ஒரு சாட்சி

நார்மன் காட்ஸ்பி ஒரு பார்க்கில் நாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்துகொண்டிருக்கிறார். ஹைட் பார்க் சந்திப்பு அங்கிருந்து பார்த்தால் அவரது கண்களுக்கு தெளிவாகவே தெரியும். மார்ச் மாதம் சாயங்காலம்  ஆறுமணி சுமாருக்கு மெல்லவே இருட்டு கவிய ஆரம்பித்திருந்தது. அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் இருந்து பார்த்தால்  ஜனங்கள் சாலையில் அவசரமாகச் செல்வதைப் பார்க்கமுடியும்

அந்திசரியும் வேளை நார்மன் காட்ஸ்பிக்குப் பிடிக்கும். அது தோற்கடிக்கப்பட்டவர்களின் நேரம். அவர்கள் தங்கள் மிச்சமீதிகளுடன் பதுங்கிடம்தேடிச்செல்லும் வேளை. பிறரால் அடையாளம் காணப்படாமல் அவர்கள் நடமாடவிரும்புவார்கள். நார்மன் காட்ஸ்பி அப்போது தன்னையும் ஒரு தோற்றுப்போனவனாக கற்பனைசெய்ய விரும்பினார். சும்மா ஒரு சுவாரஸியத்துக்காக.  அப்படி அந்த பார்க்கில் வந்து அமர்ந்துகொண்டு மனிதர்களைப் பார்த்து விதவிதமாக கற்பனைசெய்துகொள்வது நார்மன் காட்ஸ்பியின் மாலைநேரப் பொழுதுபோக்கு.  அவர் ஓய்வுபெற்று ரொம்பநாளாகிறது.

ஆள்நடமாட்டமில்லாத பார்க் நடைபாதை. அவருக்கு அப்பால் ஒரு கிழவர் தன் தோள்களை தொங்கபோட்டுக்கொண்டு பெஞ்சில் கூனி அமர்ந்திருந்தார். அவரைப்பார்த்தால் ஏதோ நொடித்துப்போன மளிகைக்கடைக்காரர்போல இருந்தார். அழுக்கான பழைய உடைகள். தளர்ந்த முகம். ஆர்வமில்லாத பார்வை.

கிழவர் எழுந்துபோக முயன்றபோது அவர் தன் வீட்டுக்கு மனம் சோர்ந்தவராக திரும்பிச்செல்லப்போகிறார் என்று நார்மன் காட்ஸ்பி எண்ணிக்கொண்டார். வீடே இருக்குமோ என்னவோ வாடகைகூட கொடுக்கமுடியாமல் ஏதாவது விடுதியறையில்கூட தங்கியிருக்கலாம். நார்மன் காட்ஸ்பிக்கு ஒரு பெருமிதம் உண்டு, அவரால் ஆட்களை எடைபோட முடியும். அவர் அரைநூற்றாண்டுக்காலம் வியாபாரம்செய்து கற்றுக்கொண்டது அது. மனிதர்களைத்தான் அவர் படித்தார்.

கிழவர் சென்றதுமே அதே பெஞ்சில் ஓர் இளைஞன் வந்து அமர்ந்தான். நல்ல உடைகள், உற்சாகமான பாவனைகள் கொண்டவன். அவன் சலித்துக்கொண்டு தலையிலடித்த ஒலியை நார்மன் காட்ஸ்பி கேட்டார். ”என்ன சமாச்சாரம்?”என்றார்

இளைஞன் ”என்ன சொல்ல?நான் என் வாழ்க்கையிலேயே மடத்தனமான காரியத்தைச் செய்துவிட்டு இப்போது மாட்டிக்கோண்டு நிற்கிறேன்” என்றான். ”என்ன?”என்றார் நார்மன் காட்ஸ்பி ஆர்வத்தை வெளிக்காட்டாமல்.

”நான் பெர்க்ஷயரில் இருக்கும் பாடகானியன் ஓட்டலில் தங்குவதற்காக இத பிற்பகலில் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அங்கேபோனால் அந்த ஓட்டலை மூடி ஒரு சினிமாதியேட்டர் ஆரம்பித்துவிட்டார்கள். சரி என்று டாக்ஸி டிரைவரிடம் இன்னொரு ஓட்டலுக்குப் போகச்சொன்னேன். போனதுமே நான் தங்கியிருக்கும் புது ஓட்டலைப்பற்றிய தகவலை என் ஊருக்கு தந்தியடித்தேன். அறையில் சாமான்களை வைத்துவிட்டு பார்த்தால் சோப் இல்லை. நான் ஓட்டல் சோப்பை பயன்படுத்தமாட்டேன்.. ஒரு சோப் வாங்குவதற்காக தெருவில் இறங்கினேன்….”

இளைஞன் பதற்றமாக தொடர்ந்தான்.”…சோப் வாங்கிவிட்டு ஓட்டலுக்கு போகலாமென்று பார்த்தால்…சொன்னால் நம்பமாட்டீர்கள். எனக்கு என் ஓட்டல் பெயர் ஞாபகம் இல்லை. நிறையதூரம் சுற்றிச்சுற்றி நடந்துவந்தேன். ஆகவே வழியும் தெரியவில்லை. இங்கே லண்டனில் எனக்குத்தெரிந்த யாருமே கிடையாது. கையிலே ஒரு பைசாகூட மிச்சமில்லை…சுற்றிச்சுற்றிவந்துவிட்டேன். ஒன்றுமே தெரியவில்லை. ராத்திரி எங்கே தங்குவது? ஒன்றுசெய்யலாம், ஊருக்கே ·போன்செய்து நான் அடித்த தந்தியைப்பற்றி கேட்கலாம். அனால் தந்தி நாளைக்குத்தான் போய்ச்சேரும்..அதுவரை நான் இங்கே லண்டனில் தங்கியாகவேண்டும்… நம்பமுடியாத கதைதான் இல்லையா?”

”இல்லை ”என்றார் நார்மன் காட்ஸ்பி ”எனக்கும் வெளிநாட்டில் இப்படி ஆகியிருக்கிறது…” ”அது வெளிநாடு” என்றான் இளைஞன். ”நேராகப்போய் கான்ஸலிடம் உதவிகேட்கலாம். இது என் சொந்தநாடு. இதைப்போய்ச் சொன்னால் யார் நம்புவார்கள்…? ப்ரவாயில்லை, நீங்கள் நான் சொல்வது ஒரு கட்டுக்கதை என்று சொல்லவில்லை”

”அப்படிச் சொல்லமாடேன்…ஆனால்”என்றார் நார்மன் காட்ஸ்பி புன்னகையுடன் ”நான் நீயாக இருந்தால் அந்த சோப்பையும் கையிலே வைத்திருப்பேன்”

அவன் எழுந்து நின்று தன் சட்டைப்பையையும் கால்சட்டைப்பைகளையும் துழாவினான். கீழே பார்த்தான். முகம் வெளிறிவிட்டது.  ”அய்யோ!” என்றான். ”நான் அதை இந்த அவசரத்தில் எங்கோ தொலைத்திருக்க வேண்டும்..எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை”

”முதலில் ஓட்டலைத்தொலைப்பது அப்புறம் சோப்பை தொலைப்பது…கதையில் ஏகப்பட்ட தற்செயல்கள்…”என்றார் நார்மன் காட்ஸ்பி புன்னகை மாறாமல். ”கடையில் வாங்கிய உறைகிழிக்காத ஒரு சோப்பை கையில் வைத்திருந்திருக்கலாம்”

இளைஞன் அவரையே கண்ணிமைக்காமல் பார்த்தான். அவன் முகத்தில் மனம் உடைந்தவனின் துக்கம் வெளிப்பட்டது. அவமானமும் சிறுமையும் எல்லாம் சேர்ந்த ஒரு துக்கம். அவன் சட்டென்று ”ஸாரி ஸாரி”என்று சொல்லிக்கொண்டு அவரைவிட்டு விலகி கிட்டத்தட்ட ஓடினான்.

கசப்புடன் சிரித்தபடி நார்மன் காட்ஸ்பியும் தன் வீட்டுக்குப் போவதற்காக எழுந்தார். ஆனால் அந்த இளைஞன் அமர்ந்திருந்த பெஞ்சிலே ஒரு சோப் கிடப்பதைப் பார்த்தார். உறைபிரிக்கப்படாத புதிய சோப். இளைஞனின் சட்டைப்பையிலிருந்து உண்மையாகவே அது தவறியிருக்கிறது.

நார்மன் காட்ஸ்பியின் வாழ்க்கையில் அவர் மனிதர்களை எடைபோட்டதில் தவறே செய்தது இல்லை. இம்முறை அவருக்கு கொஞ்சம் வேர்த்துவிட்டது. அவர் வெளியே சென்று சாலையில் அந்த இளைஞனுக்காகத் தேடினார். நெடுநேரம் தேடி கண்டுபிடிக்காமல் திரும்பும்போது ஒரு வண்டி அருகே மனம் உடைந்த நிலையில் நின்ற இளைஞனைக் கண்டார்.

அவனை நெருங்கி அழைத்தார். அவன் கசப்புடன் அவரைப்பார்த்தான். ”நீ சொன்னதெல்லாம் உண்மை என்பதற்கான சான்று கிடைத்துவிட்டது”என்றார் நார்மன் காட்ஸ்பி சோப்பைக் காட்டியபடி. ”உன்னுடைய சட்டையில் இருந்து விழுந்திருக்கிறது. நீ உண்மையைத்தான் சொல்லியிருக்கிறாய். நான்தான் அதிகபிரசங்கித்தனமாக ஏதோ ஊகங்களைச் செய்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடு.”

சட்டைப்பையில் இருந்து அகப்பட பெரிய தொகையை எடுத்து இளைஞனுக்குக் கொடுத்து நார்மன் காட்ஸ்பி சொன்னார் ”நீ இன்றிரவு தங்குவதற்கு இந்த கடன்தொகை உதவட்டும்… தயவுசெய்து வைத்துக்கொள். இது என்னுடைய விலாச அட்டை ..இந்தா உன்னுடைய சோப்….மீண்டும் தொலைத்துவிடாதே”

”நல்லவேளை நீங்கள் இதைக் கண்டெடுத்தீர்கள்…”என்று அவன் சொன்னான் உதடுகள் நடுங்கின. குரல் கம்மியது ”ஊருக்கு ·போன்போட்டு என் ஓட்டலை தெரிந்துகொண்டதுமே நான் உங்களை பணத்துடன் வந்து சந்திப்பேன்… ” பரபரவென அவன் விலகிச்சென்றான்

நார்மன் காட்ஸ்பி மீண்டும் அதே பெஞ்சுக்குத் திரும்பினார். இம்முறை சற்று சோர்வும் நிறைவுமாக ”பாவம் பையன்.. அவனைப்போய் தப்பாக நினைத்துவிட்டேன். நல்லவேலையாக சோப் கிடைத்தது…மனிதர்களை அப்படி சுலபமாக எடைபோட்டுவிடக்கூடாது”என்று எண்ணிக்கொண்டார்.

பக்கத்து பெஞ்சில் இருந்து எழுந்துபோன அந்தக் கிழவர் அங்கே ஏதோ தேடுவதை நார்மன் காட்ஸ்பி கண்டார். ”என்ன?”என்றார்

”ஒரு சோப் வாங்கி வைத்திருந்தேன்” என்றார் கிழவர்.

 

**
Saki

ஸக்கி என்ற எழுத்தாளர் எழுதிய அந்தி [DUSK] கதை இது. ஸக்கியைப்பற்றி நான் அனேகமாக நான் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.சமகாலத்தில் ஐரோப்பாவில் பரபரப்பாக பேசப்படாத ஒருவரைப்பற்றி தமிழில் பேச்சு எழுவதே குறைவு. எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் ஸக்கி. மனித உறவுகளில் இருக்கும் அபத்தத்தை வேடிக்கையாகச் சொன்னவர். எல்லா கதைகளுமே புன்னகைக்க வைப்பவை. ஆனால் மீண்டும் மீண்டும் யோசிக்கச்செய்பவையும்கூட.

22 வருடம் முன்பு நான் முதன்முறையாக ஸக்கியை படித்தேன். அப்போது அவரது ‘டாபர்மரி’ என்ற கதையை மொழிபெயர்த்து மஞ்சரி இதழில் 1987ல் பிரசுரித்தேன். பின்னர் எம்.எஸ் அதை மீண்டும் மொழியாக்கம்செய்து அவரது தொகுப்பில் சேர்க்கச்செய்தேன். என் மானசீகக் கதைப்பட்டியலில் எப்போதுமே சக்கிக்கு பத்துக்குள் இடம் உண்டு. சாதாரணமான எழுத்துக்குள் வாழ்க்கையின் ஊகிக்கமுடியாத எத்தனை தருணங்களை கொண்டுவருகிறார்!

 

 

 

ஸ்காட்லாந்துக்காரரான ஸக்கியின் இயற்பெயர் ஹெக்டர் ஹ்யு மன்றோ. ஒமர் கயாமின் ரூபையாத் கவிதையில் வரும் பரிசாரகனின் பெயரை தனக்காகச் சூட்டிக்கோண்டார்.  பர்மா காவல்துறையில் பணியாற்றிய அகஸ்டஸ் மன்றோவின் மகனாக டிசம்பர் 18, 1870ல் பர்மாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்க்கப்பட்டவர் ஸக்கி. பர்மா திரும்பி அங்கே காவல்துறையில் கொஞ்சகாலம் பணியாற்றினார். மீண்டும் இங்கிலாந்துக்குவந்து இதழியலாளராக பணியாற்ற ஆரம்பித்தார்.  வெஸ்ட்மினிஸ்டர் கெஜெட் நாளிதழின் நிருபராக இருந்தார்

1900த்தில் ஸக்கியின் முதல் நூல் வெளிவந்தது. கிப்பன்பிரபுவின் ‘ரோமப்பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ நூலை முன்மாதிரியாகக் கொண்டு அவர் எழுதிய ‘ரஷ்ய சாம்ராஜ்யத்தின் எழுச்சி’ என்ற நூல். அதை விமரிசகர்கள் கடுமையாக நிராகரித்தார்கள். இரண்டுவருடம் கழித்து அவரது முதல் சிறுகதை நூல் NOT-SO-STORIES. வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு அங்கத எழுத்தாளராக தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார்

முதல் உலகப்போரில் தன்னார்வத் தொண்டராகச் சேர்ந்து சாதாரண வீரராகப் பணியாற்றினார். 1916 நவம்பர் 14 அன்று போரில் குண்டுபட்டு இறந்தார். ஸக்கி திருமணம்செய்துகொள்ளவில்லை. அவரது சகோதரியும் திருமணம்செய்துகொள்ளவில்லை. அந்த அம்மையாருக்கும் இலக்கியவாதியாகும் கனவு இருந்தது.  ஸக்கியின் கைப்பிரதிகளை சகோதரி கொளுத்திவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின் அநத அம்மையாரும் தன்னைப்பற்றியும் ஸக்கியைப்பற்றியும் ஒரு நூல் எழுதினார். அது பெரிய குப்பையாக இருந்தது

ஸக்கியைப்பற்றி இன்றைய ‘ஜனநாயக முற்போக்கு’ அரசியல்சரியின் அடிப்படையில் ஒரு நல்ல சொல்கூட சொல்லமுடியாது. அவர் இனவெறியும் பிரிட்டிஷ் மேலாதிக்க நோக்கும் கொண்டவர். ரஷ்யர்கள் ஸ்காண்டிநேவியர்கள் ஸ்பானியர்கள் எல்லாரையுமே அவர் கிண்டல்செய்கிறார். அவருக்கு யூத வெறுப்பு இருந்தது. ஓரினச்சேர்க்கையாளரும்கூட

ஸக்கி ஒட்டுமொத்தமாக ஒரு மனித விரோதி. மனிதாபிமானம் பண்பாடு அன்பு பாசம் போன்ற எதிலும் அவருக்குப் பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. குரூரமான கதைகளையே அவர் நகைச்சுவை கலந்து எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். இந்த அம்சம் கணிசமான நகைச்சுவை எழுத்தாளர்களுக்குப் பொருந்தகூடியது.

நான் ஸக்கியைப்படிப்பது எதனால்? மீண்டும் மீண்டும் அவருக்குச் செல்வது எப்போது? தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கியின் உச்சகட்ட இலட்சியக்கனவுகளைப் படித்தபின் அந்த மன எழுச்சிகளைச் சமன் செய்து கொள்ள. அதுதான் ஸக்கியை அவர்களுக்கு நிகரான வரிசையில் நிறுத்துகிறது.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 பிப்[ 7

http://haytom.us/showarticle.php?id=60

http://www.kirjasto.sci.fi/saki.htm

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 21
அடுத்த கட்டுரைதுரியோதனி