கவிதை உரைகள்- கடிதம்
என் உரைகள்,ஒரு தயக்கத்துடன்…
உரைகள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
மோரில் தயிரிட்டு ‘உறையிடுவது’ போல உங்கள் ஒவ்வொரு உரையும் மனதைச் செறிவூட்டுவது நிதர்சனம். உங்கள் ‘கல்லெழும் விதை’ உரை பார்த்தேன். கதர்ச் சொக்காயில் முன்னாள் அரசியல்வாதி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் சாயல் தெரிந்தது. முன் நெற்றியிலிருக்கும் கொஞ்சநஞ்ச ஒட்டடையும் ஒழிந்ததென்றால் ஒரு அசலான தத்துவஞானியின் முகமும் கூடிவிடும் என்று தோன்றியது. உங்கள் குரலும் நல்ல வெல்லப்பாகு பதத்தை அடைந்து, கனிவான ஆசிரியரின் குரலாக ஒலித்தது.
கருத்தியல்வாதத்தையும் லட்சியவாதத்தையும் விளக்கிய ஒரு நல்ல உரை. வழக்கம்போல தொய்வில்லாத கச்சிதமான உரை. இப்படித்தான் உங்கள் ஒவ்வொரு உரையையும் விமர்சிக்க முடிகிறது. அரங்கிலிருக்கும் எல்லோர் முகத்திலும் அதுவே எதிரொலிக்கிறது. என்ன, சமீபத்தில் ‘கொரோனா’ விலிருந்து வெளியேறிய தைரியத்தில் எல்லோருடன் நீங்கள் அளவளாவுவதுதான் சற்றே அச்சத்தை ஏற்படுத்தியது. தவிர்ப்பது கடினம்தான். நிலைமை சரியாகும்வரை கவனம் கொள்ளவும்.
தங்களுடைய கி.ரா.புத்தக வெளியீட்டு உரையும் சமீபத்தில் கேட்டேன். மிகக் கச்சிதமான சிறந்த உரை. அதே வெல்லப்பாகுக் குரல். முதன்முதலாகக் கேட்பவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த பேச்சாளர் இவர் என்று மனதில் தோன்றும் அளவிற்கு சிறப்பான பேச்சு. உங்கள் உரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன். மிக எளிதாகச் சொல்லலாம், பேச்சுக்கலையின் வடிவம் உங்கள் கைவசப் பட்டு நெடுங்காலமாகிவிட்டதென்று.
கி.ரா.விற்கு ஞானபீடம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. இப்பிடிப்பட்ட ஒரு எழுத்தாளருக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலும் கூட, விருது கொடுத்து தன் மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை அந்த நிறுவனம் தவற விடுவதுதான் வருத்தமான விஷயம்.
உங்கள் உரை பல திறப்புக்களை அளித்தது. குறிப்பாக, நாட்டுப்புறக் கதையில் பாடபேதங்கள் இல்லாமல் இருப்பது. கி.ரா. வின் ஒரு நாவலில் வரும் கற்புநிலை தவறிய ஒரு பெண், தன் நிலையை நியாயப்படுத்தும் வகையில் பஞ்சாயத்தில் கொடுக்கும் ‘கிணறு-கயிறு’ விளக்கம் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலிலும் அப்படியே வருகிறது. சொற்கள், எத்தனை ஆண்டுகள், எத்தனை காதுகள் மாறி, இன்றைய கதியை அடைந்திருக்கும்.
கர்நாடக சங்கீதப் பாடகர் அருணா சாய்ராம் பிருந்தாம்மா என்கிற அவருடைய குருவைப் பற்றிக் கூறுகிறார். அவர் பாடலை எழுதிக்கொள்ள அனுமதிக்க மாட்டாராம். அவர் பாடுவதைக் கேட்டு அப்படியே பாடவேண்டும். வேதங்களை ‘எழுதாக் கிளவி’ யாகச் செய்தவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியன் சொல்லுக்கிருக்கும் மதிப்பு அது. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடத்தப் பட்டிருக்கிறது. நானெல்லாம் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா’ என்று ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னதினாலேயே அவரைப் படிக்க ஆரம்பித்தேன்.
நீங்கள் இதுவரை எழுத்தால் நிலைபெற்றுவிட்டீர்கள், நீங்கள் சொல்லாலும் நிலைபெறவேண்டும். உங்கள் குரல் ‘மொண்ணைச் சமுதாய’த்தின் உணர்கொம்புகளை உயிர்ப்பித்தெடுக்க (உங்களுக்குப் பிடிக்காத) கல்லூரிகள் தோறும் ஒலிக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் தோறும் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். கல்வி வியாபாரமாகி விட்ட இந்தக் காலத்திலும் ஆசிரியரின் சொல்லுக்கு ஒரு மதிப்பிருக்கிறது. நீங்கள் ஆசிரியர்களின் ஆசிரியர்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது
செவி வழி வாசிப்பு கட்டுரை வாசித்தேன். யுட்யூபில் உங்கள் உரையை ஓடவிட்டு, காதில் இயர்போன் போட்டு, முழு சத்தமும் வைத்து உங்கள் குரலில் ஒரு வார்த்தை காதில் விழுந்து விடாதா என்று கண்ணில் நீர் கரைகட்ட எத்தனை நாள் இருந்திருக்கேன் தெரியுமா?மனசு அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தவிக்கும். புலன்குறை கண்ணுக்கு முன்னால பாறையாயிருந்து வழி மறைக்கும். அசமஞ்சமாயிருந்துட்டா கூட ஒன்னும் தெரியாம உண்டு உறங்கி வாழ்ந்துவிட்டு போய்விடலாம். மண்டைக்குள்ள அது என்ன இது என்ன்ன்னு ஆர்வம் பொறி பறக்குது. எதிர்ல பாறை வழி மறைக்குது. இந்த இடத்தில் உங்கள் எழுத்து என்னை ஆசுவாசப்படுத்துகிறது.
ஆனந்தவிகடன் வழியாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். Jeyamohan.in என்று டைப்படித்து உள்நுழைந்த அந்த கணம் தேவர்கள் மலர் மாரி பொழிந்து என்னை ஆசிர்வதித்தார்கள். வாழ்த்தினார்கள். என்னுடைய ஆசானை கண்டு கொண்டேன்.
தினப்படி வாழ்க்கையை வாழவே போராடும்( அழைப்புமணி அழைத்தால் அதை கேட்டு கதவை திறப்பதே போராட்டம்தான்) எனக்கு உங்கள் எழுத்து வரமேயாகும். என்னை எளிதில் ஏமாற்ற முடியும் என நினைத்து சொன்னதை இல்லையென்றும், சொல்லாதவற்றை சொன்னதாகவும் கூறுபவர்களையே பார்த்து வந்த எனக்கு தங்கள் தளம் பெரிய திறப்பு.
பாசாங்கில்லாமல் ,அப்பட்டமாக ,முன் பின் முரணில்லாமல், உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் எழுத்து என்னை வசீகரித்தது போல வேறு எந்த எழுத்தாளரும் வசீகரிக்கவில்லை.
கீதை உரை ,குறளினிது ,கட்டண உரை போன்றவற்றை புத்தகமாக மாற்றினால் என்னை போன்றோருக்கு படிக்க வசதியாகயிருக்கும். உங்களுடைய உரைகளை வாசித்தால் பாறையை நகர்த்த ஒரு அடி முன்னால் செல்வேன். நன்றி.
தமிழரசி.