கதை சொல்லல்

வணக்கம் ஐயா,

நான் கடந்த வருடம் வீடுருத்தல் நாட்களில், தங்களின் புனைவு களியாட்டு சிறுகதைகளையும், வெண்முரசு மாமலரையும், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொல்லவதற்காக, இந்த சேனலை ஆரம்பித்து, கதைகளைபதிவேற்றினேன்.
அந்த பதிவுகளில், நான் வாசிப்பது போலல்லாமல், சொந்தமாக பேசியே சொல்லியுள்ளேன்.
எனவே, அந்த கதைகளில் எதாவது ஒன்று நல்ல தரத்தில் இருக்குமென்று நம்புகிறேன்.
எனவே, தாங்கள் மதிப்பிட்டால் அதை விட ஒரு கௌரவம் வேறொன்றும் எனக்கு கிட்டாது.
நன்றி
வணக்கம்
ராஜசேகரன் பாலன்
***
அன்புள்ள ராஜசேகரன்,
பாராட்டத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்
என்னுடைய சில பரிந்துரைகள்
அ. கதை சொல்பவரின் வீடியோ இருக்கவேண்டும். அது நல்லது. முகபாவனைகள் கதையை ஈர்ப்பாக கேட்பதற்கு உதவுகின்றன.
ஆ. முகம் காட்ட விரும்பவில்லை என்றால் கொஞ்சம் படங்களுடன் ஒரு சின்ன வீடியோ செய்யலாம்
இ. குரல் கொஞ்சம் ஓங்கியதாக, தெளிவாக இருக்கவேண்டும். சாதாரணமான பேச்சு அளவு இருந்தால் கதைகேட்பதற்கு உகந்ததாக இல்லை
ஈ. கதையை தொடங்குவது முக்கியம். ‘இப்ப நான் ஒரு கத சொல்லப்போறேன்’ என்பது போன்ற தொடக்கங்களை தவிர்த்துவிடலாம். சிறுகதைகளை தொடங்குவதுபோலவே ஒரு காட்சியில், நிகழ்ச்சியில் தொடங்கலாம். ‘அன்றைக்கு அஸ்தினாபுரியில் நல்ல மழை. அன்றைக்குத்தான் குந்தி திருமணமாகி நகரத்திற்குள் வந்தாள்” என்பது போன்ற தொடக்கங்கள்தான் வாசகர்களை உள்ளே ஈர்க்கும்
உ. கதாபாத்திரமாக தன்னை முன்வைத்து ‘நான்’ என்றவகையில் ஆரம்பிப்பது, கொஞ்சம் மெய்யான நடிப்புடன் என்றால் மேலும் நல்லது
ஊ. நிலக்காட்சிகளையும் உணர்ச்சிகளையும் கொஞ்சம் விரிவாகச் சொல்லவேண்டும். வெறுமே நிகழ்ச்சிகளை மட்டும் சொன்னால் போதாது
ஜெ
முந்தைய கட்டுரைமுகில்நகர்
அடுத்த கட்டுரைஇன்று- கடிதங்கள்