கியவாதியை நோக்கிச் செல்பவன், இலக்கியவாதியை தன்னை நோக்கி இழுக்க முயல்பவன் அல்ல.  அரசியலையும் மதத்தையும் சாதியையும் வைத்து இலக்கியத்தை மதிப்பிடுபவருக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமில்லை.

இன்று பொதுவாக எதிர்மனநிலைகள் உச்சமடைந்துள்ளன. எல்லாருமே மனநோயாளிகளின் நிலையில் உள்ளனர். ஆகவே எங்கும் இதெல்லாம் கண்ணுக்குப் படுகிறது.

முன்பு நான் இந்த மனச்சிக்கல்களை கொஞ்சம் பொறுத்துக்கொண்டேன், இவர்களிடம் கொஞ்சம் உரையாட முயன்றேன். இன்று இந்த உளநோயாளிகளை நான் ஏன் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களை அழைத்தவர்கள் எவர் என்று சொன்னால் அவர்களுடன் வாழ்நாள் தொடர்பை முறித்துக் கொள்வேன்.

ஏனென்றால் அந்த உளநோய் கொண்டவர்களில் நூறில் ஒருவர் கூட குணமாக வாய்ப்பில்லை. எஞ்சிய தொண்ணூற்றொன்பது பேருடன் போராடி நாம் உளநோயாளி ஆகிவிடுவோம்.

ஜெ

முந்தைய கட்டுரைமோட்சம்- கடிதம்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 8