இன்று- கடிதங்கள்

இன்றிருத்தல்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் இப்போதெல்லாம் உங்களின் பல பதிவுகளை தவறவிடுகிறேன்.(ஆனால் அலுவலக மேலாளர்களுக்கு நான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்திக் கொள்வதற்கு online-ல் இருந்தாக வேண்டுயிருப்பதால், அலுவலகப் பணிகள் ஆரம்பித்தவுடன் online-ல் என்னைக் காண்பித்துக் கொண்டே நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் தளத்திலேயே மூழ்கி இருப்பேன். பெரும்பாலும் அன்றன்றைய பதிவுகளை விட கண்ணில் படும் சுவாரஸ்யமான பதிவுகள் அது சார்ந்த பதிவுகள் என்று போய்க் கொண்டேயிருக்கும்)

ஓவியம் தவிர இந்திய கலை தத்துவ மற்றும் ஞான மரபைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஆனந்த குமாரசாமியின்சிவ நடனம்கட்டுரைகளை படித்துக் கொண்டே அதில் தோன்றும் ஐயங்களிலிருந்து விடுபட அடிப்படை களிலிருந்து தொடங்குவோம் என்றுஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் தளத்தை திறந்து பார்க்கும் போதெல்லாம் உங்களின் அனுபவப் பகிர்வுகள் இருந்தால் பெரும்பாலும் தவறவிடுவதில்லை. அவைகள் அனைத்துமே நேர்நிலையானவை. செயல்படவைப்பவை. ‘இன்றிருத்தல்பதிவும் அப்படியே.

நான் நீங்கள் பதிவில் தெரிவித்திருப்பவற்றை என்றும் பின்தொடர்கிறேன் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கொரோனா வந்து அரசால் அதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட  Covid care centre-ல் ஏழு நாட்கள் இருந்தேன். அதற்கு முன்பு நான்கு நாட்கள் மட்டும் காய்ச்சல் வயிற்றுப்போக்கு என்று கொஞ்சம் சிரமப்பட்டேன். கொரோனா தனிப் பிரிவில் சென்று சிகிச்சை பெற்றவுடன் மூன்று நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பினேன். அதன் பிறகு கலை இலக்கியச் செயல்பாடுகள் தான். நண்பர்களுடன் குமரித்துறைவி பற்றியான விவாதம் கூட இந்த சமயத்தில் தான் நடந்தது. மூன்று வேளையும் உணவு வந்தது. இடையில் பழச்சாறு சுக்கு காப்பி டீ. கொஞ்சம் சொகுசு தான்.

நான் முதன் முதலாக ஒரு அரசு ஏற்படுத்தியிருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிட்சை பெறுகிறேன். எனக்கு அலுவலகத்தில் இருந்து தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிட்சை பெறுவதற்கான காப்பீடு கூட உள்ளது. இருந்தாலும் என்னை பலரும்அலுவலக நண்பர்களே கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தார்கள். ஒரு அரசு நிறுவனம் அதுவும் அரசு மருத்துவமனை மேல் இவ்வளவு நம்பிக்கை எல்லா தரப்பு மக்களிடமும் ஏற்பட்ட காலத்தை நான் பார்த்ததில்லை. ஊடகங்கள் அதை கெடுக்காமல் இருந்தால் சரி.

அரசு கூட கொரோனா முடிந்தாலும் இது போல அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிட்சைகளை விரிவுபடுத்தி மக்களின் நம்பிக்கையை பெறலாம்.(அதற்காக நடுத்தர உயர் வர்கத்திடம் கொஞ்சம் பணம் பெற்றாலும் தவறில்லை). இதே தரப்படுத்தலை பள்ளிக் கல்வி மற்றும் பிறத் துறைகளுக்கும் கூட பரிந்துரைக்கலாம். அதன் மூலம் தனியார்களின்பணம் புடுங்கித்தனத்திலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தரமணி கேம்பசை தற்காலிக சிகிட்சை மையமாக மாற்றப்பட்டிருக்கும் இடத்தில் தான் சிகிச்சை பெற்றேன். சுகாதாரம் கூட இங்கே பல தனியார் மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் இருந்தது. ஒரு அறையில் இரு படுக்கைகள் தான். அதாவது இரண்டு பேருக்கு ஒரு அறை. குளிக்கப் பயன்படுத்தும் பக்கெட் ஜக் தலைதுவட்டும் துண்டு படுக்கை விரிப்புகள் கூட அனைவருக்கும் தனித்தனியாகவும் புதிதானவையாகும் இருந்தன.

நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தொடர்ந்த உழைப்பால் கொஞ்சம் சோர்ந்தும் சிலர் அதன் சிடுசிடுப்புடனும் இருந்ததைக் கண்டேன். எங்களை அழைத்துச் சென்ற மருத்துவஊர்தி ஓட்டுநர் பிறகு அலைபேசியில் யாரிடமோ காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று  புலம்பிக் கொண்டிருந்தார். அவர் இதைச் சொல்லும் போது மாலை நேரம் 3:30 மணி. அங்கே சென்றவுடன் மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்பு சில குளறுபடிகளும் ஊழியர்களின் சிடுப்புகளும் இருந்தன. எல்லாம் நிறைய நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததால் ஏற்பட்டது. ஆனால் கோவிட் சிகிட்சை மையத்தில் சேர்க்கப்பட்டவுடன் ஊழியர்களிடமோ சிகிட்சை மற்றும் வசதிகளிலோ எந்த குறைபாடும் இருக்கவில்லை.

குறைபாடுகள் நம் மக்களிடம் தான் இருந்தது. உணவை நம் அறையிலேயே எடுத்து வந்து கொடுப்பார்கள். ஆனால் பழச்சாறு மற்றும் டீ சுக்கு காப்பி போன்றவை பொதுவாக சில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதை ஒலி பெருக்கியில் அறிவிப்பாளர்கள். நம் மக்களில் ஒரு சாரார் எல்லா நோயாளிகளுக்கும் சேர்த்து தான் அவைகள் வழங்கப்படுகின்றன என்பதைக் கூட பொருட்படுத்தாது அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் பெரிய டம்ளர் ப்ளாஸ்க் களில் பிடித்து கொண்டு சென்று விடுவார்கள். பிறகு வருபவர்களுக்கு கிடைக்காமல் போகும்.

நோயாளிகள் பல விதம். சில பேர் தீவிர அறிகுறி உள்ளவர்கள். சிலர் தொடக்க நிலை அறிகுறிகள் மட்டும் கொண்டவர்கள். தீவிர இருமல் சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் உள்ளவர்கள் கூட உள்ளனர். அதனால் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க பரிந்துரைப்பார்கள். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் எப்போதுமே சரியான வரிசையை இடைவெளியை பேண மாட்டார்கள். ஏதோ வாழ்க்கையின் கடைசி பழச்சாறை டீயை அருந்தப் போவது போல சிலர் நடந்து கொண்டது கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியது. கேட்க போனால்   சண்டையில் தான் முடியும். பரம ஏழைகள் எல்லாம் இல்லை. பெரும்பாலானவர்கள் நம் நடுத்தர வர்க்கம் தான். யாரோ நம்மவர் கழிவறைக்கு வெளியில் மலம் கழித்து வைத்ததை ஒரு சுகாதாரப் பணியாளர் புலம்பிக் கொண்டே சுத்தம் செய்தார்.

இவையனைத்தையும் நம் மருத்துவப் பணியாளர்கள் சுகாதார ஊழியர்கள் அனைவரும் மிகப் பொறுமையுடன் மன்னித்து மக்களுக்காகப் பணிபரிகிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கும் நம் அரசுக்கும் தான் நன்றி கூற வேண்டும்.


ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்,

அரசு மருத்துவமனைகளைக் கண்காணிக்கவேண்டும். தேவையானபோது உரியமுறையில் புகாரும் கொடுக்கலாம். ஆனால் இங்கே நிகழ்வது வசை. அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்குள்ள 90 சதவீத சீர்கேடுகளுக்கும் காரணம் நோயாளிகளும், நோயாளிகளின் உறவினர்களும் என்று காணலாம். நான் அஜிதனை பார்க்க ஆஸ்பத்திரி சென்றபோது நாலுபேர் கொண்ட ஒரு கும்பல் குடித்துவிட்டு வந்து ஆஸ்பத்திரிக்குள் சென்று அவர்களின் நண்பனைப் பார்க்கவேண்டும் என்று சலம்பிக்கொண்டிருந்தது.

தூய்மையாகச் சூழலை வைத்திருக்கும் வழக்கம் நமக்கில்லை. அதைப் பற்றி எவர் எதைச் சொன்னாலும் ’பொதுமக்கள்’ என்ற புனித தெய்வங்களை பழி சொல்லிவிட்டான், அவர்கள் பாவம் என்ன செய்வார்கள் என்று ஒரு போலிக்கும்பல் பொங்கிவரும்- அவர்கள் எவரும் இந்தப் பொதுமக்களுடன் ஒருநாள் கூட புழங்குபவர்கள் அல்ல.

நமது மருத்துவ அமைப்பு திணறிச்செயலிழந்துகொண்டிருக்கிறது. அதை விரைவில் சீரமைக்கவேண்டும். செய்யவேண்டியது அதுதான். அது நடைபெறுகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ

நீங்கள் கொரோனா கால மனநிலை பற்றி எழுதியிருந்தீர்கள். இன்று எழுதுபவர்களில் வாசகர்கள்மேல் நம்பிக்கையும் பரிவும் கொண்டு எழுதுபவர் நீங்களே. பெரும்பாலானவர்கள் இச்சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்ரீதியாக ‘எதிரியை’ வீழ்த்த இதைப் பயன்படுத்துகிறார்கள். தனிப்பட்ட காழ்ப்புகளை அரசியலாக மடைமாற்றி கக்குகிறார்கள். நோய்வந்த நாய்கள் போல கடித்துக்கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலுக்கும் வெளிப்பாட்டுக்கும் நீங்கள் உருவாக்கியிருக்கும் வெளி மிகப்பெரியது. அதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

எஸ்.ஆர்.ராமநாதன்

அன்புள்ள ராம்,

அது அத்தனை எளிதல்ல. உளச்சோர்வும் கசப்பும் சூழலில் இருந்து மழைபோல பெய்கிறது. எதிர்மறை உணர்வுகளுக்கு ஒரு போதை உண்டு. அவை நம் அட்ரினலை கொப்பளிக்கச் செய்கின்றன. பரபரப்பாக்குகின்றன. ‘பொழுது போவதற்கு’ மிகச்சிறந்த விஷயம் எதிர்மறை உணர்வுகளே. போதைகளில் மிக உச்சமான போதை அட்ரினல் பொங்கும் தருணங்கள் அளிப்பவையே. அவற்றில் சுவை வந்துவிட்டால் நாம் அழிந்தாலும்கூட அதை நாடியே செல்வோம். கோபவெறி- சலிப்பு- மீண்டும் கோபம் என அலையிலேயே இருப்போம்.

கோபத்தை நீட்டிக்க வேண்டும். கோபத்தின் போதைக்காகவே அடையும் கோபம் அது. ஆனால் அதை பெரிய அறக்கோபமாக,  ‘அரசியல்புரட்சிக்’ கோபமாக கற்பனை செய்துகொள்வோம். சதிக்கோட்பாடுகளை கண்டுபிடிப்போம். அதில் நம் மூளை உச்சகட்ட விழிப்புடன் கணக்குகளைப் போடும். நக்கல்கள் நையாண்டிகள் செய்வோம். எதிரிகளை கண்டுபிடிப்போம். நண்பர்களைக்கூட எதிரிகளாக ஆக்கிக் கொள்வோம். அதன்பின் அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து பார்ப்போம். அவற்றை திரித்து நமக்கேற்றபடி பொருள்கொண்டு கொந்தளிப்போம்.

அந்த மாயப்போதையில் இருந்து ஒருவன் திட்டமிட்டு, அறுத்துக்கொண்டு, வெளிவந்தாலொழிய மீளமுடியாது. எந்தப்போதையுமே அப்படித்தான். எந்தப்போதைக்கும் மிகச்சிறந்த நியாயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கும். உச்சகட்ட தர்க்கபூர்வ விளக்கங்களும் இருக்கும். அதை மீறி அந்த போதையின் அழிவை காணவேண்டும். அதை வெட்டி வெளியேற முயலவேண்டும்.

ஆக்ரமிக்கும் எதிர்மறையுணர்வுகள் ஆயிரம் பல்லாயிரம் மடங்கு ஊடகவல்லமையும், வீச்சும் கொண்டவை. எதிர்மறையான எதுவும் நேர்நிலையானவற்றை விட நூறு மடங்கு ஆற்றல் கொண்டது. அதற்கு எதிராக என்னுடைய சொற்களுக்கு ஓரளவே எதிர்வினை இருக்கும். இவற்றை ஏற்க மனம் வராது. இயல்பாகவே நிராகரிக்கவும், ஏளனம் செய்யவும்தான் தோன்றும்.

ஆகவே நான் மிகச்சிலரையே எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது, ஒரு வாசலை திறந்துவைத்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்போம், தெரிவு அவர்களுடையதாக இருக்கட்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்

ஜெ 

வாழ்தலின் பரிசு

மழைப்பாடல் வாசிப்பு
இரு கடிதங்கள்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர்
பேச்சும் பயிற்சியும்
முந்தைய கட்டுரைகதை சொல்லல்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 7