இன்றிருத்தல்…

அனைத்து சுயத்தடைகளையும் மீறி சில விஷயங்கள் கண்ணுக்குப் பட்டுவிடுகின்றன. அதிலொன்று, நேற்று நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை பற்றி ஒரு தொலைக்காட்சி திரும்பத் திரும்ப காட்டிய செய்தி. அச்செய்தியை வாட்ஸப் வழியாக பரப்பினார்கள். பரப்புபவர்கள் உடனடியாக நம்மால் பிளாக் செய்ய முடியாதவர்கள் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

அந்தச் செய்தியை பார்த்தேன், ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அருகே நின்று ஒருவர் உள்ளக்கொந்தளிப்புடன் மருத்துவமனையையும் டாக்டர்களையும் வசைபாடுகிறார். மிரட்டுகிறார். குமரிமாவட்டத்தில் இது எப்போதுமுள்ள வழக்கம். நோயாளி எதன்பொருட்டு இறந்தாலும் டாக்டரை அடிக்கப் பாய்வதென்பது ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இங்கே பெரும்பாலும் அந்த டாக்டரை உடனே ஒளித்து வைத்து விடுவார்கள்.

அந்த மனிதரின் துயரை, குமுறலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் என் மகன் சென்ற ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பொதுவார்டில் இருந்தான். மூன்றுவேளை இலவச உணவு, மருந்து, கவனிப்பு எல்லாம் இருந்தது. நோயாளிகள் முழு அலட்சியத்துடன் நடந்துகொண்டமையால் கழிப்பறையும், கழுவுமிடமும் தூய்மையற்றிருந்தன. அவற்றை எத்தனைமுறை தூய்மைசெய்தாலும் போதாது. எத்தனை முறை சொன்னாலும் தன் படுக்கைக்கு கீழேயே எஞ்சிய சோற்றை கொட்டிவைக்கும் நோயாளியை திருத்தவும் முடியாது.

நடுவே என்ன ஆயிற்று? ஆஸ்பத்திரி கொள்ளாத அளவுக்கு நோயாளிகள். அதுவும் மிகக்கவனமாக கையாளவேண்டிய தொற்றுநோயாளிகள். ஊழியர்கள், இடம், மருத்துவக்கருவிகள் எல்லாமே அதேதான். அதிலும் தனியார் மருத்துவமனைகள் சற்று நோய் முற்றிவிட்டால்கூட உடனே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவிடுகின்றன. ஆகவே நெருக்கடி நிலை நோயாளிகள் மிகுதி. அதற்கே முதல்கவனம் அளித்தாகவேண்டும்.

’ஆமா, நல்ல நகைச்சுவை உணர்ச்சி உள்ள ஹஸ்பெண்ட் வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தேன்…ஆனா…”

கூச்சலிட்டு கொந்தளிப்பவர் ஒருமணிநேரம் ஆகியும் டாக்டர் வந்து பார்க்கவில்லை என்பதைத்தான் உச்சகட்ட புகாராகச் சொல்கிறார். சாதாரண நிலையில் அது டாக்டர்களின் பிழைதான், இன்றைய நிலையில் அது துயரத்திற்குரியது, ஆனால் புரிந்துகொள்ளத் தக்கது. நானறிந்த மருத்துவ ஊழியர்கள் பலரும், மருத்துவ மாணவர்களும்கூட, ஆஸ்பத்திரியிலேயே பல மாதங்களாக வாழ்கிறார்கள்.

இச்சூழலில் அந்த ஊடகம் ஆஸ்பத்திரியின் முறைகேடுகள் என அந்த சிறிய செல்போன் பதிவை திரும்பத்திரும்ப காட்டவேண்டிய தேவை என்ன? ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் இருந்தால் அதை உரியவர்களிடம் உரியமுறையில் கொண்டுசெல்லவேண்டிய நேரம் இது. அதை பரபரப்புச் செய்தியாக்கி இவர்கள் அடைவதுதான் என்ன? ஆஸ்பத்திரிகளுக்கு இன்று தேவை வசைகள் அல்ல, நிதி, ஆட்கள், உதவிகள்.

இத்தகைய செய்திகளால் நிறைந்திருக்கின்றது சூழல். நண்பர் ஒருவர் சொன்னதுபோல டிவி பார்த்தால் மார்ச்சுவரிக்குள் அமர்ந்திருப்பதுபோல் இருக்கிறது. முகநூல் மனநோய் விடுதிக்குள் இருப்பதுபோல் இருக்கிறது.

நான் செய்திகளுக்கு வெளியே வாழ்பவன் அல்ல. நாளிதழ், டிவி செய்திகளை நம்பவேண்டிய இடத்தில் நான் இல்லை. மெய்யான செய்திகளை செய்திகளின் ஊற்றிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன்.

“நான் நம்பிக்கைவாதியா இல்ல அவநம்பிக்கைவாதியான்னு தெரியல்ல. ஆனா இந்த கிளாஸ் பாதி சுத்தமா இருக்கு”

மிகப்பெரிய தோல்வி மத்திய அரசின் தரப்பில் இருக்கிறது. இந்த தேசம் கூட்டுப்பொறுப்பால், அதிகாரப் பரவலால்தான் ஆட்சி செய்யமுடியும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் நெருக்கடிகளில் செயலிழக்கும். இப்போது இதற்குமேல் கசப்பான எதிர்வினைகளை முன்வைக்க விரும்பவில்லை.

இப்போது நம்பிக்கையூட்டும் அம்சம் புதிய மாநில அரசு மிகத்தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது. தேர்தல் நடத்தப்பட்டது முதன்மையான குளறுபடி. அதன் விளைவாக ஒருமாத காலம் அரசு இயந்திரம் திசைதிரும்பியது. மக்கள் தெருக்களில் அலைமோதினர். இன்னொரு மாதம் காபந்து அரசு அமைந்து முதன்மை முடிவுகள் எடுக்க முடியாத நிலை இருந்தது. அது அகன்று வருகிறது

புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரிரு நாட்களிலேயே முழுமையாகவே ஒருங்கிணைந்த நிர்வாகத்திற்குள் அனைத்தும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசுக்கு உள்ளிருந்து பார்ப்பவர்களில் இந்த அரசின் கடும் விமர்சகர்கள் என நான் நினைப்பவர்களேகூட மிகச்சிறந்த, மிகத்திறமையான செயல்பாடுகள் என்றே சொல்கிறார்கள். மிக விரைவிலேயே நிலைமை கட்டுக்குள் வரக்கூடும்.  இந்நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஓரிரு மாதங்களிலேயே மீளவும் முடியலாம்.  இதற்காகவே ஸ்டாலின் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்களில் ஒருவராக நினைக்கப்படுவார். நம்பிக்கையுடன் இருப்போம்.

”இப்ப நீங்க பாதிக்கப்பட்டிருக்கிறது உயர் இருத்தலியல் அழுத்தத்தாலே. அதுக்கு நான் ஒரு ஃபுல் டோஸ் நடைமுறைவாதத்தை முறிமருந்தா எழுதி தாறேன்”

இங்கே பலரைப் பார்க்கிறேன். அவர்கள் சோர்வை விரும்புகிறார்கள் என்று தோன்றும். சோர்வூட்டும் விஷயங்களைத் தேடித்தேடி படிக்கிறார்கள். அதில் மூழ்கியிருக்க விரும்புகிறார்கள்.பலர் சவரம் செய்துகொள்வதில்லை. காரணம், வீட்டிலிருந்தே வேலை. ஆனால் நம் முகத்தை நம் குடும்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். நல்ல ஆடைகளையே அணிவதில்லை. பலர் வேடிக்கையான உரையாடல்களில் ஈடுபடுவதில்லை. சாப்பாட்டு நேரத்தில் கூட எதிர்மறை அரசியல் மற்றும் கொந்தளிப்புகள்.

நம்மை சூழ்ந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன உலகை அளிக்கிறோம் என்று யோசித்தாகவேண்டும். ஒருபோதும் சோர்வை வெளிக்காட்டவேண்டியதில்லை. நேற்று நான் என் வீட்டில் பழையகால எம்ஜிஆர் – கருணாநிதி மேடைப்பேச்சுக்களை மிமிக்ரி செய்தேன். சிரித்து மகிழ்ந்தோம். அதுதான் இன்று செய்யவேண்டியது.

என் தெரு நாகர்கோயிலிலேயே அதிகமாக கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று என்று போகன் சங்கர் அழைத்துச் சொன்னார். நண்பர்கள் பலர் நோயில் இருக்கிறார்கள். ஆகவே அனைத்து எச்சரிக்கைகளையும் எடுத்துக் கொள்கிறேன். முதன்மையான எச்சரிக்கை என்பது தேவையில்லாத பதற்றங்களை அடையாமல் இருப்பது. எதிர்மறைச் செய்திகளில், அரசியல் விவாதங்களில் ஊடாடாமல் இருப்பது. ஆகவே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு வேதாந்த நூல். ஒரு நாவல். கூடவே கட்டுரைகள், கடிதங்கள்.

நாம் செய்வதற்கு இருப்பது இதுவே. இத்தருணத்தில் கூடுமானவரை பிறருக்கு உதவுவோம். அதுவே முதன்மையானது. நோய்ச்செய்திகளை தேவையில்லாமல் பரப்பாமல் இருப்போம். கூடுமானவரை உற்சாகமாக, நம்பிக்கையுடன் இருப்போம்.

அருண்மொழியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவள் வீட்டில் தம்பியின் இறப்பு. பெற்றோர் தனியாக இருக்கிறார்கள். அவள் இங்கே வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள். ஆனால் படைப்புவிசை அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஒருநாளில் ஆறுமணி நேரம் இசை கேட்கிறாள். கட்டுரைகள் எழுதுகிறாள். நாவல் எழுதும் கனவுடன் இருக்கிறாள். அவளிடம் எப்போதுமே எழுது எழுது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்று அவள் அதைக் கண்டுகொண்டிருக்கிறாள்.[https://arunmozhinangaij.wordpress.com/blog/]

வெளிப்பாடு போல ஊக்கமளிப்பது வேறில்லை. வாசிப்பு, இசைகேட்பு எல்லாம் முக்கியம், ஆனால் கூடவே எப்படியேனும் வெளிப்படுங்கள். அதையே ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன். எதையாவது செய்யுங்கள். வேலைக்கு வெளியே நீங்கள் வெளிப்படும்படியாக.

“ஆனந்தம் வேணுமா? உள்ளே தேடுங்க” “வாசல் எங்கே இருக்கு?”  “வாசலே கெடையாது “

அருண்மொழி செய்வதையே நண்பர்களுக்கும் விரிவாக்கலாம் என்று தோன்றியது நண்பர்களுக்கான ஒரு குழுமம் அமைத்து அதில் பத்துநிமிட உரை, குறுநாடகங்கள், ஸ்டேண்டப் காமெடிகள், கவிதை வாசிப்பு என்று நிகழ்த்தும் எண்ணம் ஒன்றை சொன்னேன். ஆரம்பித்துவிட்டோம். அதற்கென்றே ஒரு சிறு நாடகம், ஒரு தன்நடிப்பு நாடகம் ஆகியவற்றை எழுதினேன். ஒரு கூட்டுக்குடும்பத்தின் கூடம் போல அது இருக்கவேண்டும்.

அதை அணுக்கமான வாசகர்களுடன் சேர்ந்துகூட அமைக்கலாமென்று தோன்றுகிறது. வாசகர்கள் அவ்வாறு அமைத்துக்கொண்டால் நான் சேர்ந்துகொள்கிறேன்.

அத்துடன் ஒன்று, நாளை முதல் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வாசகருடன் 40 நிமிடம் தனிப்பட்ட முறையில் சூம் அல்லது கூகிளில் உரையாடலாமென நினைக்கிறேன். உரையாட விரும்பும் வாசகர்கள் தொடர்பு கொள்ளலாம். நோய், அதுசார்ந்த கவலைகள் தவிர எல்லாவற்றையும் பேசலாம்.

இந்த தருணத்தை கைகோத்து ஊக்கத்துடன் கடந்துசெல்வோம்

ஜெ

[email protected]

ஒரு போட்டி

இந்த கொரோனா காலத்தில் எதையேனும் செய்ய விரும்புபவர்களுக்காக ஒரு போட்டி. வெண்முரசு நாவலின் ஏதேனும் ஒரு பகுதியை அதிகபட்சம் 40 நிமிடங்களுக்குள் அமையும்படி கதையாகச் சொல்லுங்கள். வாசிப்பது கூடாது. சொல்லவேண்டும். நடிப்புடன், குரல் ஏற்ற இறக்கத்துடன் சொன்னால் நல்லது. குழந்தைகளுக்காகச் சொன்னாலும் நல்லது. அதை யூடியூபில் ஏற்றி அனுப்புங்கள். சிறந்த பதிவுக்கு வெண்முரசு நூல்கள் பரிசாக அளிக்கப்படும்.

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 6
அடுத்த கட்டுரைமுகில்நகர்