இஸ்லாமிய வெறுப்பா?
அன்புள்ள ஜெ,
இஸ்லாமிய வெறுப்பா என்ற கட்டுரை வாசித்தேன். என்னைப்போன்ற பலர் நினைப்பதை தெளிவாகச் சொல்லியிருந்தீர்கள். அந்தக் கட்டுரைக்கு இருக்கும் கூல் ஆன எதிர்வினையே அது உண்மை என்று காட்டுகிறது.
இன்றைய சூழல் இதுதான். இஸ்லாமியர்களில் ஒரு சாரார் அதிதீவிரவாத நிலைபாடு எடுக்கிறார்கள். இஸ்லாமியர் உலகை ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். அதை தடுக்கும் சக்திகள் எல்லாமே சாத்தானின் படை என நினைக்கிறார்கள். மற்றவர்களிடம் ஒத்துப்போவதைவிட அவர்களிடமிருந்து விலகவேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஒடுக்கப்படுவதாக நம்பவைக்கிறார்கள். இந்த மனைநிலை ஒரு தரப்பு இந்துக்களிடம் உள்ளது. ஆகவே பிளவு பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
இதற்கு நடுவேதான் பெரும்பான்மையினரான இந்துக்கள் உள்ளனர். அவர்கள் மதவெறியர்கள் அல்ல. பிறர்மேல் ஆதிக்கம் கொள்ள நினைப்பவர்களும் அல்ல. ஒத்துப்போக நினைப்பவர்கள். ஆகவே எல்லாவகையான தீவிரவாத நிலைபாடுகளையும் எதிர்ப்பவர்கள். அதிலிருந்து விலக நினைப்பவர்கள்.
இந்த நடுநிலையாளர்கள்தான் உண்மையில் மதச்சார்பின்மையின் காவலர்கள். ஜனநாயகத்தின் தூண்கள். இவர்களை குறிவைத்தே இருபக்கமும் இடிக்கப்படுகிறது. இவர்கள் மறைந்தால் இருபக்கமும் வெறியர்கள் மட்டும்தான் மிஞ்சுவார்கள். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மிக வேகமாக இவர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த அழிப்புப்பணியில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றுபவர்கள் யாரென்றால் இங்கே உள்ள போலி முற்போக்காளர்கள். அவர்கள் பெரும்பாலானவர்கள் எழுதவோ சிந்திக்கவோ திறமையில்லாத வெட்டிகள்.ஆனால் எழுத்தாளர் சிந்தனையாளர் என்று பாவனை செய்பவர்கள். அவர்களை ஏற்காதவர்கள் மேல் காழ்ப்பு கொண்டவர்கள். அந்தக்காழ்ப்புதான் அவர்களை செயல்பட வைக்கிறது. இரவுபகலாக காழ்ப்பின் மொழியிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காழ்ப்புக் கும்பல் இவர்களின் சொந்த எதிரிகளை எல்லாம் இஸ்லாமியவிரோதி என்று முத்திரை குத்துகிறது. அவர்கள் சொன்ன வரிகளை திரித்து அர்த்தம் அளிக்கிறது. மூட்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஒரு சின்ன ஐயத்தை கிளப்பினால்போது சங்கி என்று சொல்லிவிடுகிறார்கள். சங்கி படைக்கு ஆள் சேர்ப்பதே இந்தக் கும்பல்தான். இப்படி பத்து தடவை ஒருவனைச் சொன்னால் ஆமாடா சங்கிதான் என்பான். அவ்வளவுதான். ஒரு ஆளை அந்தப்பக்கம் தள்ளிவிட்டாயிற்று. இந்தக் கும்பல்தான் இஸ்லாமியர்களின் உண்மையான எதிரிகள். மதச்சார்பின்மைக்கும் ஜனநயாகத்துக்கும் துரோகிகள். இவர்களுக்கு எந்த அஜெண்டாவும் இல்லை. தனிப்பட்ட காழ்ப்பும் தாழ்வுணர்ச்சியும் மட்டும்தான்.
தீவிரமதவெறியர்கள் இருபக்கமும் உண்டு. அவர்கள் சொல்லும் உச்சகட்ட மதவெறியை அப்படியே ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். இல்லாவிட்டால் எதிரி என்று சொல்லிவிடுவார்கள். அவதூறு வசை என்று ஆரம்பிப்பார்கள். ஒருவன் எனக்கு மதவெறி இல்லை என்று சொல்கிறான், அவனை நோக்கி இல்லை நீ மதவெறியன் என்று சொல்வதைப்போல அபத்தமான ஒன்று உண்டா? கொஞ்சம் மதவெறி உள்ளவனைக்கூட ஜனநாயகமாக ஆக்கவேண்டியதுதானெ உண்மையான வேலை.
இணையத்தில் இலக்கியவாதிகள், முற்போக்காளர்கள் என்று பாவலா காட்டி அலையும் ஒரு நரம்புநோயாளிக் கும்பல் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. தலித்துக்களுக்கு தலித் எதிரிகளை இவர்கள்தான் சொல்வார்கள். இஸ்லாமியருக்கு இஸ்லமைய எதிரிகளை இவர்கள்தான் சுட்டிக்காட்டுவார்கள். இந்த மனநோயாளிகள் மிகப்பெரிய சமூக விரோதிகள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள இஸ்லாமியர்களில் கொஞ்சம் சிந்திப்பவர்கள், கொஞ்சம் தாராளப்போக்கு கொண்டவர்களாவது முன்வரவேண்டும்
எஸ்.ராகவன்
அன்புள்ள ராகவ்
இந்த ஒரு குரலை இடைவிடாமல் எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் நாம் நினைவில் வைக்கவேண்டிய ஒன்று உண்டு. காந்தி முல்லா என்றும் சனாதனி என்றும் ஒரேசமயம் திட்டப்பட்டார்.
ஜெ
இனிய ஜெயம்
இஸ்லாமிய வெறுப்பா எனும் தலைப்பிட்ட இன்றைய பதிவு கண்டேன். உங்கள் அளவே பொது வெளியில் நானுமே பாதிக்கப்பட்டு இதுவரை அதை நான் வெளியே சொன்னதில்லை. சமீபத்தில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு ஒரு நண்பருடன் சென்றிருந்தேன். அவர் சற்றே இலக்கிய அறிமுகமும் ஈடுபாடும் கொண்டவர் என் குடும்ப நண்பர் இஸ்லாமியர். அக் கூட்டத்தில் வழமை போல ‘அதுல ஒரு அரசியல் இருக்குது தோழர்’ வகையறா நண்பர் ஒருவரும் இருந்தார். அவர் உரையாடல் ஒன்றின் முடிவில் “ஜெயமோகன் வாசகர் ஒருத்தரும் முஸ்லீம் ஒருத்தரும் இப்புடி ஒரு நட்புல இருக்கிறது ஆச்சர்யமா இருக்கு” என்று சொன்னார். உண்மையில் இது எதிரில் உள்ளவரை எந்த அளவு அவமதிக்கும் ஒரு சொல் என்பதை உண்மையிலேயே அவர் அறிந்திருக்க வில்லை. ” பாருங்களேன் உங்களை விட உசந்த சாதி ஆனா உங்க தோள் மேல கைய போட்டு பழகுறார் ஆச்சர்யமா இருக்கு ” என்று ஒருவர் அவர் முகத்தின் முன்னால் சொன்னால் அவர் என்ன ஆவார்? ஆனால் உண்மையில் அவருக்கு இது ஒரு அவமதிக்கும் சொல் என்று தெரியாது. இத்தகு ஆளுமைகள் வசம்தான் ஐயையோ ஜெயமோகன் என்ன சொல்லிருக்கார் பாருங்க என்று போலி கரிசனையுடன் அத்தனை துருவப் படுத்தும் வெறுப்பு இரட்டை நிலைகளும் விதைக்கப்படுகிறது.
என் பால்யம் முதலே சூழ சூழ முகமதிய குடும்பங்களின் நட்பு சூழலில் வளர்ந்தவன் நான். என் அப்பாவின் நெருங்கிய நண்பர் ( எனக்கு பைதா மாமா) என் அப்பாவின் முதன்மை இன்றி அவர் வீட்டின் எந்த கொண்டாட்டமும் நிகழாது. அன்று துவங்கி இன்று வரை நண்பர்கள் கொண்டு வந்து தரும் நோம்பு கஞ்சி இன்றி என் கோடைகள் கடந்ததே இல்லை. இப்போது நம் நண்பர்கள் எவரையும் விட மிக அதிக முகமதிய நண்பர்கள் கொண்டவன் நான். அதில் சிலர் lkg முதல் என்னுடன் தொடர்பவர்கள். என் நண்பன் ஒருவனுக்கு செல்ல வாப்பா என்று பெயர் எங்களுடன் எல்லா கோவில் விஷேஷத்திலும் அவன் இருப்பான். பட்டை குங்குமம் சகிதம் எங்களுடன் நின்றிருப்பான். சிறு வயது முதலே சிறு சிறு உடல் பிணிகளுக்கு அப்பா என்னை தர்க்கா அழைத்து செல்வார். எனக்கு “ஓதி” விட்டு வியாழன் ஒரு நாள் இரவு முழுக்க என்னுடன் அங்கே இருப்பார்.
இப்படி நீருக்குள் மீன் நீர் குறித்த கேள்வி இன்றி இருப்பது போலத்தான் என் நண்பர்களும் நானும் இருந்தோம். சமூகமும் அவ்வாறே இருந்தது. சுதந்திர இந்தியாவின் மத சார்பற்ற அரசியல் சாசனத்தின் படி அமைந்த குடியரசின் கரசேவகர்கள் செய்த சேவை வழியே மெல்ல மெல்ல எல்லாம் என் கண்முன்னே திரிபு பட துவங்கின.
அதற்கு முன்பு வரை ஒட்டுமொத்த ஸ்ரீ ரங்க வரலாற்றிலும் துலுக்க நாச்சியாருக்கும் ஒரு இடம் இருந்தது. இங்கே கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்றொரு ஊர் உண்டு. அங்கே 8 ம் நூற்றாண்டு இலக்கிய சான்றுகளும் சோழர் கால கல்வெட்டு சான்றுகளும் தஞ்சை நாயக்கர் கால பெரு விழா சான்றுகளும் கொண்ட பூவராக ஸ்வாமி கோவில் உண்டு. அங்கே கோவில் தேரோட்டம் வரும் அந்த ஒரு நாள் விழா ஸ்ரீமுஷ்ணம் பகுதி முஸ்லீம் சமூகத்துக்கு உரியது. தீர்த்தவாரியின் போது உற்சவர் கையில் இருந்து மாலையும் பிரசாதங்களும் மசூதிக்கு செல்லும். இப்படி அங்கே கோவில் விழாக்களின் பல அலகுகளுடன் கலந்து நிற்பது அங்குள்ள முகமதிய பண்பாடு. ஆனால் இன்று ? …இதே நிலைதான் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும். அடிப்படை வாதங்களின் ஓநாய்ப் பசிக்கு இப்படி எத்தனையோ பண்பாட்டு தொகுப்பு முறைமைகளை உண்ணக் கொடுத்து விட்டோம். அந்தப் பசி வேட்டையின் களம் சுருங்கி சுருங்கி இதோ என் நட்பு வட்டம் வரை வந்து விட்டது.
என் நல்விதி என் அத்தனை முகமதிய நண்பர்களும் இத்தகு சிறுமைகளுக்கு வெளியே நிற்பவர்கள். ( இதில் என் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்த நூலகத்தை கண்ட அவரது மத குருவால் எல்லாம் ஹராம் இதெல்லாம் வீட்ல இருக்க கூடாது என்று மட்டுருத்த பட்டவர்). அத்தனை அரசியல் சிறுமைகளுக்கு வெளியே நிற்கும் நட்பு சாத்தியம் என்பதை நான் அறிவேன். ஓநாய்கள் பசிக்கு பலி ஆகாமல் அந்த நட்பை பேணி எங்கள் அடுத்த தலைமுறைக்கு அதை கையளித்து செல்வதே இந்த காலம் எங்களுக்கு அளித்திருக்கும் கடமை என்று நினைக்கிறேன்.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
நான் கண்டவரை இந்த வேறுபாடுகள் இல்லாமல் உண்மையான நட்பு இருந்த இடமென்பது தொழிற்சூழல். தொழிற்சங்கச் சூழல். அங்கேயே இதெல்லாம் அழிக்கப்பட்டாயிற்று
ஜெ